சுதந்திரப் போராட்ட வீரர் அமீர் ஹம்ஸா
– சேயன் இப்ராகிம்
“நான் சந்தித்த மிகப் பெரிய மனிதர்களில் அமீர் ஹம்ஸாவும் ஒருவர். தியாகிகளை இப்போதெல்லாம் சந்திப்பது அரிது. தனக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் பொது வாழ்வில், அரசியலில் இருப்பவர்களிடம் இன்று இருக்கிறது. இந்திய தேசிய இராணுவத்திற்காக தனது சொத்து முழுவதையும் கொடுத்தவர் அமீர் ஹம்ஸா. பர்மாவிலிருந்து இங்கு வந்தவர். ஆனால் அது குறித்து அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. இன்று வரைக்கும் அவர் வறுமையில் தான் உள்ளார். அந்தச் சொத்து இன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதைக் குறித்து நினைத்துக் கூட பார்க்காத மனிதர் அவர். அவரது சிந்தனை, கவலை முழுவதும் இந்த தேசத்தைக் குறித்துத்தான். ஆனால் அவருக்கான அங்கீகாரத்தை யாரும் வழங்கவில்லை. அவருக்கான சில சாதாரண விஷயங்களைக் கூட அரசு செய்து தரவில்லை என்பது மிகமிக வருத்தத்திற்குரிய விஷயம். எனினும் யாரைப் பற்றியும், அரசைப் பற்றியும் அவர் குறை கூறிக் பேச மாட்டார்”.
சென்ற ஆண்டு மரணமுற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அமீர் ஹம்ஸாவைப் பற்றிதான் துக்ளக் வார இதழின் ஆசிரியராகவும், முன்னணி அரசியல் விமர்சகராகவுமிருந்த “சோ” இராமசாமி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் சாத்வீகப் போராட்டங்களில் நம்பிக்கையிழந்து ஆயுதம் தாங்கிப் போரிடுவதன் மூலமே ஆங்கிலேய ஆட்சியை அகற்ற முடியும் என நம்பினார். இவரது கருத்தை காந்;தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்காத காரணத்தால் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய தேசிய இராணுவம் (ஐNயு) என்ற படை ஒன்றை ஏற்படுத்தினார். இந்தப் படையில் பல முன்னாள் இந்திய இராணுவ வீரர்களும், நேதாஜியின் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களும் இணைந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு எதிர் அணியில் இருந்து போரிட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய அச்சு நாடுகளின் கூட்டணிக்கு ஆதரவாக நேதாஜியின் இந்திய தேசிய இராணுவப்படை செயல்பட்டது. போரில் நேச நாடுகளைத் தோற்கடிப்பதன் மூலம் இந்தியாவிற்கு விடுதலை கிடைக்கும் என அவர் திடமாக நம்பினார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் பர்மாவின் தலைநகரான ரங்கூனில்தான் செயல்பட்டு வந்தது அப்போது இராணுவம் பர்மாவில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பெரும் வணிகர்களாகவும், நிலச் சுவான்தார்களாகவும் இருந்தனர். இவர்களில் பலர் நேதாஜி நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். நிதி உதவி அளித்தனர். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முஸ்லிம்களும் இணைந்து அவரது தலைமையின் கீழ் செயல்பட்டனர். இவர்களின் தியாகம் மகத்தானது.
1945-ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள இம்பாலை முற்றுகையிட்டபோது, இரண்டாம் படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் நவாஸ்கான் இருந்தார். இப் படைப் பிரிவுதான் இம்பாலை கைப்பற்றியது. இந்திய தேசிய இராணுவத்தில் மேஜர் ஜெனரல்களாகவும், லெப்டினன்ட்களாகவும், ஹவில்தார்களாகவும், சிப்பாய்களாகவும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தனர். இந்த இராணுவப்படையில் இணைந்து போரிட்டு உயிர் நீத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 156 ஆகும். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். பல ஆயிரக்கணக்கானோர் ஆங்கிலேயப் படையால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் வாடினர். (விரிவான தகவல்களைத் தெரிந்து கொள்ள வி.என்.சாமி எழுதிய “விடுதலைப் போரில் முஸ்லிம்கள்” என்ற நூலைப் பார்க்கவும்).
