மண்ணின் வரலாறாக இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களைப் பற்றிய சங்கதிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட வாசகர்களுக்கு இம்மாத மண்ணின் வரலாறாக மண்ணின் மைந்தர்களான மரைக்காயர்களைப் பற்றியும் இராவுத்தர்களைப் பற்றியும் அரிய சங்கதிகளைத்தர விழைகிறேன். பின்னர் தொடந்து வழக்கம் போல் ஊர்களைப் பற்றிய மண்ணின் வாசனை தொடரும்.
பலரையும் போல் கிழக்குக் கடலோர கிராமங்களில் முஸ்லிம்களான மரைக்காயர்கள் தான் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இராவுத்தர்கள் குறைந்த அளவு உள்ளனர் என நானும் நினைத்திருந்தேன். ஆனால் நான் அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வுகள் என் எண்ணத்தைப் புரட்டிப் போட்டுவிட்டன.
ஏழாம் நூற்றாண்டு முதல் பனி ரெண்டாம் நூற்றாண்டு வரை தென்மேற்கு முனையிலுள்ள தேங்காய்பட்டினம் – குளச்சல் முதல் மன்னார் வளைகுடா தாலாட்டும் குலசேகரப்பட்டினம் – உடன்குடி, காயல்பட்டினம் எனத் தொடர்ந்து வாலி நோக்கம், கீழக்கரை வரை கணிசமாக மரைக்காயர்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாலிநோக்க முஸ்லிம்கள் அனைவரும் மீனவர்கள். அரபகத்திலிருந்து வந்திறங்கிய இவர்கள் இங்குள்ள பூர்வீக மீனவர்களோடு கலந்துவிட்டனர் இனத்தோடு இனம். இதைப்போல் பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் என மரைக்காயர்கள் வாழும் ஊர்களில் மிகக்குறைந்த அளவிலேயே இராவுத்தர்கள் உள்ளனர்.
அதேசமயம் மன்னார்வளைகுடா மேற்கு-கிழக்காக அமைந்திருக்கும் பகுதியிலுள்ள புதுமடத்தில் முழுமையாக இராவுத்தர்கள் குவிந்து கிடக்கின்றனர். அவர்கள் வடக்கே வந்தால் உச்சிப்புளி கால் நீட்டிக்கிடக்கிறது. உச்சிப் புளிக்கு தெற்கே புதுமடம் மன்னார் வளைகுடாவில் இருக்க வடக்கே பாக்குடாக்கடலில் பனைக்குளம் அலைவாய்க் கரையைத் தொடாமலிருக்கிறது.
பனைக்குளத்தைத் தொடர்ந்து சித்தார்கோட்டை வரையுள்ள முஸ்லிம்களின் ஊர்களிலோ அடர்த்தியாக இராவுத்தர்கள் காலாதி காலமாக வாழ்ந்து வருகின்றனர். கீழைக்காடு எனக்குறிப்பிடப்படும் இப்பகுதியில் வாழ்வோர் இராவுத்தர்கள் – ஹனபி மத்ஹபைப் பின்பற்றுபவர்கள். இவர்கள் அத்தா வீட்டுக்காரர்களாவர்.
சித்தார்க்கோட்டைக்கு வடக்கேயுள்ள தேவிப்பட்டினம் மரைக்காயர்கள் பதி மூன்றாம் நூற்றாண்டில் கணிசமாக குடியேறிய ஊராகும்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் பெருமளவில் மதீனாவிலிருந்து வந்திறங்கிய பனிரெண்டு ஊர்களில் காயல்பட்டினம், கீழைக்கரையோடு தேவிப்பட்டினமும் ஒன்றாகும். இந்த வகையான மரைக்காயர்கள் என்பதோடு ஷாஃபிஈ மத்ஹபினரும் ஆவர். நடை முறைச்சொல்லாடலில் வாப்பா வீட்டுக்காரர்களாவர்.
