சமுதாயச் சேவையாளர் நல்லிணக்க நாயகர் N. ஜமால் முகம்மது சாகிப்
தென்காசி ‘மேடை முதலாளி’ குடும்பத்தினருக்கு திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம்களிடையே மிகுந்த மரியாதை இருந்தது. இக் குடும்பத்தைச் சார்ந்த பெரிய முதலாளி மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப் அவர்களும், அவரது தம்பி சின்ன முதலாளி மு.ந. முகம்மது சாகிப் அவர்களும் சமுதாய நலன்களுக்காகவே தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தியாக சீலர்களாகத் திகழ்ந்தனர்.
பெரியவர் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். சின்ன முதலாளி தீவிர அரசியலில் பங்கு பெறாத போதிலும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பெரிதும் பாடுபட்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவராகவும், பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்த பன்னூலாசிரியர் ஏ.கே.ரிபாயி சாகிபும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் (1980-1984) முஸ்லிம் லீகின் மாவட்டத் தலைவராகவும் பதவிவகித்த ஏ.சாகுல் கமீது சாகிபும் பெரிய முதலாளியின் புதல்வர்கள்.
சின்ன முதலாளி மு.ந. முஹம்மது சாகிபின் மூத்த புதல்வர் ஜமால் முகம்மது சாகிப் மிகச் சிறந்த சமுதாயச் சேவையாளராகத் திகழ்ந்தார். அவரைப் பற்றித் தான் இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம். ஜமால் முகம்மது சாகிப் 9.8.1928அன்று பிறந்தார்.
அவர் தனது தொடக்க மற்றும் உயர் நிலைக் கல்வியை பாளையங்கோட்டையில் கற்றுத் தேறினார். தனது தந்தையார் மு.ந. முஹம்மது சாகிப் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இவரும் இளமையிலேயே பொதுச் சேவைகளில் ஈடுபடலானார். தந்தையார் ஈடுபாடு கொண்டிருந்த பல பொதுச் சேவையில் அவருக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே அவர் உயர் கல்வி கற்கச் செல்லவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு பெற்றதும் பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொண்டார். எனினும் உருது மொழியை தானே முயன்று பயின்று அதனை எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார்.
அனாதை நிலையத் தலைவர் :
முஸ்லிம் அனாதைப் பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக மு.ந.முகம்மது சாகிப், 18.8.1957 அன்று பாளையங்கோட்டையில் அனாதை நிலையம் ஒன்றைத் தொடங்கினார். இந்த நிலையத்தின் தலைவராகவும் அவரே பதவி வகித்தார். இளைஞரான ஜமால் முகம்மது இந்த அனாதை நிலையப் பராமரிப்பில் தந்தைக்கு உதவிகரமாக இருந்து வந்தார்.
தந்தையார் திருநெல்வேலி சந்திப்பில் நடத்தி வந்த சற்குண மருத்துவச் சாலையையும் கவனித்து வந்தார். 1979ஆம் ஆண்டு தந்தையார் மரணமுற்ற பிறகு அனாதை நிலையத்தின் முழுப் பொறுப்பையும் ஜமால் முகம்மது சாகிப் ஏற்றுக் கொண்டார். அதன் நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2010 ம் ஆண்டு மரணமடையும் வரை அப்பொறுப்பில் இருந்தார்.
இவரது பதவிக் காலத்தில் அந்த நிலையம் பெரும் வளர்ச்சியடைந்தது. 1957ஆம் ஆண்டு ஆறு பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட இந்த நிலையத்தில் அவர் மரணிக்கும் போது 300 பிள்ளைகள் இருந்தனர். தாய், தந்தையரை இழந்த முஸ்லிம் அனாதைப் பிள்ளைகளும், பெற்றொர்களால் சரியாகப் பராமரிக்கப்படாத பிள்ளைகளும் இந்த நிலையத்தில் முறையான விசாரணைக்குப் பின் சேர்க்கப்பட்டு பராமரிக்கப் படுகின்றனர். தமிழகத்தில் முஸ்லிம்களால் தொடங்கப்பட்ட முதல் அனாதை நிலையம் இதுவே எனலாம்.
