மருத்துவம்
அ. முஹம்மது கான் பாகவி
ஒரு பொருள் பழசாக ஆக அதன் வீரியம் குறைந்துகொண்டே போகும். ஆரம்பம் என்பதே, முடிவை நோக்கிய ஒரு பயணம்தான். அப்பயணம் தொடங்கிவிட்டாலே, பொருளில் சேதமும் தேய்மானமும் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். மனிதனைப் பொறுத்தவரை, கரு சிசுவாகிறது; சிசு மழலையாகிறது; மழலை இளமையைத் தேடுகிறது; இளமை முதுமை அடைகிறது. முதுமை மரணத்தை -முடிவை- நோக்கிக் காத்திருக்கிறது.
பழசு என்றாலே, பழுது என்று பொருள். வெகுநாட்களாக, அல்லது மீண்டும் மீண்டும் ஒன்றைப் பயன்படுத்துவதால் ஏற்படுவதுதான் பழைமை. இது சடப்பொருளுக்கு என்றால், மனித உடலுக்கு ஏற்படும் சேதமே நோய். பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றாலோ உடலின் இயக்கத்துக்குக் காரணமானவை சீராக இயங்காததாலோ ஏற்படும் நலக்குறைவுதான் நோய் (Disease; Illness) எனப்படுகிறது.
நோய் வரக் காரணம் பல உண்டு. இயங்கி, இயங்கி உடலுறுப்புகள் சோர்ந்துபோவதுதான் பொதுவான காரணம். அதாவது உறுப்புகள் பழையவை ஆகிவிட்டன. இன்றைக்கெல்லாம், சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், உட்கொள்ளும் உணவு ஆகியவையே விஷமாகிப் போகிவிட்டன. அனைத்திலும் ரசாயனக் கலப்பு; கெமிக்கலின் ஆதிக்கம். பின்னர் நோய்க்குக் கேட்கவும் வேண்டுமா?
எதிர்ப்புச் சக்தி
நோய்க் கிருமி தாக்கியவுடனேயே நோய் வந்துவிடுவதில்லை. அதை எதிர்க்கும் ஆற்றல் இயற்கையாகவே உடலுக்குள் உண்டு. உயிரினங்கள் இயற்கையாகவே உடலில் பெற்றிருக்கும், நோயை எதிர்க்கும் திறனே எதிர்ப்புச் சக்தி (Resistance) எனப்படுகிறது. அந்தச் சக்தி குறையும்போது, அல்லது செயலிழக்கும்போதுதான் நோய் வெளிப்படும்.
இளமைப் பருவம்தான், நோய் எதிர்ப்புச் சக்தி சீராகவும் வீரியத்தோடும் செயல்படும் பருவம். அதனால்தான், கல்லைச் சாப்பிட்டாலும் சீரணிக்கும் வயது என்பர், இளமை குறித்து. ஓடுகிற பாம்பை மிதிக்கும் பருவம் என்றும் சொல்வதுண்டு. குழந்தை, வெயிலையோ குளிரையோ தாங்காது. திரவ உணவே ஒத்துக்கொள்ளும். மழையில் நனைந்தால் சேராது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவே காரணம்.
முதுமையும் கிட்டத்தட்ட அப்படித்தான். எதிர்ப்புச் சக்தி குறைவதால் தொட்டதற்கெல்லாம் நோய்தான், புலன்கள் செயல்பட மறுப்பதால் பார்வை, கேள்வி, பேச்சு, சுவை என எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் நிலை. வண்டி ஓட சக்கரம் தேவை. சக்கரம் சுழல எண்ணெய் தேவை. உடல் என்ற வண்டி இயங்க இரத்தம் வேண்டும்.
சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் கொண்டதும், உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டும் இருதயத்திற்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவமே இரத்தம், அல்லது குருதி (Blood) எனப்படுகிறது. சிவப்பணு (Red Blood Cell) என்பது, பிராணவாயுவை (Oxygen) உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறம் கொண்ட உயிரணுவாகும்.
