2019 தேர்தல் – இந்திய ஜனநாயகம் செல்லும் திசை

2019 தேர்தல் – இந்திய ஜனநாயகம் செல்லும் திசை

ரானா அய்யூப் (டைம் இதழில் எழுதியுள்ள கட்டுரை)

‘இவ்வளவு மோசமான ஆட்சி, ஆட்சியாளர் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற முடிந்தது’ என்ற கேள்வி பலருடைய மண்டையை வண்டு போல் குடைந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய சமயத்தில், பாஜகவின் பிளவுவாத மற்றும் மதவெறிப் பிரச்சாரத்தினைத் தொடர்ந்து, நரேந்திர மோடியும், பாஜகவும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைக் கண்டு, நான் அதிர்ச்சியடையவில்லை. ஒரு பத்திரிகையாளர் என்ற முறையிலும், மோடி அரசியலுக்குள் வந்த நாளிலிருந்தும், அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்தும், அவருடைய அரசியல் தந்திரங்கள் அனைத்தையும் நான் அவ்வப்போது முழுமையாக வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். எனவே, இவர்களின் இவ்வெற்றி என்னைப் பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியாரினியான பிரக்யா சிங் தாகூர், 2008ஆம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் நகரத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி, பத்து பேரைக் கொன்ற பயங்கரவாதக் குழுவின் தலைவர் என்ற முறையில் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர்.

அவர் போட்டியிட்ட மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது, மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயை நாட்டுப்பற்று மிக்கவர் (patriot) என்று வானளாவப் புகழ்ந்தார். (அவர்களுடைய இந்து வலதுசாரி உலகக் கண்ணோட்டத்தின்படி, மகாத்மா காந்தி, ஒரு முஸ்லீம் அனுதாபி என்று அடிக்கடி தூற்றப்படுபவராவார்.) 


மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த ஆண்டில், தங்களுடைய பெரும்பான்மை மதவெறிக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கூறிக்கொண்டு, இத்தகைய பிரக்யா சிங் தாகூரும், பாஜகவும் மக்களவைக்குள் நுழைவது என்பது என்னே முரண்தகை!

இப்போது ஏற்பட்டுள்ள முடிவுகள், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு என்ன நான் பார்த்தேனோ அவற்றைக் கிட்டத்தட்ட ஒத்திருக்கின்றன. 2010இல் ஒரு செய்தி நிறுவனத்தின் சார்பாக, 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்றக் கலவரங்கள் குறித்தும், அவற்றைச் செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்திடவும் மோடியின் ஆட்சியின் கீழ் பணியாற்றிய அநேகமாக அனைத்து அதிகார வர்க்கத்தினருடனும், அதிகாரிகளுடனும் பேசினேன். முஸ்லீம்களிடமிருந்து தாக்குதல் தொடுக்கப்படவுள்ள ஓர் இந்து தலைவர் என்ற முறையில் மோடி சித்தரிக்கப்படுவதையே அவர் விரும்பினார் என்று அப்போது நான் அறிந்து கொண்டேன்.

2005இல் சொராபூதின் ஷேக் என்கிற ஒரு சிறிய கிரிமினலை, மோடி அரசாங்கம், ஒரு மாபெரும் பயங்கரவாதி என முத்திரை குத்திக் கொன்றதை, திருவாளர் மோடி, குறிப்பிட்ட சமயத்தில், கூட்டத்திலிருந்தவர்கள் “அவனைக் கொல்லுங்கள்.” என்று சத்தமிட்டதைப் பார்க்க முடிந்தது.

அதனைத்தொடர்ந்து அவர், குஜராத்திற்குள் தன்னுடைய ஆட்சியைத் தாக்குவதற்காக நுழைந்த ஒரு முஸ்லீம் பயங்கரவாதியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய தன்னுடைய அதிகாரிகளையும், அமைச்சர்களையும் தண்டித்திடவே தில்லி சுல்தான்கள் (மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான் மோடி இவ்வாறு குறிப்பிடுகிறார்) விரும்புகிறார்கள் என்று மக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டார். அன்றும் இன்றும் நீதியைக் கேலி செய்வதே மோடியின் துருப்புச்சீட்டாக மாறியது.

கடந்த இருபதாண்டுகளாக நன்கு ஆய்வுசெய்து மேற்கொண்டு வந்த உத்திகள்தான் இந்தியாவில் 2019 பொதுத் தேர்தலின் முடிவாக வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு, உடனடி அச்சுறுத்தலாக முஸ்லீம்களை உருவாக்கினர்.

மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் முஸ்லிம்களை “ஊடுருவியுள்ளவர்கள்,” “கரையான்கள்,” “வெளியாட்கள்,” என்றெல்லாம் முத்திரை குத்தி மக்களிடையே வெறுப்பு விஷத்தை விதைத்திடும் உத்தியை இவர்கள் மிகவும் வெற்றிகரமாக கடந்த இருபதாண்டுகளில் தாங்கள் ஆண்ட மாநிலங்களில் மேற்கொண்டு வந்தார்கள். இத்தகைய மதவெறிப் பிரச்சாரம் இவர்களுக்கு ஆதாயத்தை அளித்திருக்கிறது.

முஸ்லீம்கள் கணிசமாக வாழும் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், உள்ளே நுழைவதற்கே மிகவும் அல்லாடிக்கொண்டிருந்த பாஜக, இத்தேர்தலில் இரண்டு இலக்க வெற்றியை ஈட்டியிருக்கிறது.
இவ்விரண்டு மாநிலங்களிலும் பாஜக புதிதாகக் கொண்டுவந்த திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டமுன்வடிவை மையமாக வைத்துத்தான் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இச்சட்டமுன்வடிவானது முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை அளிப்பதை அனுமதிக்கிறது. இந்தச் சட்ட முன்வடிவானது, முஸ்லீம்களை அனுமதிக்கமாட்டோம் என வகுப்புவாத அடிப்படையில் உத்தரவாதம் அளித்திருப்பதன் மூலமாக, பாஜக மிகவும் எளிதாக மனக்குறையுடன் வாழ்ந்துவந்த இந்து வாக்காளர்களை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.

இத்துடன், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டிக்கொடுக்கப்படும் போன்ற மோடியின் பிரச்சாரமும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வேலை செய்திருக்கிறது. இத்துடன் மோடி ஒருவரால் மட்டும்தான் “தேசத்துரோகிகளையும்”, “தேசவிரோதிகளையும்”, சுத்தமான இந்து மண்ணிலிருந்து விரட்டியடிக்க முடியும் எனப் பாடல்கள் இயற்றப்பட்டு, நாட்டுப்புற மெட்டுகளில் பாஜக பேரணிகளில் பாடப்பட்டன.

கடந்த ஐந்தாண்டுகளில் முஸ்லீம்களுக்கு எதிராக, கொலைபாதகச் செயல்களில் ஈடுபட்டவர்களில் அநேகமாக எவரும் தண்டிக்கப்படவில்லை.

அதே சமயத்தில், பாஜகவின் பணமதிப்பிழப்பு முடிவு படுதோல்வி, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார சீர்திருத்தங்களின்மை, விவசாய நெருக்கடி இருந்த போதிலும், 2019இல் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.


நான், 2019 தேர்தல்கள் குறித்து செய்திகள் சேகரிப்பதற்காக மகாராஷ்ட்ராவிலிருந்து உத்தரப்பிரதேசம் வரை பயணம் செய்தபோது, மோடியின் பேச்சுக்களில் இருந்ததைக் காட்டிலும் அதிகமாகவே, மக்கள் மத்தியில் சிறுபான்மையினருக்கு எதிராக வேரூன்றியிருந்த வெறுப்பு உணர்வை நன்கு காண முடிந்தது.

மும்பையில் தேர்தல் முடிவு குறித்து ஒரு டாக்சி ஓட்டுநர் கூறுகையில் (இவர் லால்கஞ்ச் பகுதியில் அரசாங்கத்தின் கேன்டீன் ஒன்றையும் நடத்தி வருகிறார்), “தொப்பிக்காரன்களுக்கு” (முஸ்லீம்களைத்தான் இவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்) சரியான பாடம் கற்பிக்கப்பட்டிருப்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறோம் என்றார்.
நரேந்திர மோடி, ஒரு மூர்க்கத்தனமான தலைவராக மீளவும் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நரேந்திரமோடியின் அபரிமிதமான வெற்றியின் அடிப்படை, இந்தியக் கலாச்சாரத்தை இந்து விழுமியங்களின் அடிப்படையில் வரையறுத்திடும் சித்தாந்தமான இந்துத்துவாவாகும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இதனை எவ்வித எதிர்ப்புமின்றி அனுமதித்தோமானால் அது நாட்டை ஓர் ஆபத்தான எல்லைக்கே இட்டுச்செல்லும்.
(கட்டுரையாளர், குஜராத் கோப்புகள்-மறைக்கப்பட்ட கோர வடிவங்கள் என்னும் நூலின் ஆசிரியர்)

சண்முக வீரமணி