முதல் தலைமுறை மனிதர்கள்-2

திவான் கான் பகதூர்

“நான் ஒரு இராவுத்தர். என் தாய்மொழி தமிழ், உருது அல்ல. இது பற்றி நான் வெட்கப்படவில்லை. பெருமைப்படுகிறேன்.  இந்தி எதற்காக இந்தியாவின் பொது மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று எங்களுக்குச் சொல்லப்படவில்லை.  இந்த வேற்று மொழி கட்டாயமாகப் புகுத்தப்பட்டிருப்பதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாத ஒரு கிராமம் கூட இல்லை.”

1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சென்னை மாகாண சட்டசபைக் கூட்டத் தில் இப்படி முழங்கியவர் முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரான கலீபுல்லா சாகிப்.  அவ்வாண்டு மார்ச்சு மாதம் மாகாணத் திலுள்ள 125 நடுநிலைப் பள்ளிக்கூடங்களில் இந்திமொழி படிப்பதைக் கட்டாயமாக்கி இராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்தே சட்டசபையில் பேசும் போது அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

முஸ்லிம் லீகின் பார்லிமெண்ட் போர்டு உறுப்பினராகவும், சென்னை மாகாண மேல்சபை உறுப்பினராகவும், சட்டசபை உறுப்பினராகவும். அமைச்சராகவும், புதுக் கோட்டை சமஸ்தான திவானாகவும் பொறுப் புகள் வகித்த கலீபுல்லா சாகிபின் அரசியல் வாழ்க்கை பல திருப்பங்கள் நிறைந்தது என்றே கூறலாம்.

பிறப்பு- படிப்பு :

கலீபுல்லா சாகிப் இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள (அன்றைய திருச்சி மாவட்டம்) இலுப்பூர் என்ற சிற்றூரில் 1888 ஆம் ஆண்டு பிச்சை இராவுத்தர் – அமீரம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தார்.  இவரது முப்பாட்டனார் திருச்சி நகரில் மிகப்பெரிய வணிகராக விளங்கினார். இந்து சமயத்தைச் சார்ந்த அவர் வியாபார நிமித்தமாக தூத்துக் குடி சென்றிருந்தபோது கடும் வயிற்று வலி ஏற்பட்டு அல்லலுற்றார்.  அப்போது அங்கிருந்த பள்ளிவாசலில் தங்கியிருந்த ஒரு சூபி ஞானி பிரார்த்தனை செய்து அவரது நோயைக் குணப் படுத்தியதாகவும், அதனால் ஈர்க்கப்பட்ட அவர் இஸ்லாமில் இணைந்ததாகவும் சொல்லப்படுகின்றது.  கலீபுல்லா சாகிபின் தந்தையார் பிச்சை இராவுத்தரும் திருச்சியில் மிகப்பெரிய வணிகராக இருந்தார்.

பட்டப்படிப்பு வரை திருச்சியிலேயே கற்றுத் தேறிய அவர், பின்னர் 1913ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் அப்போது மாவட்டத் திலேயே முதுகலை பட்டம் பெற்றி ருந்த முதல் முஸ்லிம் அவர்தான்.  1913 ஆம் ஆண்டு சட்டம் பயில்வதற்காக இங்கிலாந்து சென்ற அவர், தந்தையின் திடீர் மரணம் காரணமாக சென்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே ஊர் திரும்ப வேண்டியதாயிற்று.  மீண்டும் இங்கிலாந்து சென்று பயில வேண்டும் என அவர் விரும்பிய போதிலும், முதலாம் உலக மகாயுத்தம் காரணமாக அந்த அவா நிறைவேறாமல் போய் விட்டது.  எனினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று தேறினார்.  சென்னை நீதிமன்றத்தில் வழக்கறி ஞராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை:

கலீபுல்லா சாகிபின் வாழ்க்கையை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் கட்டம் 1915 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு வரையிலான அரசியல் வாழ்க்கை.

இரண்டாவது கட்டம் 1941 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரையிலான புதுக்கோட்டை சமஸ்தான திவான் வாழ்க்கை.