வெள்ளையணு (White Blood Cell) என்பது, இரத்தத்தில் துரிதமாக நகரக்கூடியதும், நோயை எதிர்க்கும் சக்தியைக் கொண்டதுமான வெள்ளை நிற உயிரணுவாகும்.
ஆக, இரத்தம்தான், ஹார்மோன்களையும் நோய் எதிர்ப்புப் பொருள்களையும் சுமந்து செல்கின்றது. சுவாச உறுப்பான நுரையீரல்களிலிருந்து (Lung) ஆக்சிஜன், செரிமானப் பாதையிலிருந்து உணவுச் சத்துகளை எடுத்துக்கொண்டு, வளர்சிதைமப் பணிக்காக உடலின் அனைத்துச் செல்களுக்கும் அளிக்கிறது.
அந்த செல்களிலிருந்து, கார்பன் டை ஆக்ஸைட் மற்றும் பிற கழிவுகளைப் பெற்றுக்கொண்டு நுரையீரல்களிலும் பிற கழிவு உறுப்புகளிலும் சேர்க்கிறது. இந்த செல்களில் பலவீனம் ஏற்பட ஏற்பட சுவாசச் கோளாறு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஆகிய விளைவுகள் ஏற்படும். அப்போதுதான் நோய் தன் வேலையைச் செய்ய ஆரம்பிக்கும்.
நோய் ஒரு சோதனை
நோயில்லா வாழ்க்கையைப் போன்று சிறந்த செல்வம் வேறொன்றுமில்லை எனலாம். இதனாலேயே, “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்றனர் மூத்தோர். குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டுவிட்டாலே, குடும்பமே சோகமயமாகிவிடும். அவர் வேலைக்குப் போகாமல் பலமாதம் படுத்த படுக்கை ஆகிப்போனதால் வருமானம் இழப்பு. வைத்தியத்திற்குக் கணக்கில்லாத பணச் செலவழிப்பு.
நோயாளியைக் கவனிக்க வேண்டியக் கடப்பாட்டில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் பணிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம். மனைவி, அல்லது கணவன் படும்பாடு கேட்கவே வேண்டாம்! உணவு, உறக்கம், இயற்கைக் கடன் என எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். அயல் இடத்தில் சிக்கிக்கொண்டு, அயல் முகங்களைப் பார்த்துக்கொண்டு ஓர் அந்நியமான வாழ்க்கை வாழ வேண்டிய துர்பாக்கியம்.
இதனால்தான், நபிமொழி ஒன்று அழகானதொரு தத்துவம் சொல்லும்:
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கள் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர். 1. ஆரோக்கியம் 2. ஓய்வு. (புகாரீ – 6412)
மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள அருட்செல்வங்களில் நோயற்ற வாழ்வும் கவலையற்ற நிலையும் மிகப்பெரும் செல்வங்களாகும். முந்தியதே ஆரோக்கியம் என்றும் பிந்தியதே ஓய்வு என்றும் நபிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விரு செல்வங்களையும் முறையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிடுவதால் பெரும்பாலோர் நஷ்டமடைகின்றனர்.