கல்விப் பணிகள்:
அனாதை நிலையம் தொடங்கப்பட்ட போது அங்கிருந்த பிள்ளைகள் அருகிலிருந்த கிறிஸ்து ராஜா தொடக்கப்பள்ளிக்குச் சென்று பயின்று வந்தனர். முஸ்லிம் பிள்ளைகள் இஸ்லாமியச் சூழலில் கல்வி கற்க வேண்டுமென்பதற்காக மு.ந.முகம்மது சாகிப் அனாதை நிலைய வளாகத்திலேயே ஒரு தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார்.
அவரின் மறைவுக்குப் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்ட தனயன் ஜமால் முகம்மது சாகிப் அந்தப் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்திட ஏற்பாடு செய்தார். பின்னர் இந்தப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது.
தொடக்கப் பள்ளியும் மேல் நிலைப் பள்ளியும் ‘மு.ந. அப்துர் ரஹ்மான் தொடக்கப்பள்ளி, மு.ந. அப்துர் ரஹ்மான் மேல் நிலைப் பள்ளி’ என்ற பெயரில் அனாதை நிலைய வளாகத்திலேயே இயங்கி வருகின்றன. இவை அரசின் உதவி பெறும் கல்வி நிறுவனங்களாகும்.
இந்தப் பள்ளிகளின் செயலாளராகவும் ஜமால் முகம்மது சாகிப் பொறுப்பு வகித்தார். ‘தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட்’ என அழைக்கப்பட்ட திருநெல்வேலி நகரில் கிறிஸ்தவ மற்றும் இந்துக் கல்வி நிறுவனங்கள் இருந்தன. குறிப்பாகப் பாளையங்கோட்டையில் கிறிஸ்துவ சபைகளால் ஜெயிண்ட் ஜான்ஸ் கல்லூரி, ஜெயிண்ட் சேவியர் கல்லூரி ஆகியன நடத்தப்பட்டு வந்தன. முஸ்லிம் கல்லூரி எதுவும் அங்கு இல்லை. இதன் காரணமாக முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வி பயில பல சிரமங்களை எதிர் கொள்ள நேர்ந்தது.
முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள கிறிஸ்தவ
கல்லூரி நிறுவனங்கள் பெரிதும் தயக்கம் காட்டின. இந்த நிலையினை மாற்ற விரும்பிய மு.ந. முஹம்மது சாகிபு, மாவட்டத்திலுள்ள முஸ்லிம் செல்வந்தர்கள், புரவலர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிதிஉதவியோடும், ஒத்துழைப்போடும் பாளையங்கோட்டையில் ஒரு கல்லூரியைத் தெடங்கினார்.
4.8.1971 அன்று தொடங்கப்பட்ட அந்தக் கல்லூரிதான் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியாகும். இந்தக் கல்லூரியை உருவாக்கிட தனது தந்தையார் முகம்மது சாகிப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜமால் முஹம்மது சாகிப் பெரிதும் துணை நின்றார்.
இந்தக் கல்லூரியின் முதல் செயலாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில பிரச்னைகள் காரணமாக சில மாதங்களுக்குப் பிறகு அப் பொறுப்பிலிருந்து விலகினார். எனினும் இந்தக் கல்லூரியின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு அளப்பரிய ஒன்றாகும்.
அனாதை நிலையத்தின் சார்பில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க வேண்டுமென்ற அவர் முயற்சிகள்
மேற்கொண்டார். எனினும் அரசின் அங்கீகாரம் பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதன் காரணமாக 1979 ஆண்டு பாளையங்கோட்டையில் ஒரு தொழிற் பயிற்சி நிலையத்தைத் (ஐடிஐ) தொடங்கினார்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் நினைவைப் போற்றும் வண்ணம் இந்த பயிற்சி நிலையத்திற்கு ‘முகம்மது இஸ்மாயில் தொழிற் பயிற்சி நிலையம்’ எனப் பெயரிட்டார். இந்தப் பயிற்சி நிலையம் இன்றளவும் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான ஏழை முஸ்லிம் ஏழை மாணவர்கள் இந்தப் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயின்று பயனடைந்துள்ளனர். இந்த பயிற்சி நிலையத்தின் தாளாளராகவும் ஜமால் முஹ்மது சாகிப் பதவி வகித்தார்.
இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்குவதற்காக அருகிலுள்ள ஹமீதியா நகரில் இஸ்லாமிய வளர்ச்சி வங்கியில் (Islamic Development Bank) கடன் பெற்று புதிய கட்டிடங்களைக் கட்டினார்.
1990 ஆம் ஆண்டு, முஸ்லிம் பெண்கள் மார்க்கக் கல்வியையும், பொதுக் கல்வியையும் ஒரு சேரக் கற்க வேண்டும் என்ற நல்னோக்கில், அனாதை நிலைய வளாகத்தில் பாத்திமா ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளியைத் தொடங்கினார்.
இந்தப் பள்ளியும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனாதை நிலையம் சார்பில் ஒரு அறிவியல் / கலைக் கல்லூரியும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும் தொடங்க வேண்டுமென்பது அவரது நீண்ட கால கனவாக இருந்தது. எனினும். அரசின் அங்கீகாரம் பெற பெருந்தொகை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை அப்போது நிலவியதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.
முஸ்லிம்கள் கல்வி விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1987 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்து அனாதை நிலைய வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தினார்.
இந்த மாநாடுகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எம்.அஹமதி, இன்சாப் கட்சியின் தலைவர் ஸையத் சஹகாபுதீன் எம்.பி. காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் மூஸா ராஸா, மார்க்க அறிஞர் மௌலானா வஹீதுத்தீன்
கான், டெல்லி ஹம்தர்த் பல்கலைக் கழகத் துணை வேந்தர் அலாவுதீன் சாகிப், சமுதாயத் தலைவர்கள் இப்ராகிம் சுலைமான் சேட் சாகிப் குலாம் முகம்மது மனாத்வாலா சாகிப், ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாகிப், எம்.ஏ. லத்தீப் சாகிப், நீதிபதி பாத்திமா பீவி, காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார், அமைச்சர் ஆலடி அருணா ஆகியோரை அழைத்து வந்து உரையாற்றச் செய்தார்.
இந்த மாநாடுகளின் வெற்றிக்கு அவர் பெரு முயற்சிகள் எடுத்துக் கொண்டார். இம்மாநாடுகள் மாவட்ட முஸ்லிம்களிடையே பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம்.
சமயப் பணிகள்:
சமயப் பணிகளிலும் அவர் முழு மூச்சுடன் ஈடுபட்டார். அனாதை நிலைய வளாகத்திலுள்ள பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் தலைவராக அவர் பொறுப்பு வகித்தார்.
அல் அமீன் சோசியல் வெல்பேர் சென்டர் என்ற அமைப்பிடமிருந்து நிதியுதவி பெற்று மேலப்பாவூர், ஆறாம் பண்ணை (ஆஸாத் நகர்) கிரசன்ட் நகர் (பாளையங்கோட்டை) ரஹ்மத் நகர் (பாளையங்கோட்டை) ஆகிய இடங்களில் பள்ளிவாசல்கள் கட்டிகொடுத்தார். திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் பள்ளி வாசலின் தலைவராகப் பத்து ஆண்டுகள் பொறுப் வகித்தார்.
ஷரீஅத் பாதுகாப்பு மாநாடு:
1985 ஆம் ஆண்டு ஷாபானு என்ற முஸ்லிம் பெண் தன்னை விவாகரத்துச் செய்த கணவரிடமிருந்து ஜீவனாசம் பெற்றுத் தர வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்திருந்தார். இதனை விசாரித்த அந் நீதி மன்றம் அவளுக்கு ஜீவனாம்சம் வழங்க அவரது கணவருக்கு உத்தர விட்டது.
இந்தத் தீர்ப்பு இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு முரணாக இருந்ததால், இதனை நீர்த்துபோகச் செய்யும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி நாடெங்கும் முஸ்லிம்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்தக் காலகட்டத்தில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி பாளையங்கோட்டையில் ஒரு மாபெரும் பேரணியையும், மாநாட்டையும் ஜமால் முகம்மது சாகிப் நடத்தினார். முஸ்லிம் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர். இம்மாநாடு மாவட்ட முஸ்லிம்களிடையே மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.