சட்டம் பயில்வதற்கு முன்னரே கலீபுல்லா சாகிப் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார்.  அப்போது நாட்டில் நடை பெற்றுக் கொண்டிருந்த ஒத்துழையாமை இயக்கமும், கிலாபத் இயக்கமும் அவரை அரசியலுக்கு ஈர்த்தது.  அகில இந்திய முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக்கொண்டார். 1919-1924 ஆம் ஆண்டுகளில் திருச்சி நகர கிலாபத் குழுவின் அமைப்பாளராகப் பணியாற்றினார்.  திருச்சி நகரசபையின் உறுப்பினராகத் தொடர்ந்து 20 ஆண்டுகள் பதவி வகித்த அவர், அந்நகர சபையின் தலைவராகவும் இருமுறை பொறுப்பு வகித்தார்.

1930 ஆம் ஆண்டு சென்னை மாகாண மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு 1936 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார்.  திருச்சி நகரில் மஜ்லிஸே உலமா அமைப்பு உருவாகிடப் பாடுபட்டார்.  ஜமால் முகம்மது சாகிப் சென்னை மாகாண முஸ்லிம் லீக் தலைவராக நியமிக்கப்பட்ட போது, அக்கட்சியின் பார்லிமெண்டு போர்டு உறுப்பினர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டார்.

1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் திருச்சி தனித் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தென்னகத் தின் மிகப்பெரிய கப்பல் கம்பெனி அதிபரானஎடையக்கோட்டை மீரா என்ற காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து அவர் வெற்றி பெற்றார்.

1937க்கும் 1940க்கும் இடைப்பட்ட காலத்தில் அவரது அரசியல் வாழ்க்கை சர்ச்சைக்குரிய தாகவும், போராட்டமிக்கதாகவுமே இருந்தது.

1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் நீதிக் கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.  சக்கரவர்த்தி இராஜகோபாலாச் சாரியார் மாகாணப் பிரதமராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.  எனினும் இராஜாஜி பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டதால், மாகாண கவர்னர் நீதிக்கட்சியை இடைக்கால அரசு அமைக்குமாறு வேண்டினார். எனவே நீதிக்

கட்சித் தலைவரான கே.வி. ரெட்டி தலைமையில் ஆட்சி அமைந்தது.  இந்த இடைக்கால ஆட்சி 1.1.1937 முதல் 14.7.1937 வரைப் பொறுப்பில் இருந்தது. முஸ்லிம் லீக் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கலீபுல்லா சாகிப், நீதிக் கட்சியின் அழைப்பை ஏற்று அந்த அமைச்சரவையில் சேர்ந்து பொதுப்பணித் துறை அமைச்சரானார்.

இது விஷயத்தில் அவர் சென்னை மாகாண முஸ்லிம் லீக்கை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.  இதனால், மாநிலத் தலைமை அவருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியது. எனினும் அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்ட மாநிலத் தலைமை அவர் தொடர்ந்து கட்சியில் நீடிக்க அனுமதி அளித்தது.  அவர் சில காலம் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  (பார்க்க முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு – முதல் பாகம் – பக்கம் 267) கலீபுல்லா சாகிப் பெரியாரின் தலைமையி லான நீதிக் கட்சியுடன் மிகுந்த தோழமை கொண்டிருந்தார். அக்கட்சியின் தலைவர் களான பெரியார் ஈ.வே.ரா., கி.ஆ.பெ.விஸ்வநாதம், சர் பி.டி. இராஜன், ஏ.டி. பன்னீர்ச் செல்வம் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். நீதிக்கட்சி நடத்திய மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.  வட ஆற்காடு மாவட்ட நீதிக் கட்சியின் இரண்டாவது மாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசிய அவர் முஸ்லிம்களுக்கும், நீதிக்கட்சிக்கு மிடையே ஒற்றுமை தேவை என்று வலியுறுத் தினார். அந்த ஒற்றுமைக்கு இடையூறாக இருக்கும் நாத்தீகப் பிரச்சாரத்தை நீதிக் கட்சித் தலைவர்கள் கைவிட்டுவிட்டு, அரசியல், சமூகப் போராட்டங்கள் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத் தினார். தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் மாநாட்டில் உரையாற்றிய அவர் பிராமண மேலாண்மையைக் கடுமையாகச் சாடினார். “பிராமணர்கள் பிழைப்பிற்காக வெளிநாடு களிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள்.  முஸ்லிம்களை இந்தியாவை விட்டு வெளி யேறச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை”என்று முழங்கினார்.