உடல்நலத்துடன் இருக்கும்போதே விரைந்து செயல்பட்டு நன்மைகளை அள்ளிக்கொள்ள வேண்டும். நோய்நொடிகள் வந்துவிட்டால், ஒன்றும் செய்ய முடியாத முடக்க நிலை ஏற்பட்டுவிடலாம். அவ்வாறே பிரச்சினைகளும் கவலைகளும் நம்மைத் தொற்றிக்கொள்வதற்கு முன்பே செய்ய வேண்டிய நல்லறங்களைச் செய்துவிட வேண்டும். பின்னர் வேலைகள் வந்து மூச்சுவிடக்கூட நேரமில்லாத நிலை தோன்றிவிட்டால், நல்லது செய்ய அவகாசம் கிடைக்காது. (ஃபத்ஹுல் பாரீ)
இதனாலேயே பெருநோய்களிலிருந்து இறையிடம் பாதுகாப்புக் கோரி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்துவந்தார்கள்:
இறைவா! தொழுநோய், மனநோய், உறுப்புச் சிதைவு போன்ற கொடுநோய்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். (அபூதாவூத்)
இறைவா! காது கேளாமை, வாய் பேசாமை, மனநோய், தொழுநோய், உறுப்புச் சிதைவு ஆகிய கெட்ட நோய்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
நோய் வருமுன்
நோய்களிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரி வருவதுடன், நோய் வந்துவிட்டால் பொறுமை காக்க வேண்டும்; சகித்துக்கொள்ள வேண்டும். சடைந்துகொண்டு, விதியை நொந்துகொண்டு, எல்லார்மேலும் எரிந்து விழுந்துகொண்டு இருக்கலாகாது. நமது நோய்க்கு நம்மைத் தவிர, வேறு யாரும் காரணமல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, உடல்நலத்தைப் பாதிக்கும் உணவு, பானம், பழக்கவழக்கம், சுற்றுச்சூழல் ஆகியவற்றிலிருந்து விலகி வாழ்வது நமது கடமையாகும். நல்ல உணவைக்கூட உண்ணலாம்! எல்லை தாண்டக் கூடாது. நல்ல பானங்களைப் பருகலாம்! வரம்பு மீறக் கூடாது. எதற்கும் ஓர் அளவு தேவை.
அளவைப் பற்றிக் குறிப்பிடும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பரிந்துரைத்தார்கள்:
ஆதமின் மகன் (மனிதன்), தன் வயிற்றைவிட மோசமானதொரு பையை நிரப்புவதில்லை. ஆதமின் மகனுக்கு, தன் முதுகை நிமிர்த்துக்கொள்ள உணவில் ஒருசில கவளங்கள் போதும்தான். அவற்றைவிட (அதிகமாக) உண்டேயாக வேண்டும் என்றிருந்தால், (வயிற்றை மூன்று பாகங்களாகப் பிரித்துக்கொண்டு) ஒரு பாகத்தை உணவுக்காகவும், மற்றொரு பாகத்தைப் பானத்துக்காகவும், இன்னொரு பாகத்தை மூச்சு விடுவதற்காகவும் ஒதுக்கிக்கொள்ளட்டும்! (திர்மிதீ)
நோய் வருமுன் காப்பதற்கு உன்னதமான, பயனுள்ளதொரு வழியை இந்த ஹதீஸ் சொல்லிக்கொடுக்கிறது. உடல்நலத்திற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். மாமிச உணவோ, மரக்கறி உணவோ எந்த ஹலாலான உணவையும்கூட அளவோடு உண்பதே நல்லது. மனிதன் இயங்குவதற்கும் வழிபாடுகள் செய்வதற்கும் வேண்டிய அளவுக்கு உணவு உட்கொள்வதுதான் கட்டாயக் கடமையில் சேரும். போதாது என்று கருதுபவர்கள் வயிற்றை மூன்று பாகங்களாகப் பிரித்து, உணவுக்கு ஒன்று, பானத்திற்கு ஒன்று, காலியாக ஒரு பங்கு என ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
இது, உற்சாகத்தோடு செயல்படவும் திணறாமல் பணி செய்யவும் துணை புரியும். இதை விடுத்து, எழுந்து நடக்கவே முடியாத அளவுக்கு வயிறு முட்ட உண்பதானது, ஆரோக்கியத்திற்குக் கேடாகும்; மார்க்க ஒழுக்கத்திற்கும் முரணாகும். (துஹ்ஃபத்துல் அஹ்வதீ)
நோய் ஒரு பாவப் பரிகாரம்
நம் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி நோய் வந்துவிடுமாயின், அது அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதிலுள்ள இரகசியம் அவனுக்கே வெளிச்சம் என்பதையும் உணர வேண்டும். ஒருகால், இந்நோய் நம் பாவங்களுக்குப் பரிகாரமாகக்கூட இருக்கலாம். அப்படியிருந்துவிட்டால், மறுமையில் படும் வேதனையைவிட, இம்மையில் வரும் சுகவீனம் எவ்வளவோ நல்லது என்றெண்ணி மனதை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குப் பாவங்களே இல்லை என்று வைத்துக்கொண்டாலும், மறுமையில் சொர்க்கச் சோலையில் நம் அந்தஸ்து உயர்வுக்கு இந்த நோக்காடு ஒரு காரணமாக அமையக்கூடும் என்பதை உணர்ந்து ஆறுதல் அடைய வேண்டும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதைப் பாருங்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை. (புகாரீ – 5646)
நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரப்பட்டுக்கொண்டிருந்தபோது, நான் அவர்களிடம் சென்றேன். “தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (அல்லாஹ்வின் தூதரே!), தங்களுக்கு இதனால் இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும் என்பதாலோ?” என்று வினவினேன்.
