21 ஆம் நூற்றாண்டிலும் சாதிதான் வேலைகளை தீர்மானிக்கிறது

ஒரு மனிதர் செய்ய விரும்பும் வேலையை தீர்மானிக்கும் மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாக இன்றும் இருப்பது சாதிதான் என்கிறது சமீபத்திய முறைசாரா தொழிலாளர் கணக்கெடுப்பு.தாழ்நிலை தொழில்கள் என பாரம்பரியமாக கருதும் சுகாதாரப் பணிகள், தோல்சார்பு வேலைகள் இன்றளவும் தாழ்நிலை வேலைகளாகவே இருக்கின்றன. இவ்வேலைகளில் பண்டைய காலம் முதலும் இன்று வரையிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் வேறு சில குறிப்பிட்ட சமூகத்தினரும் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். மேல்நிலை வேலைகள் அனைத்தும் பட்டியல் மற்றும் பழங்குடியினர் அல்லாத சாதி மக்களின் பிடிக்குள்தான் இருக்கிறன்றன. வெளிநாட்டு நிறுவனங்களின் உயர்மட்ட பணிகளிலும், தனியார் நிறுவனங்களில் நிறுவன மேலாளர்கள் மற்றும் தொழில் முனைவுகளிலும் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்களின் பங்களிப்பு மீச்சிறு அளவில் இருக்கிறது. தனியார் நிறுவனங்களின் மேலாளர் பணிகளில் பட்டியல் மற்றும் பழங்குடியல்லாத சமூகத்தவர் 93 விழுக்காடு இருக்கின்றனர். குறிப்பிட்ட அளவு அரசு பங்களிப்புடைய துறைகளான ஆசிரியர், மருத்துவம் மாதிரியான பணிகளில் பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் விகிதம் ஓரளவு கணிசமாக உள்ளது. டைம்ஸ் ஆப் இண்டியா நாளிதழ் என்கிறது சமீபத்திய முறைசாரா தொழிலாளர் கணக்கெடுப்புகொண்டு சமூகங்களின் விருப்ப பணிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் மற்றும் மருத்துவ பணிகளில் பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் அதிக விருப்பம் காட்டுகின்றனர். இவர்கள் பண்ணைசாரா அனைத்து பணிகளிலும் 14% என்ற அளவில் இருந்தாலும், முறையாக கல்வித்துறையில் 8.9%ம் மருத்துவத்தில் 9.3%ம் பணிசெய்கின்றனர். காவல்துறை பணியில் பட்டியல் வகுப்பினர் 13.7%ம் பழங்குடியினர் 9.3% ம் இருக்கின்றனர். பழங்குடியினர் அனைத்து பண்ணைசாரா பணிகளில் 4% ஆக இருக்கும் அதே வேளை காவல் பணிகளில் தங்கள் மக்கள் தொகை விகிதத்தை காட்டிலும் கூடுதலாக இருக்கின்றனர். கணிசமான பழங்குடி மக்களை கொண்ட மாநிலங்கள் பழங்குடி மக்கள் காவல்துறை பணிகளில் அதிகம் பேர் இணைய வழிவகுத்துள்ளன. பட்டியல் சமூகத்தவர்கள் சமயல் பணியாளர்களாக வேலை செய்யும் இடங்களில் பெரிய அளவில் தீண்டாமைக்கு ஆளாகின்றனர். பல மாநிலங்களில் பட்டியல் சமூகத்தவர்கள் சமயல் பணியாளர்களாக அதிக எண்ணிக்கையில் உள்ளனர், பஞ்சாப்பில் 44.3%; உத்தரப்பிரதேசத்தில் 21.3% என்ற அளவில் பட்டியல் சமூகத்தவர்கள் சமயல் பணியாளர்களாக இருக்கின்றனர். பண்ணைசாரா கீழமை பணிகளில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களின் பங்களிப்பு அவர்களது மக்கள் தொகை விகிதத்தை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. நடுத்தரமான பணிகளில் பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. சுகாதாரப்பணி மற்றும் தோல்சார் தொழிலில் பட்டியல் சமூக மக்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருக்கிறது. உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தில் தோல்தொழிலில் 41,000 பட்டியல் சாதியினர் வேலை செய்கிறார்கள். பாரம்பரியமாக தோல்தொழில் செய்து வருகிற சாமர்ஸ் ( Chamars), துசியா (Dhusia), ஜாதவா ( Jatava) போன்ற பட்டியல் சமூகங்களே இப்போதும் அதே தோல்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதே போல, ராஜஸ்தான் மாநிலத்தில், 76,000 சுகாதாரப்பணியாளர்களில் 52,000 பேர் பாங்கி (Bhangi), மேதார்(Mehtar) மற்றும் சுரா (Chura) போன்ற பட்டியல் சமூகத்தை சார்ந்த மக்களாக இருக்கிறார்கள். இவர்கள் பாரம்பரியமாகவே சுகாதாரப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேல்நிலை பணிகள் (better jobs) எனப்படும் வேலைகளில் பட்டியல் சமூகத்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவு ஊடுறுவி இருந்த போதும் சுகாதாரம் மற்றும் தோல்சார்ந்த தொழில்களில் பெரியதொரு தொகையில் பாரம்பரியமாக வேலை செய்து வருகிறார்கள். உதாரணமாக உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியில் 35-59 வயதுடையவர்களில் 63.4% விழுக்காட்டினர் சுகாதாரப் பணிகளை செய்கின்றனர். இவர்கள் பால்மிகி ( Balmikis) எனும் பட்டியல் சாதியை சார்ந்தவர்கள். 15-34 வயதுடைய பட்டியலின சுகாதாரப் பணியாளர்களில் 62%னர் பால்மிகி சமூகத்தினர். புதிய தலைமுறையில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை என்பதற்கு இது எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதே போல, தோல்தொழிலில் ஈடுபட்டிருக்கும் 35-59 வயதுடைய பட்டியல் சாதி மக்களில் சாமர், ஜாதவா, துசியா பிரிவினர் கூட்டாக 88.2% இருக்கின்றனர். இதே தோல்தொழிலில் ஈடுபட்டுள்ள 15- 34 வயதுடையவர்களிலும் இவர்கள் கூட்டாக 88.2% உள்ளனர். இதே அளவான விகிதம் தான் மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் நிலவுகிறது. கேரளாவில் தோல்தொழிலில் (leather) 13%ம் சுகாதாரப்பணியில் (sweepers) 23% ம் பட்டியல் சாதியினர் உள்ளனர். கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளைக் காட்டிலும் பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் அதிக அளவில் இருப்பதற்கு காரணம் இந்த இரண்டு வேலைகளும் கீழான வேலைகள் என்ற கருத்து இருப்பது தான்.