கலீபுல்லா சாகிப் முஸ்லிம்களின் நலன் சார்ந்த விஷயங்களில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. 1937 ஆம் ஆண்டு இராஜாஜி மாகாணப் பிரதமராகப் பொறுப்பேற்றதும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டசபைக் கூட்டத்தின் தொடக்கத்தில் “வந்தே மாதரம்” பாடல் பாடப்பட வேண்டு மென உத்தரவு பிறப்பித்தார். அரசின் இந்த உத்தரவினை எதிர்த்து கலீபுல்லா சாகிப் சட்டசபையில் உரையாற்றினார்.

முஸ்லிம்களை இழிவாகச் சித்தரிக்கின்ற, இறைவனுக்கு இணை வைக்கின்ற இந்தப் பாடலை முஸ்லிம் உறுப்பினர்கள் பாட மாட்டார்கள் என ஆணித்தரமாகக் கூறினார்.  அதே நேரத்தில் இராஜாஜி கொண்டு வந்த கடன் நிவாரணச் சட்டத்தையும், மது விலக்கையும் ஆதரித்துச் சட்டசபையில் பேசினார்.  இவை இஸ்லாமுக்கு இசைவான நடவடிக்கைகள் எனப் பாராட்டினார். எனினும் இராஜாஜி அரசின் இந்தித் திணிப்புக் கொள்கையை எதிர்த்து சட்டசபையிலும், வெளியிலும் தீவிரமாகப் போராடினார்.  அகில இந்திய முஸ்லிம் லீகின் மத்தியத் தலைமை இந்தித் திணிப்பை எதிர்த்து நீதிக் கட்சியுடன் இணைந்து போராடுமாறு

மாகாணத் தலைமைக்கு அறிவுறுத்தியிருந்தது.  எனினும் அப்போது மாகாண முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த ஜமால் முகம்மது சாகிப் இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டவில்லை.

ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீது, அப்துல் ஹமீது கான் போன்ற உருதுவைத் தாய் மொழியாகக் கொண்டிருந்த தலைவர்களும் இந்தி எதிர்ப்பில் ஆர்வம் காட்டவில்லை. இந்தியும், உருதுவும் கிட்டத்தட்ட ஒரே மொழி தான்; லிபிதான் வேறு. எனவே முஸ்லிம்கள் இந்தியை இலகுவாகக் கற்றுக் கொள்ள முடியும் என அவர்கள் சட்டசபையிலேயே வாதிட்டனர்.

விவாதத்தின்போது கலீபுல்லா சாகிப்பிற்கும் ஐஸ்டிஸ் பசீர் அகமது சயீதுக்கும் மோதல் ஏற்பட்டது.  இந்தப் பிரச்சனையில் பதவியை இராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் நிற்கத் தயாரா என அவர் பஷீர் அகமது சயீதுக்குச் சவால் விடுத்தார்.  இந்த மோதல் அன்றைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிற முஸ்லிம் லீக் தலைவர்கள் போலல்லாமல் கலீபுல்லா சாகிப் இந்தி எதிர்ப்புப் போராட் டங்களில் முன்னணிப் பங்கு வகித்தார். 01.08.1938 அன்று இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சியிலிருந்து சென்னை சென்ற 100 பேர்கள் கொண்ட நடைப்பேரணியை பெரியார் ஈ.வே.ராவும் கலீபுல்லா சாகிபும் தொடங்கி வைத்தனர்.

இந்த நடைப்பேரணிக்கு பட்டுக்கோட்டை அழகிரிசாமி தலைமை ஏற்க முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரான திருப்பூர் முகை தீனும் கலந்து கொண்டார். 11.09.1938 அன்று இந்தப் பேரணி சென்னையை அடைந்தபோது அதனை லட்சக்கணக்கான இந்துக்களும், முஸ்லிம்களும் வரவேற்றனர்.

