




இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக ஆன்லைன் விளையாட்டுக்களும், சூதாட்டங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன, இந்தியா முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறு வயதினை சார்ந்தவர்கள் இந்த விளையாட்டினால் தற்கொலை செய்து கொள்வதை சமீப காலங்களில் பார்த்து வருகிறோம். இந்த தற்கொலைகள் ஆரம்ப நிலை தான்.
ஒரு பெரும் பிரச்சினை இந்த சமூகத்தின் ஆழத்தில் மிக மூர்க்கமாக பரவிக்கொண்டிருக்கிறதன் ஆரம்ப கட்ட வெளிப்பாடாக இந்த தற்கொலைகளை பார்க்கலாம். ஆனால் இதன் உண்மையான தீவிரத்தை, அதன் ஆபத்தை நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை என்று தோன்றுகிறது.
ஐரோப்பிய நாடுகள் இதை எப்படி முறைப்படுத்துவது என்று தீவிரமாக சிந்திக்க தொடங்கிவிட்டார்கள், இதை வெறும் தனிநபரின் பொறுப்பற்ற தன்மை என்று மட்டும் பார்க்க முடியாது, இதை நெறிப்படுத்துவதில் அனைவருக்கும் சமபங்கு இருக்கிறது என்பதை கொஞ்சம் கொஞ்சம் அவர்கள் உணரத்தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் நாம் பப்ஜியை தடை செய்து விட்டு பிரச்சினை அதோடு முடிந்து விட்டது என நம்பிக்கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கள் மிக அதிகமாக தரவிரக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, மிக அதிகமான பயனாளிகளையும் பெற்றிருக்கின்றன, இதில் பெரும்பாலானவர்கள் மாணவர்களும், இளைஞர்களும். இணைய வழி கல்விக்காக ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனி மின்ணணு சாதனங்கள் கொடுத்ததும், வீட்டிற்குள்ளாகவே மாணவர்கள் முடங்கி கிடந்ததும் இந்த விளையாட்டுக்களின் மீதான தொடக்க நிலை ஆர்வத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் தொடர்ச்சியாக இந்த விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கும், அடிமை நிலைக்கு செல்வதற்கும், மன உளைச்சலுக்கு ஆளாவதற்கும் அவை மட்டுமே காரணங்கள் இல்லை.
எப்படி தொடங்குகிறார்கள்?
இணையத்தின் வழியாக எந்த ஒரு விளையாட்டும் ஒரு கேளிக்கைகாகவே முதலில் விளையாடப்படுகிறது, விளையாட்டுக்கள் மட்டுமல்ல, ரம்மி, ட்ரீம் 11 போன்ற சூதாட்டங்களுமே கூட முதலில் ஒரு ஆர்வத்தில் தான் தொடங்கப்படுகிறது, இதை விளையாடும் சிலரிடம் நான் பேசிய போது “ஒரு சாகஸ மனநிலையோடு தான் தொடங்கியதாக சொன்னார்கள். குறிப்பாக இளைஞர்களிடம் இருக்கும் அந்த சாகச மனநிலையும், என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குறுகுறுப்பும் தான் இதை நோக்கி அவர்களை உந்துகின்றன.
அப்போது அவர்களிடம் இதில் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்போ, பணம் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகமோ எதுவும் இருக்காது. தோல்விகளையும், இழப்புகளையும் கூட அவர்கள் மிக சகஜமான மனநிலையோடு கடந்து சென்று விடுவார்கள். ஆனால் இதில் திரும்ப, திரும்ப ஈடுபடுவதற்கு சக நண்பர்களின் அழுத்தமும், தனிமையும் தான் காரணமாக இருக்கின்றன.
“நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடத் தொடங்குனேன் சார், ஒரு கட்டத்தில் விளையாடுவதற்காகவே நேரத்தை ஒதுக்க தொடங்கினேன்” என்று என்னிடம் நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே மற்ற போதை பழக்கத்தை போலவே, தொடக்கத்தில் இந்த ஆன்லைன் விளையாட்டுக்களும், சூதாட்டங்களும் ஒரு கேளிக்கைக்காகவே தொடங்கப்பட்டாலும், போகப் போக இந்த கேளிக்கை மனப்பான்மையும், ஆர்வமும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கி ஒரு கட்டத்தில் விளையாடியே ஆக வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன.