பொதுச் சேவைகள் : ஜமால் முகம்மது சாகிப் பல்வேறு பொது நல அமைப்புகளை நிறுவி சமுதாயப் பணியாற்றினார் அவை குறித்து இனி பார்ப்போம்.
1. முஸ்லிம் சமுதாய நலச் சங்கம்:
முஸ்லிம் குடும்பங்களில் ஏற்படக் கூடிய சொத்துப் பிரிவினை விவகாரங்கள், தலாக் (மண முறிவு) பிரச்னைகள், கணவன்-மனைவியர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகள், ஜமாஅத் நிர்வாகிகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றில் இந்தச் சங்கம் தலையிட்டு அவற்றின் சுமுகத் தீர்வுக்கு உதவியது.
ஜமால் முகம்மது சாகிபே நேரடியாக இந்தப் பிரச்னைகளில் தலையிட்டு சமாதானமாகப் பேசித் தீர்வு கண்டார். தேவைப்படின் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே சென்று பேச்சு வார்த்தை நடத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
2. முத்தவல்லிகள் சங்கம் : திருநெல்வேலி. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டகளிலுள்ள பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள் இந்தச் சங்கத்தில் அங்கம் வகித்தனர்.
முஸ்லிம்கள் தங்களது சமயப் பிரச்னைகளை விவாதிக்க ஒரு மத்திய அமைப்பு எதுவும் இல்லாத குறையை இந்தச் சங்கம் போக்கியது.
பள்ளிவாசல் நிர்வாகிகள் சந்திக்கக் கூடிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு தேவைப்படின் அவற்றை அரசு அதிகாரிகளின் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு கான இந்தச் சங்கம் பெரிதும் துணை புரிந்தது.
3. சர்வ சமயக் கூட்டமைப்பு : இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே பரஸ்பரம் புரிதல்களை ஏற்படுத்தவும், தவறான எண்ணங்களைப் போக்கவும், ஒருவரின் நம்பிக்கைகளை மற்றவர்கள் புரிந்து கொள்ளவும், சமய நல்லிணக்கத்தை உருவாக்கவும் அவர் இந்த அமைப்பைத் தொடங்கினார்.
இந்தக் கூட்டமைப்பின் தலைவராக அரிய நாயகிபுரம் சுப்ரமணிய பிள்ளையும், திருநெல்வேலி பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவப் பேராயர்கள் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இம்மூன்று மாவட்டங்களில் சமய ரீதியிலான மோதல்கள் ஏற்பட்ட போதெல்லாம், அவரின் தலைமையில் இந்தக் கூட்டமைப்பினர் அந்தப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து அமைதியை ஏற்படுத்திடத் தேவையான நடவடிக்கைகள் எடுத்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துணைக் கண்காணிப்பாளர், ஆகியோரையும் இந்தக் கூட்டமைப்பினர் சந்தித்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிட தக்க ஆலோசனைகள் வழங்கினர். குளச்சல், காயல்பட்டினம், தாழையூத்து ஆகிய ஊர்களில் சமய மோதல்கள் ஏற்பட்ட போது இந்த கூட்டமைப்பினர் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் வெற்றி பெற்றன.
4. ஐக்கிய சிறுபான்மையினர் பேரவை : சிறுபான்மையினர் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களுக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்தப் பேரவையினை அவர் 1992 ஆம் ஆண்டு தொடங்கினார்.
இந்தப் பேரவையின் ஒருங்கிணைப்பாளராக அவர் பொறுப்பு வகிக்க கிறிஸ்தவப் பேராயர் ஆரோக்யசாமி தலைவராகவும், தேசிய லீக் தலைவர் எம்.ஏ. லத்தீப் சாகிப் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவ்வாண்டு அப்போதையத் தமிழக அரசு சிறுபான்மையினர் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களின் தனித் தன்மையைப் பாதிக்கின்ற வகையில் ஒரு அரசாணை வெளியிட்டிருந்தது. அந்த ஆணையைத் திரும்பக் கோரி இந்தப் பேரவை அவரது தலையில் திருச்சியில் ஒரு பெரும் கண்டனப் பேரணியை நடத்தியது. இதன் காரணமாக தமிழக அரசு அந்த அரசாணையைத் திரும்பப் பெற்றது.
