ஈஸ்டர் என்னும் உயிர்த்தெழுதல் பண்டிகை கிறித்தவர்களுக்கு மிக முக்கியமான பண்டிகை. இன்றைய நாட்களில் மதங்களுக்கிடையில் நல்லிணக்கம் மிகவும் மோசமாக சிதைந்துள்ள நிலையில் கிறித்தவர் முஸ்லிம் இடையிலான முக்கிய வரலாற்று உறவுகளை நினைவு கூர்வது மிக முக்கியத் தேவையாக இருக்கிறது.
இரண்டு சமயங்கள் ஒருசேர கலந்து வாழ்வது இயலாத காரியம் என்ற அவநம்பிக்கைக்குள் சில பல கசப்பான நிகழ்வுகள் நம்மை தள்ளி விடுகின்றன.
இந்த சூழ்நிலையில், கிறித்தவர் முஸ்லிம் இடையில் நிகழ்ந்த 5 சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளை சுட்டி இரு சமயத்தவர்களும் இணக்கமாக வாழ்ந்த அந்த அழகான காலத்தையும், வாய்ப்பையும் நினைவு கூர்ந்து இந்த இணக்கம் எல்லா காலத்திலும் சாத்தியமாகும் என்பதை எடுத்துச் சொல்லி வரும் காலங்களிலும் இரு சமயத்தவரும் இணக்கமாக வாழ முடியும் என்பதற்கு இந்த பதிவு உதவும் என்றே நம்புகிறேன். கிறித்தவர் முஸ்லிம் இரு சமூகத்தவரும் தங்கள் வேதங்களின் நம்பிக்கை, வரலாறு, கொள்கை, கோட்பாடுகள் ஒன்று போல இருப்பதை அறிய முடியும்.
அந் நஜ்ஜாஷி
முகம்மது நபியவர்கள் கற்பித்த இஸ்லாத்தையும், வேதத்தையும் மக்கள் மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தத் தொடங்கிய சமயம் அவர்கள் பிறந்த அரபு நாட்டின் உயர் குலத்தவர்களும் செல்வ சீமாட்டிகளும் இஸ்லாமை ஏற்க மறுத்ததுடன் முகம்மது நபியவர்களையும் அவர்களை பின்பற்றி வழி நடந்த தோழர்களையும் கடுமையாக பகைத்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் உயிருக்குப் பயந்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றார்கள், அந்த சமயத்தில் புதிய முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் கிறித்தவர்கள் என்பது வரலாற்றில் மிக முக்கியச் சம்பவம்.
முஸ்லிம்களுக்கு தாங்கவியலாத துன்பத்தை எதிரிகள் கொடுத்த போது, நபிகள் தோழர்களில் சிலரே நபிகளிடம் சென்று அபிசீனியா நாட்டுக்குச் சென்று கொஞ்ச காலம் இருக்கலாம் என்று அனுமதி கேட்கிறார்கள். அன்று அபிசீனியா என்றழைக்கப்பட்ட நாடுதான் இன்றைய சோமாலியா. அபிசீனியா நாட்டை நஜ்ஜாசி என்ற மன்னர் ஆண்டு வந்தார். மன்னரும் மக்களும் கிறித்தவ மதத்தை பின்பற்றி வந்தனர். “மன்னர் அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள மாட்டார். மேலும் நல்ல நண்பராக இருப்பார்” என்றும் நபிகளிடம் ஆலோசனை கூறினார்கள்.
அபிசீனியாவில் அரசர்கள் அஷாமா அல்லது அம்ரா என்று அழைக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் அஷாமாவை அன்- ஜஸாஹி என்று அழைக்கிறார்கள். அபிசீனிய மொழியில் ஜஸாஹி மன்னர் என்று பெயர்.
அக்சும் பேரரசை அவர் ஆட்சி செய்வார். அபிசீனியா இப்போதுள்ள ஆப்பிரிக்காவின் கொம்பு எனப்படும் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. “அன்னிய நாடொன்றில் அரசியல் அடைக்கலம் பெற்ற முதல் முஸ்லிம் குழு” தான் அவரிடம் இருந்து நீதியையும் பெற்றது.
