முதல் தலைமுறை மனிதர்கள் – 15 பன்னூலாசிரியர்ஏ.கே.ரிபாயி சாகிப்

 சேயன் இப்ராகிம்

19.02.1981 அன்று திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகிலிருக்கும் மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த பட்டியலின மக்களைச் சார்ந்த 180 குடும்பத்தினர் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சி இந்துத்துவ சக்திகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பி.ஜே.பியின் அகில இந்தியத் தலைவர்கள் தொடங்கி கீழ்மட்டப் பிரமுகர்கள் வரை மீனாட்சிபுரம் நோக்கிப் படையெடுத்தனர்.

முஸ்லிம்கள், பட்டியலின மக்களுக்குப் பணம் கொடுத்தும், பிரியாணி கொடுத்தும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாக்குறுதியளித்தும் மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று பரப்புரையை அவர்கள் முடுக்கிவிட்டனர். ஊடகங்களும் இதனை முக்கியச் செய்தியாக வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தின.

திருநெல்வேலியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இஷாஅத்துல் இஸ்லாம் சபை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இந்த மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தது.

இந்த மதமாற்றம் குறித்து விசாரணை நடத்துவதற்காக மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நல இயக்குநர் கே. ஆறுமுகம், விசாரணை அதிகாரி சத்திய நாராயண மூர்த்தி, மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் குற்றாலம் வருகை தந்தனர். அப்போது இஷா அத்துல் இஸ்லாம் சபையின் நிர்வாகிகளும் விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

அந்த அமைப்பின் சார்பில் ஐந்துபேர் விசாரணையில் கலந்து கொண்டனர். அதில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவரும் இருந்தார். அவர் தான் விசாரணைக் குழுவினர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார். விசாரணைக் குழுவினர் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் இதோ…..

விசாரணை அதிகாரி : உங்கள் சபையின் சார்பில் 2000 பேரை மதம் மாற்றியிருக்கிறீர்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் : இல்லை 8000 ஆயிரம் பேரை மதம் மாற்றியிருக்கிறோம்.

வி.அ :- 1981ல் 2000 பேரை மதம் மாற்றியிருக்கிறீர்கள்?

மு.மா.உ : 1945லேயே தெற்குப்பட்டி என்ற கிராமத்தில் 4000 பேரை மதம் மாற்றியிருக்கிறோம்.

அவரின் இந்தப் பதிலைக் கேட்டு விசாரணை அதிகாரிகள் அதிர்ந்து போயினர். மேலும் அவர் ‘எங்களிடத்தில் ஒளிவு மறைவு இல்லை. நாங்கள் யாரையும் ஆசை காட்டியோ, கட்டாயமாகவோ மதம் மாற்றுவதில்லை. மதம் மாறுவதற்காக விரும்பி வருகின்றவர்களையே நாங்கள் எங்கள் மதத்தில் சேர்த்துக் கொள்கிறோம்’ என்றும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இன்னொரு விசாரணை அதிகாரி அவரிடம் ‘மதம் மாறி வந்த பட்டியலின மக்களுடன் நீங்கள் திருமண உறவுகள் வைத்துக் கொள்வீர்களா எனக் கேட்டபோது அதற்கு அவர் சிரித்துக் கொண்டே’ திருமண உறவு வைத்துக் கொள்வீர்களா என்றா கேட்கிறீர்கள்… எனக்கு ஐந்து ஆண்மக்கள் அதில் இருவர் மதம் மாறி வந்தவர்களைத் திருமணம் புரிந்துள்ளனர். ஒரு பெண் பிற்பட்ட வகுப்பிலிருந்து வந்தவர் இன்னொரு பெண் பட்டியலின வகுப்பிலிருந்து வந்தவர்’ என்று கூறினார்.

இந்தப் பதில் கேட்டு அந்த விசாரணை அதிகாரி வாயடைத்துப் போனார். அந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தான் முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரான ஏ.கே. ரிபாயி என அழைக்கப்படும் அஹமது கபீர் ரிபாயி சாகிப் என்பார் ஆகும். அவரது சேவைகளையும், சாதனைகளையும் இப்போது பார்க்க விருக்கிறோம்.

