இந்தியாவால் முன்னேறியது.நீராவி என்ஜினிலிருந்து வலிமையான அமைப்புகள் வரையான தொழிற்துறை வளர்ச்சி தானாக நடந்துவிடவில்லை. இது வன்முறை மூலமாக அடுத்தவர் நிலத்திலிருந்து அடுத்த மக்களிடமிருந்து திருடப்பட்டத்திலிருந்து உருவானது.இந்தியா மீதான காலனியாதிக்கம் குறித்து பிரிட்டனில் ஒரு பொதுவான கதை சொல்லப்படுகிறது. அந்த பயங்கரமான கதை என்னவெனில், ‘பிரிட்டனுக்கு இந்தியாவில் எந்தவித பொருளாதார நலனும் கிட்டவில்லை. சொல்லப்போனால் இந்தியாவை நிர்வகித்ததில் பிரிட்டனுக்குத்தான் செலவு’. அதாவது பிரிட்டன் தன்னுடைய இரக்க குணத்தின் காரணமாக நீண்ட காலம் இந்தியாவில் தாக்குப்பிடித்தது!பிரபல பொருளாதார நிபுணரான உத்சா பட்னாயக், சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கை, மேற்சொன்ன கதையை தவிடுபொடியாக்குகிறது. 1765 முதல் 1938 வரையான இரண்டு நூற்றாண்டு கால வரி மற்றும் வர்த்தக விவரங்களை கணக்கிட்ட பட்னாயக், 45 டிரில்லியன் டாலர் (45 இலட்சம் கோடி டாலர்) களை இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிக்கொண்டு போனதாக தெரிவிக்கிறார். இது மிகப்பெரிய தொகை. உதாரணத்துக்கு 45 டிரில்லியன் டாலர் என்பது, இன்றைய இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 17 மடங்கு அதிகமாகும்.இந்தியாவை பிரிட்டன் எப்படி சுரண்டியது ?வர்த்தகத்தின் மூலமாக இந்த சுரண்டல் நடந்தது. காலனியாக்கத்துக்கு முன் பிரிட்டன் இந்தியாவிடமிருந்து அரிசி, துணி உள்ளிட்ட பொருட்களை காசு கொடுத்து வாங்கியது. காசு என்பது அந்தக் காலத்தில் வெள்ளியாக தரப்பட்டது. 1765-ஆம் ஆண்டு இந்த நிலைமை மாறியது. கிழக்கிந்திய கம்பெனி, துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து இந்திய வர்த்தகத்தில் ஏகபோகத்தை நிறுவியது.அந்த சுரண்டல் அமைப்பு எப்படிப் பட்டது தெரியுமா? கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வரியை வசூலித்தது. இந்த வரி வருவாயிலிருந்து ஒரு பெரும் பகுதியை இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கப் பயன்படுத்தியது. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், தங்கள் பணத்திலிருந்து பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, பிரிட்டன் வர்த்தகர்கள் ‘இலவசமாக’ பொருட்களை வாங்கிக்கொண்டு போனார்கள். விவசாயிகளும் நெசவாளர்களும் வரியை கட்டினார்கள்; அதில் ஒரு பகுதியை திரும்பப் பெற்று பொருட்களையும் கொடுத்தார்கள்.இது ஒரு முறைகேடு – மிகப் பெரும் அளவில் நடந்த திருட்டு!இந்தியர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. வரி வசூலிப்பவர் வேறொருவராக இருந்தார், தங்களிடமிருந்து பொருட்களை வாங்குகிறவர் மற்றொருவராக இருந்தார். ஒருவரே இதைச் செய்திருந்தால், அவர்களால் கண்டுபிடித்திருக்க முடிந்திருக்கும்.திருடப்பட்ட சில பொருட்கள் பிரிட்டனில் விற்கப்பட்டன. மீதியிருந்தவை வேறு நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரிட்டன் தன்னுடைய தொழில்மயமாக்கலுக்கு தேவையான இரும்பு, தார், மரக்கட்டை போன்ற பொருட்களை ஐரோப்பிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்தது. இப்படி மறு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதன் வாயிலாக பிரிட்டன் தன்னுடைய நிதி புழக்கத்தை மேம்படுத்திக்கொண்டது. இந்தியாவில் அமைப்பாக்கப்பட்ட திருட்டின் மூலமே பிரிட்டனில் தொழில் புரட்சி சாத்தியமானது.உலகைப் பங்கு போடும் பிரிட்டிஷ் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்கள்.