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கும் ஒருவரிடம் “ஏன் குடிக்கிறீர்கள்?” என்று கேட்டால் அவர் என்ன சொல்வார் “விட முடியவில்லை, அது தான் குடிக்கிறேன்” என்று சொல்வார்; அந்த நிலைக்கு தான் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் இதன் பங்கேற்பாளர்களை அழைத்து செல்கின்றன, ஆனால் மற்ற போதைகளை போலில்லாமல் இந்த ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் மிக வேகமாக இந்த நிலையை வந்தடைகின்றனர்; அதற்கு காரணம் இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலான நேரங்களில் மிக இள வயதினராக இருப்பது தான்.
மாணவர்களும், இளைஞர்களும் பெரும்பாலான எண்ணிக்கைகளில் இதில் விளையாடும்போது அவர்கள் மிக சுலபமாக இதற்கு அடிமையாகி விடுகின்றனர் என்கின்றன ஆய்வுகள். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் முழுமையான வளர்ச்சியை இன்னமும் அடைந்திராத பருவத்தில் இப்படிப்பட்ட விளையாட்டுக்களை விளையாடும்போது இயல்பாக இருக்க வேண்டிய பாதுகாப்புணர்வும், குற்றவுணர்ச்சியும் இல்லாத காரணத்தால் அவர்கள் மிக விரைவாக இந்த விளையாட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறார்கள். அதாவது எந்த நேரமும் அவர்களின் முழு கவனமும், ஈடுபாடும், சிந்தனைகளும் இந்த விளையாட்டை நோக்கியே இருக்கின்றன. அதனால் அன்றாட வாழ்வில் எதன் மீதும் ஈடுபாடுகளற்றும், பொறுப்புணர்ச்சியற்றும், கவனமற்றும் இருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கையில் பிரதானமான ஒன்றாக இந்த விளையாட்டுக்கள் ஒரு கட்டத்தில் மாறிப்போகும் போது அவர்களை அவர்களின் சக வயதினரிடம் இருந்தும், குடும்பத்தினரிடம் இருந்தும், சமூகத்தில் இருந்தும் இந்த விளையாட்டுக்கள் துண்டிக்கின்றன. இந்த விளையாட்டு கொடுக்கும் நிச்சயமின்மை, அழுத்தம், அன்றாட வாழ்க்கையில் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டது, சக மனிதர்களிடம் இருந்து முழுமையாக விலகியிருப்பது என அத்தனையும் சேர்ந்து இதில் விளையாடுபவர்களுக்கு ஒரு மன உளைச்சலை கொடுக்க தொடங்குகிறது.
ஒரு கட்டத்தில் இதன் மீது இருக்கும் அதீத ஈடுபாட்டை உணர்ந்து கொண்டாலும் அதிலிருந்து
மீள முடியாமல் தவிப்பதும் அந்த தவிப்பையும், உணர்வையும் புரிந்து கொள்ளாமல்
புறந்தள்ளும் நெருங்கியவர்கள் இன்னும் நம்பிக்கையின்மையை கொடுப்பதாலும், அது
வரை இல்லாத குற்றவுணர்ச்சி திடீரென உடைத்து பெருகுவதாலும் சில நேரங்களில்
தற்கொலைகள் வரை செல்கிறார்கள். “தற்கொலை கோழைத்தனம்” என நாம்
அவர்களுக்கு பாடம் எடுக்கலாம் ஆனால் அவர்களை பொறுத்தவரை அது மட்டுமே இந்த
அடிமை நிலையில் இருந்து மீள்வதற்கான வழியாக அவர்கள் நினைக்கிறார்கள்.
மாணவர்களை எப்படி கண்காணிப்பது?
இணைய வழி விளையாட்டுக்கள் விளையாடுபவர்களில் பெரும்பாலானவர்கள்
மாணவர்களும், இளைஞர்களுமே. ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்
நிலையில், இணையம் வழியாகவே வகுப்புகளை கவனிக்க வேண்டிய நிலைக்கு
அத்தனை மாணவர்களும் வந்திருக்கிறார்கள். ஏதேனும் ஒரு டிஜிட்டல் சாதனம் கொடுக்க
வேண்டிய கட்டாயமும் பெற்றோர்களுக்கு வந்திருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில்
பெரும்பாலான மாணவர்களுக்கு தனிப்பட்ட செல்போன்கள் கிடைத்திருக்கிறது.