பனிரெண்டு ஊர்க்காரர்களில் கீழக்கரை மரைக்காயர்கள் மட்டும் காயல்பட்டினம் தொண்டி மரைக்காயர்களோடு சம்பந்த உறவைப் பேணிவருகின்றன.
தொண்டிக்கு வடக்கே வலசைப்பட்டினங்கள், பாசிப்பட்டினம், சுந்தரப் பாண்டியன் பட்டினம் எனத்தொடரும் முஸ்லிம் ஊர்களெங்கும் இராவுத்தர்களே பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களிடையே மீன்பிடித்தொழில் செய்வோரும் உள்ளனர்.
பாம்பாற்றைக் கடந்தால் புதுக்கோட்டை மாவட்ட முத்துக்குடா வரவேற்கும். முத்துக்கள் குளித்தவர்கள் இன்று மீன்களைக் குவிக்கின்றனர். இங்கு வாழ்பவர்கள் அத்தாக்களே. ஆங்காங்கு வாப்பாக்கள் தென்பட்டாலும் மீமிசல் வட்டத்தில் கோட்டைப்பட்டினம் வரை வாழ்வோர் பெரும்பாலும் அத்தாக்களே! ஜெகதாபட்டினத்தில் வாப்பாக்கள் குடியேற்றம் எப்படியோ ஏற்பட்டுள்ளது.
கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் இராவுத்தர்களின் கோட்டை என்றே வரலாறு மெய்ப்பிக்கிறது. கோட்டைப்பட்டினத்தார்களின் நாயகர் இராவுத்தர் நெய்னா முகம்மது. முந்தைய காலகட்டத்தில் பாண்டியரின் படையில் பெருந்தளபதியாய் இருந்தவர். அதற்கு முன் கோட்டைப்பட்டினக் கடற்புறத்தில் பெரும் குதிரை வணிகராய்த் திகழ்ந்தவர். ஆயிரக்கணக்கான குதிரைகளையும் ஆயிரக்கணக்கான குதிரை வீரர்களையும் தம்வசம் கொண்டிருந்தவர். அதன் மூலம் பாண்டியரின் படைத்தளபதியாய் ஆன இராவுத்தரப்பா பிற்காலத்தில் ஓர் ஆன்மிகப் படையை வார்த்தெடுத்து இறைநேசச் செல்வரானது வரலாறு.
கோட்டைப்பட்டினத்தை அடுத்து அம்மாபட்டினம் மந்திரிபட்டினம் எனக்கானப்படும் பட்டினங்கள் நீண்டபட்டியலாகும். இங்கெல்லாம் வாப்பாக்கள் காணப்பட்டாலும் பெரும்பாலும் அத்தாக்களே வாழ்கின்றார்.
பட்டினங்களைப் பட்டியலிட்டுவிட்டு சேதுபாவா சத்திரத்தைக் கடந்தால் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டைப் பகுதிகளில் வாப்பாக்களைக் காணலாம். கடற்கரை ஊர்களிலேயே வாப்பாக்களைக் காணலாம். கடற்கரையைவிட்டு மேற்கே காலடி எடுத்துவைத்தால் அத்தாக்களே காணப்படுவர். அதற்கான காரணம் உண்டு. அத்தாக்களே தமிழகத்துக்குள் இஸ்லாத்தை வளர்த்தெடுத்தவர்கள்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டால் நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால் என மரைக்காயர்களின் ஊர்கள் வந்துவிடும். இங்கெல்லாம் மதீனாவிலிருந்து புலம் பெயர்ந்த மரைக்காயர்கள் வாழ்கின்றனர்.
