மதுக்கூர் இராமலிங்கம்
“என் வாழ்வே நான் விடுக்கும் செய்தி” என்ற காந்தியின் 152ஆவது பிறந்தநாள் அக்டோபர் 2 கொண்டாடப்படுகிறது. அவருடைய வாழ்வு மட்டுமல்ல, அவர் கொல்லப்பட்டதும் அதன் பின்னால் இருக்கும் ஆபத்தான கருத்தியலும் கூட இன்றளவும் இந்தியாவிற்கு பல செய்திகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
காந்தியின் மீதான வன்மத்தை இப்போதும் அவர்கள் பொத்திப் பாதுகாக்கிறார்கள். மறுபுறத்தில் தங்களது இயக்கத்தை காந்தி பாராட்டியதாக வரலாற்றைப் புரட்டிப்போட்டு புனை கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் காந்தியிடம் தங்கள் இயக்கம் மிகவும் கட்டுப்பாடானது என்று கூறியபோது, ஹிட்லர் கூட தன்னுடைய நாஜிப் படையை கட்டுப்பாடாகத்தான் வைத்திருந்தார் என்று பட்டென்று பதில் சொன்னவர் மகாத்மா.
இந்திய விடுதலைப் போராட்டத்தை வெகுமக்கள் போராட்டமாக மாற்றியதிலும், விடுதலை பெற்ற இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக, மலர்ந்ததிலும் காந்தியடிகளின் பங்கை யாரும் மறுதலித்து விட முடியாது. காந்தி முன்மொழிந்த, முன்னிறுத்திய மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், சுதேசி, சுயசார்பு போன்ற விழுமியங்கள் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாகவும், அழுத்தமாகவும் உணரப்படுகிறது.
இந்த அறநெறிகளின் வழியாகவே காந்தி இப்போதும் நினைக்கப்படுகிறார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பிய காந்தி 1893-ஆம் ஆண்டு தாதா அப்துல்லாஹ்வின் நிறுவனத்தின் வழக்கறிஞராக பணியாற்றுவதற்காகவே தென்னாப்பிரிக்கா சென்றார்.
அப்போது அவருக்கு வயது 24. ஓராண்டு ஒப்பந்தத்தில் பணியாற்ற தென்னாப்பிரிக்கா சென்ற அவர் அங்கு 21 ஆண்டுகள் இருந்தார். தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறி காந்தியையும் காயப்படுத்தியது. அங்கு உரிமைகள் மறுக்கப்பட்டு, உழன்று கொண்டிருந்த இந்தியர்களுக்காகப் போராடத் தொடங்கினார் காந்தி.
அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு 1896 ஆம் ஆண்டிலேயே தமிழகம் வந்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் படும் துயரத்தை எடுத்துச் சொல்வதற்காக வந்தார். தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது காந்தியைச் சுடுவதற்கு முன்னால் என்னை சுட்டுத் தள்ளுங்கள் என்று அவருக்கு பாதுகாப்பு அரணாக வந்து நின்றார் தில்லையாடி வள்ளியம்மை.
தன்னுடைய 16-ஆவது வயதில் 1914-ஆம் ஆண்டு மரணமடைந்தார் தில்லையாடி வள்ளியம்மை. அவர் பிறந்த ஊரைத் தரிசிக்க வேண்டும் என்று கூறி தில்லையாடி வந்திருக்கிறார் காந்தி. 1900-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்ற இரட்டை மலை சீனிவாசன் காந்தியைச் சந்தித்துள்ளார்.
காந்திக்கு திருக்குறள் நூலை கொடுத்ததோடு தமிழில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என கையெழுத்துப் போடவும் அவர் கற்றுக்கொடுத்தார். “அடுத்தொரு பிறவி இருக்குமானால் தமிழனாகப் பிறந்து தமிழிலேயே திருக்குறளைப் படிக்க வேண்டும்” என்று கூறியவர் காந்தி. குறிப்பாக “மனத்துக்கண் மாசிலன் ஆதல்,” “இன்னா செய்தாரை ஒறுத்தல்” என்ற இரு குறள்கள் அவரது நெஞ்சுக்கு நெருக்கமானவை.
