மக்கள் தொடர்பில் நபியவர்களின் உளவியல் ரீதியான அணுகுமுறை – எம்.எம்.முஹிதீன் இஸ்லாஹி

அல்குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தானும் வாழ்ந்து, நல்லமல்கள் பல புரிந்து, ஏனைய மக்களையும் இந்த சத்திய வேதத்தின் பக்கம் அழைத்து, தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவனை விட இறைவனிடத்தில் அழகான வார்த்தை பேசுபவன் இருக்க முடியாது.

அல்லாஹ் வழங்கியிருக்கும் வழிகாட்டுதலை சுமந்து, அதை மற்றவர்களுக்கு எத்தி வைப்பவர்களுக்கு இருக்கின்ற சிறப்புகள் அவருடைய பொறுப்பின் கனத்தை எடுத்துக்காட்டுகின்றன. அவர்கள் முதலில் தீனை – இறைவழிகாட்டுதலை தன்னில் மிளிரச் செய்வது பிரதானமான ஒரு செயல். அதனைத் தொடர்ந்து வரும் விசயம் எத்திவைத்தல் என்பது இப்பணிக்கு தகுதி பெறுவதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

ஏனெனில் இறைவழிகாட்டுதலைச் சுமப்பவர்களால், அதன் கண்ணியம் இழக்கும் நிலை ஏற்படக்கூடாது.

அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்கள் ‘தாஈக்கள் – அழைப்பாளர்கள்’அல்குர்ஆனையும் சுன்னாவையும் எடுத்து நடப்பவராகவும் அல்லாஹ்வின் மீது அன்பும் அச்சமும் கொண்டு நடப்பவராகவும், ஷரீஆ – இஸ்லாமிய சட்ட திட்டம் பற்றிய அறிவுடையவராகவும், பொறுமையாளராகவும், மென்மையுடையவராகவும், முன்மாதிரி மிக்கவராகவும், சிறந்த ஞானம், உபதேசம் மூலம் மக்களை அழைக்கும் பண்பாளராகவும் மேலும் அழைக்கப்படுபவரைப் பற்றிய புரிந்துணர்வுடையவராகவும் இருத்தல் வேண்டும். மேற்படி அனைத்துப் பண்புகளும் அல்குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் வழிகாட்டலில் இருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்வுகளாகும். இதில் எல்லாப் பண்புகளும் பிரதானமானது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

மேலே சொல்லப்பட்ட பண்புகளில் இறுதியான பண்பை நமது இந்த தலைப்போடு தொடர்புபடுத்திக் கொள்வோம். அதாவது அழைக்கப்படுபவர்கள் பற்றிய புரிந்துணர்வு.

இறைவழிகாட்டுதலின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் – வேலையில் இரு சாரார் தொடர்புபடுகின்றனர். ஒரு சாரார் அழைப்பு கொடுப்பவர்கள். மறுசாரார் அதனைப் பெறுபவர்கள். 

இந்தப் பணியை, பாடசாலை என்ற நிறுவனத்தில் வழங்கப்படுகின்ற கல்வி என்ற பணியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். இங்கும் இதே போன்று இரு சாரார் காணப்படுகின்றனர். அவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என்ற பிரிவினர்களாவர். 

கல்விக் கூடத்தில் மாணவர்கள், ஆசிரியர்களால் வழங்கப்படுகின்ற கல்வியை உள்வாங்கிக்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கிறது. இப்பயிற்சியில் உளவியல் தொடர்பான கவனம் நோக்கத்தக்கது.

ஏனெனில் மாணவர்கள் பல்வேறு வகையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் உளநிலை, விவேகம் என்பனவற்றில் வேறுபட்டவர்களாக காணப்படுவார்கள். அதேபோல அவர்களது சமூக நிலை, சூழல் என்பன வேறுபட்டிருக்கும். உடலியல்புகள், நுண்மதி, சமூக நடத்தை மற்றும் மனவெழுச்சி என்பவற்றின் சாதாரண நடத்தையை வெளிப்படுத்துபவர்கள் இருப்பர். அதேபோன்று சிறப்புத் தேவையுடைவர்களும் இருப்பர்.

மேற்படி எல்லாத் தேவைகளையும் இனங்கண்டு ஒழுங்கமைத்து கல்வியைக் கொடுப்பதற்காகவே உளவியல் அறிவு தேவைப்படுகிறது.

இறைவழிகாட்டுதலின் பக்கம் அழைக்கப்படுபவர்கள் இந்த மாணவர்களை விடவும் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியவர்கள். ஏனெனில் மாணவர்கள் உளவியல் ரீதியாக இனங்காணப்பட்டு சிறந்த முறியில் கல்வி வழங்கப்படாது போனால் பாடசாலை பரிட்சையில் தான் தோல்வியடைய நேரிடும். இது இவ்வுலகில் கிடைக்கும் தோல்வி தான். 

மாறாக தீனின் பக்கம் விடும் அழைப்பு விளங்காத நிலையில், புரிந்துகொள்ளப்படாத நிலையில் மனங்களை போய்ச்சேர்ந்தால், அது பொய்ப்பிக்கப்படுவதற்கு காரணமாகி விடும்.

மறுபுறம் தீனை சரியான முறையில் பெறத் தவறியவர்கள் மறுஉலக வாழ்க்கையில் தோல்வியடையும் நிலை ஏற்படும். 