5. மு.ந. முகம்மது சாகிப் நினைவு டிரஸ்ட் : ஏழை முஸ்லிம் குமருகளின் திருமணங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக அவர் இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார்.
1979 ஆம் ஆண்டு அவரது தந்தையாரின் மறைவையொட்டி நடைபெறவிருந்த நாற்பதாம் நாள் பாத்திஹாவுக்கு உதவினார்கள் மற்றும் நண்பர்கள் வழங்கிய தொகையைக் கொண்டும், திருநபி சரித்திரம் நூலிற்குக் கிடைத்த ராயல்டி தொகையைக் கொண்டும் இந்த டிரஸ்டை அவர் தொடங்கினார். தொடக்க காலத்தில் ஏழைக் குமரின் திருமணத்திற்கு ரூ500/- வழங்கப்பட்டது தற்போது ரூ.7000/- வழங்கப்படுகிறது.
6. வக்ப் சொத்துக்கள் மீட்பு : தனியார்களும் அரசுத் துறையினரும் ஆக்ரமித்திருந்த வக்ப் சொத்துக்களை மீட்பதற்கு அவர் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். பாளையங்கோட்டை ஷேக் சிந்தா மதார் தர்கா வளாகம் (தர்கா மற்றும் தொழுகைப் பள்ளியை உள்ளடக்கிய வளாகம்) தனியார் சிலரின் ஆக்ரமிப்பில் இருந்தது. மிகப் பெரிய சட்டப் போராட்டத்தை நடத்தி அந்த நிலத்தை மீட்டு அதை ஜமாஅத்திடம் ஒப்படைத்தார்.
அது போல் பாளையங்கோட்டை திருவனந்தபுரம் மெயின் ரோட்டில் (குலவணிகர்புரம் ரயில்வே கேட்டிற்கு வடக்கே) காதர் மீரான் பக்ருதீன் அவுலியா தர்காவும், சதக்கத்துல்லா அப்பா மகனார் முகம்மது அப்பாலெப்பை தர்காவும், காதர் அவுலியா ஜும்ஆ பள்ளிவாசலும் ஒரு பெரிய வளாகத்தில் அமைந்திருந்தன. இந்த வளாகத்தின் பெரும் பகுதியை பொதுப் பணித்துறையினரும். சில தனி நபர்களும் ஆக்ரமித்திருந்தனர்.
இதனை மீட்கும் முயற்சியில் ஜமால் முகம்மது சாகிப் முனைப்புடன் ஈடுபட்டார். அப்போது சப் கலெக்டராகயிருந்த குர்னிகால் சிங் பீர்ஜாதா ஐ.ஏ.எஸ். அவர்களைச் சந்தித்து தக்க ஆவணங்களை எடுத்துக் காட்டி இந்த வளாகத்தை மீட்டார்.
இப்போது அங்கு ஒரு பெரிய வணிக வளாகம் உருவாகியுள்ளது. தர்காக்களும், தொழுகைப் பள்ளிவாசலும் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை வழியாக திருநெல்வேலி புதுப் பேருந்து நிலையம் செல்வோர் இந்த வளாகத்தை பார்க்கலாம்.
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள தாழையூத்தில் ஆற்காடு நவாப் முஸ்லிம்களுக்கு வழங்கிய சாதிக்கான் சத்திரமும் தனியார் ஒருவரின் ஆக்ரமிப்பில் இருந்தது. பெரிய சட்டப் போராட்டம் நடத்தி அந்தச் சத்திரத்தையும் மீட்டு அதனை அங்குள்ள ஜமாஅத்திடம் ஒப்படைத்தார்.
தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை: இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டிருக்கும் இந்த சபையின் தலைவராக அவர் 1978ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1.7.98 அன்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 11.12.2004 வரை அப்பொறுப்பில் இருந்தார். அந்த சபையால் தெற்குப் பட்டி என்ற ஊரில் நடத்தப்பட்டு வந்த நூருல் இஸ்லாம் உயர் நிலைப் பள்ளியின் தாளாளராகவும் இக்கால கட்டத்தில் அவர் பொறுப்பு
வகித்தார்.
நல்லிணக்க நாயகர் :
ஜமால் முகம்மது சாகிப் மாவட்ட முஸ்லிம்களால் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களாலும் நன்கு மதிக்கப்பட்ட ஒரு தலைவராக விளங்கினார். குறிப்பாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அவர் மீது நன் மதிப்பு வைத்திருந்தது.
மாவட்ட அளவில் நடைபெற்ற சமாதானக் கூட்டங்களில் அவர் அரசின் நிரந்தர அழைப்பாளராகக் கலந்து கொண்டார். ஏதாவது ஒரு பிரச்னை அல்லது கோரிக்கை குறித்து அவர் மாவட்ட ஆட்சித் தலைவரையோ அல்லது காவல்துறைக் கண்காணிப்பாளரையோ சந்திக்கச் சென்றால் அவருக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு விடும்.
அவர் எடுத்துச் சென்ற பிரச்னைகளை மாவட்ட நிர்வாகம் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளும். மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொது நல அமைப்புகளின் தலைவர்களும் அவர் பால் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டிருந்தனர்.
மாவட்டத்தில் ஏற்பட்ட சாதி மதப்பிரச்னைகள் குறித்து அவருடன் கலந்தாலோசனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
1982 ஆம் ஆண்டு புளியங்குடியில் வகுப்பு மோதல்கள் ஏற்பட்டு முஸ்லிம்கள் பெருமளவு பாதிப்பிற்கு உள்ளான போது தலைநகர் டெல்லி சென்று முஸ்லிம் லீக் தலைவர்களின் துணையுடன் அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தியையும், ஜனாதிபதி ஜெயில் சிங்கையும் சந்தித்து அம்மக்களின் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
முஸ்லிம்லீக் ஒற்றுமை:
பாரம்பரிய முஸ்லிம் லீக் குடும்பத்தைச் சார்ந்த அவர் அக்கட்சியின் முன்னணிப் பிரமுகர்களில் ஒருவராக விளங்கினார். காயிதேமில்லத் எம்.முகம்மது இஸ்மாயில் சாகிபும், ஜமால் முகம்மது சாகிபின் தந்தையார் மு.ந. முகம்மது சாகிபும் சகலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1988ஆம் ஆண்டு தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தேர்தல் கூட்டணி விஷயமாகப் பிளவு ஏற்பட்டது அப்போது பொதுச் செயலாளராக இருந்த எம்.ஏ. அப்துல் லத்தீப் சாகிப்பை கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி ஏ.கே. அப்துல் ஸமது தலைமையிலான மாநில லீக் கட்சியிலிருந்து நீக்கியது.
பின்னர் லத்தீப் சாகிப் தேசிய லீக் என்ற பெயரில் தனிக்கட்சி ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். இப்படி முஸ்லிம் லீக் பிளவு பட்டு நிற்பதை சமுதாய மக்கள் ஏற்கவில்லை. இரு தலைவர்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென விரும்பினர். இந்த இரு முஸ்லிம் லீக்குகளையும் இணைக்கின்ற முயற்சியில் முகம்மது சாகிப் ஈடுபட்டார். அவரது தொடர் முயற்சிகள் காரணமாக லத்தீப் சாகிப் முஸ்லிம்லீகில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
23.1.1993 அன்று சென்னையில் நடைபெற்ற லீகின் பொதுக் குழுக் கூட்டத்தில் அவர் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகள் சமுதாயப் பிரச்னைகளுக்காக ஒன்று பட்டுக் குரல் கொடுக்க வேண்டுமென்பதே அவரது விரும்பமாக இருந்தது.