பாரம்பர்யக் குடும்பம்:

‘தென்காசி மேடை முதலாளி’ என மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட, திருநெல்வேலி முஸ்லிம் தனித் தொகுதி சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றிய, அகில இந்திய முஸ்லிம்லீகிலும், இ.யூ. முஸ்லிம் லீகிலும் நெல்லை மாவட்டத் தலைவராகப் பதவி வகித்த, தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் நிறுவனத் தலைவராக விளங்கிய மர்ஹும் மு.ந. அப்துல் ரஹ்மான் சாகிபின் மூத்த புதல்வர் தான் ஏ.கே. ரிபாயி அவர்கள்.

தென்னிந்தியாவிலேயே மிகப் பெரும் தொழில் அதிபராகவும், தென்னிந்தியாவின் வர்த்தக இளவரசர் எனப் போற்றப்பட்டவராகவும், சென்னை மாகாண அ.இ. முஸ்லிம் லீகின் தலைவராகவும், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் நிறுவனராகவும், திகழ்ந்த மர்ஹும் எம். ஜமால் முஹம்மது சாகிபின் மூன்றாவது மகனான ஆடுதுறை அப்துல்லா சாகிபின் மூத்த மகள் பாத்திமா பீவி தான் ரிபாயி சாகிபின் தாயார் (அப்துல்லா சாகிபின் இரண்டாவது மகள் ஹமீதா தான் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபின் துணைவியராவார்) இத்தகைய பாரம்பர்யப் பெருமை மிக்க மு.ந. அப்துல் ரஹ்மான் – பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாக 17.01.1924 அன்று தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் ரிபாயி சாகிப் பிறந்தார்.

தனது தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை தென்காசியிலேயே கற்றுத் தேறிய ரிபாயி, திருநெல்வேலியிலுள்ள புகழ் பெற்ற மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை (பி.ஏ) பட்டம் பெற்றார்.

அரசியல் ஈடுபாடு:

ரிபாயி சாகிபின் தந்தையார் மு.ந. அப்துல் ரகுமான் சாகிப் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தந்தையைப் பின்பற்றித் தனயனும் இளமைக் காலம் தொட்டே முஸ்லிம் லீகில் அங்கம் வகித்தார். முஸ்லிம் லீக் நடத்திய அனைத்து இயக்கங்களிலும் பங்கு கொண்டார். தென்காசி நகர முஸ்லிம்லீகின் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டு சிறப்பான முறையில் பணியாற்றினார். 04.11.1962 அன்று திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில துணைப்பொதுச் செயலாளராகவும், 21.10.1970 அன்று குற்றாலத்தில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சில ஆண்டுகள் கட்சியின் மாநிலப் பொருளாளராகவும் பதவி வகித்தார். நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராகவும் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

1962 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் சேர்த்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதன் முறையாக தி.மு.கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டன. இத் தேர்தலில் முஸ்லிம் லீகிற்கு இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

முஸ்லிம்லீகிற்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென்காசித் தொகுதியில் இவர் முஸ்லிம்லீக் வேட்பாளராகப் போட்டியிட்டார். இத் தொகுதியில் அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸின் சார்பாக மிகப் பெரும் நிலச் சுவான்தாரரான இடைகால் ஏ.ஆர். சுப்பையா முதலியார் களத்தில் இருந்தார். போட்டி கடுமையாக இருந்தது. எனினும் இத் தொகுதியில் ரிபாயி சாகிப் வெற்றி வாய்ப்பை இழந்தார். காங்கிரஸ் வேட்பாளரான ஏ.ஆர். சுப்பையா முதலியார் வெற்றி பெற்றார்.

வாக்குகள் விவரம்:

ஏ.ஆர். சுப்பையா முதலியார் (காங்கிரஸ்) 29,684

ஏ.கே. ரிபாயி (முஸ்லிம் லீக், சைக்கிள் சின்னம்) – 16, 882

பாராளுமன்ற மேலவை உறுப்பினர்:

