தமிழ்நாட்டில் எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்.காம் உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றுக்கு மாணவர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. அதேநேரத்தில் இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் மிகக்குறைவாக இருப்பதாலும், அவற்றை அதிகரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாலும் அவற்றுக்கு இணையாக 33 புதிய பட்டமேற்படிப்புகள் தொடங்கப்பட்டன.எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்.காம் ஆகிய படிப்புகளை தகுதியாகக் கொண்ட அனைத்து பணிகள் மற்றும் உயர்படிப்புகளில் இந்த இணை படிப்புகளை படித்த மாணவர்களும் சேரலாம் என்று பல்கலைக்கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், இப்போது தமிழகத்தில் 8 பல்கலைக்கழகத்தில் உள்ள 33 புதிய பட்ட மேற்படிப்புகளும் அரசு பணிக்கு தகுதியற்றவை தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும், அவற்றிற்குட்பட்ட கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும் எம்.சி.ஏ படிப்பு உள்ளிட்ட 13 வகையான முதுநிலை அறிவியல் படிப்புகள் எம்.எஸ்சி கணினி அறிவியல் படிப்புக்கு இணையானவை அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெரியார் பல்கலைக்கழகத்திலும், பாரதியார் பல்கலைக்கழகத்திலும் கற்பிக்கப்படும் எம்.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், எம்.காம் கணினி பயன்பாடு உள்ளிட்ட 20 படிப்புகள் எம்.காம் படிப்புக்கு இணையற்றவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக ஒரு படிப்புக்கு இணையான இன்னொரு படிப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றால், மூலப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் 70% புதிய படிப்புக்கான பாடத்திட்டத்திலும் இடம் பெற வேண்டும் என்பது விதியாகும். ஆனால், புதிய பாடத்திட்டம் அத்தகையதாக இல்லை என்பதால் புதிதாக தொடங்கப்பட்ட படிப்புகள் மூலப் படிப்புக்கு இணையற்றவை என்று அதற்காக அமைக்கப்பட்ட சமானக் குழுவின் 59&ஆவது கூட்டத்தில் முடிவெடுத்து, அதனடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகங்கள் செய்த வற்றுக்காக அவற்றில் படித்த மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு பல்கலைக்கழகங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.எனவே, 2018&19 ஆம் கல்வியாண்டு வரை இப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பெற்ற பட்டங்கள் எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்.காம் ஆகியவற்றுக்கு இணையானவை;அரசு வேலைக்கு தகுதியானவை என்று அறிவிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இப்படிப்புகளை தடை செய்ய வேண்டும்.