வெற்றி என்பது யாதெனில் 

இளைஞர் குழு ஒன்றுக்கு கட்டடம் ஒன்றைக் கட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. அது ஒரு பெரிய கட்டடம் என்பதால் இந்த இளைஞர்கள் கட்டடத்தை பகுதிகளாகப் பிரித்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்கிறார்கள்.

கட்டடத்தின் வெவ்வேறு பாகங்களை ஒவ்வொருவரும் தமக்குள் பகிர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறார்கள். கட்டட வேலைகள் வெற்றிகரமாக நிறைவடைகின்றன. கட்டடம் திறக்கப்படும் நாளில் அனைவரும் தாங்கள் செய்த வேலையில் திருப்தி அடைகிறார்கள். 

ஆனால் ஒரு இளைஞன் மட்டும் தான் செய்ததில் ஏதோ தவறு இருப்பதை உணர்கிறான். மற்றவர்கள் கட்டிய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தான் கட்டியதை பரிபூரணம் அற்றதாக காண்கிறான். உண்மையில் அவன் கட்டிய பாகத்தின் ஒரு சுவர் கோணலாகத் தான் இருந்தது. அந்தப் பகுதி முழுக் கட்டடத்தின் நேர்த்தியைப் பாதிக்கிறது என்று அவன் நினைக்கிறான்.

விதி வலியது இல்லையா?

பார்வையாளர்களுக்கு கட்டடத்தைச் சுற்றிக் காட்டி அதைப் பற்றி விருந்தினர்களுக்கு விளக்கம் அளிக்கும் வாய்ப்பு அந்த இளைஞனுக்கு கிடைத்துவிடுகிறது. எனவே இந்த இளைஞன் தான் உருவாக்கிய பகுதியைத் தவிர மற்றவர்கள் உருவாக்கிய அனைத்துப் பகுதிகளையும் பார்வையாளர்களுக்கு அழகாக விவரித்தாலும், அவன் அதை விவரிக்கும் ஒவ்வொரு முறையும் அவனது மனம் குற்ற உணர்வால் நிரம்புகிறது. தான் கட்டிய சுவர் குறித்தே நினைக்கிறான்.

நாட்கள் நகர்கிறது. ஒருநாள் விதி வாய்ப்பாக – விசித்திரமான ஒரு விசயம் நடக்கிறது. அந்த கட்டடத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் கட்டடத்தைப் பார்க்க வருகிறார்கள். அப்போதுகூட வழக்கம் போல அந்த இளைஞன் கட்டடத்தின் மற்ற பகுதிகளை காட்டிவிட்டு அவன் கட்டிய பகுதியை மட்டும் காட்டாமல் தவிர்க்கிறான்.

ஆனால் முதலீட்டாளர் முழு கட்டடத்தையும் பார்க்க விரும்புவதாக வலியுறுத்துகிறார். வேறுவழியில்லாமல் இளைஞன் அவன் கட்டிய கோணலான சுவரையும் முதலீட்டாளருக்கு காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அவன் எதிர்பார்த்ததற்கும் மாற்றமாக முதலீட்டாளர் அந்த கோணலான கட்டடத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். இளைஞர்களின் நடவடிக்கைகளைப் பாராட்டுகிறார். பின்னர் அந்த இளைஞர் ‘இந்த சுவரில் நீங்கள் ஏதேனும் குறைபாட்டைக் காணவில்லையா?’ என்று தயங்கியபடி கேட்கிறான். ‘இல்லையே நான் அத்தகைய எந்த குறைபாட்டையும் காணவில்லை. சுவர் மிகவும் நன்றாக கட்டப்பட்டுள்ளது’ என்று முதலீட்டாளர் கூறுகிறார்.

அந்த இளைஞன் கேட்கிறான் ‘இந்த சுவரில் ஒரு சிறிய கோணல் உள்ளது. உங்களால் பார்க்க முடியவில்லையா?’ ’அப்படியான குறிப்பான எந்த குறைபாட்டையும் நான் காணவில்லை’ என்றார் முதலீட்டாளர்.