இதில் முக்கிய விசயம், பிரிட்டிசார் திருட்டு பொருட்களை மற்ற நாடுகளுக்கு விற்கும்போது தாங்கள் ‘வாங்கிய’ விலையைவிட அதிகம் வைத்து விற்றனர். பொருளின் உண்மையான மதிப்பை மட்டுமல்லாது, அதன் மீது வந்த இலாபத்தையும் தங்கள் பைக்குள் போட்டுக்கொண்டார்கள்.பிரிட்டிஷ் அரசு இந்திய துணைக்கண்டத்தை 1847-ஆம் ஆண்டு கையகப்படுத்திக்கொண்டபின், காலனியர்கள், வரி வசூலிப்பது – வாங்குவது என்ற அமைப்பில் ஒரு சிறப்பு திருப்பத்தை கொண்டுவந்தார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகம் உடைபட்டவுடன், இந்திய உற்பத்தியாளர்கள் தங்களுடைய பொருட்களை நேரடியாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணத்தை இலண்டனில் மட்டுமே செலுத்த முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.அது இன்னொரு வகையான சுரண்டல். இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்க விரும்பும் மற்ற நாடுகளுக்கென்று, பிரிட்டிஷ் அரசு பிரத்யேகமான பணத்தாளை அறிமுகப்படுத்தியது. அந்தப் பணத்தாளை தங்கம் அல்லது வெள்ளி கொடுத்து வாங்கிக்கொண்டு, இந்திய பொருட்களை இலண்டனிலிருந்து வாங்கிக்கொள்ளலாம். இந்திய வியாபாரிகள் பொருட்களை விற்பதன் மூலம் சேர்த்த பணத்தாளை உள்ளூர் காலனி அலுவலகத்தில் கொடுத்து, இந்திய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த பரிமாற்றத்தின் போது, வரிப்பணம் பிடித்தம் செய்துகொள்ளும் பிரிட்டிஷ் அரசு. மீண்டும் இந்தியர்கள் சுரண்டப்பட்டார்கள், மோசடி செய்யப்பட்டார்கள்.20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிட்டதட்ட மூன்று தசாப்தங்களாக, கணிசமான அளவில் இந்தியாவின் உபரி வர்த்தகம் மற்ற நாடுகளுடன் நடந்துகொண்டிருந்தபோதும், தேசிய கணக்குகளில் பற்றாக்குறை இருப்பதாகக் காட்டியது பிரிட்டிஷ் அரசு. ஏனெனில் இந்திய ஏற்றுமதியின் உண்மையான வருவாய், பிரிட்டன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.இப்படி உருவாக்கப்பட்ட ‘பற்றாக்குறை’ என்பதை பிரிட்டனின் சொத்தாக இந்தியா இருந்தது என்பதற்கான ஆதாரமாகவும் கொள்ளலாம். இந்திய உற்பத்தியாளர்களின் பெரும்பகுதியான வருமானத்தை பிரிட்டன் இடையிட்டு பறித்துக்கொண்டது. இந்தியா பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. அதே நேரத்தில், ‘பற்றாக்குறை’ என்ற காரணம், இந்தியா வேறு வழியில்லாமல் பிரிட்டனிடமிருந்து கடன் வாங்கி இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ள உதவியது. எனவே, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தேவையில்லாமல் தங்கள் காலனியாளர்களுக்கு கடனாளிகளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை மேலும் உறுதியாக்கியது.இந்த மோசடி முறையிலிருந்து பெற்ற செல்வத்தை பிரிட்டன் தனது ஏகாதிபத்திய வன்முறைகளுக்காகப் பயன்படுத்தியது. 1840களில் சீனாவில் ஊடுருவவும், 1857ல் நடந்த இந்திய சிப்பாய் கலகத்தை ஒடுக்கவும் இந்திய சுரண்டல் பணத்தை பயன்படுத்தியது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம், இந்திய வரிவசூலை வைத்து தன்னுடைய போர் செலவை செய்தது பிரிட்டன் அரசு. பட்னாயக் இப்படி குறிப்பிடுகிறார், “இந்திய எல்லைக்கு வெளியே பிரிட்டன் நடத்திய போர்களுக்கான நிதி, இந்திய வருமானத்தை முழுமையாகவும் முதன்மையாகவும் சார்ந்தே இருந்தது”.