1972 ஆம் ஆண்டு பாராளுமன்ற மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் ரிபாயி சாகிப் முஸ்லிம் லீக் வேட்பாளராக (தி.மு.க ஆதரவுடன்) நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். ஆறு ஆண்டுகள் அவர் மாநிலங்களவை உறுப்பினராகச் சிறப்பாகச் செயல்பட்டார். அந்தக் காலகட்டத்தில் இவரையும் சேர்த்து மொத்தம் ஐந்து முஸ்லிம் லீகர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். (மற்றவர்கள் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாகிப், எஸ்.ஏ. காஜா முகையதீன் சாகிப் மற்றும் கேரளாவைச் சார்ந்த பி.வி. அப்துல்லா கோயா, ஹாமிதலி ஷம்னாத் ஆகியோர்) இந்த ஐவர் அடங்கிய குழுவிற்கு ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாகிப் தலைவராக இருந்தார். தலைவர் அப்துஸ் ஸமது சாகிபுடன் இணைந்து முஸ்லிம்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக ரிபாயி சாகிப் குரல் கொடுத்தார். குறிப்பாக அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்த்தை பறிக்கக் கூடாது என்று ஆணித்தரமாக வாதிட்டார். தனது பதவிக் காலத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் மாநிலங்களவையிலும், பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகளைத் தொகுத்திடும் பணியில் ஈடுபட்டார்.

தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை:

பிற மதத்திலிருந்து விலகி இஸ்லாமில் இணைந்த மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக (கலிமா சொல்லிக் கொடுப்பது, ஆண்களுக்கு சுன்னத் செய்வது, மார்க்கக் கல்வி போதிப்பது, திருமணம் செய்விப்பது, அதற்கான செலவுகளை ஏற்பது போன்ற பணிகள்) அவரது தந்தையார் மு.ந.அ. அவர்களின் தலைமையில் தென்காசியில் ‘முஸ்லிம் பிரச்சார சபை’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. சென்னை மாகாணமெங்கும் இந்தப் பணிகளை விரிவு படுத்தும் நோக்கில் 1945 ஆம் ஆண்டு இதன் பெயர் தென்னிந்திய ‘இஷாஅத்துல் இஸ்லாம் சபை’ என மாற்றம் செய்யப்பட்டது.

இந்த அமைப்பு மதம் மாறிய முஸ்லிம் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தது. 19.02.1981 அன்று மீனாட்சிபுரம் கிராமத்தைச் சார்ந்த பட்டியலின சமூகத்தைச் சார்ந்த 180 குடும்பங்கள் இஸ்லாமில் இணைந்த போது மத்திய-மாநில அரசுகள் இந்த அமைப்புக்கு பெரும் நெருக்கடி கொடுத்தன. அப்போது இஷா அத்தின் தலைவராக இருந்த அவரது தம்பி ஏ. சாகுல் ஹமீது சாகிப்பிற்கு இவர் அருந்துணையாக இருந்து எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி கண்டார்.1986ஆம் ஆண்டு தலைவர் பதவியிலிருந்து ஏ. சாகுல் ஹமீது விலகியபின் அந்த சபையின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். (இறக்கும் வரை அப்பொறுப்பில் நீடித்தார்).

மீனாட்சிபுரம் கிராமத்தில் மத மாற்றம் நிகழ்ந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சில ஆங்கில இதழ்களின் நிருபர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறிய இம்மக்கள் ‘தலித் இஸ்லாமியர்களாகவே’ வாழ்கின்றனர் அவர்களுக்குச் சமத்துவம் கிடைக்கவில்லை என்று எழுதிய போது இவர் அந்தக் கிராமத்திற்கே சென்று ஆய்வு செய்து விரிவான அறிக்கை ஒன்று கொடுத்தார். அந்த அறிக்கையில் அக் கிராமத்தில் மதம் மாறிய முஸ்லிம்கள் அருகிலுள்ள வடகரை, அச்சன்புதூர், கடையநல்லூர், வாவா நகர், செங்கோட்டை, பண்பொழி ஆகிய ஊர்களைச் சார்ந்த பாரம்பர்ய முஸ்லிம்களுடன் திருமண உறவுகள் வைத்துக் கொண்டுள்ளதையும், மதம் மாறிய ஆண்களில் பலர் அரபி மத்ரஸாக்களில் சேர்ந்து ஓதி ஆலிம் பட்டம் பெற்றுள்ளதையும் அப்படி ஆலிம் பட்டம் பெற்றவர்கள் தமிழகத்திலுள்ள பள்ளிவாசல்களில் பேஷ் இமாமாகப் பணியாற்றி வருவதையும் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்திருந்தார். இதன் காரணமாக அந்தப் பொய்ப் பிரச்சாரம் நின்று போனது.