காந்தி மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தை குறிப்பாக இந்து, முஸ்லிம் ஒற்றுமையை அழுத்தமாக வலியுறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தால்தான் கோட்சே தலைமையிலான இந்துத்துவா கும்பல் அவரை கொலை செய்தது. இதற்காக ஒருபோதும் கோட்சே வருத்தப்பட்டதில்லை.
கோட்சேயை குலகுருவாக கொண்டவர்கள், கொலை செய்தவனின் சித்தாந்த வாரிசுகள் இப்போது காந்தியின் கொள்கைகளையும் கூட கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்கள். “மதச்சார்பின்மை” என்ற சொல் கூட அகண்ட பாரத ஆசை கொண்டவர்களுக்கு எட்டிக்காயாகக் கசக்கிறது. அந்த சொற்பிரயோகத்தையே அரசியல் சட்டத்திலிருந்து அகற்ற முயன்று தோற்றவர்கள் அந்த வார்த்தையின் சாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
1946 செப்டம்பரில் ஒரு கிறிஸ்தவ மதபோதகரிடம் பேசும் போது, ‘நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதத்தை அரசிடமிருந்து முற்றாகப் பிரித்து விடுவேன். நான் மதத்தின் பெயரால் ஆணையிடுவேன். மதத்திற்காக உயிரையும் கொடுப்பேன். அது என் சொந்த விஷயம். மதத்திற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது. அரசு மக்களின் பொது நலம், சுகாதாரம், அயல் உறவுகள், நாணயம் அச்சிடல் போன்றவற்றை மட்டும் கவனிக்குமே தவிர எக்காரணம் கொண்டும் மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடாது. அது தனிப்பட்டவர்களின் பிரச்சனையாகவே இருக்கும்’ என்றார் காந்தி.
1947 ஆகஸ்ட் 22- ஆம் தேதி கொல்கத்தா தேசபந்து பூங்காவில் பேசும் போது, “இந்தியாவில் உருவாகும் மதச்சார்பற்ற அரசு புதிய இந்தியாவை உருவாக்கும். அது உலகுக்கே வழி காட்டும்” என்றார்.
மாறாக, சாவர்க்கர், கோல்வால்கர் போன்றோர்களின் முன்னோடிகளில் ஒருவரான பி.எஸ். முன்ஷி 1923-ஆம் ஆண்டு இந்து மகாசபை கூட்டத்தில் பேசும்போது, “ஜெர்மனி எப்படி ஜெர்மானியர்களுக்குச் சொந்தமோ” அப்படி இந்தியா இந்துக்களுக்கு சொந்தம். முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வருவதன் மூலம் இந்து உலகை படைக்க முடியும் என்றார்.
கோல்வால்கர் “இந்துக்கள் அல்லாதவர்கள் இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்து மதத்தின் புகழ்பாட வேண்டும். எந்த உரிமையையும் அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. இந்திய குடிமகனுக்கான உரிமைகளைக் கூட அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.
இன்றைய ஆட்சியாளர்களின் குடியுரிமை திருத்தச் சட்ட வாசகங்களின் மூலச் சிந்தனை எங்கிருந்து வந்திருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். காந்தியின் தேசம் எல்லோருக்குமானது.
இவர்களின் தேசம் இவர்களுக்கு மட்டுமே ஆனது. ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கூட அங்கே இடமில்லை. சனாதனமே இவர்களது சாத்திர வழிகாட்டி. மனுவின் வார்த்தைகளில் இருந்தே இவர்கள் நாட்டுக்கான சட்டங்களை வடிவமைக்க முயலுகிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்க பாஜக பரிவாரம் மூர்க்கமாக முயல்கிறது. ஒருமுறை காந்தியடிகள் திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரிக்கு வந்தபோது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட வரவேற்பு இதழை அவருக்குக் கொடுத்தனர்.