காரைக்காலைத் தாண்டினால் தாளத்தோடு அலைகள் தாலாட்டும் தரங்கம்பாடி வந்துவிடும். நாகை மாவட்டத்துத் தொடர்ச்சியான அலைவாய்க்கரை ஊர்களான காவிரி பூம்பட்டினம், திருமுல்லைவாசல், புதுப்பட்டினம் எங்கும் மரைக்காயர்களின் தடங்கள் பதிந்த வரலாறு புதைந்து கிடக்கின்றது.
இத்தொடர்ச்சியான கடலூர்களில் பழையாறை. பழமையான மீனவர்களின் கிராமம் பழையாறைக்கு வடக்கே நிலப்பாதை கிடையாது. மிகப்பெரிய காயலான பிச்சாவரம் செல்ல படகுகளே உதவும், பிச்சாவரம் தாண்டினால் பரங்கிப்பேட்டை வந்துவிடும். மிகப் பெரும் பழமையான பரங்கிப்பேட்டையெங்கும் மரைக்காயர்கள்.
இதைப்போல் கடலூர் புதுக்சேரி என மரைக்காயர்களின் பட்டினங்கள் கப்பல்கள் கரைபிடித்ததையும் அவை கடல் புகுந்ததையும் நினைவுக்குக் கொண்டுவரும்.
புதுவையை அடுத்துள்ள கோட்டக்குப்பம் மரைக்காயர்கள் குறைவாகவும் இராவுத்தர்கள் நிறைவாகவும் வாழும் ஊர். அடுத்து பெருந்திரளாக முஸ்லிம்கள் வாழும் கூனிமேடும் கோட்டக்குப்பம் போன்றதே.
கிழக்குக் கடற்கரைச் சாலை விழுப்புரம் மாவட்ட மரக்காணத்தைத் தாண்டினால் பரந்து கிடக்கும் உப்பளங்களும் ஒரு காயலும் வரும். அங்குள்ள பாலத்தைத் தாண்டினால் காஞ்சியின் தென்கிழக்குப் பகுதி இடைக் கழி நாடு என அழைக்கப்படும் நெய்தலும் மருதமும் கைகோர்த்துக் கொண்டிருக்கும் சோலைவனம். பக்கிங்காம் கால்வாய் மேற்காகவும் வங்கக்கடல் கிழக்காகவும் வாய்க்கப்பட்டுள்ள இடைக் கழி நாடு கேரளம் போன்ற எழில் கொஞ்சும் பிரதேசம்.
பனையூர், விளம்பூர், கெங்கதேவன் குப்பம், செம்பிலிவரம், கோவைப்பாக்கம், கப்பிவாக்கம், வேம்பனூர், நல்லூர், கோட்டைக்காடு, வெண்னாங்குபட்டு, கரும்பாக்கம், பள்ளப்பாக்கம், தேன்பாக்கம், கொளத்தூர், முதலியார்குப்பம், நைனார்குப்பம், ஓகியூர், ஆலம்பறை, கடப்பாக்கம் என பல சிற்றூர்களின் ஒன்றிணைப்பே இடைக் கழி நாடு.
இவ்வூர்களில் ஆலம்பறை, கடப்பாக்கம், விளம்பூர் போன்ற ஊர்களில் ஓரளவு மரைக்காயர் வகை முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆலம்பறை கடற்கரையில் ஆற்காடு நவாப் சந்தா சாகிப் கட்டிய கோட்டை உள்ளது.
இடைக்கழி நாட்டைக் கடந்து சென்றால் புதுப்பட்டினம் (கல்ப்பாக்கம்) சதுரங்கப்பட்டினம் பழையகால வராலற்றைப் பறைசாற்றாமல் பறைசாற்றிக் கொண்டு காணப்படும். இங்கெல்லாம் வாப்பாக்கரும் அத்தாக்களும் வாழ்கின்றானர். அடுத்து மாமல்லபுரத்தைக் கடந்தால் கோவளம் தர்கா வந்துவிடும். இங்கும் இருதரப்பினரும் வாழ மதராஸ் வரையுள்ள பனையூர்குப்பம், நீலாங்கரை, பாலவாக்கம் எனத்தொடரும் ஊர்களெங்கும் பாரம்பரியமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இறுதியாக கவிக்கோ அப்துல்ரகுமான் வாழ்ந்த ஊர் பனையூர்குப்பம்.