அதற்கு அவர்கள், “ஆம்! எந்தவொரு முஸ்லிமுக்கும் எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்குப் பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை” என்று பதிலளித்தார்கள். (புகாரீ – 5647)
மற்றோர் அறிவிப்பில், “உங்களில் இரண்டுபேர் காய்ச்சலால் அடைகின்ற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என வந்துள்ளது. (புகாரீ – 5648)
ஓர் இறைநம்பிக்கையாளரின் காலில் முள் குத்துவதால் ஏற்படும் வலிகூட, அவர் செய்த பாவத்திற்குப் பரிகாரம்தான். ஒரு ஹதீஸைப் பாருங்கள்:
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும், அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. (புகாரீ – 5641)
திருக்குர்ஆனில் ஒரு வசனம் நம்மையெல்லாம் அச்சுறுத்துவதைப் போல் அமைந்துள்ளது. “தீமை செய்பவர் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவார்” (4:123) என்பதே அவ்வசனம்.
இவ்வசனம் அருளப்பெற்றபின் அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனத்திற்குப் பிறகு எவ்வாறு நிம்மதியாக இருக்க முடியும்?” என்று (சஞ்சலத்தோடு) வினவினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! நீங்கள் நோய்வாய்ப்பட்டு, அதன்மூலம் நீங்கள் துயரப்படுவதில்லையா?” என்று கேட்டார்கள். ஆம்! என்றார்கள் தோழர் அபூபக்ர். “தண்டனை என்பதன் பொருள் அதுதான்” என நபியவர்கள் விளக்கினார்கள். (அஹ்மத்)
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு ஹதீஸில், “அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்” என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (புகாரீ – 5645)
மருத்துவ சிகிச்சை
உடல் என்று இருந்தால், நோய் வருவது இயற்கை! நோய் என்று வந்துவிட்டால், சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதும் இயற்கைதான். நோய் என்ற பிரச்சினையைப் படைத்த இறைவன், சிகிச்சை என்ற தீர்வையும் படைக்காமல் இருப்பானா? சொல்லுங்கள்!
“அல்லாஹ் எந்த நோயையும், அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை” என்பது சிந்திக்கத் தூண்டும் ஒரு நபிமொழியாகும். (புகாரீ – 5678)
இதில் சிக்கல் எங்கே வருகிறது என்றால், இறைவன் அருளிய அந்த நிவாரணி எது என்பதைக் கண்டறிவதில்தான் உள்ளது. ஆராய்ச்சி செய்து, சிரமப்பட்டுத் தேடுபவர் அதைக் கண்டறிவார்; மூளையைச் செலவிட மறுப்பவர் நோயில் தத்தளிப்பார்.