பள்ளி இல்லை, வெளியே செல்லக்கூடாது, நண்பர்களை பார்க்கக்கூடாது என்னும் நிலையில்
வீட்டிற்குள்ளே செல்போனுடம் முடங்க நேர்ந்த மாணவர்கள் என்ன செய்வார்கள்? பப்ஜி
போன்ற விளையாட்டுக்களை தரவிறக்கம் செய்யத் தொடங்குவார்கள். அப்படித்தான் இந்த
இணைய வழி விளையாட்டுக்கள் மிக அதிகமாக இந்த ஊரடங்கு காலத்தில் தரவிறக்கம்
செய்யப்பட்டிருக்கின்றன. “ஆன்லைன் வகுப்பு நடக்கும் நேரத்தில் கூட நண்பர்களுடன்
பப்ஜி விளையாட்டை பற்றி பேசிக்கொண்டிருப்பேன்” என்று சமீபத்தில் என்னிடம் ஒரு
மாணவன் சொன்ன போது எனக்கு அது அதிர்ச்சியாக இல்லை. ஏனென்றால் இந்த சூழல்
இதை தான் உருவாக்கும் என சூழலின் போக்கை உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.
“வேற வழி இல்லாம செல்போன் வாங்கி கொடுத்துட்டேன் சார், ஆனால் நியூஸ் எல்லாம்
பார்த்த பயமா இருக்கு, எப்படி சார் பசங்கள இணைய விளையாட்டுக்களிடம் இருந்து பாதுகாப்பது?” என்று நிறைய பெற்றோர்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
முதலில் நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டியது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய
பயன்பாட்டைத்தான். அதாவது மாணவர்களுக்கு டிஜிட்டல் சாதனங்களை தேவை கருதி
கொடுக்கலாம் ஆனால் கொடுக்கும் போது சில கட்டுப்பாடுகளுடன் அவர்களிடம்
கொடுக்க வேண்டும்.
· தனிமையில் பயன்படுத்தக்கூடாது. செல்போனோ அல்லது மடிக்கணிணியோ
எல்லோரும் இருக்கும் அறையில் தான் பயன்படுத்த வேண்டும், தனியறையில்,
யாருமில்லாத நேரங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
· எந்த கடவுச்சொல்லும் வைத்து டிஜிட்டல் சாதனக்களை லாக் செய்யக்கூடாது.
எந்த நேரம் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்க வேண்டும், நண்பர்களுடன்
பேசலாம், அரட்டையடிக்கலாம் ஆனால் அப்படிப்பட்ட உரையாடல்கள் ஒளிவு
மறைவு இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
· ஆன்லைன் விளையாட்டுக்களை பொறுத்த வரை, நிச்சயமாக விளையாடக்கூடாது
மற்றபடி ஆஃப்லைன் விளையாட்டுக்கள் கொஞ்ச நேரம்
விளையாடிக்கொள்ளலாம், இணைய வழியாக நண்பர்களுடன் இணைந்து
விளையாடுவதை எந்த வகையிலும் அனுமதிக்கக்கூடாது.
· முடிந்த வரையில் ஸ்கிரீன் நேரத்தை அளவிடலாம், நிர்ணயிக்கலாம்,
மேற்பார்வையிடலாம். ஒரு நாளில் எவ்வளவு நேரம் டிஜிட்டல் சாதனங்கள்
பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுடன் பேசி முடிவு செய்து கொள்ள
வேண்டும், அந்த நேரத்தை தாண்டி உபயோகப்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்த
வேண்டும்.
· சாப்பிடும்போது, தூங்கச் செல்லும் போது, மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்
போது டிஜிட்டல் சாதனங்களை உபயோகப்படுத்தக்கூடாது மேலும் அந்த
நேரங்களில் இந்த சாதனங்களை கையில் கூட வைத்திருக்கக்கூடாது
· இவைகள் மட்டுமல்லாமல் இந்த டிஜிட்டல் சாதனங்களின் மீது நமது குழந்தைகள்
கொண்டிருக்கும் பிணைப்பை நாம் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்,
இதை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள், எப்படி கட்டுக்குள்
வைத்திருக்கிறார்கள், இதன் பாதகங்களை எந்த அளவிற்கு உணர்ந்திருக்கிறார்கள்
என்பதையெல்லாம் நாம் தொடர்ச்சியாக கண்காணிப்பதன் மூலம் ஆபத்தான
கட்டத்திற்கு அவர்கள் செல்வதற்கு முன்பே கண்டறிந்து நாம் தடுக்கலாம்.