பெரியாரும் கலீபுல்லா சாகிபும் மாகாண மெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் உரை நிகழ்த்தினர். அவரது தீவிர இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக அவருக்கும் பிற முஸ்லிம் லீக் தலைவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு கள் ஏற்பட்டன. மொழியின் அடிப்படையில் அரசியலில் தமிழ் முஸ்லிம்களின் தனித்தன்மையை

வலியுறுத்தியவர் கலீபுல்லா சாகிப் என்றும், சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தாலும் அதன் உதவியுடனும் கலீபுல்லா சாகிப் உருவாக்கிய இப்போக்கு ஒரு நிலைத்த அம்சமாக ஆகிவிட்டதென்றும், அது சுதந்திரத் திற்குப் பின்னர் தென்னிந்திய அரசியலில் இன்னும் தீவிரமாக வெளிப்பட்டது என்றும் பிரெஞ்ச் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மோரே குறிப்பிடுகின்றார்.

புதுக்கோட்டை திவானாக:

1940 ஆண்டு மார்ச்சு மாதம் 23ம் நாள் லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் பாகிஸ்தான் தனிநாடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லீகின் இந்தக் கோரிக்கையில் கலீபுல்லா சாகிபிற்கு உடன்பாடு இல்லை.  ஏற்கனவே இந்தி எதிர்ப்பு விஷயத்தில் மாகாண தலைவர்களுடன் கருத்துவேறுபாடுகள் கொண்டிருந்த அவர், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று தீவிர அரசியலிலிருந்து விலகுவ தாக அறிவித்தார். சில மாதங்களுக்குப் பிறகு புதுக்கோட்டை சமஸ்தானத்தின் துணை திவானாகப் பொறுப்பேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்று புதுக்கோட்டை சென்ற அவர் அந்த சமஸ் தானத்தின் துணை திவானாக 01.01.1941 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது சமஸ்தானத்தில் திவானாகப் பணியாற்றிக் கொண்டிருந்த டாட்டன் ஹாம் என்ற ஆங்கிலேயர் 1944 ஆண்டு மரண மடைந்தவுடன், துணை திவானாக இருந்த கபீபுல்லா சாகிபு திவானாக நியமிக்கப் பட்டார்.

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபாலத் தொண்டைமானின் நம்பிக்கைக்குரிய திவானாக அவர் விளங்கினார். நிர்வாக விஷயங்களில் மன்னர் அவருக்கு முழு சுதந்திரம் வழங்கியிருந்தார்.  திவானாகப் பொறுப்பெற்றதும் கலீபுல்லா சாகிப் அந்த சமஸ்தானத்தில் பல சமூக பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். சமூகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள்பால் அன்பும் பரிவும் கொண்டி ருந்த அவர், அம்மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார். சமஸ்தானத்தில் பிராமணர்களின் மேலாண் மையைக் குறைத்திட பல நடவடிக் கைகள் மேற்கொண்டார். சமஸ்தானத்தின் தொழில் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அவர், புதுக்கோட்டையில் தாவுத் மில், கனகவேல் மில், காவிரி மில், புதுகை டெக்ஸ்டைல்ஸ் ஆகிய நான்கு பஞ்சாலைகள் நிறுவினார். அங்கு ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் தீப்பெட்டி தொழிற் சாலையையும் தொடங்கினார்.

1738 ஆம் ஆண்டு முதல் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடைபெற்று வந்த நவராத்திரி கொண்டாட்டங்களின் போது நகரின் நான்கு முக்கிய இடங்களில் பிராமணர்களுக்கு இலவ சமாக உணவும் அரிசியும் நான்கு அம்மன் காசுகளும் வழங்கப்பட்டு வந்தன. இத்தொடர் செலவு காரணமாக சமஸ்தானத்திற்குப் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு, பிராமணர் களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த இலவசங் களை நிறுத்தி திவான் உத்தரவிட்டார்.  இதனை எதிர்த்து, பிராமணர்களும், பிற உயர் சாதியினரும் அரண்மனைக்குத் திரண்டு வந்து மன்னரிடம் முறையிட்டனர். திவானின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தினர்.  மன்னர் திவானை அழைத்து “இந்த உத்தரவைத் திரும்பப்பெற இயலுமா” என்று கேட்க அதற்கு அவர் சமஸ்தானத்தின் நிதி நிலை மிகுந்த நெருக்கடியில் உள்ளது. எனவே, இந்த இலவசங்களைத் தொடர முடியாது. வேண்டுமானால், நவராத்திரிக் கொண்டாடங்களின் போது பத்து நாள்களுக்கும் நகர்மன்றத்தில் வைத்து சாதி, மதபேதமின்றி அனைத்து மக்களுக்கும் இலவச உணவு வழங்கலாம் என்று கூறினார்.

