




இஸட்.ஏ. அஷ்ரப், ஜாமியா நளீமியா
நெப்போலியன் பொனபார்ட் (Napoleon Bonaparte) 1769 – 1821
வரலாற்றில் திறமைமிக்க இராணுவ வீரனாகவும், இராஜதந்திரியாகவும் இனங்காணப்படும் நெப்போலியன் 1798 இல் எகிப்திற்குச் சென்ற போது இஸ்லாத்தின் மகத்துவம், நேர்மைத் திறன் ஆகியவற்றை வெகுவாக பாராட்டினார். ‘தான் ஒரு முஸ்லிமாக ஆகிவிட வேண்டும்’ என்று எண்ணுமளவுக்கு இஸ்லாம் அவனை வெகுவாக கவர்ந்தது. கிறிஸ்டியன் செர்ஃபில்ஸ் (Christian Cherfils) என்பவர் எழுதிய ‘Bonaparte Et Islam’ என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு பகுதியை கீழே இருக்கிறது.
நெப்போலியன் இப்படிச் சொன்னான் : மூஸா (அலை), ஈஸா(அலை) இருவரும் தத்தமது சமூகத்தாருக்கு போதித்த அல்லாஹ்வின் உள்ளமை, ஏகத்துவம் ஆகியவற்றையே நபி முஹம்மது (ஸல்) அவர்கள் முழு உலகிற்கும் பறைசாற்றினார்கள். சிலை வணக்கத்திலேயே ஊறித்திளைத்த மக்கள் நிறைந்து வாழும் நாடாக அரேபியா மாறிப்போயிருந்தது. ஈஸா (அலை) அவர்களுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை பற்றிய விழிப்புணர்வை அரபு மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தினார்கள். இவர்களுக்கு முன் வாழ்ந்த இப்ராஹீம் (அலை), இஸ்மாயில் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) போன்றோரும் இதே பணியையே செய்தார்கள்.
கிழக்கிலே ஆரியர்களால் (ஆரிய வேதத்தைப் பின்பற்றிய மதத்தை பின்பற்றிய கிறிஸ்தவர்கள்) சமாதானம் குலைக்கப்பட்டது. இவர்கள் எப்படியோ அரபுகளுடனான நட்பை வளர்த்துக் கொண்டாலும், மறுபக்கத்தில் ஈஸா (அலை) அவர்கள் அறிமுகம் செய்த உண்மையான மார்க்கத்திற்கு மாசு கற்பித்ததோடு, பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட திரித்துவத்தை அடியாக கொண்ட, பகுத்தறிவுக்குப் புறம்பான சித்தாந்தத்தை மதத்தின் பெயரால் பரப்ப முனைந்துகொண்டிருந்தனர்.
முஹம்மது (ஸல்) அவர்கள் அரபிகளுக்கு நேர்வழி காட்டினார்கள். அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுக்கு தந்தையோ மகனோ கிடையாது என்பதையும், பல்வேறு கடவுளை வணங்குவது அபத்தமானது என்பதையும் அவர்களுக்குப் போதித்தார்.
கிறிஸ்டியன் செர்ஃபில்ஸ் தனது புத்தகத்தில் மற்றுமொரு இடத்தில் நெப்போலியனின் கூற்றை இவ்வாறு குறிப்பிடுகிறார். “எதிர்காலத்தில் உலகின் புத்திசாலித்தனமான, நாகரிகமான மக்களோடு ஒன்றாக இணைவதற்கும், அல்குர்ஆனிய கொள்கைக்கேற்ப நான் வழிநடத்தக் கூடிய ஒரு அரசை அமைப்பதற்குமான சந்தர்ப்பம் எனக்குக் கிட்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
பேராசிரியர் தாமஸ் கார்லைல்
Prof. (Thomas) Carlyle 1795 – 1881
1795-ம் ஆண்டு பிறந்த தாமஸ் கார்லைல் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தத்துவவாதி, எழுத்தாளர் மற்றும் ஆசிரியர். சிறந்த சமூக பார்வையாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் விளங்கினார்.