ஆன்லைன் சூதாட்டங்கள்
ஆன்லைன் விளையாட்டுக்களை போலவே ஆன்லைன் சூதாட்டங்களும் சமீப
காலங்களில் பெருகி வருகின்றன. ஆன்லைன் ரம்மி, ட்ரீம் 11 போன்ற விளையாட்டுக்கள்
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளாய் நம்மை துரத்துகின்றன.
தொலைக்காட்சி விளைம்பரங்களில் பெரும்பாலானவை இது போன்ற ஏதேனும்
இணைய சூதாட்டங்களாக தான் இருக்கின்றன. போதை பொருட்களை
விளம்பரப்படுத்தக்கூடாது என்று இங்கு சட்டம் இருக்கிறது. ஆனால் இந்த இணைய
சூதாட்டங்களை இன்னும் நாம் போதையாக கருதவில்லை, உண்மையில் போதையை
விட மோசமான விளைவுகளை இந்த சூதாட்டங்கள் ஏற்படுத்தும் ஆபத்திருக்கிறது.
ஆன்லைன் ரம்மி விளையாடி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, இதில் இருந்து
மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட செய்திகளை எல்லாம் சமீபத்தில் தான்
பார்க்க தொடங்கியிருக்கிறோம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் ஆன்லை
ரம்மி விளையாடி ஏராளமான பணத்தை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை
செய்து கொண்டிருக்கிறார். அவர் தனது கடைசி வாட்சப் செய்தியில் இப்படி
சொல்லியிருக்கிறார் “நான் சரியாத் தூங்காமல் கண்ணெல்லாம் மங்கலாத் தெரியுது.
கணக்கு பார்த்தால் ரூ.30 லட்சத்துக்கு மேல் ஆன்லைன் ரம்மியில் விட்டுள்ளேன்.
தப்புதான், போதை போல விளையாடிட்டேன். சில சமயம் 50 ஆயிரம் ரூபாய் ஜெயித்தால்
பல லட்சத்தை இழந்திருப்பேன். அது எனக்கு புரியலை. விட்ட பணத்தை எடுத்துடலாம்
அப்படின்னு விளையாடினேன். எப்படிதான் இதுக்கு அடிமையானேன்னு தெரியலை.
குழந்தைகளையும், உன்னையும் நேசிச்சேன். இந்த வருசத்தில் வாழ்க்கை இப்படி
ஆகிடுச்சு. என்னால வேலையே செய்ய முடியாத அளவுக்கு மூளை ரம்மியால மங்கிடுச்சு.
குழந்தைகளை என்னை மாதிரி வாழ விடாதே. ஆன்லைனில் நடக்கற விஷயத்தைத்
தடுக்க முயற்சி செய். அது எனக்கு மனத் திருப்தியத் தரும். எனது இறப்புக்கு இதுதான்
முழுக் காரணம்”.