இதனால்தான் மற்றோர் அறிவிப்பில், “எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறைவன் இறக்குவதில்லை. அதனைக் கண்டறிந்தவர் அறிந்துகொண்டார். அறியாதவர் அறியாமையிலேயே இருக்கிறார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது. (முஸ்னது அஹ்மத்)
நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒருவருக்கு உடலில் காயமேற்பட்டு இரத்தம் கொட்டத் தொடங்கியது. ‘பனூ அன்மார்’ கூட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் இருவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “உங்களிருவரில் சிறப்பாக மருத்துவம் செய்பவர் யார்?” என வினவினார்கள்.
அப்போது அவ்விருவரும் -அல்லது ஒருவர்- “அல்லாஹ்வின் தூதரே! மருத்துவத்தில் பலன் உண்டா? என வினவினார். அதற்கு நபியவர்கள், “நோய்களை அளித்தவன்தான் மருந்தையும் அளித்தான்” என்று விளக்கினார்கள். (முவத்தா மாலிக், முஸன்னஃபு இப்னு அபீஷைபா. இது ‘முர்சல்’ வகை ஹதீஸானாலும் வேறு சான்றுகள் உண்டு.)
மற்றொரு ஹதீஸில், “ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு. ஒரு நோய்க்குச் சரியான மருந்து அளிக்கப்பட்டால், அல்லாஹ்வின் ஆணையின்பேரில் அந்நோய் குணமடைகிறது” என நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
ஆக, நோய்க்குச் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் மருந்து உட்கொள்வதும் இறைநம்பிக்கைக்கோ, விதியின் மீதான நம்பிக்கைக்கோ முரணானது அன்று; விரும்பத் தகாத செயலுமன்று. “சோதனைகள் அனைத்தையும் பொருந்திக்கொண்டு அப்படியே இருக்க வேண்டுமே ஒழிய, மருத்துவம் பார்ப்பது கூடாது” என்ற கூற்று நபிமொழிக்கு எதிரானதாகும். (துஹ்ஃபத்துல் அஹ்வதீ)
மருத்துவ சேவை
நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் நோயைக் குணப்படுத்துவதற்கும் முறையான பயிற்சியைக் கொண்ட தொழிலே மருத்துவம், அல்லது மருத்துவ சேவை (Practice of Medicine) எனப்படுகிறது. உடலின் சமச்சீரான நிலை பாதிக்கப்படும்போது, அந்தப் பாதிப்பை அகற்றும் ஒரு முயற்சிதான் மருத்துவ சேவையாகும்.
இந்தப் பாதிப்பு வெப்பத்தால், அல்லது குளிர்ச்சியால் ஏற்படலாம். வெப்பம், குளிர்ச்சி ஆகிய இரண்டில் ஒவ்வொன்றும் ஈரம், அல்லது காய்வு, அல்லது இரண்டும் கலந்த நிலை ஆகிய மூவகைப்படும். ஆக மொத்தம் ஆறு கட்டங்களில் உடலின் சமச்சீர் பாதிப்படைய இடமுண்டு. இவற்றில் ஒன்றை, அதற்கு நேரெதிராகனதைக் கொண்டே பெரும்பாலும் அகற்றப்படுகிறது; குணப்படுத்தப்படுகிறது.
நோயிலிருந்து உடலைக் காக்க மூன்று வழிமுறைகள் கையாளப்படுவதுண்டு. 1. உடல் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து காப்பது. 2. உடல்நலத்தைப் பாதிக்கும் அம்சங்களிலிருந்து விலகிப் பத்தியமாக இருப்பது. 3. உடல்நலத்தைக் கெடுக்கும் பொருளை உடலில் இருந்து அகற்றுவது. இந்த மூன்று முறைகளுமே திருக்குர்ஆனில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன எனலாம்!
1. “நோயாளியாகவோ பயணத்திலோ உங்களில் ஒருவர் இருந்தால், வேறு நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும்” என்கிறது ஒரு வசனம் (2:184).