மதரஸா பட்டினத்தின் முஸ்லிம்களின் வரலாறு அனைவரும் அறிந்ததே. பல்வேறு வகையினரும் வாழும் மதரஸா பட்டின முஸ்லிம்களை மரைக்காயர், ராவுத்தர் எனப் பிரித்துப் பார்த்திட முடியாது.
ஷாஃபிஈ ஹனபி என்று இரு மத்ஹப் பிரிவுகளே பெரும்பாலும் உள்ளனர். ஹம்பலி மாலிக்கி மத்ஹபினர் தமிழகத்தில் இல்லை தலைநகரத்திலும் இல்லை.
மதராசுக்கு வடக்கேயுள்ள பழவேற்காடு, முஸ்லிம்களின் முக்கியமன ஊர் மதீனாவிருந்து புலம் பெயர்ந்தவர்களோடு கப்பல்கட்டுவோர் (ஓடாவிகள்) மீனவர்கள் பல்வகை வணிகர்கள் வாழும் ஊர். மார்க்கத்தைக் கற்றுக் கொண்டு
மார்க்கத்தை விழித்துறைப் போரும் வாழும் ஊர். மதரசா பட்டினத்துக்கு முந்தைய துறைமுகப்பட்டினம்.
இதுவரை தென்முனையிலுள்ள ஊரான தேங்காய்ப்பட்டினத்திலிருந்து வடக்கேயுள்ள பழவேற்காடு வரை ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை வாழும் முஸ்லிம்களைப் பற்றிய சில சங்கதினைத் தெரிந்து கொண்டுள்ளோம்.
மரைக்காயர்கள் மரக்கலங்களுக்குச் சொந்தக்காரர்களாய் இருந்ததால் அவர்கள் ஏற்றுமதி இறக்குமதிக்காக கடலோரப் பட்டினங்களில் தங்கிவிட்டார்கள்.
குதிரைக்காரர்களான ராவுத்தர்களின் நிலை என்ன? குதிரைகளோடு வந்த ராவுத்தர்கள் தொடக்கத்தில் கப்பல்களில் வந்து வணிகம் செய்து அரபகத்துக்குத் திரும்பினர். சிலர் குதிரைகளைப் பராமரிக்க கடல் புரங்களில் தங்கினர். காலப்போக்கில் குதிரை வீரர்களை உருவாக்க கடல்புரத்தைத் தாண்டியும் சென்றனர்.
படிப்படியாக ராவுத்தர்கள் சோழ, பாண்டியப் படைகளில் பங்கேற்கவும் தொடங்கினர். குதிரை லாயங்களைக் கண்காணிக்கவும் குதிரைகளுக்கு மருத்துவம் புரியவும் ராவுத்தர்கள் மதுரை போன்ற நகரங்களில் தங்க வைக்கபட்டனர். முஸ்லிம் ராவுத்தர்களின் முரண்படாத பழக்க வழக்கத்தால் தமிழக வீரர்களோடு ஒன்றாகினர். காலப்போக்கில் தமிழர்களாகினர்.
மரைக்காயர்களும் ராவுத்தர்களும் பெருகியும் குறுகியும் தனித்தும் கலந்தும் வாழ்ந்தாலும் தங்கள் மத்ஹபால் (SCHOOL OF FIQH) வேறுபடுவதில்லை பிளவுபடுவதில்லை.