திவானின் ஆலோசனையை மன்னர் ஏற்றுக் கொள்ளவே அதன்படி உத்தரவுகள் போடப் பட்டன. ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் திவானின் இந்த நடவடிக்கையை பெரிதும் வரவேற்றனர்.

ஆனால் பிராமணர்களும், பிற உயர் சாதியினரும் திவான் மீது ஆத்திரம் கொண்டனர்.

அவர் எடுத்த வேறு சில சீர்திருத்த நடவடிக்கைகள்.

*              சமஸ்தானத்தில்; ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறையாக இருந்ததை மாற்றி வெள்ளிக்கிழமையே வார விடுமுறை என அறிவித்தார். அன்றே மக்கள் கூடும் சந்தையும் நடைபெறும் என அறிவித்தார்.

*              சமஸ்தானத்தில் தேவதாசி முறையை ஒழித்தார்.

*             இந்தியாவிலேயே முதன்முதலாகப் புதுக்

கோட்டை சமஸ்தானப் பள்ளிக் கூடங் களில் மதிய உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் காரணமாக பிராமணரல்லாத மாணவர்களின் எண்ணிக்கைப் பல மடங்கு உயர்ந்தது.

*             இரண்டாம் உலகப் போர் காரணமாக உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிட சமஸ்தானத்தில் பல

இடங்களில் ரேஷன் கடைகளைத் தொடங்க உத்தரவிட்டார்.  இதனால் மக்கள் பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்றப் பட்டனர்.

*             புதுக்கோட்டையில் “ரோசா இல்லம்” என்ற விருந்தினர் விடுதியைக் கட்டினார் (நிஹிணிஷிஜி பிளிஹிஷிணி)

*             புதுக்கோட்டைப் பல்லவன் குளத்தில் முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கும் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

*             புதுக்கோட்டையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திட 1.88 ஏக்கரில் ஈத்கா மைதானம் அமைத்துக் கொடுத்தார்.

*             புதுக்கோட்டை சமஸ்தான அரசின் உயர் பதவிகளுக்கு நியமனம் பெற பிராம ணர்கள் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டு மென்றும், பிராமணர் அல்லாதவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமென்றும் ஆணை பிறப்பித்தார்.

*             இரண்டாம் உலகப்போரின் போது காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டு பத்திரிகைகள் பாதிக்கப்பட்டபோது, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் காகிதத் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.  இதனால் பத்திரிகைகள் தடையின்றி வெளி வந்தன.

*             திவான் கலீபுல்லா சாகிபின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பாதிப்பிற்கு உள்ளான பிராமணர்கள் மற்றும் பிற உயர் சாதியினர் அவரைப் பழிவாங்கக் காத்திருந்தனர். நாடு சுதந்திரம் அடைந்தபோது, இருந்த நானூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங் களை இந்தியாவுடன் இணைக்க அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.  புதுக்கோட்டை சமஸ்தானத்தையும் இணைக்க அவர் திவானுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  எனினும் மன்னரின் ஆலோசனைப்படி இணைப்பிற்கு திவான் சில நிபந்தனைகள் விதித்தார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிராமணத் தலைவர்கள் டெல்லி சென்று ஜனாதிபதி இராஜேந்திரப் பிரசாத்தையும், உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலையும் சந்தித்து திவான் இணைப்பிற்குத் தடையாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டினர்.  இவர்களின் கூற்றை உண்மை என நம்பிய உள்துறை அமைச்சர் உடனே மன்னருக்கு கடிதம் எழுதி திவானைப் பதவி நீக்கம் செய்யும்படி வலியுறுத்தினார்.