அரேபியாவை அப்போது ஆட்சி செய்து வந்த பாகன் அரபிகள் முகம்மது நபிகளின் தோழமைகளுக்கு அபிசீனியாவில் அடைக்கலம் கிடைப்பதை தடுக்க திட்டமிட்டனர். அதற்கு வேண்டி ஒரு தூதுவரையும் அனுப்பி வைத்தனர். ஈசா இறைவனின் மகன் இல்லை என்று இவர்கள் கூறுகிறார்கள்” இவர்களை எங்களுடன் அனுப்பி வையுங்கள் என்று அவர் கேட்டார். முஸ்லிம்களிடம் மன்னர் அது பற்றி வினவினார். முஸ்லிம்கள் ஈசா நபி பற்றியும் அவர்களது தயாருக்கு உரிய கண்ணியம் பற்றியும் கூறவே, மன்னர், “ கிறித்தவம் பற்றி இவர்கள் கூறும் கருத்துக்கும், எங்கள் கருத்துக்கும் இடையில் பெரிய முரண்பாடு எல்லாம் இல்லை. இவர்களை உங்களுடன் அனுப்ப முடியாது என்று அபிசீனிய மன்னர் மறுப்பு தெரிவித்து விட்டார். மேலும முஸ்லிம்களிடம், நான் உங்களையும் உங்கள் தூதரையும் வரவேற்கவே செய்கிறேன். இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வசியுங்கள்” என்று கூறினார் மன்னர்.
ஆப்பிரிக்க மன்னர் நீதி மற்றும் இரக்கத்துடன் நடந்துகொண்டார், கிறிஸ்தவத்தின் மதிப்பை வெளிப்படுத்தினார். தொடக்க கால முஸ்லிம்கள் தங்களுக்கான நண்பை இந்த கிறித்தவர் மன்னரிடம் புரிந்து கண்டு கொண்டனர்.
ஜெருசலத்தில் கலிஃபா உமர் :
முஸ்லிம் அரசு கி.பி. 637ல், உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனத்தின் ஜெருசலம் வரையில் நீண்டு விரிந்தது. பாலஸ்தீனத்தை ஆண்டு கொண்டிருந்த பைசாந்திய அரசன் சோப்ரோனியஸ் (Sophronius) சரணடைய வேண்டும் என்று எதிர்பார்த்தனர் முஸ்லிம்கள்.
ஆனால் அவர் மதினா நகரில் இருந்து உமர் ரலி அவர்கள் ஜெருசலம் வந்து பொறுப்பை ஒப்புக் கொள்ளும் வரையில் சரணடைய மறுத்து விட்டார். மதீனாவிலிருந்து புறப்பட்டு உமர் ஜெருசலம் வந்து சேர்ந்தார். தொழுகை நேரம் வந்தபோது, உமரை Holy Sepulcher தேவாலயத்தில் தொழுது கொள்ளும்படி சோப்ரோனியஸ் அழைப்பு விடுத்தார்.
சர்ச் – தேவாலயம் கிறித்தவர்களின் புனிதமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது. ஈசா சிலுவையில் அறையப்பட்ட இடமும், அவர் உயிர்த்தெழுந்த இடமும் அங்கு இருப்பதாக கிறித்தவர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்த உமர் ரலி அந்த அழைப்பை மறுத்து விட்டு, சொன்னார்.
“இன்று இங்கு நான் தொழுகை செய்துவிட்டால் நாளை வரக்கூடிய முஸ்லிம்கள், எங்கள் உமர் இறைவனை வணங்கிய இடம் இது. எனவே, இந்த இடம் எங்களுக்குத் தான் சொந்தம் என்று பின்னாளில் உரிமை கேட்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இங்கே நான் தொழகை செய்ய மாட்டேன்” என்றார்.
அதன்பின் உடனடியாக உமர் ரலி அவர்கள் ஜெருசலம் கிறித்தவர்களோடு ஒரு உடன்படிக்கையில் கையெழுத்து இட்டு வாக்குறுதி அளித்தார். அதில், கிறித்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். தேவாலயங்கள், சிலுவைகள், கிறித்தவர்களின் உடமைகள், சொத்துக்கள் பாதுகாக்கப்படும். கிறித்தவர்களின் சர்ச்சுகளுக்கு முஸ்லிம்கள் உரிமை கோரமாட்டார்கள். சர்ச்களை சேதப்படுத்த மாட்டார்கள். கிறித்தவர்களை வலுக்கட்டாயமாக மதம் மாறச் சொல்ல மாட்டார்கள்” என்று அந்த உடன்படிக்கையில் கலிஃபா உமர் ரலி அவர்களால் உறுதி செய்யப்பட்டது.
ரிச்சர்டு மற்றும் சலாவுதீன்:
கிறித்தவ முஸ்லிம் வரலாற்று உறவில் சிலுவைப்போர் மிகச் சிரிய அளவானது. போர்கள் நடந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் பரஸ்பரம் மரியாதை கொள்ளவும் இரக்கம் காட்டவும் நம்பிக்கையூட்டும் சிறந்த உதாரணம் இருக்கிறது.
ரிச்சர்டு முஸ்லிம்களிடம் இருந்து ஜெருசலம் நகரை கைப்பற்ற கடுமையான சண்டை நடத்தி வந்த நிலையில் திடீரென மலேரியா தாக்கி கடும் அவதிக்கு ஆளாகிறார். அந்தப் போரை முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கியவர் சலாவுதீன். இதனை கேள்விப்பட்ட சலாவுதீன் ரிச்சர்டுக்கு மருத்துவம் அளிக்க தனது மருத்துவரை அனுப்பி வைத்தார்.