காயிதே மில்லத் நினைவு மலர்:

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் நினைவைப் போற்றும் வண்ணம் விரிவான நினைவு மலர் ஒன்று வெளியிடப்பட வேண்டுமென்ற எண்ணம் சமுதாயப் பிரமுகர்களிடையே இருந்து வந்தது. இதனைச் செயல்படுத்துவதற்காக 6.8.85 அன்று பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை இல்லத்தில் வைத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த நினைவு மலரினைத் தயாரிக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. வீரை. அப்துல் ரகுமான் சாகிப், பேராசிரியர் கா. அப்துல் கபூர் சாகிப் உள்ளிட்ட சமுதாயப் பிரமுகர்களின் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளின் அடிப்படையில் அவர் காயிதே மில்லத் அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது திரட்டிவைத்திருந்த காயிதே மில்லத்தின் பாராளுமன்ற உரைகளையும் அம்மலரில் இடம் பெறச் செய்தார். 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த மலர் (பெரிய அளவிலானது) காயிதே மில்லத் அவர்களின் சமூக, சமய, அரசியல் பணிகளை விளக்கிடும் ஒரு காலப்பெட்டகமாகத் திகழ்கிறது.

பன்னூலாசிரியர்:

ரிபாயி சாகிப் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, மிகச் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். அன்றைய கால கட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்த மணிவிளக்கு, முஸ்லிம் முரசு, பிறை, மறுமலர்ச்சி, மணிச்சுடர் ஆகிய இதழ்களில் சமயம், அரசியல், வரலாறு சார்ந்த ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். பல சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவராகத் திகழ்ந்த அவர் ஆங்கில இதழ்களில் வெளிவந்த இஸ்லாமிய சமயம், அரசியல் சார்ந்த கட்டுரைகளைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். 1948ஆம் ஆண்டு மாநில முஸ்லிம் லீகால் வார இதழாகத் தொடங்கப்பட்டு பின்னர் 1951ஆம் ஆண்டு தின இதழாக வெளிவந்த ‘முஸ்லிம்’ இதழின் துணையாசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

1961 ஆம் ஆண்டு டிசம்பரில் மாநில முஸ்லிம் லீகின் அதிகாரப் பூர்வ வார ஏடாக தொடங்கப்பட்ட ‘உரிமைக்குரல்’ இதழின் ஆசிரியராக இவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 12 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார். இந்த இதழிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மணிச்சுடர் நாளிதழிலும் இணைந்து பணியாற்றினார்.

இதழ்களில் எழுதிய கட்டுரைகள் தவிர, கீழ்க்கண்ட நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

1. மக்களும் நதிகளும் (பேரா. ஹுமாயூர் கபீர் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு)

2. அற்புத சாதனை (அமெரிக்க அரசியல் விமர்சனம்)

3. என்னைக் கவர்ந்த இஸ்லாம் (லியோ போர்டு வாழ்க்கை வரலாறு மொழிபெயர்ப்பு நூல்)

4. ஞானப் பெண்ணே உன்னைத்தான்

5. ஆயிரம் மலர்களே மலருங்கள் (சமூக நாவல்)

6. நாயகமே எங்கள் நபி நாயகமே

7. விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும் (மாரிஸ் புகைல் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு)

8. கவ்மின் காவலர் (காயிதே மில்த் வரலாறு)

9. மைசூர் வேங்கையின் சபதம்

10. காயிதே ஆஜம் (வாழ்க்கை வரலாறு)

11. இஸ்லாமிய சிறுகதைகள் (தொகுப்பு நூல்)

12. தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு

13. 21வது நூற்றாண்டில் இஸ்லாம்

14. ஐரோப்பாவில் இஸ்லாம் மார்க்கம்

15. சமுதாய நீரோட்டத்தில் சங்கமம் (மு.ந. அப்துல் ரகுமான் வாழ்க்கை வரலாறு)

16. திருக்குர்ஆன் சிந்தனைகள்

17. ஏ.கே.ஆரின் சிறுகதைகள்

மேலும் ‘உரிமைக்குரல்’ வார இதழில் வியட்நாம் பிரச்னை குறித்து தொடர் கட்டுரை ஒன்றையும். மறுமலர்ச்சி வார இதழில் ‘குற்றவாளிக் கூண்டில் காந்திஜி’ என்ற தலைப்பில் ஒரு தொடரையும், நெல்லையிலிருந்து அவரது புதல்வர் ஹிலால் முஸ்தபாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘சகோதரத்துவக் குரல்’ என்ற மாத இதழில் ‘ஹஸினாவின் கணவர்’ என்ற நாவலையும் எழுதியுள்ளார். இவை இன்னமும் நூல்வடிவம் பெறவில்லை.