இதனைப் பெற்றுக்கொண்ட காந்தி, ‘‘இங்குள்ள பெரும்பாலான மாணவர்களின் தாய் மொழி தமிழ்தானே. பிறகு ஏன் சமஸ்கிருதத்தில் வரவேற்பு இதழ் வாசிக்கிறீர்கள் என்று கடிந்து கொண்டதோடு தமிழில் தந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்” என்றார். அறிவை அவரவர் தாய்மொழியில் தான் பெற வேண்டும் என்பதே காந்தியின் கருத்தாக இருந்துள்ளது.
காந்தியப் பொருளாதார அறிஞரான ஜெ.சி.குமரப்பா தனது குடிலின் வாயிலில் ஒரு எளிய உழவனின் படத்தைத் தொங்கவிட்டு ‘என் தலைவனின் தலைவன்’ என்று எழுதியிருந்தார். காந்தியடிகள் உழவர்களையே தன்னுடைய தலைவர்களாகக் கொண்டிருந்தார் என்பதே குமரப்பா உணர்த்தும் செய்தி.
டால்ஸ்டாய் பண்ணை உட்பட தாம் அமைத்த ஆசிரமங்கள் அனைத்திலும் விவசாயம் செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்ததோடு தானும் நேரடியாக உழவுப் பணியில் ஈடுபட்டவர் காந்தி.
இந்தியப் பொருளாதாரம் விவசாயத்தை மட்டுமல்ல, விவசாயிகளையும் சார்ந்திருக்கிறது என்பது காந்தியடிகளின் அழுத்தமான கருத்து. தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு மகாத்மா காந்தியின் பேத்தியான 84 வயது தாராகாந்தி நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆட்சியாளர்களோ விவசாயத்தைப் பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றி விடுவதற்கு சட்டங்களை இயற்றிய கையோடு காந்தியடிகளின் ஆசிரமம் சென்று கைராட்டையை சுற்றுவது போல “போட்டோசூட்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மகாத்மா காந்தி 1896-லிருந்து 1946 வரை இருபது முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். எட்டாவது முறையாக 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி தமிழ்நாடு வந்தபோது மதுரையில் அரையாடை அணியத் தொடங்கினார். விவசாயிகளின் தோற்றத்தைக் கண்டே காந்தி இந்த முடிவுக்கு வந்தார். ஆனால், இன்று வரை விவசாயிகளின் உடையும் மாறவில்லை. வாழ்க்கையும் விடியவில்லை.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி முதலில் துவக்கிய போராட்டமே விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் தான். பீகாரில் உள்ள சம்பாரன் மாவட்டத்தில் பிரிட்டிஷாரின் நெருக்கடி காரணமாக பாரம்பரிய பயிர் வகைகளை விடுத்து அவுரிச் செடி பயிரிட கட்டாயப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்து நூற்பாலைகளின் தேவைக்காக அவுரி பயிரிடுமாறு விவசாயிகளை துன்பப்படுத்தியதோடு விவசாயத்திற்கு அதிக வரியும் விதிக்கப்பட்டது. காந்தி அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்றார்.
அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் அதை காந்தி ஏற்கவில்லை. இதனால் கைது செய்யப்பட்டார். விவசாயிகளுக்காக போராடி வரியைக் குறைக்கவும் வழி செய்தார். ஆனால் இன்றைய நடிப்புச் சுதேசிகள் விவசாயத்தின் வேரிலேயே வெந்நீர் ஊற்றிவிட்டு காந்தி சமாதிக்கும் சென்று கண்ணீர் விடுகிறார்கள். காந்தியைப் போற்றுவதும், கொண்டாடுவதும் அவருடைய படத்திற்கு மாலை போட்டுவிட்டு பஜனை பாடுவது அல்ல, அவர் ஆழமாக நம்பிய மதச்சார்பற்ற இந்தியாவைப் பாதுகாப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.