நேதாஜி பர்மாவில் இருந்த போது அவருக்குப் அனைத்து வகையிலும் உதவி அளித்து உற்ற துணையாக இருந்தவர்தான் அமீர் ஹம்ஸா அவர்கள். அவரைப் பற்றிதான் இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
பிறப்பு – கல்வி :-
அமீர் ஹம்ஸா இராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்திற்கு அருகிலுள்ள மேலக் கொடும்பலூர் என்ற சிற்றூரில் 1917-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் முகையதீன் இராவுத்தர். இவர் பர்மாவின் தலைநகரான ரங்கூனில் தங்க நகை வியாபாரம் செய்து வந்தார். இவரது இரண்டாவது புதல்வர்தான் அமீர் ஹம்ஸா. சொந்த ஊரிலிலேயே ஒன்பதாம் வகுப்பு வரை படித்த அமீர்ஹம்ஸா, அதற்குப் பிறகு படிப்பைத் தொடராமல் ரங்கூனுக்குச் சென்று தனது தந்தையார் நடத்தி வந்த நகைக் கடையில் சேர்ந்தார். அப்போது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவம் ரங்கூனில் செயல்பட்டு வந்தது. ரேஸ் பிகாரி போஸ் என்ற வங்காளத் தலைவர் ரங்கூனில் “இந்திய விடுதலைக் கழகம்” என்ற அமைப்பைத் தொடங்கி இளைஞர்களிடையே போராட்ட உணர்வைத் தூண்டினார். (ரேஸ் பிகாரி போஸ் இந்த அமைப்பை தாய்லாந்து, இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் தொடங்கினார். இந்த அமைப்புகளின் பிரச்சாரத்தால் இளைஞரான அமீர் ஹம்ஸா ஈர்க்கப்பட்டார். நேதாஜி எழுதியிருந்த “இளைஞன் கனவு”, “புது வழி” ஆகிய நூல்களில் படித்த இவர், அவரின் கருத்துக்களால் கவரப்பட்டு விடுதலை உணர்வு பெற்றார்.
இந்திய தேசிய இராணுவம்-;
02.07.1943-ல் நேதாஜி சிங்கப்பூருக்கு வருகை தந்து அங்கு நடைபெற்ற ஒரு விழாவில் இந்திய தேசிய இராணுவத்தின் தளபதியாகப் பொறுப்பேற்றார். 02.10.1943-ல் சிங்கப்பூரில் சுதந்திர இந்திய அரசு ஒன்றையும் நிறுவினார். அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையகம் சிங்கப்பூரிலிருந்து ரங்கூனுக்கு மாற்றப்பட்டது.
07.01.1944 அன்று ரங்கூன் வந்த நேதாஜிக்கு அங்கிருந்த இந்தியர்களும், தமிழர்களும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் ஹம்ஸாவும் கலந்து கொண்டார். போர் நிதி திரட்டுவதற்காக கூட்டத்தில் நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் ஏலம் விடப்பட்டன. முதல் மாலையை பசீர் என்ற பஞ்சாபி முஸ்லிம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இரண்டாவது மாலையை அமீர் ஹம்ஸா மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இளைஞரான அமீர் ஹம்ஸா மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது அறிந்து வியப்புற்ற நேதாஜி அவரது தந்தையை (முகையதீன் இராவுத்தர்) ஆள் மூலம் அழைத்து வரச்செய்து “உங்கள் மகன் எனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இதற்கு நீங்கள் சம்மதம் தெரிவிக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர் “எனது மகன் உங்களைக் காணத் துடித்துக் கொண்டிருந்தான்” என்று பட்டும்படாமலும் பதில் சொன்னார். தனது மகன் நேதாஜியின் பின்னால் நிரந்தரமாகப் போய் விடுவானோ என அஞ்சிய முகையதீன் இராவுத்தர் வீடு திரும்பியதும் அவரை வீட்டின் ஒரு அறைக்குள் தள்ளி வெளியே வரவிடாமல் பூட்டி விட்டார். இந்த விஷயத்தை அல்லாமா கரீம் கனி மூலம் கேள்வியுற்ற நேதாஜி, இரண்டு வீரர்களை அமீர் ஹம்ஸாவின் வீட்டிற்கு அனுப்பி அவரையும், அவரது தந்தையாரையும் அழைத்து வரச் செய்தார். நேதாஜி முகையதீன் இராவுத்தரிடம் “ஏன் உங்களது மகனை வீட்டிலிலேயே பூட்டி வைத்துள்ளீர்கள்?” என்று வினவ, அதற்கு அவர் “வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ள எனக்கு எனது மகன் வேண்டும்” என்று பதிலளித்தார். அதற்கு நேதாஜி “உங்களது வியாபாரத்தை விட நாடு பெரியது. நான் ஐ.சி.எஸ்.படித்தவன். என்னால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும். ஆனால் நான் அதனை விட்டு விட்டு;த்தான் நாட்டுப் பணியாற்ற வந்து விட்டேன். உங்களது மகனையும் நாட்டு பணியாற்றிட அனுமதியுங்கள்” என்று கூறினார். நேதாஜியின் அறிவுரையைக்கேட்டு மனம் மாறிய முகையதீன் இராவுத்தர் தனது மகன் ஏலம் எடுத்த தொகையில் முதல் தவணையாக இரண்டு லட்சம் ரூபாயை நேதாஜியிடம் வழங்கினார். அமீர் ஹம்ஸாவையும் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து செயல்பட அனுமதி வழங்கினார்.