ரிபாயி சாகிப் எழுதிய நூல்களில் ‘21வது நூற்றாண்டில் இஸ்லாம்’ என்ற நூல் ஒரு மிகச் சிறந்த ஆய்வு நூலாகும். நான்கு பாகங்களைக் கொண்ட இந்நூலின் முதல் மூன்று பாகங்களில்ஸ்பெயினில் மூர்கள் நடத்திய ஆட்சியின் மாட்சி குறித்தும். மூர்களின் ஆட்சியின்போது ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சி குறித்தும், சிலுவைப்போர்கள் குறித்தும். உதுமானியப் பேரரசின் சாதனைகள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். நான்காவது பாகத்தில் ஐரோப்பாவில் இஸ்லாம் வேகமாகப் பரவி வருவதையும், மிக விரைவிலேயே ஐரோப்பிய நாடுகளின் மார்க்கமாக இஸ்லாம் திகழும் என்றும் கணித்துள்ளார். அவரது இந்தக் கணிப்பு தற்போது உண்மையாகிக் கொண்டு வருகிறது.

குடும்பம்:

ரிபாயி சாகிபின் துணைவியார் பெயர் ஆமினா பீவி. இத் தம்பதியினருக்கு நத்தர் பாவாஜலால், அப்துல் ரகுமான், முகம்மது பிலால். ஹிலால் முஸ்தபா, முகம்மது இஸமாயில் ரபீக் என ஐந்து மகன்கள் உள்ளனர். மகன்களில் முஹம்மது பிலால் தவிர்த்து மற்ற நால்வரும் தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றனர். நான்காவது மகனான ஹிலால் முஸ்தபா ஒரு மிகச் சிறந்த கவிஞர். நபிமார்களைப் பற்றிய இவரது புதுக்கவிதைகள் ‘பேரீச்சம் பழக் காட்டின் பிரதிநிதிகள்’ என்ற தலைப்பிலும் பல்துறை சார்ந்த கட்டுரைகள் ‘தேவையான தீர்ப்புகள்’ என்ற தலைப்பில், நூலாக வெளிவந்துள்ளன. சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘மணிவிளக்கு’ மாத இதழின் துணை ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். எங்கள் தங்கம், உஷா (நடிகர் டி. இராஜேந்தரின் மாத இதழ்) சகோதரத்துவக் குரல் ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.

முடிவாக:

பன்னூலாசிரியராகத் திகழ்ந்த ஏ.கே.ரிபாயி சாகிப் அவர்கள் சமுதாயத்திற்குக் கிடைத்த ஒரு நன்முத்து என்பதில் ஐயமில்லை. தனது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் அவர் கடையநல்லூருக்கு அருகிலுள்ள ‘வாவா நகரம்’ என்ற எழில் கொஞ்சும் சிற்றூரில் தங்கியிருந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். சமுதாயம் மற்றும் அரசியல் பிரச்னைகளில் தன்னை நாடி வந்தவர்கட்கு தக்க வழிகாட்டுதல்கள் வழங்கி வந்தார். இறுதிவரை தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

1998 ஆம்ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மெக்கா சென்றிருந்த போது 21.03.1998 அன்று மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவரது ஜனாஸா மெக்கா நகரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

ரிபாய் சாகிபின் சமுதாயப் பணிகள் காலத்தைக் கடந்து சமுதாய மக்களால் நினைவு கூறப்படும் என்பது திண்ணம். அவரது நூல்கள் மறு பிரசுரம் செய்யப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் அவரது புதல்வர்கள் ஈடுபடவேண்டுமென்பது நமது அவாவாகும். எல்லாம் வல்ல இறைவன் அதற்குத் துணை புரிவானாக.

ஆதார நூல்கள்:

1. சமுதாய நீரோட்டத்தில் சங்கமம் – ஏ.கே. ரிபாயி

2. முஸ்லிம் லீக் மாநாட்டு மலர்கள்

3. பிறைமேடை ஜுன் 16-30 (2016) இதழில் ஜனாப் காயல் மகபூப் எழுதிய கட்டுரை.

நன்றி… ரிபாயி சாகிப் பற்றிய தகவல்களை தந்துதவிய அவரது புதல்வர் ஹிலால் முஸ்தபா அவர்களுக்கு.

கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள … 99767 35561