நபி ஸல் அவர்கள் அக்கால மக்களின் உளவியல் ரீதியான மாற்றங்களை நுணுக்கமாகப் புரிந்து வழிகாட்டியுள்ளார்கள் என்பது நமக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தான் அழைக்க போகும் மக்கள் என்ன ஆளுமையை உடையவர்களாக இருக்கின்றனர், அவர்களில் சிறப்புத் தேவையுடையவர்கள் யார், அத்துடன் அவர்களுக்கான ஊக்கம் (Motivation) எது, அவர்களை மதிப்பிட்டு அளப்பதற்குரிய முறைகள் என்ன என்பன போன்றவற்றை படிப்படியாக சிறந்த உளவியலாளராக இருந்து நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

  1. தனிநபர்களின் குணாதிசயத்தை கவனித்து வழி காட்டுவது

நபி ஸல் அவர்களிடம், ஸஹாபாக்கள் தங்களுக்கு உபதேசிக்க வேண்டியபோது நபியவர்கள் கொடுத்த பதில் இதற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.

பல்வேறுபட்ட சஹாபாக்கள் கேட்ட கேள்விகள் ஒன்றாக இருந்தன. ஆனால் நபி அவர்களிடம் இருந்து வந்த பதில்கள்  கவனிக்கத்தக்கது.

ஒரு நபித்தோழர் நபியவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! சுவர்க்கத்தை நெருங்க வைக்கக் கூடியதும், நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடியதுமான செயல்கள் பற்றி உபதேசியுங்கள் எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள் : “நீர் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காது, அவனை வணங்குவீராக. மேலும் தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து வருவீராக அத்துடன் உறவினரையும் பேணி நடப்பீராக.”

இதே விதமாக கேட்ட இன்னொரு தோழருக்கு கொடுத்த பதில் “நீர் அல்லாஹ்வை ஈமான் கொண்டேன் எனக் கூறி அதில் நிலையாக இருப்பீராக.”

மற்றொரு சஹாபிக்கு : “நீர் கோபப்படாதே” என பதிலளித்தார்கள்.

இன்னொரு சஹாபி உபதேசம் வேண்டியபோது : நீர் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை பயந்து கொள்ளும். ஒரு தவறைச் செய்தால் அதனைத் தொடர்ந்து ஒரு நன்மையை செய்யும். அது அந்த தவறை அழித்துவிடும். அத்தோடு மக்களுடன் நல்ல முறையில் உறவு கொள்ளும்.”

  1. கேட்பவரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவது.

நபியவர்களிடம், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் : “அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான அமல் எது?” என வினவிய போது ’தொழுகையை நிறைவேற்றுவது’ என நபியவர்கள் கூறினார்கள். ‘பின்னர் எது’ என வினவினேன். அதற்கு ‘பெற்றோருக்கு பணிவிடை செய்வது’ என்றார்கள். ‘பின்னர் எது’ என்றேன். அப்போது ‘அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் புரிதல்’ என்றார்கள். (நூல்: புகாரி)

இப்னு மூஸா (ரலி) அவர்கள் கூறினார்கள் : “நபியவர்களிடம் ’இஸ்லாத்தில் எது சிறந்தது’ எனக் கேட்டோம். அதற்கு அவர்கள் ‘அடுத்த முஸ்லிமுக்கு கையினாலும் நாவினாலும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது’ என பதிலளித்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து, “இஸ்லாத்தில் சிறந்தது எது?” என வினவினார். அதற்கு நபியவர்கள், “உணவளிப்பதும் நீர் அறிந்த அறியாத அனைவருக்கும் சலாம் செல்வதுமாகும்” என்றார்கள்.

  1. நடத்தை, பண்பாட்டு வேறுபாட்டை கருத்தில் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடன் இருக்கும் தோழர்களின் தவறுகள் விசயத்தில் சற்று கடினமாகவும், அதேவேளை நாகரீகம் தெரியாத அரபிகளிடம் மன்னித்தும், விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொண்டுள்ளார்கள்.

உதாரணமாக ”கிராமத்து அரபி ஒருவர் பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த பொழுது நபியவர்கள் அவரை மன்னித்து விட்டார்கள். அதே நேரம் ஒரு முறை ஒரு நபித் தோழர் மற்றொரு நபித்தோழரைப் பார்த்து ‘ஏ கருப்பியின் மகனே’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நபியவர்கள் கோபத்துடன் இன்னும் உங்களிடம் அறியாமை குடி கொண்டுள்ளது என கடுமையாக வார்த்தைகளில் கண்டித்தார்கள்.

  1. ஆளுமைத் தகுதிகளுக்கு ஏற்ப பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பது.

நபியவர்கள் எல்லோரிடமும் ஒரே விதமான வேலைகளையும் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை.

இதற்கு சிறந்த உதாரணம் நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணித்த ஹிஜ்ரத் பயணத்தின் போது பயண ஏற்பாடுகளை பிரித்துக் கொடுத்ததை குறிப்பிட முடியும்.

தனது நெருங்கிய அபூபக்கர் (ரலி) அவர்களை தனது பயணத் தோழனாகவும், அலி (ரலி) அவர்களை தனக்குப் பதிலாக வீட்டில் தங்குவதற்கும், அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) அவர்களை உணவு கொண்டு வருவதற்கும் நியமித்தார்கள்.

மேலே நாம் கண்ட உளவியல் ரீதியான நபியவர்களின் நடவடிக்கைகளை, நபிமார்களின் இன்றைய வாரிசுகளான உலமாக்கள் மற்றும் இறைவனது வழிகாட்டுதலின் பக்கம் அழைப்புப் பணி செய்யும் மக்கள், இன்றைய காலத்தின் தேவை கருதி, கடமை என்ற அடிப்படையில் தங்களுடையில் பணியில் நடைமுறைப்படுத்துவது அவசியம்.

இறைவா! உன்னுடைய இந்த தீனை மிகவும் பொருத்தமான முறையில் எடுத்து நடந்து, அதனை மிகவும் சரியாக எத்தி வைத்தவர்களாக எங்களை ஆக்குவாயாக! ஆமீன்