இதன் பின்னர் அமீர் ஹம்ஸா சுதந்திரப் போராட்டத்தில் தீவரமாக ஈடுபட்டார். இந்திய தேசிய இராணுவத்தை நிர்வகிக்க நேதாஜி நிதிக்குழு, பிரச்சாரக் குழு என்ற இரு குழுக்களை அமைத்தார். பதினோரு உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்குழுவில் ஒரு உறுப்பினராகவும், பிரச்சாரக்குழுவின் தலைவராகவும் அமீர் ஹம்ஸா நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 26 தான்.
சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த இந்திய தேசிய அரசையும், இந்திய தேசிய இராணுவத்தையும் நிர்வகிக்க பெரும் நிதி தேவைப்பட்டது. எனவே நேதாஜி நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். ஹபீப் என்ற முஸ்லிம் வணிகர் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும், தங்க கட்டிகளையும் வழங்கினார். (அப்போது 1 பவுன் தங்கத்தின் விலை இருபது ரூபாய் தான்). மேலும் பலர் இலட்சக்கணக்கில் பணமும், நகைகளும் நிதியாக வழங்கினர். அமீர் ஹம்ஸாவும், அவரது தந்தையும் தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.
நேதாஜியின் 47வது பிறந்த நாளை போர் நிதி திரட்டும் நாளாக இரங்கூன் வாழ் இந்தியர்கள் கொண்டாடினர். அந்த நாளில் அவரது எடைக்கு எடை தங்கம் கொடுப்பதென முடிவு செய்து, அமீர் ஹம்ஸாவும் அவரது தோழர்களும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அன்று காலையில் அமீர் ஹம்ஸா தனது தந்தையுடன் சென்று நேதாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார் தனது கையில் அணிந்திருந்த அரை லட்சம் பெறுமானமுள்ள வைர மோதிரத்தை அமிர்ஹம்ஸா நேதாஜியிடம் போர் நிதிக்கு வழங்கினார். அவரது தந்தையார் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அப்போது நேதாஜி அவருக்கு இரண்டு சட்டைகள் கொடுத்தார் அவற்றை தனது வாழ்வின் இறுதி நாட்கள் வரை பாதுகாத்து வைத்திருந்தார்
இரண்டாம் உலக்போரின் போது ஹிட்லரின் ஆசியக் கூட்டாளியான ஜப்பானுடன் இனைந்து நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இரானுவம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டது. எனினும் ஜப்பானி ஹிரோஷிமா நாகசாகி ஆகிய நகரங்களில் அமெரிக்கா அணு குண்டு வீசியதைத்தொடர்ந்து அந்நாடு சரணடைந்தது. எனினும் பர்மாவில் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்த இந்திய தேசிய இராணுவ வீரர்கள் மீது ஆங்கிலேயப்படையினர் குண்டுகளை வீசித்தாக்கினர். இதில் 34000 இந்திய தேசிய இராணுவ வீரர்கள் இறந்தனர்.
ஹிட்லரின் தலைமையிலான அச்சு நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகுஇ நேதாஜியின் கனவு தகர்ந்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் அவர் ஜப்பானுக்குப் புறப்பட்டுச்சென்றார். சென்ற வழியில்தான் தைவானி லுள்ள “தைகோடே” என்ற விமான நிலையத்தில் அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதில் அவர் மரணமடைந்தார். பின்னர் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் ஆங்கிலேயப் படையிடம் சரணடைந்தனர்.