இந்த சூதாட்டத்தின் தீவிரத்தை இந்த வரிகளில் இருந்து புரிந்து
கொள்ளலாம். மக்கள் மீது பொருளாதார நெருக்கடியையும், உளவியல் நெருக்கடியையும்
ஒரே நேரத்தில் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சூதாட்டங்களை நாம் ஒரு
கேளிக்கைக்கான ஒன்றாகத் தான் இன்னமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என போட்ட வழக்கொன்றில் நீதிமன்றம்
இந்த சூதாட்டங்களை தடை செய்ய முடியாது ஏனென்றால் இவை “அறிவை கொண்டு
விளையாடும் விளையாட்டு” (game of skill) என சொல்லிவிட்டது. பொதுவாக
சூதாட்டங்களை நமது சட்டம் இரண்டாக பிரிக்கிறது. ஒன்று, அறிவினால் விளையாடும்
விளையாட்டு (game of skill) மற்றொன்று வாய்ப்பினால் விளையாடும் விளையாட்டு
(game of chance). அறிவை கொண்டு விளையாடும் விளையாட்டுக்களுக்கும் இங்கு
தடை கிடையாது ஆனால் வாய்ப்பினால் விளைவாடும் சூதாட்டங்களுக்கு தடை உண்டு என்கிறது நிதிமன்றம்.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் game of skill? எது game of chance? என்பதற்கான தெளிவான விளக்கங்களோ அல்லது நெறிமுறைகளோ நீதிமன்றத்திடமும் இல்லை, அரசாங்கத்திடமும் இல்லை. அப்படி நெறிமுறைகளை வருவதற்கு முன்பாகவே இந்த சூதாட்டங்கள் சமூகத்தின் ஆழம் வரை ஊடுறுவியிருக்கும். தினசரி லாட்டரி, சீட்டாட்டங்கள் போன்ற சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்கும் சூழலில் இணைய வழியாக மறுவடிமெடுத்து வரும் இந்த சூதாட்டங்களை எப்படி நாம் அனுமதிக்கிறோம்?
நேரடியாக விளைவாடுவதை விட இணைய வழியில் விளையாடுவது இன்னும் சுலபமானது, இன்னும் கட்டுப்பாடுகளற்றது, இணையத்தில் விளையாடும்போது விளையாடும் நேரத்தையோ அல்லது இழக்கும் பணத்தையோ குடும்பத்தை சார்ந்த வேறு யாரும் கண்காணிக்க முடியாது, விளையாடும் தனி நபர் மட்டுமே அறியக்கூடிய வகையில் இருக்கின்றன. அதனால் தான் இதில்
விளையாடுபவர்களை ஆரம்ப நிலையிலேயே நம்மால் தடுக்க முடியவில்லை.
“ஏதோ ஃபோன்ல விளையாடுறார்னு தெரியும் சார், அது இவ்வளவு சீரியஸ் ஆகும்னு எனக்கு
ஆரம்பத்துல தெரியாது, ரெண்டு மாசத்துல கிட்டதட்ட முப்பது லட்சம் விட்டுட்டார் சார்,
அத்தனையும் பொண்ணு கல்யாணத்துக்கு சேத்து வச்சிருந்த பணம்” என்று அந்த மனைவி
சொல்லும் போது அத்தனை விரக்தியான மனநிலையில் இருந்தார். கணவர் வழக்கத்திற்கு
மாறாய் மிக அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை உணர்ந்து கொண்ட மனைவி
முதலில் கேட்டபோது ஏதோ விளையாட்டு என்று சொல்லியிருக்கிறார், ஏதோ
செல்போன் விளையாட்டு என்று தான் மனைவியும் முதலில் இருந்திருக்கிறார் ஆனால்
அது ஒரு இணைய சூதாட்டம் என்பது இத்தனை பணத்தையும் இழக்கும் வரை அவருக்கு
தெரியவே இல்லை.
இணையத்தின் வழியாக விளையாடப்படும் சூதாட்டங்களின் ஆபத்து இது தான்,
முற்றிலுமாக வெளிப்படைத்தன்மையே இல்லாமல் கண்காணிப்பு எதுவுமற்றதாக
இருக்கிறது அதனால் தான் இதில் இத்தனை பேர் மிக சுலபமாக விழுந்திருக்கிறார்கள்.
“அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தற்கொலைகள் தானே நடக்கிறது, இதற்காக
இந்த விளையாட்டுக்களையே தடை செய்ய வேண்டுமா? இதனால் அரசாங்கத்திற்கு
வரும் வருவாய் எவ்வளவு தெரியுமா?” என்று கூட சிலர் கேட்டார்கள். இப்போது நாம்
கேள்விப்படும் தற்கொலைகள் எல்லாம் மிகப்பெரிய பிரச்சினையின் சிறிய உதாரணங்கள்
தான், இந்த பிரச்சினையின் மேற்பரப்பில் நாம் வண்ண சாயங்களை பூசி, வர்த்தக
அடையாளங்களை இதற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஒரு பெரும் நோய்மை இதன் அடியில் வேர்விட்டுக்கொண்டிருக்கிறது, இந்த நோய்மையின் பிடியில் மாணவர்களும், இளைஞர்களும், குடும்பங்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன, இதில் இருந்து இவர்களை பாதுகாப்பது நோக்கமென்றால் இதன் வர்த்தக பலன்களை புறந்தள்ளிவிட்டு இதை எப்படி முறைப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் தற்கொலைகளை தாண்டி ஒரு சமூகமே நோயுற்று நொடித்து போவதை நாம் காண நேரிடும்.
