ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து பணியாற்றி பின்னர் அந்த இயக்கத்திலிருந்து விலகி தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்குப் போராடி வரும் பன்வர் மெக்வன்ஷி என்பவர் எழுதியுள்ள நூலே இது. இதனை அவரது “தன் வரலாற்று நூல்” என்று கூறலாம்
இராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்திலுள்ள சிர்தியாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்த பன்வர் மெக்வன்ஷி தனது 13வது வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுகிறார். அவரது தந்தை ஒரு தீவிர காங்கிரஸ்காரர். ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளர். அவரது எதிர்ப்பையும் மீறித்தான் பன்வர் மெக்வன்ஷி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்தார்.
அந்த இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கு கொண்டார். அந்த இயக்கத்தில் அவருக்குப் பதவி உயர்வும் கிடைக்கிறது. மிக விரைவாகவே “கார்யவாக்” என்ற பதவிக்கு உயர்த்தப்படுகிறார். 1990ம் ஆண்டு ஆயிரக்கணக்கான கரசேவகர்களுடன் இணைந்து கரசேவைக்காக அயோத்திக்குப் புறப்பட்டார். ஆனால் இராஜஸ்தான் மாநில எல்லையைக் கடப்பதற்கு முன்னரே அவரது அணியினரைக் காவல் துறையினர் கைது செய்து விடுகின்றனர்.
எனவே அவரது பயணம் தடைப்பட்டுப் போகிறது. எனினும் தொடர்ந்து அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் முயற்சிக்கு ஆதரவாக மாகாணமெங்கும் சென்று பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் எற்படுகிறது.
கர சேவைக்காக அயோத்திக்குச் செல்லும் வழியில் இறந்து போனவர்களின் அஸ்தியை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் எடுத்துவரும்போது அந்த ஊர்வலம் அவரது கிராமத்திற்கும் வருகிறது. ஊர்வலத்தில் பல சாதுக்களும், துறவிகளும் இருந்தனர். ஊர்வலத்தில் வந்தவர்களை காலை உணவு அருந்த தனது இல்லத்திற்கு வருமாறு பன்வர் மெக்வன்ஷி அழைப்புவிடுத்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். ஆனால் தீவிர ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளரான அவரது தந்தை “அவர்கள் போலிவேடதாரிகள் நமது வீட்டில் உண்ணமாட்டார்கள்” என்று கூறினார்.
எனினும் அவர் தந்தையின் கூற்றைப் பொருட்படுத்தாமல் “நான் ஐந்து ஆ்ண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருக்கிறேன். நான் ஏராளமான சுயம் சேவக்குகளின் வீடுகளில் உணவருந்தியிருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்ஸில் தீண்டாமை, சாதிப் பாகுபாடு கிடையாது” என்று பதிலளித்தார்.
ஆனால் ஊர்வலத்தில் தனது கிராமத்திற்கு வந்த சுயம் சேவக்குகளை தனது இல்லத்திற்கு உணவருந்த வருமாறு அழைத்தபோது அந்த ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கி வந்த மாவட்டப் பொறுப்பாளர் அவரைத் தனியே அழைத்துச் சென்று “நண்பரே நமது சமுதாயத்தில் நிலவும் சமத்துவமின்மை உங்களுக்கு நன்கு தெரியும். நமது அமைப்பின் அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் நமது இந்து சமுதாயம் ஒன்றாக ஆகவில்லை. நம்மைப் பொறுத்தவரை நாம் எப்போதும் ஒன்றாக அமர்ந்து உண்பது தான் வழக்கம். ஆனால் இன்று இங்கே சாதுக்களும், துறவிகளும் வந்திருக்கிறார்கள. அவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்காமல் தாழ்ந்த சாதியினரின் வீட்டில் உணவு கொடுப்பது அவர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். அவர்கள் கோபம் கொள்வார்கள். விலகிச் சென்று விடுவார்கள். எனினும் நீங்கள் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலங்களாகக் கட்டி அவற்றைக் காரில் வைத்து விடுங்கள். நாங்கள் அடுத்த கிராமத்தில் வைத்து அவற்றை சாப்பிட்டுவிடுவோம்” என்று கூறினார்.