பயணி நோன்பு நோற்பதால் உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால், அவர் நோன்பைக் கைவிட இறைவன் அனுமதிக்கிறான். இது, உடல் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் அடங்கும்.
2. தண்ணீரை உபயோகித்து அங்கத் தூய்மை (உளூ) செய்தால், உடல் பாதிக்கும் என்றிருப்பின், அதற்கு மாற்றாக ‘தயம்மும்’ செய்துகொள்ளலாம் என்பது சட்டம்.
“உங்களை நீங்கள் மாய்த்துக்கொள்ளாதீர்கள்” (4:29) என்பது இறைவசனம். எனவே, இது உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் அம்சங்களிலிருந்து விலகியிருக்கும் இரண்டாவது சிகிச்சை முறையின்பாற்பட்டதாகும்.
3. ஹஜ்ஜுக்கு ‘இஹ்ராம்’ கட்டியவர் தலையில் பேன் போன்ற பிணி இருந்தால் தலைமுடியைக் களைய அனுமதியுண்டு.
“உங்களில் யாரேனும் நோயாளியாகவோ தலையில் பிணி உள்ளவராகவோ இருந்தால், (அவர் தலைமுடியைக் களைவதில் குற்றமில்லை). நோன்பு நோற்றல், அல்லது தர்மம் செய்தல், அல்லது பலி கொடுத்தல் (அதற்கு) பரிகாரமாகும்” (2:196) என்கிறது குர்ஆன்.
இது, உடல்நலத்தைக் கெடுக்கும் பொருளை உடலில் இருந்து அகற்றும் சிகிச்சை முறையில் சேரும்.
மூவகை மருத்துவம்
1. யூனானி (கிரேக்க) மருத்துவ முறை. இது ஒப்பாய்வு முறை (Analogy) மூலம் நோய்களைக் குணப்படுத்தும் வகையாகும். இந்திய முஸ்லிம்கள் இம்முறையையே நீண்ட காலம் பின்பற்றிவந்தனர். தற்போதும் சில இடங்களில் உண்டு.
2. அரபி மற்றும் இந்திய மருத்துவ முறை. இது, அனுபவ அடிப்படையிலான (Experimental) மருத்துவ முறையாகும். நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் அரேபிய அனுபவ முருத்துவ முறையையே கையாண்டார்கள்.
ஆயுர்வேதம்
இந்திய மருத்துவ முறையில் ஆயுர்வேதம் (Ayurveda) ஒன்றாகும். இது, மரபு வழியாக வந்துள்ள இந்திய மருத்துவ முறை. இந்து வேதங்களின் ஒரு பகுதி என்று கருதப்படும் அதர்வண வேதத்தில், கி.மு. 2000ஆம் வாக்கில், இதன் ஆரம்பக் கால கோட்பாடுகள் கூறப்பட்டுள்ளனவாம்!
மனித உடலை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், (ஈத்தர்) ஆகியவற்றின் அடிப்படையிலும், மூன்று உடல் பாய்மங்களான காற்று (வாயு), பித்த நீர், சிலேட்டுமம் ஆகியவை அடிப்படையிலும் ஆராய்கிறது இந்த முறை.
நோய் தடுப்பு முயற்சிகளில் உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி, மூலிகைத் தயாரிப்புகள், யோகா ஆகியவற்றை ஆயுர்வேதம் வலியுறுத்தும். மூலிகை மருந்துகள், உடற்பயிற்சி உள்ளிட்ட மருத்துவம், உணவுமுறை போன்றவை நோய்களைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும்.
சித்தா
சித்த வைத்தியமும் (Siddha Medicine), இந்திய மருத்துவ முறையில் அடங்கும். மூலிகைகளையும் நச்சற்ற உலோகங்களையும் தாதுப் பொருட்களையும் பயன்படுத்திச் சிகிச்சை அளிக்கும் முறையே சித்தா ஆகும். சித்தாவைத் தமிழ் மருத்துவம் என்றும் அழைப்பர். இது, தென்னிந்தியாவில் பின்பற்றப்பட்டுவருகிறது.