இருதரப்பினரும் கடலோரமெங்கும் காணப்படுவதற்கு மாற்றமாக தமிழகத்தில் உள்பிரதேசங்களில் உள்ள ஊர்களிலெல்லாம் வாழ்பவர்கள் ஹனபி (அத்தாக்)களாகவே உள்ளனர். வட மாவட்டங்களிலும் பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் வாழ்வோர் ஹனபிகளாகயிருந்தும் குதிரைக்காரகளாகத் தெரிவில்லை. இராமநாதபுரம், நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களில் வாழ்வோர் ராவுத்தர்கள் எனக் கூறிக் கொள்வதில் நிறைவு கொள்கின்றனர்.
உள்பிரதேச ஊர்களில் ஹனபிகளின் பள்ளிவாசல்களே இருக்க ஐந்தாறு ஊர்களில் ஆச்சர்யம் தரும் வகையில் ஷாஃபிஈ பள்ளிவாசல்கள் இருகின்றன. வந்தவாசியிலுள்ள பள்ளிவாசல்களில் ஒன்றான மக்கா மஸ்ஜித் ஷாஃபிஈ பள்ளிவாசல், ஆங்காங்கிருந்து, தொழில் நிமித்தம் வந்தவாசி வந்த வாப்பாக்கள் கட்டிக் கொண்ட தொழுகைத்தலம் மக்கா மஸ்ஜித்.
…..
இதைபோல் திருச்சிராப்பள்ளியில் இருபள்ளிவாசல்கள் உள்ளன. கேரளத்திலிருந்து திருச்சிக்கு வந்த மலையாள முஸ்லிம்கள் குடியேறிய ஆழ்வார்த்தோப்பு பள்ளிவாசலும் ரயிலடி அருகிலுள்ள பள்ளிவாசலும் ஷாஃபிஈக்களின் தொழுகைத்தலமாக விளங்குகின்றன.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலுள்ள மஸ்ஜித்களில் ஒன்று ஷாஃபிஈ மஸ்ஜித். மதுரை, கோவையிலும் இருக்கின்றன. மதுரையில் காஜிமார் தோப்பு செல்லூர் பீவிகுளம் மஸ்ஜித்கள் வாப்பாக்களுடையவை. கோவையில் அத்தர் ஜமாஅத்பள்ளி, கோட்டைமேடு பள்ளி எனப் பத்து பள்ளிவசால்கள் வாப்பாக்களுடையவை. நெல்லையைத் தொடர்ந்து மேலப்பாளையம் கடையநல்லூர் தென்காசி என வாப்பாக்களின் பள்ளிவாசல்கள் உள்ளன.
மரைக்காயர்கள் வந்திறங்கிய இடங்களில் தங்கிவிட, ராவுத்தர்கள் குதிரைகளோடு தமிழக ஊர்களுக்குள் நுழைந்துவிட ஒரு மகத்தான மாற்றம் ஏற்பட்டதால் தமிழகத்தில் சமன்நிலைச் சமுதாயம் நிலைபெற்றது.
’ராபித்து’ என்றால் அரபு மொழியில் எந்த எதிர்ப்பையும் எதிர் கொள்பவன் எனும் பொருளாம். அந்த ராபித்துதான் மருவி ராவுத்தராகிவிட்டது.
இதுதான் உண்மை. ஆனால் மண்ணின் வரலாறு தெரியாதவர்கள் ராவுத்தர்கள் ராஜபுதனத்துக்காரர்கள் எனப்பதிவு செய்கின்றனர். இராஜபுத்திரர்களின் ஓரினமான ரத்தோர்ஸ் (RATHURS) முஸ்லிம்களான பின்னர் உருவானவர்களே ராவுத்தர்கள் என கதை கட்டுகின்றனர். அவர்கள் மதுரையை ஆண்ட சுல்தான்கள் காலத்தில் வடக்கிலிருந்து தெற்கே வந்தவர்கள் எனப்பதிவு செய்கின்றனர். இது உண்மை அல்ல.