அவர் 14 வயதிலேயே பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர தகுதி பெற்றார். அங்கே சட்டம், இலக்கியம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களை ஜெர்மன் மற்றும் கீழைத்தேய மொழிகளையும் கற்றார். தன் வாழ்நாளில் இவர் வழங்கிய பல விரிவுரைகள் மிகவும் புகழ்பெற்றவை.
1837-ல் இவரது சிறந்த படைப்பான பிரெஞ்சு புரட்சி வெளியிடப்பட்டது, அதன் பின்னர் பிரபல எழுத்தாளராக அறியப்பட்டார். 19 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த படைப்புகளைக் கொடுத்த சார்லஸ் டிக்கென்ஸ் மற்றும் ஜான் ரஸ்கின் போன்ற எழுத்தாளர்களுக்கு தூண்டுகோலாக இவரது எழுத்துக்கள் அமைந்திருந்தன.
கீழ்வரும் பந்தி அவரது ஆக்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்.
“முஹம்மது (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னர் அரபிகள் எத்தகைய நிலையில் இருந்தார்கள் என்றால்… அரபிகள் வாழ்ந்த இடங்களில் பெரியதொரு தீ பரவினால், அது எவ்விதத் தடயமுமின்றி அப்படியே தானாக அந்தப் பாலைவன மண்ணிலேயே மறைந்து விடும்.
ஆனால் நபி (ஸல்) அவர்களது வருகைக்குப் பின்னர், உலர்ந்த மண்ணைக் கொண்ட அந்தப் பாலைவனம் வெடிமருந்தை தன்னகத்தே கொண்ட ஒரு பீப்பாய் போல மாறியது. டெல்லியிலிருந்து க்ரனடா (ஸ்பெய்ன்) வரை எங்கும் ஒளி பரவியது. இந்த மகத்தான மனிதர் ஒளி கொடுத்தார். அவரைச் சூழ இருந்தவர்கள் அந்த ஒளி மூலம் நேர்வழி பெற்றனர்.
நான் முஹம்மதை விரும்புகிறேன் அவரின் கருத்துக்களும், கூற்றுக்களும் மிகவும் கம்பீரம் வாய்ந்தது இவர் தன்னைப் பற்றி சிந்திக்காமல் தனது சமூகத்தைப் பற்றியே தினமும் சிந்திப்பார் இவருக்கு பெருமை என்பது கிடையாது எப்போதும் பணிவாகவே இருப்பார் ரோமப் பேரரசுக்கும், பாரசீகப் பேரரசுக்கும் இம்மை, மறுமை சம்பந்தப்பட்ட வாழ்வின் பக்கம் வருமாறு கம்பீரமாய் அழைப்பு விடுத்தார் அவர் நேற்று நடந்தவற்றை சிந்தித்து, இன்றைய செயற்பாடுகள் யாவற்றையும் நாளை வரை பிற்போடாதவர்.”
அவர் கலந்து சிறப்பித்த மாநாடு ஒன்றிலிருந்து : “நீ அல்குர்ஆனை ஆழ்ந்து வாசித்துப் பார்த்தால் அது ஒரு சாதாரண இலக்கிய நூல் அல்ல என்பதை உணர்வாய். அல்குர்ஆன் உடனடியாக அனைத்து உள்ளங்களிலும் ஊடுருவி இடம் பிடிக்க வல்லது. பெரும் சாதனையாகத் திகழும் இந்த அற்புதமான படைப்புடன் ஏனைய இலக்கியப் படைப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவை அனைத்தும் சலிப்பை ஏற்படுத்துவதாகவே தோன்றுகிறன. அல்குர்ஆன் உண்மையான, தலைசிறந்த ஒரு வழிகாட்டியாகத் திகழ்வது ஈன்டு-இங்கு குறிப்பிடத்தக்க அதன் முக்கியமான பண்பாகும். அல்குர்ஆனின் மிக உன்னதமான இப்பண்புதான் அதன் ஏனைய பண்புகளையும் உயர்வு குணங்களையும் உருவாக்குகின்றது.”