பின்னர்இ ஆங்கிலேயப் படையினர் நேதாஜியின் ஆதரவாளர்கள் மீது பெரும் தாக்குதல்கள் நடத்தினர். 26.04.1945ல் ஆங்கிலர்hடையினர் அமீர் ஹம்ஸாவின் நகைக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த நகைகளையும்இ லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர் (கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் ஏழூ மூட்டைகளில் கொண்டு சென்றார்களாம்) அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தனர். பின்னர் அவரை கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
அமீர் ஹம்ஸா உள்ளிட்ட 32 இந்திய தேசிய இராணுவ வீரர்கள் மீது தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது. இராணுவ நீதிமன்றம் விசாரனை நடத்தி அவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து நாடெங்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்கள் ஆங்கில அரசை வலியுறுத்தினர் இறுதியில் அரசு பணிந்தது. அனைவரையும் விடுதலை செய்தது. விடுதலையான பின்னர்இ அமீர்ஹம்ஸா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு தனது சொந்த ஊருக்குத்திரும்பினார்
இந்தியாவில்:-
ஊர் திரும்பிய ஹம்ஸா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். தேவர்தான் அமீர்ஹம்ஸாவை தமிழகமெங்கும் அறிமுகப்படுத்தினார். இருவரின் குடும்பங்களுக்கிடையே நெருங்கிய நட்புறவு ஏற்பட்டதுஇ தனது சொந்த ஊரான மேலக் கொடும்பலூரில் தனது தந்தையாருடன் சேர்ந்து பல மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டார். சொந்த செலவில் அங்கு ஒரு கண்மாய் வெட்டிக்கொடுத்தார். அது பாசனத்திற்கும் கால்நடைகளுக்கும் நன்கு பயன்பட்டு வந்தது. இன்றைக்கும் அந்தக் கண்மாய் அவரது தந்தையாரின் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாளன்று நாடு சுதந்திரம் பெற்றபோதுஇ பாகிஸ்தான் என்ற தனி நாடு பிரிக்கப்பட்ட காரணத்தால் நாட்டின் பல பகுதிகளில் வகுப்புக் கலவரங்கள் தோன்றின. அப்போது ஹம்ஸாவின் சொந்த ஊரிலும் கலவரம் வெடித்தது. கலவரத்தைத் தடுத்திடும் முயற்சியில் ஹம்ஸாவும்இ அவரது தந்தையாரும் ஈடுபட்டிருந்த போது ஒருவன் அவரது தந்தையைக் கத்தியால் குத்தினான். இத்தாக்குதலில் அவர் இறந்துபோனார். ஒரு சுதந்திரப்போராட்ட வீரரின் குடும்பத்திற்கே இந்த நிலை ஏற்பட்டது வருந்தத்தக்கது.
திருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்ததும் ஹம்ஸா பிழைப்புத்தேடி சென்னை வந்தார். ஏதாவது தொழில் புரிவோமே என்று கருதி அவர் பெட்ரோல் பங்கு தொடங்க உரிமம் வேண்டி விண்ணப்பித்தபோதுஇ அதிகாரிகள் நாற்பது லட்சம் போய் லஞ்சம் கேட்டனர். தான் ஒரு சதந்திர போராட்டவீரா.; எனவே அந்த அடிப்படையில் தனக்கு முன்னுரிமை கொடுத்து உரிமம் வழங்க வேண்டுமென அவர் கோரிய போதுஇ “அப்படியானால் போய் இருபது லட்சம்; தாருங்கள”; என்று அதிகாரிகள் கேட்டார்களாம். பல ஆண்டுகள் போராடிச் சுதந்திரம் பெற்றதன் பலன் இதுதானா என மனம் நொந்து போன ஹம்ஸா சென்னை பாரி முனையில் நடைபாதையில் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வரலானார் இதில் கிடைத்த குறைந்த வருமானத்தைக் கொண்டே தனது வாழ்க்கையை ஓட்டினார். ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என இவர் ஒரு போதும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதில்லை. யாராவது கேட்டால் தான் ஒரு பர்மா அகதி என்றே கூறுவார். தியாகி என்று கூறிக்கொன்டு யாரிடமும் உதவி வேண்டி இவர் சென்றதில்லை.
1973 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி இவருக்கு கேடயம் வழங்கிக் கௌரவித்தார். “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்;” பொன் விழாவின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். துக்ளக் ஆசிரியர் சோவும் இவர்பால் அன்பு பாராட்டினார். துக்ளக் ஆண்டு விழாவின் போது சோ இவரை வரவழைத்துப் பாராட்டுரை வழங்கினார்.
சென்னை பாரிமுனையில் நேதாஜிக்கு சிலை வைக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்த கோரிக்கை விடுத்து வந்தார். எனினும் இவரது கோரிக்கையை நிறைவேற்ற இரு அரசுகளும் முன்வரவில்லை. எனவே நேதாஜியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது (1997ல்) அவரே மக்களிடம் நிதி திரட்டி பாரிமுனையில் தனது குருவுக்கு சிலை வைத்தார்.