இதனை அறிந்த திவான் 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.  எனினும் மன்னர் ராஜகோபாலத் தொண்டைமான் அவரை உரிய முறையில் கௌரவித்து வழியனுப்பி வைத்தார்.  திவான் மீது மன்னர் மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுமைப் பண்புகள்:

கலீபுல்லா சாகிப் நெஞ்சுறுதியும் நேர்மைத் திறனும் மிக்கவர்.  தனக்குச் சரி என்று பட்டதை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்.  விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதவர். ஒரு முறை, இவரது சீர்திருத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட உயர் சாதியினர் இவரது இல்லத்தின் முன்பு திரண்டு வந்து தாடி ஒழிக, தாடி ஒழிக! (திவான் எப்போதும் தாடியுடன் தான் காட்சி அளிப்பார்) என்று முழக்கமிட்டபோது, வெளியே வந்து அதனைக் கண்ணுற்ற திவான், “தாடியை ஒழிக்க காலணா பிளேடு போதுமே! அதற்கு ஏன் வீண் கூட்டம்“ என்றாராம்.

திருச்சி பீமநகரிலுள்ள பக்காளித் தெருவிலி ருந்த அவரது வீடு மிகவும் விசாலமானது.  ஒவ்வொரு ஆண்டும் லைலத்துல் கதிர் இரவன்று (ரம்ஜான் மாதம் 27ம் இரவு) அவரது இல்லத்தில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்குவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

குடும்பம்:

கலீபுல்லா சாகிபின் துணைவியார் பெயர் வருசையம்மாள் பீவி.  இத்தம்பதியினருக்கு ஆறு ஆண் மக்கள், நான்கு பெண் மக்கள் என பத்துப்பிள்ளைகள்.  இவரது பேரன் ராஜா கலீபுல்லா அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.  இவரது புதல்வி ஜெய்புன்னிஸாவின் புதல்வர் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்து அண்மையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் இப்ராகிம் கலீபுல்லா என்பது குறிப்பிடத்தக்கது.

மறைவு:

கலீபுல்லா சாகிப் திவான் பதவியை இராஜினாமா செய்த பின்னர் தனது வாழ்வின் இறுதி நாட்களில் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியிலுள்ள ராயல் ரோட்டிலிருந்த ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.  10.02.1950 அன்று அவர் காலமானார்.

முடிவாக:

கலீபுல்லா சாகிப் கான் பகதூர் பட்டம் பெற்றவர். புதுக்கோட்டை சமஸ்தானத்து மக்கள் அவர்பால் அளப்பரிய மரியாதை கொண்டிருந்தனர். 1940களில் சமஸ்தானத்தில் பிறந்த இஸ்லாமியக் குழந்தைகளுக்கு “கலீபுல்லா” எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை நகர தி.க. பிரமுகர் இரா. கல்யாணசுந்தரம் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளராகவும் பின்னர் புதுகை மாவட்ட தி.க. தலைவராகவும் பொறுப்புகள் வகித்த பி.வி. வடிவேலு ஆகியோர் முயற்சி காரணமாக புதுக்கோட்டை நகர் மன்றத்தில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.

(அப்போது திரு. அ. தியாகராஜக் காடு வெட்டியார் நகர்மன்றத் தலைவராக இருந்தார்)  ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின்னர் சிலரின் சதிச்செயல் காரணமாக அவரது உருவப்படம் அப்புறப்படுத்தப்பட்டதாகவும், தான் மேற்கொண்ட இடையறா முயற்சிகள் காரணமாக ஜனாப் முகம்மது கனி நகர் மன்றத்தலைவராகப் பொறுப்பு வகித்த போது

அது மீண்டும் வைக்கப்பட்டதாகவும் புதுக் கோட்டையைச் சார்ந்த க. இராஜேந்திரன், வி.கி., வி.ணிபீ. தெரிவிக்கின்றார். (பார்க்க சமநிலைச் சமுதாயம் மாத இதழ் ஏப்ரல் 2012) தனது செயல்பாடுகள் மூலம் தான் பிறந்த இஸ்லாமிய சமூகத்திற்குப் பெருமை சேர்த்தவர் கலீபுல்லா சாகிப் – அவரது புகழ் என்றும் நிலை பெற்றிருக்கும்.

துணை நின்ற நூல்கள் :

1.            “சமநிலைச் சமுதாயம்” மார்ச்சு 2012 இதழில் கே.எம். ஷெரீப் எழுதியுள்ள கட்டுரை.

2.            முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி  ஙிஹ் ஜே.பி.பி. மோரே

3.            முஸ்லிம் லீக் வரலாறு பாகம்- மி – ஙிஹ் ஏ.எம். ஹனீப்.

கட்டுரையாசிரியருடன் தொடர்பு கொள்ள: 9976735561