பண்டைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், சித்த வைத்தியம் பற்றிய குறிப்புகள் உள்ளன. சங்க இலக்கியங்களிலும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. இயற்கையோடு இயைந்து போகிற வாழ்க்கையை சித்த மருத்துவம் வலியுறுத்தும்.
வாதம் (காற்று), பித்தம் (பித்தநீர்), கபம் ஆகிய மூன்றின் இணைப்புக் கோளாறுகளால் நோய்கள் தோன்றுகின்றன. இவை, முறையே காற்று, நெருப்பு, நீர் ஆகியவற்றைக் குறிக்கின்றன. சித்தர்கள், சுவாச விஞ்ஞானத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இதற்கு, ‘பிராணாயாம்’ என்று பெயர்.
இந்த மருத்துவ முறையில் வர்ம சிகிச்சை முக்கியமானது. எலும்பு, தசை, தசைநார், நரம்பு, இரத்தக் குழாய் ஆகியவை ஒன்றையொன்று சந்திக்கும் இடம் ‘வர்மம்’ எனப்படும். உடலில் 108 வர்மப் புள்ளிகள் உள்ளனவாம்! தாவரங்கள் மற்றும் தாவரங்களுடன் இணைந்த மருந்துகள் சித்தாவில் சிறப்பிடம் பெறுகின்றன.
அலோபதி
3. பிற்காலத்தில் தோன்றிய ‘அலோபதி’ எனும் ஆங்கில மருத்துவ முறையாகும். இது ‘எதிர்மறை’ (Alopathy) மருத்துவமாகும். உலக நாடுகள் எங்கும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள சிகிச்சை முறையே இது.
கிரேக்க அறிவியலாளர் ஹிப்போகிரேடஸ் (Hippocrates) என்பவர்தான், மருத்துவ உலகின் தந்தை என அழைக்கப்படுகிறாராம்! 1891-க்குப் பின்னரே மருந்துகள் செயல்படும் முறைகள் கண்டறியப்பட்டன. ஐரோப்பியர் இந்தியாவை ஆட்சி செய்தபோது, இந்த மேலைநாட்டு மருத்துவமும் இந்தியாவில் குடியேறியது. 20ஆம் நூற்றாண்டில் இதன் வளர்ச்சி உச்சத்தைத் தொட்டது. இன்று இந்தியாவில் அலோபதியே முதன்மை மருத்துவமாக மாறிவிட்டது.
நோய்க் குறிகள் அகற்றுவதற்கானவை (Symptomatic), நோய்க் காரணிகள் அகற்றுவதற்கானவை (Causation Removal) என இரண்டு முறைகள் அலோபதி மருத்துவத்தில் உண்டு. அவ்வாறே, மருந்து முறை (Medical), அறுவை சிகிச்சை முறை (Surgical), கடுமைத் தணிவு முறைகள் (Palliative) என மூன்று முறைகள் நோய் தீர்க்கும் முறைகளாக (Defenitive) கையாளப்படுகின்றன.
அலோபதி மருந்துகள் அனைத்துமே இராசயனப் பொருட்களாலேயே செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன; உடலிலுள்ள அனைத்து செல்களிலும் இராசயன மாற்றத்தை உண்டுபண்ணுகின்றன.
அதனால், தலைவலிக்குத் தரப்படுகின்ற சாதாரண வலி மாத்திரைகூட மூளை, இதயம், இரைப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் தேங்கி இராசாயன மாற்றங்களை ஏற்படுத்திப் பக்கவிளைவுகளைத் தோற்றுவிக்கக்கூடியவை ஆகும்.
இனி பக்கவிளைவை சரி பண்ண வேறு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிவரும். ஆக, ஒரு நோய் சாகும்போது, இன்னொரு நோய் பிறக்கும். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் டாலர்களை அள்ளிக்கோண்டே இருக்கும்.
(சந்திப்போம்)