இவை மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து கிடைத்த நிதி புழக்கத்தைப் பயன்படுத்தி, ஐரோப்பாவுக்கும் ஐரோப்பாவின் குடியேற்றங்கள் நிகழ்ந்த கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கும் முதலாளித்துவத்தை நீட்டிக்க நிதியளித்தது பிரிட்டன். எனவே, பிரிட்டனின் தொழில்மயமாக்கல் மட்டுமல்ல, மேற்குலகின் தொழில்மயமாக்கலும் காலனிநாடுகளிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திலிருந்தே நடந்தது.1765 முதல் 1938 வரை காலனியாக்க இந்தியாவின் பொருளாதாரத்தை மூன்று தனித்துவமான காலங்களாக இனம்கண்டுள்ள பட்னாயக், அந்தக் காலக்கட்டத்திலிருந்து உறிஞ்சப்பட்ட வருவாயை கணக்கிட்டு, தற்போது வரை அதற்கான குறைந்தபட்ச வட்டியை கூட்டியுள்ளார். அதன்படி, 44.6 டிரில்லியன் டாலர்கள் இந்தியாவிடமிருந்து சுரண்டியிருக்கிறது பிரிட்டன். இந்த மதிப்பு தோராயமானது என தெரிவிக்கும் இவர், காலனியாக்க காலத்தில் பிரிட்டன் அரசு, இந்தியாவின் தலையில் கட்டிய கடன்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்கிறார்.இது மிக மிகப் பெரிய தொகை. ஆனால், இந்த சுரண்டலின் உண்மையான மதிப்பு கணக்கிடப்பட முடியாதது. ஜப்பான் செய்ததுபோல் இந்தியா தன்னுடைய வரி வருவாயையும் அந்நிய செலாவணியையும் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தியிருந்தால், வரலாறு வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்தியா பொருளாதார அதிகார மையமாக உருவாகியிருக்கும். நூற்றாண்டுகால வறுமையும் வேதனையும் தடுக்கப்பட்டிருக்கும்.இப்படிப்பட்ட கசப்பான பின்னணி இருக்க, பிரிட்டனில் உள்ள ஆற்றல் மிக்க சில நபர்கள் சில புனைகதைகளை கிளப்பி விட்டனர். கன்சர்வேடிவ் வரலாற்றாசிரியர் நியால் ஃபெர்குசான், பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் ‘முன்னேற்ற’த்துக்கு உதவியது என்றார். டேவிட் கேமரூன் பிரதமராக இருந்தபோது, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு உதவியாக இருந்தது என்பதை வலியுறுத்தினார்.அதிகார மட்டத்திலிருந்து கிளப்பட்ட இந்த புனைவு வெகுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2014-ஆம் ஆண்டு பிரிட்டன் மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 50% மக்கள் காலனியாதிக்கம் அந்தந்த நாடுகளுக்கு உதவியது என கருத்துச் சொன்னார்கள்.200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் தனிநபர் வருமானம் உயரவே இல்லை. உண்மையில், 19 நூற்றாண்டின் மத்திய காலத்தில் பிரிட்டிஷ் தலையீட்டின் விளைவால் இந்தியாவின் வருமானம் பாதியாகக் குறைந்தது. 1870 முதல் 1920 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைந்தது. பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கிய பஞ்சத்தின் காரணமாக உயிரிழந்தார்கள்.பிரிட்டன் இந்தியாவை முன்னேற்றவில்லை. பட்னாயக்கின் ஆய்வில் தெரியப்படுத்துவது என்னவெனில், பிரிட்டன் இந்தியாவால் முன்னேறியது.இது பிரித்தானியர்களிடம் என்ன கோருகிறது? மன்னிப்பு? நிச்சயமாக. இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா? பட்னாயக் கணக்கிட்டிருக்கும் இழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு பிரிட்டனிடம் போதுமான பணம் இல்லை. அதே நேரத்தில், என்ன நடந்தது என்பது குறித்து உண்மையைச் சொல்லத் தொடங்கலாம். பிரிட்டன் தன்னுடைய அதிகாரத்தை இந்தியா மீது செலுத்தி சுரண்டியதே தவிர, இரக்ககுணத்தின் காரணமாக இந்தியாவை ஆளவில்லை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நமது பள்ளிப்பாடங்களில் சொல்லித்தரப்படுவதுபோல, நீராவி என்ஜினிலிருந்து வலிமையான அமைப்புகள் வரையான தொழிற்துறை வளர்ச்சி தானாக நடந்துவிடவில்லை. இது வன்முறை மூலமாக அடுத்தவர் நிலத்திலிருந்து அடுத்த மக்களிடமிருந்து திருடப்பட்டத்திலிருந்து உருவானது.(கட்டுரையாளர் ஜாசன் ஹிக்கெல், இலண்டன் பல்கலைக்கழக கல்வியாளர்.)தமிழாக்கம்: கலைமதி<https://www.aljazeera.com/…/britain-stole-45-trillion…>