அவரது சுற்றுலா ஒன்றின் போதனா நினைவுகளிலிருந்து :
“ஜெர்மனியைச் சேர்ந்த எனது நண்பன் எழுத்தாளர் கோதி(GOETHE)யிடம் இஸ்லாம் பற்றி நான் சேர்த்து வைத்திருந்த சில தகவல்களையும், அது குறித்த எனது தனிப்பட்ட கருத்துகளையும் கூறினேன். எனது உரையாடலை மிகுந்த கவனத்துடன் செவிமடுத்த அவன், அதுதான் இஸ்லாம் என்றால் நாம் அனைவரும் முஸ்லிம்களே என்று பதில் கூறினான்.”
மகாத்மா காந்தி
Mohandas Karamchand Gandhi (1869 – 1948)
காந்தி குஜராத்தின் போர்பந்தர் நகரில் வணிகர் குலத்தில் பிறந்தார். அவரின் தந்தை பெரும் செல்வந்தர். போர்பந்தர், ராஜ்கோட், பிகானேர் சமஸ்தானங்களில் திவானாக பணிபுரிந்தார்.
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்ட காந்தி,. பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார்.
இந்திய நீதிமன்றங்களில் வேலை பார்த்த போது ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் அந்த வேலையையும் தொடர முடியாமல்போனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லாஹ் கம்பெனி மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணமானார்.
இந்தியர்கள் அங்கே கடும் நிபந்தனைகளின் அடிப்படையிலே வேலை செய்வதையும், அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதையும், நசுக்கப்படுவதையும் கண்ட காந்தி, அவர்களது அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டமொன்றை துவங்கத் தீர்மானித்தார்.
அவர் தன்னை இந்திய மக்களுக்காக அர்ப்பணிக்கத் தயாரானார். இந்தியாவின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வேண்டி தென்னாப்பிரிக்கா அரசுக்கு எதிராகப் பல்வேறு துணிகர நடவடிக்கைகளையும் மேற்கொண்ட காரணத்தால், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போதும் அவர் தனது போராட்டத்தை கைவிட முன்வரவில்லை. 1914 ஆம் ஆண்டு வரை ஆபிரிக்காவில் தங்கியிருந்த காந்தி, தனது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக பெரும் இலாபம் தந்த தனது பதவியை துறந்து இந்தியாவுக்குத் திரும்பினார்.
இந்திய விடுதலைக்காக 1906 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் நிறுவிய ‘இந்திய முஸ்லிம்கள் ஒனறியம்’ (Indian Muslims Unity) என்ற அமைப்போடு இணைந்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார். இதற்காக தனதும், தனது தந்தையினதும் அனைத்து சொத்துகளையும் அவர் செலவு செய்தார்.
கி.பி.1858 இல் பஞ்சாப் பகுதியில் பிரித்தானியர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளைப் போன்ற வன்முறையை மீண்டும் அவர்கள் கட்டவிழ்த்து விட தயாராக இருந்ததை அறிந்த காந்தி முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டார்.
சிவில் சேவையில் இருந்து வாபஸ் பெறுமாறு தனது நண்பர்களை பணித்த அவர், அமைதியாக கண்டனம் தெரிவித்ததோடு சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை மேற்கொண்டார். தனது திறந்த மேனியை ஒரு வெள்ளை ஆடையால் போர்த்திக்கொண்டு, தன்வசம் வைத்திருந்த ஆட்டுப்பாலை திருப்தியோடு ஏற்றுக் கொண்டு தனது சத்தியாகிரகப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டார்.
பிரித்தானியர் அவரை எள்ளி நகையாடினர். என்றாலும் தன் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த, தனது நாட்டிற்காக தன் முழு வாழ்வையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த, இந்தியாவுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருந்த தன் ஆரவாரமற்ற போராட்டத்தினால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த மனிதரைப் பார்த்து பிரித்தானியர் அச்சமும் ஆச்சரியமும் அடைவதற்கு வெகுநாட்கள் செல்லவில்லை. அவரை சிறை பிடித்த போதும் அதனால் அவர்கள் எதிர்பார்த்த எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை.