ஒரு தலித் வீட்டிலிருந்து உணவு சமைத்துக் கொண்டு வரப்படுகிறது என்பதை மாவட்டப் பொறுப்பாளர் இரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்து கொண்ட பன்வர் மெக்வன்ஷி அவர் கூறியபடியே உணவுப் பொருட்களைப் பொட்டலங்களாகக் கட்டி காரில் வைத்து விட்டார். அவரது தகப்பனார் “ஏன் உங்கள் இயக்கத்தினர் உணவருந்த நமது இல்லத்திற்கு வரவில்லை” என்று கேட்டதற்கு சில சாக்குப் போக்குகள் சொல்லிச் சமாளித்தார். ஆனால் இவர் கட்டிக் கொடுத்த உணவை சுயம் சேவக்குகள் சாப்பிடவேயில்லை.
அந்த கிராமத்தின் எல்லையைக் கடந்ததும் அவற்றை காரிலிருந்து தூக்கி எறிந்து விட்டுச் சென்று விட்டனர். அவை ரோட்டின் ஓரத்தில் சிதறிக் கிடந்தன. நண்பர்கள் சிலர் இதனை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இதனையறிந்து அவர் மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் அடைந்தார். இச் சம்பவம் பற்றி இயக்கத்தின் உயர் பொறுப்பிலுள்ளவர்களிடம் அவர் புகார் செய்தார். ஆனால் அவர்கள் அதற்கு சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் வெறுப்புற்ற அவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் நடவடிக்கைகளிலிருந்து படிப்படியாக விலகினார். ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்திலிருந்து முற்றிலுமாகத் தன்னை விடுவித்துக் கொள்கிறார்.
பின்னர், பன்வர் மெக்வன்ஷி அம்பேத்கர் இயக்கத்தில் சேர்ந்து தலித் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிறார். இராஜஸ்தான் மாநிலமெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துகிறார். ஆர்.எஸ்.எஸ் காரர்களிடமிருந்து அவருக்கு மிரட்டல்கள் வருகின்றன. எனினும் அவற்றைப் பொருட்படுத்தாது தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
“டைமண்ட் இந்தியா” என்ற பத்திரிகையைத் தொடங்கி அதில் தலித் மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இழைக்கப்பட்டுவரும் அநீதிகள் குறித்து விரிவாக எழுதுகின்றார். கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டு அதனுள்ளிருந்த சிசுக்கள் தரையில் வீசிக் கொல்லப்பட்ட பல கொடூர சம்வங்கள் அப்போது நடைபெற்றன.
இது குறித்து அவர் தனது “டைமண்ட் இந்தியா” இதழில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். “தேவகியின் எட்டாவது குழந்தை தன்னைக் கொன்று விடும் என்று தெரிந்திருந்தும் கம்சன் அவளது வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுக்கவில்லை. ஆனால் இரவும் பகலும் “ஜெய் கிருஷ்ணா” என்று பஜனை செய்து கொண்டிருப்பவர்கள் குஜராத்தில் முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்து அதனை தரையில் வீசிக் கொன்றார்கள். இது தான் அவர்களின் இந்து பாசமா”
மிகச் சிறந்த வில் வித்தை வீரரான ஏகலைவன் தனது கட்டை விரலை துரோணாச்சாரியாருக்கு குருதட்சணையாகக் கொடுத்தான் என்பது புராணம். இது குறித்து பன்வர் மெக்வன்ஷி எழுதியிருப்பதாவது
“ஏன் ஏகலைவா நீ தியாகம் செய்தாய்?
கட்டவிரலை உன் குருவுக்குக் காணிக்கையாக
நீ ஏன் வெட்டியிருக்கக் கூடாது?