மதுரை சுல்தான்களின் ஆட்சிக் காலம் 1335 முதல் 1378. முகம்மது பின் துக்ளக் 1327-இல் வென்றெடுத்த மதுரையை பின்னர் நியமிக்கப்பட்ட ஆளுநர் செய்யது ஜலாலுதீன் தனதாக்கிக் கொள்ள உருவானதே மாபார் சுல்தான்களின் ஆட்சி. துருக்கிய வம்சாவளியினரான சுல்தான்களின் படையில் ராவுத்தர்கள் இருந்திருக்கலாம். ஆனால் ரத்தோர்களே ராவுத்தர்களில்லை.
துக்ளக் ஆட்சி வருவதற்கு முன்பே மதுரைப் பாண்டியர்களின் படைகளில் இராவுத்தர்கள் படைவீரர்களாகவும் படைத் தளபதிபகாளகவும் இருந்ததை 1311 ஆம் ஆண்டு நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
1311-இல் டெல்லி சக்கரவர்த்தி அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூர் மதுரை வந்தபோது மன்னன் சுந்தர பாண்டியன் படையிலிருந்த முஸ்லிம்களைக் கண்டு தன்னோடு இணைந்து கொள்ள அழைத்தும் சிலர் பாண்டியப் படையை விட்டு வர மறுத்ததும் பதிவாகியுள்ளது. பனிரெண்டாம் நூற்றாண்டில் ஏர்வாடி சுல்தான் சையது இபுறாகீம் தளபதியாகி பராக்கிரமபாண்டியனை (1188) வீழ்த்திய வரலாறு தனிவரலாறு.
தந்தையை துருக்கியர்கள் அத்தா என்பது அழைப்பதைப் போல ராவுத்தர்களும் தந்தையை அத்தா என அழைப்பதை இணைத்து ராவுத்தர் வேறு வகையறா என வாதிடப்படுகிறது. (எனவேதான் துருக்கியின் ஆட்சியாளராகயிருந்த முஸ்தஃபா கமாலை ‘ATTHAAH TURK’ என அழைத்தனர்). அவர்கள் ‘HORSE MEN’ ‘WARRIARS’ என்பது உண்மைதான். போரிடும் சமுதாயமெங்கும் குதிரை வீரர்களும் தளபதிகளும் காணப்படுவது இயற்கையே.
மதுரை சுல்தான்களின் ஆட்சியை விஜயநகர் அரசு வீழ்த்திய பின் அமைந்த ஆட்சியில் ரத்தோர் வீரர்கள் இங்கிருக்கவில்லை. இராவுத்தர்கள் இங்கிருந்தார்கள்.
மதுரை சுல்தான்கள் துருக்கிய வம்சாவளியாக இருந்ததால் அக்காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட ‘துருக்கர்’ எனும் அடையாளம் இன்னும் அழியவில்லை. நாம் தமிழர் என்று எடுத்துரைத்தாலும் துருக்கர் எனும் பெயர் அடையாளம் பழைய வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
நம்மிடையே ஆங்காங்கும் வடாற்காடு மாவட்டத்தில் பெருமளவிலும் உருதைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் வாழ்கிறார்கள். பாமினி சுல்தான்கள், மொகலாயர்கள், ஆற்காடு நவாப்கள் ஆட்சிக் காலத்தில் ஆட்சிப் பணிக்காக வந்து குடியேறியவர்களின் வாரிசுகள் இவர்கள் பெரும்பாலானவர்கள் தக்கானத்திலிருந்து வந்து குடியேறியதால் ’தக்கானி’ எனக் குறிப்பிடப்பட்டனர்.
நவாப்களின் ஆட்சியை நினைவுபடுத்தும் தக்கான பீடபூமியினர் மதராசிலும் திருச்சியிலும் கணிசமாக வாழ்கின்றனர்.
தக்கானம் ஆங்கில மொழியில் ‘DECEAN’ எனக் குறிப்பிடப்படுகிறது.
(தொடரும்)
தொடர்புக்கு
9710266971