காந்தியின் இடையறா முயற்சியின் விளைவாக இந்தியா சுதந்திரம் அடைந்தது. ‘அருள்பாலிப்பவர்’ என்ற பொருள் தரும் மகாத்மா என்ற பொருள் தரும் “மகாத்மா” என்ற பெயரை இந்தியர்கள் அவருக்குச் சூட்டினார்.
காந்தி அல்குர்ஆனையும் இஸ்லாத்தையும் மிக கவனத்துடன் ஆராய்ந்த போது அவற்றின் விழுமிய போதனைகளைக் கண்டு வியந்துபோனார். இது குறித்து அவரது பார்வை கீழ்வருமாறு : “முஸ்லிம்கள் பெரும் வெற்றி வாகை சூடிய போதும் அதிஉன்னத நிலைகளை அடைந்த நிலையில் அவர்கள் ஒருபோதும் வெறித்தனம் கொண்டவர்களாக நடந்துகொள்ளவில்லை. உலகையும் பல்வேறு படைப்புகளை உருவாக்கிய படைப்பாளனை மரியாதை கலந்த அன்போடு அணுகுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது.
மேற்கு காரிருளில் மூழ்கி இருந்தபோது கிழக்கிலே சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்கிய இஸ்லாம் அமைதியற்றுக் கிடந்த உலகிற்கான நிவாரணத்தையும், ஒளியையும், சாந்தியையும் ஏந்தி வந்தது. இஸ்லாம் ஒரு போலியான மதமல்ல. இந்துக்கள் இஸ்லாத்தை உரிய முறையில் ஆய்வு ஆராய்வார்கள் எனில், அதன் மீது எனக்கு ஏற்பட்ட அதே மரியாதையுணர்வும், புரிந்துணர்வும் அவர்களுக்கும் ஏற்படும்.
இறைத்தூதர் மற்றும் அவரோடு நெருங்கிப் பழகிய அவரது நண்பர்களது வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் பல புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். நான் வாசித்த புத்தகங்கள் அவற்றை நான் தொடர்ந்து வாசிப்பதற்கான பேரார்வத்தை என்னுள் உருவானது. இறுதியாக “இஸ்லாம் துரிதகதியில் பரவுவதற்குக் காரணம் வாள்அல்ல” என்பதையும் இஸ்லாத்தின் எளிமையும் தர்க்க ரீதியான கருத்துக்களும், நபியவர்களின் உயரிய குணங்களும், ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நபியவர்கள் வைத்திருந்த ஆழ்ந்த நம்பிக்கையுமே அதன் துரிதப் பரவலுக்குக் காரணம் என்பதையும் நான் உணர்ந்தேன்.
“இஸ்லாம் துறவற வாழ்க்கையை வரவேற்பதில்லை. அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகு அவசியமில்லை என்பது இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடாகும்.
இஸ்லாம் ஆரம்பம் தொட்டே சமூகநீதியை எடுத்துக் கூறும் மார்க்கமாகும். அல்குர்ஆனை வாசிக்கும் எவரும் (அதாவது அதன் விளக்கவுரைகள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களால் எழுதப்பட்ட நூல்கள் ஆகியவற்றையும் வாசிக்கவேண்டும்) அல்லாஹ்வின் கட்டளைகளை விளங்கி அவனை அடிபணியவே முற்படுவர்.
கிறிஸ்தவத்தில் நிலவிய குறைபாடுகளின் காரணமாக அதில் பல்வேறு மாற்றங்கள், திரிபுகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை இஸ்லாம் அதன் தூய வடிவில் பாதுகாக்கப்பட்டது அதன் சிறப்பம்சங்களுல் ஒன்றாகும்.
கிறிஸ்தவத்தில் ஜனநாயகம் இல்லை. அந்த மதத்தில் ஜனநாயகக் கண்ணோட்டத்தை உருவாக்க வேண்டியமையால் கிறிஸ்தவத்தில் மேலதிகமாகச் சில விடயங்கள் சேர்க்கப்படுகின்ற, தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நிலை தோன்றுகிறது.”

