பின்னர் அந்த இளைஞன் முதலீட்டாளரை சுவரில் சிக்கல் உள்ள இடத்திற்கு அழைத்துச்சென்று முதலீட்டாளருக்கு காட்டுகிறான். குறிப்பிட்ட அந்தப்பகுதி அந்த இளைஞரால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை முதலீட்டாளர் புரிந்து கொள்கிறார். “இந்த பகுதியை கட்டியது நீங்களா” என்று அவர் கேட்கிறார். இளைஞனும் தயங்கியபடி ஒத்துக் கொள்கிறான்.

அந்த இளைஞனிடம் “இந்த சுவர் 99% சரியாக உள்ளது. இந்த சிறிய கோணலை நீங்கள் காட்டிய பிறகுதான் நான் பார்த்தேன். காட்டியிராவிட்டால் நிச்சயம் கவனித்திருக்க மாட்டேன். நீங்கள் கட்டியதில் 99% பகுதி அழகாக, நேர்த்தியாக இருப்பதைக் கண்டேன். ஆனால் நீங்கள் கட்டியதில் 99% பூரணத்துவத்தை காணாமல், அதில் 1%முள்ள குறைபாட்டை நினைத்து கவலைப்படுகிறீர்கள். அந்த 1% உங்கள் 99% வெற்றியை மகிழ்ச்சியை சிதைத்து விட்டது. முதலில் நீங்கள் சிறப்பாகச் செய்தவற்றில் மகிழ்ச்சியாக இருங்கள்.” 

“நாம் யாரும் வாழ்க்கையில் முழுமையாக சரியானவர்கள் அல்ல. முக்கியமானது என்னவென்றால் இதை செய்ய வேண்டுமென்று நீங்கள் எடுத்த முயற்சி. அதற்காக நீங்கள் பாடுபட்டிருக்கிறீர்கள். ‘முதலில் உங்கள் முயற்சி குறித்து மகிழ்ச்சியாக இருங்கள்.’ நீங்கள் நன்றாக செய்து முடித்த விசயம் குறித்து திருப்தி அடையுங்கள். குறிப்பாக ‘எந்த நேரத்திலும் யாராலும் தவறுகள் நிகழலாம்’ என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். “நீங்கள் உங்களால் முடிந்ததை முழுமையாகச் செய்திருந்தால், நீங்கள் தவறு செய்ததற்காக உங்களை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்” என்று முதலீட்டாளர் கூறி முடித்தார்.

உண்மைதான் நம்மில் பலரும் தம்மால் நேர்ந்த மிக அற்பமான தவறை நினைத்து நினைத்தே குறுகிப் போகிறோம். அதை மையப்படுத்திப் பேசி குறையற்ற விசயங்களின் முழுமையை புறக்கணித்து விடுகிறோம்.

நாமே நம் சந்தோஷத்தை, மகிழ்ச்சியை அனுபவிக்கத் தடையாகிறோம். 

நம் வாழ்க்கையில் நாம் நிறைய பெரிய காரியங்களைச் செய்கிறோம். மதிப்புமிக்க விசயங்களைச் செய்கிறோம். குறிக்கோள்களுக்காகவும், கனவுகளுக்காகவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். தொழிலுக்காக குடும்பத்திற்காக நம்மால் முடிந்த மிகப் பெரிய தியாகத்தைச் செய்கிறோம். ஆனால் ஒரு கட்டத்தில் சிறிய தவறொன்று நிகழலாம். இந்த உலகில் முழுமையாக சரியான எதுவும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யத் தவறியதை, தவற விட்டதை முதலில் நாமே மன்னிக்க வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் அனைத்து விசயங்களும் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இல்லாவிட்டால் எதைச்செய்தாலும், எவ்வளவு வெற்றி அடைந்தாலும் அந்த வெற்றி திருப்தியையோ, மனநிறைவையோ நமக்குத் தராது.

பௌசுனா இஸ்ஸதீன், உளவியலாளர், இலங்கை