பழங்களின் பயன்கள்

எம். நூருல் அமீன். PhD.,

அல்லாஹ்வின் படைப்புகள் கண்ணிலும் அடங்காதவை. எண்ணிலும் அடங்காதவை. அவற்றில் நமக்குத் தேவையான வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்வது நம் அனைவரின் மீதுள்ள கடமையாகும்.

தானியங்களும் பழங்களும் நம்முடைய வாழ்வாதாரங்களில் உள்ளவைகளாகும். அவற்றில சில, பூமியில் மறைந்து கிடக்கின்றன. விவசாயம் செய்து அவற்றைப் நாம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு பூமியில் கிடைக்க கூடிய பல அற்புதங்களில் பழங்களும் ஒன்று.
பழங்களின் பயனை குர்ஆன் பல வசனங்களில் பகர்கிறது. இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களும் இனிய கனிகள் மருந்தாவதை சொல்லி உள்ளார்கள்.

பழங்களையும், தானியங்களையும் பற்றி பல வசங்களில் சொல்கிறது :- பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 6:141)
சொர்க்கத்திலும் பலவகை பழங்களும் பேரீச்சைகளும் மாதுளையும் உள்ளது என்பதை அல் குர்ஆனில் 55:68 ஆவது வசனம் சொல்கிறது.

நல்லடியார்கள் வாழும் சொர்க்கத்தில் (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்; (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்; இன்னும், நீண்ட நிழலிலும், (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும், ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் இருப்பார்கள் -என்றும் அல் குர்ஆன் (56-28, 29,32) வசனங்கள் கூறுகின்றன.
இங்கு தமிழ்நாட்டில் ‘முத்தமிழே…முக்கனியே…’ என கொஞ்சிப் பேசி பழங்களை போற்றி மகிழ்ந்தவர்கள் நாம். பழங்களை உண்பதையே, இன்றைய சந்ததியினர் பலர் மறந்துவிட்டனர்.

உணவாகவும் மருந்தாகவும் பயன் அளித்து நிறைவான ஊட்டச்சத்துக்களையும் நமக்கு சேர்த்தே அள்ளித்தருபவை பழங்கள் என்பதை
தெரியாமலே இன்றய தலைமுறையினர் வாழுகின்றனர்.

பழங்கள் சுவைக்காகவும் ருசிக்காகவும் மட்டுமல்ல! பழம் நமக்கு பலம் என்பதையும் புரிந்து கொள்வோம்.

பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் நமக்கு இறைவன் கொடுத்துள்ளான்.

இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்னைகள் இதனால் நம் உடலுக்குள் எட்டிப் பார்க்காது.

கால நிலை பருவத்துக்கு ஏற்ப இறைவன் நமக்கு பல வித பழங்களை வாரி வழங்கி இருக்கிறான்.
நம் ஊரில் கிடைக்கக்கூடிய சில பழங்களை பற்றியும் அதன் அருமை பெருமைகளை பற்றியும் தெரிந்து கொள்ளாமல் வெளி நாட்டு மோகத்தினால் சில பழங்களை சாப்பிட்டு வருகின்றனர்.
ஒருவரின் வயது, பாலினம் மற்றும் உடல் உழைப்பைப் பொருத்து அவருக்குத் தேவைப்படும் உணவின் அளவுகள் வேறுபடும். இருப்பினும் அவரவர் உடலுக்குத் தேவையான கலோரியைப் பொறுத்து தேவைப்படும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம்.


இது பழங்களின் அரசன் என்றும் அழைக்கப்படுகிறது.

மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச் சத்து, தாது உப்புக்கள் மற்றும் பாலி பீனாலிக் ஆன்டிஆக்சிடன்ட் ஆகியவைகள் அதிகம் உள்ளன.

இதுதவிர, வைட்டமின் ஏ, பி6, சி, இ ஆகிய சத்துக்களும் நிறையவே உள்ளன. வைட்டமின் ஏ கண் பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம்.

வைட்டமின் சி – நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. மாம்பழத்தில் மார்பகம், மற்றும் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட இது உதவுகிறது

மாம்பழத்தில் உள்ள சில வகையான என்சைம்கள், புரதத்தை உடைத்து உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாக மாற்றும் பணியை ஊக்குவிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. மலச் சிக்கலையும் போக்குகிறது.

முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் சிறப்பு பெறுகிறது. பலாப்பழத்திலும் வைட்டமின் ஏ சக்தி நிறைந்திருக்கிறது.

இது குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுத்து . ரத்த விருத்திக்கும் உதவுகிறது. நம் உடலுக்கு ஊக்கமளித்து நரம்புகளுக்கு புத்துணர்வையும் ஊட்டும்.

வாழைப்பழம் முக்கனியில் மூன்றாவது கனி.
வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடலுக்குத் தேவையான கார்போ ஹைட்ரேட்டை வழங்கும்.

மேலும் வாழைப் பழத்தில் விட்டமின்கள், பொட்டாசியம், ஃபோலேட், அமினோ அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளது. தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகி ஜீரண சக்தி அதிகரிக்கும்.

இது மட்டுமல்லாமல் பல வகை பழங்கள் அதிகமான பயன்களை நமக்கு அள்ளித் தந்து கொண்டு தான் இருக்கிறது.
அவைகளில் சிலதை பார்போம்.

ஆப்பிள் :- தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் நாம் மருத்துவரை நாடவேண்டிய அவசியம் இருக்காது.

ஏனெனில் ஆப்பிளில் விட்டமின்கள், புரோட்டீன்கள் போன்ற உயிர் சத்துக்கள் நிறைய உள்ளது.

தினமு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைக்கப்படும். குறிப்பாக ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வைட்டமின்கள் நிறைய உள்ளது. தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை ஜூஸ் செய்து சாப்பிடுவதை விட அப்படியே கடித்து ருசித்து சாப்பிடுவது சிறந்தது.

ஆப்பிளில் உள்ள ஒரு வகை ஊட்டச்சத்து நுரையீரல், மார்பகம் மற்றும் குடல் போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்று நோயை தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

பப்பாளி :- பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, இ, பொட்டாசியம், கல்சியம், ஃபோலேட் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

பல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும், சிறுநீரக கற்களை கரைப்பதற்கும், நரம்புகள் பலமடையவும், ஆண்மை தன்மை பலமடையவும், ரத்த விருத்தி உண்டாக்கவும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் தினமும் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளை :- கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, சோடியம், விட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

நீண்ட நாள்மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து மாதுளம் பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

அதேபோல் வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

பித்த சம்மந்தமான உடல் நல பிரச்சனைகளுக்கும் மாதுளம் நல்லது.
இன்ஷா அல்லாஹ்.