துரோணாச்சாரியாரின் தலையை
அதனால் எந்த இன்னொரு துரோணரும்
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டிருக்க மாட்டார்கள்
துரோணரின் சீடனாய் மீண்டும் எவனும்
இங்கே பிறந்திருக்க மாட்டான்”
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நடத்துகின்ற ஷாகாக்களிலும் பயிற்சி முகாம்களிலும் ஆயுதப் பயிற்சிகள் நடத்தப்படுவதாக பன்வர் மெக்வன்ஷி குறிப்பிடுகின்றார். “என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ் மற்றவர்களோடு பகைமையை மேம்படுத்துவதில் மட்டுமல்ல. சாவுக்கு வழிவகுக்கும் இராணுவப் பயிற்சியையும் அளித்து வருகிறது. ஷாகாக்களில் கம்புகள் வெளிப்படையாகப் பயன்படுத்தப்படுகின்றன. பயிற்சி மையங்களில் முதல், இரண்டாம், மூன்றாம் ஆ்ண்டுகளில் தற்காப்பு என்ற பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சியும், கத்தி, வாள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பெட்ரோல் குண்டுகள் தயாரிக்கப்பட்டு அவற்றை உபயோகிக்கும் முறையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.” என்று அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும் “முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றும், ஷாகாக்களின் போது “ முஸ்லிம் ஆண்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது இந்துப் பெண்களுடன் பாலுறவு கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அது தங்களுக்குச் சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தைத் தரும் என்று நம்புகிறார்கள். இந்த ஏக்கம் தான் அவர்களை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது என்றும், தொழிற்சாலைகளிலும், வணிக நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் முஸ்லிம் ஆண்கள் வேலை முடிந்ததும் மாலை நேரத்தில் நன்றாக உடையணிந்து கொண்டு இந்துப் பெண்களைத் தேடி பொருட்காட்சிகளுக்கும், தாண்டியா நடனம் நடைபெறும் இடங்களுக்கும் வருகிறார்கள்.
நமது பெண்கள் அவர்கள் வலையில் விழுந்து விடுகிறார்கள் என்றும் முஸ்லிம் ஆண்கள் மாமிசம் சாப்பிடுகிறாரக்ள். ஆனால் இந்து ஆண்கள் சைவ உணவை சாப்பிடுகிறார்கள். அசைவ உணவு பாலுணர்வை அதிகரிக்கச் செய்கிறது. இந்து ஆண்களின் சைவப்பழக்கம் அவர்களின் பாலுணர்வைக் குறைக்கச் செய்கிறது. முஸ்லிம் ஆண்களின் கவர்ச்சி அவர்கள் சுன்னத் செய்து கொள்வதில் இருக்கிறது. இந்துப் பெண்களைக் கவர்ந்திழுக்கும் அம்சமாக இது விளங்குகிறது என்றும் பிரச்சாரம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
நூலின் இறுதிப் பகுதியில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் ஆற்றிவரும் பணிகளை விவரிக்கின்றார். அவரது பணிகள் தொடர்கின்றன. “என்ன நேர்ந்தாலும் சரி நான் கட்டாயம் பேசுவேன். எழுதுவேன், எப்போதும் மேலெழுந்து நிற்பேன், வெளிப்படையாக அவற்றைப் பேசுவேன் அநீதி, ஒடுக்கு முறை, சுரண்டல், சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராகக் களத்தில் போராடுவேன்” என்று நூலின் இறுதி வரிகளில் அவர் குறிப்பிடுகின்றர்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உண்மையான முகம் குறித்து அந்த இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய ஒருவரே எழுதியிருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது. பத்திரிகையாசிரியர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நூலைப் பராட்டியுள்ளனர்.
இந்தியில் அவர் எழுதிய “நான் கர சேவகனாக இருந்தேன்” என்ற நூல் “I Could Not be a Hindu – The Story of a Dalit in RSS என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் இந்நூலை செ.நடேசன் மொழி பெயர்த்திருக்கிறார். பொள்ளாச்சியிலுள்ள “எதிர் வெளியீடு” பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.
