சற்குண மருந்துச் சாலை:
1935ஆம் ஆண்டு முதல் அவரது தந்தையார் நெல்லை சந்திப்பில் தொடங்கி நடத்தி வந்த சற்குண மருந்துச் சாலையில் தந்தையாருக்கு உதவியாக இருந்து வந்த அவர் அவரது மறைவிற்குப் பின் அந்த மருந்துச் சாலையின் முழு நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அவரே ஒரு ஆர்.ஐ.எம்.பி மருத்துவர் தான். எனினும் அவர் மருத்துவப் பணியில் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை. பொது நலச் சேவைகளுக்கே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.
பிற பணிகள்:
நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த முஸ்லிம் மாணவர்கள் தங்குவதற்காக அனாதை நிலைய வளாகத்தில் விடுதி ஒன்றைக் கட்டினார். தனது தந்தையாரின் நினைவைப் போற்றும் வண்ணம் அதற்கு ‘மு.ந.முகம்மது சாகிப் ஹாஸ்டல்’ என்று பெயரிட்டார்.
1990 ஆம் ஆண்டு பன்னூலாசிரியர் ஏ.கே. ரிபாயி சாகிப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘காயிதே மில்லத் நினைவு மலர்’ வெளியிடப்பட்ட போது அதற்குப் பெரிதும் துணையாக இருந்தார். ‘ஓமியட்’ என அழைக்கப்பட்ட முஸ்லிம் கல்வி மற்றும் வர்த்த அமைப்பின் உதவித் தலைவராகப் பதவி வகித்தார்.
பண்பு நலன்கள்:
பெரியவர், சிறியவர் என்ற எந்த வித்தியாசமுமின்றி அனைவருடனும் அன்புடனும், மரியாதையுடனும் அவர் பழகி வந்தார். இஸ்லாமின் அடிப்படை ஒழுக்க மாண்புகளுக்கு ஏற்ப தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.
மார்க்க விஷயங்களில் மிகவும் பேணுதலாக இருந்தார். தன்னை நாடி வந்தவர்கள் யாராக இருந்தாலும், தன்னாலியன்ற உதவிகளை அவர்களுக்குச் செய்து வந்தார். மார்க்க அறிஞர்களையும், உலமாக்களையும் மிகவும் கண்ணியமான முறையில் நடத்தினார்.
குடும்பம்:
ஜமால் முகம்மது சாகிபின் துணைவியார் பெயர் காதர் கைருன்னிஸா பீவி. இத்தம்பதியினருக்கு அப்துல்லாஹ், ஜாபர், முகம்மது இப்ராகிம், மகம்மது இஸ்மாயில் ஆகிய நான்கு புதல்வர்கள் உண்டு. முகம்மது இப்ராகிமும், முகம்மது இஸ்மாயிலும் மரணமடைந்து விட்டனர். மூத்த புதல்வர்களான அப்துல்லாஹ், ஜாபர் ஆகிய இருவரும் டாக்டர்கள்.
துணைவியார் காதர் கைருன்னிஸா பீவி தனது கணவரின் பொதுச் சேவைகளுக்கு உற்ற துணையாக, பக்கபலமாக விளங்கி வந்தார். முஸ்லிம் மாதர் முன்னேற்ற சங்கம் என்ற அமைப்பை நிறுவி முஸ்லிம் பெண்களின் நலனிற்காகப் பாடுபட்டார். அனாதை நிலைய வளாகத்தில் செயல் பட்டு வந்த சிறுமியர் இல்லத்தையும் நிர்வகித்து வந்தார். தனது
கணவர் மரணிக்கும் முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.
முடிவுரை: 82 ஆண்டுகள் நிறைவு வாழ்வு வாழ்ந்த ஜமால் முகம்மது சாகிப் 18.9.2010 அன்று வஃபாத்தானார். அவரது ஜனாஸா அவரது சொந்த ஊரான தென்காசி கொண்டு செல்லப்பட்டு அங்கு காட்டுபாவா உயர்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள குடும்ப மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப அவர் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். சமுதாய நலனே அவரது நலனாக இருந்தது. தென்மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. அவரைப் போன்ற ஒரு சமூக சேவையாளரை இனிப் பார்ப்பதறிது என்றே கூறலாம்.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள …. 99767 35561, 93601 89931