ரிச்சர்டு விரைவில் குணமாக சலாவுதீன் மருத்துவர்களுடன் பழங்கள் மற்றும் பனிக்கட்டிகளையும் கொஞ்சம் கொடுத்து அனுப்பினார். அந்த காலத்தில் முஸ்லிம் மருத்துவர்கள் ஐரோப்பிய மருத்துவர்களை விடவும் சிறந்து விளங்கினார்கள்.
சலாவுதீனும் ரிச்சர்டும் பின்னர் ஒரு அமைதி ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தப்படி கிறித்தவர்கள் ஜெருசலமை கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டது. அதே நேரம், கிறித்தவர்கள் கட்டணம் எதுவும் இன்றி ஜெருசலேமுக்கு சென்றுவர உடன்படிக்கையில் உத்தரவாதம் கொடுத்தார்.
சிலுவைப்போர் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் இரு தரப்பு தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் அன்பையும் இரக்கத்தையும் பரிமாறிக் கொண்டனர் என்பது தான் வரலாறு.
லா கண்விவென்சியா (La Convivencia)
லா கண்விவென்சியா என்றால் பிரஞ்ச் மொழியில் சகவாழ்வு என்று பொருள். ஸ்பெயின் நாட்டை முஸ்லிம் 700 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். கி.பி. 912 முதல் 961 வரையில் 3 வது அப்துல் ரகுமான் என்பவர் கலிஃபாவாக இருந்தார். அவரது காலத்தில் இஸ்லாம், கிறித்தவம், யூத மதங்கள், கொள்கைகள், தத்துவங்கள் மற்றும் கலாச்சாரங்கள் செழிப்புடன் இருந்தன.
அரசிலும் ஆட்சியிலும் கூட கிறித்தவர்கள் மற்றும் யூதர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. Sachedina போன்ற எழுத்தாளர்கள் இது தான் குர்ஆனின் உண்மையான வழிகாட்டுதல். குர்ஆனில் இருந்து தான் முஸ்லிம் ஆட்சியாளர்கள் சகவாழ்வு கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர் என்று கூறுகிறார். மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய சமூக வாழ்வை பற்றி குர்ஆன் குறிப்பிடும் பல வசனங்களை அவர் தனது கருத்துக்கு ஆதாரமாக காட்டுகிறார்.
போப் பிரான்சிஸ் மற்றும் அகதிகள்:
ஈராக் மற்றும் சிரியாவில் நடக்கும் மோதல்களால் லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். வெளிநாட்டவரை வெறுக்கும் மக்கள் மற்றும் அச்ச உணர்வால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இருந்து வெறுப்புணர்வு கொண்ட பல அரசியலவாதிகள் உருவாகி இருக்கும் போது, மாறாக போப் பெனடிக்ட், கருணைக்கான செய்தியை சொல்லுகிறார்.
போப், எந்த காலத்துக்கும் தேவைப்படும் அன்பின் செய்தியை சொல்லிக் கோடிக் கணக்கான மக்களின் உள்ளங்களை வெற்றி கொண்டார். கடந்த வருட ஈஸ்டர் பண்டிகையில் போப் முஸ்லிம், இந்து மற்றும் ஆச்சார கிறித்தவ அகதிகளின் (Orthodox Christian) பாதங்களை கழுவும் அளவுக்கும் சென்றார்.
ஒருவரை அகதியாக்குவதும் அவரே தன்னை கிறித்தவன் என்பதும் பாசாங்குத்தனமான செயல் என்று போப் விமர்சனம் செய்தார். சிரியன் அகதிகள் மத்தியில் அச்சமும் அவநம்பிக்கையும் அதிகரித்து இருந்த நிலையில் போப் தனது பதவியையும் அதிகாரத்தையும் கொண்டு “அகதிகள் மீது கருணை காட்டுங்கள்” என்று வேண்டுகோள் வைத்தார்.
இவ்வாறு பார்த்தால், முஸ்லிம் கிறித்தவ தலைமைகள் மற்ற மதத்தவர்களோடு சக வாழ்வை மேம்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் இடையில், பகையும் மோதலும் கொலைகளும் அதிகரிக்கும் போது மத தலைமைகள் அன்பின் செய்தியை கொண்டு கருணையை பரப்ப வேண்டும். அதற்கு இஸ்லாம் – கிறித்தவ வரலாற்றில் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. மதங்களுக்கிடையில் உரசல்கள் உருவாகி நல்லிணக்கமும் சக வாழ்வும் சிதைந்து கொண்டு வரும் காலத்தில் இதுபோன்ற வரலாறுகளை நினைவூட்டுவதும் அவசியமாக இருக்கிறது.