குடும்பம்:-
அமீர்ஹம்ஸாவின் சகோதரர் குலாம் ஆரிபும் இந்திய தேசிய இராணுவ படையில் சேர்ந்து பணியாற்றியவர். ஹம்ஸா தனது வாழ்வின் இறுதிநாட்களில் தனது இரண்டாவது மகள் பல்கீஸ் சுலைகா பராமரிப்பில் சென்னை ஏழு கிணறு வீராசாமி தெருவிலிருந்து ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் கீழே தவறி விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்தார். எனினும் 03.01.2016 அன்று தனது 99 வது வயதில் மாரடைப்பு காரணமாக மரணமுற்றார். அவரது ஜனாசா ராயப்பேட்டை பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.
முடிவுரை:-
பர்மாவின் தலைநகரான ரங்கூனில் தங்க நகை வியாபாரியாக செல்வச்செழிப்புடன் தனது இளமைக்காலத்தைக் கழித்த அமீர்ஹம்ஸா தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் வறுமை நிலையில் வாடகை வீட்டில் இருந்தே மரணமுற்றது நமது நெஞ்சங்களில் துயரத்தை வரவழைக்கிறது. அவரைப்போன்ற சுதந்திரப்போராட்ட தியாகிகளை இந்திய சமூகம் உரிய முறையில் கொண்டாடவில்லை. அவரது இறப்புச் செய்தியைக் கூட நாளிதழ்கள் எங்கோ ஒரு மூலையில் பிரசுரம் செய்திருந்தன.
“முஸ்லிம்கள் எல்லா வகையிலும் நேதாஜிக்கு உறுதுணையாக இருந்தார்கள். இது நாம் பெருமைப்படவேண்டிய செய்தி” என ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். நேதாஜியும் முஸ்லிம்களின் பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். 1944 ஆம் ஆண்டு ரங்கூனில் நடைபெற்ற மீலாது விழாவில் கலந்து கொண்ட அவர் “முஸ்லிம்களுக்கு நன்றிசெலுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சமயங்களைக் கடந்து மனித சமுதாயத்திற்;குப் பொதுவானவர்” என்று கூறினார்.
“நேதாஜி இருந்திருந்தால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டிருக்காது” என்பது அவரது திடமான கருத்தாகும். “உங்கள் தலைமையில் நாடு விடுதலை பெற்றால் நான் பிரிவினை கேட்க மாட்டேன”; என ஜின்னா சாகிப் நேதாஜிக்கு கடிதம் எழுதியிருந்தாh.; இந்தக் கடிதம் ரங்கூனை விட்டு நேதாஜி கிளம்பிச்சென்ற போது இவரது கைக்குக் கிடைத்தது. அந்த கடிதத்தை தனது நகைக் கடையில் வைத்திருந்தார். ஆனால் 26.04.1945 அன்று இவரது கடையை ஆங்கிலேய இராணுவத்தினர் கொள்ளையடித்த போது அந்தக்கடிதம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களையும் எடுத்துச் சென்று விட்டதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது குடும்பம் : அவரது துணைவியார் பெயர் மரியம் ஆயிஷா, அமீர் ஹம்ச மரியம் ஆயிஷா தம்பதியினருக்கு முகம்மது மைதின், ஷாஹுல் ஹமீது என்ற இரு மகன்களும், ஃபரீதா பேகம், சுலைகா சபுர் நிசா, பாப்பா ஆகிய மகள்களும் இருக்கின்றனர். அனைவரும் தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடியிருந்து வருகின்றனர். மனைவி மரியம் 40 ஆண்டுகளுக்கு முன்பே மரனம் அடைந்து விட்டார்.
அமீர் ஹம்சாவின் சகோதரர்கள் குலாம் ஆரிஃபு, இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர், அவருடைய வாரிசுகள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
மற்றொருவர் இஸ்மாயில்.
நாட்டின் சுதந்திரத்திற்காக அமீர்ஹம்ஸா ஆற்றிய பணிகள் ஒப்புயர்வற்றவை. இவர் போன்ற தியாகிகளை உரிய முறையில் கௌரவிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும். இத்தகைய ஒரு தியாக சீலர் தமிழ் முஸ்லிம் சமூகத்திலிருந்து தோன்றினார் என்பதும் பெருமைப் பட வேண்டிய செய்தியாகும்.
துணை நின்ற நூல்கள்;:-
1. இந்திய விடுதலைப்போரில் தமிழ் முஸ்லிம்கள்-புதிய செய்திகள்- அ.மா.சாமி
2. விடுதலைப்போரில் முஸ்லிம்கள்-வி.என்.சாமி
3. இணைய தளச் செய்திகள்.
கட்டுரையாளருடன் தொடர்புகொள்ள
கைபேசி எண்-9976735561