எப்படி முறைப்படுத்தலாம்?
முதலில் இது போன்ற சூதாட்டங்களில் ஒருவர் மூழ்கி அடிமை நிலைக்கு செல்லும் போது
நாம் அந்த தனி நபரை மட்டுமே அதற்கு காரணமாய் காட்டுவதை நிறுத்த வேண்டும்.
ஏனென்றால் ஒரு பெரும் வர்த்தக சந்தை எளியவர்களை நோக்கி வலை விரிக்கும் போது
அதில் சிக்கிக்கொண்டவர்களை மட்டும் குற்றம் சுமத்துவது நியாயமற்றது.
சினிமா நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் பிராண்ட் அம்பாசிடர்களாக எந்த நேரமும்
தொலைகாட்சி முன் தோன்றி இந்த விளையாட்டுகளின் ஆபத்துகளை பற்றி கவலைப்படாமல் இதை விளம்பரப்படுத்தும் போது அவர்களை ஆதர்சனமாக நினைக்கும்
இளைஞர்களுக்கு இதை விளையாடிப் பார்க்க வேண்டும் என எண்ணம் தோன்றுவது
இயல்பு தானே? அதற்கு எப்படி அந்த இளைஞர்களை மட்டும் பொறுப்பாக்க முடியும்?.
அப்படி செய்வது நியாயமற்றது தானே!
உலக மனநல அமைப்புகள் இளைஞர்களிடம் உருவாகி வரும் இந்த புதுவித அடிமை
நிலையை ‘நோய்’ என வரையறை செய்திருக்கிறது. அப்படியென்றால் ஒரு நோயை
உருவாக்கும் நிலையை இப்படி பிரமாண்டமாக விளம்பரம் செய்வதோ
சந்தைப்படுத்துவதோ தவறு தானே!. அதை அரசாங்கம்தான் முதலில் உணர வேண்டும், அதன்
பிறகு தானே இதை முறைப்படுத்த முடியும். அரசாங்கம் இன்னமும் ‘game of skill?,’game
of chance?’ என்ற வரையறையின் படி பெருநிறுவனங்களுக்கு சாதகமாக
முடிவெடுத்துக்கொண்டிருந்தால் எப்படி முறைப்படுத்த முடியும்?.
முதலில் அரசாங்கம் ஒரு தெளிவான வரையறையை கொண்டு வரவேண்டும், ஒரு
விளையாட்டு அடிப்படையில் என்னவாக இருக்கிறது என்பதை விட அது சமூகத்தில்
என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கணித்து விளையாட்டுகளை
முறைப்படுத்த வேண்டும். ஏராளமான இளைஞர்களின் நேரத்தையும், சிந்தனை
திறனையும், மனித வளத்தையும் ஒரு விளையாட்டு விரயம் செய்யுமானால் அது நாட்டின்
வளர்ச்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து அது போன்ற
விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் முறைப்படுத்த
வேண்டும்.
அது போலவே இது போன்ற விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனங்களும் சமூக
பொறுப்புடன் இருப்பதும் அவசியமானது. இணைய உலகில் பல்வேறு செயலிகளை
உருவாக்குவதும் அதை நடைமுறைப்படுத்துவதும் சவாலானது தான். ஆனால் அப்படி
உருவாக்கும் செயலிகளை யாருக்காக உருவாக்குகிறோம், யாரை அதன் பயனாளர்களாக
கருகிறோம் என்பதை வரையறை செய்வதும் முக்கியமானது.
அதே போல அந்த செயலி இணைய உலகில் வந்ததற்கு பிறகும் அதன் தாக்கத்தை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை திறந்த மனதுடன் அணுகி, அதை எப்படி குறைப்பது, அது உருவாக்கும் சீர்கேடுகளை எப்படி சரி செய்வது என்பதை பல்வேறு
சமூக ஆர்வலர்களுடன் உரையாடி முறைப்படுத்திட வேண்டும். இணைய உலகில் வெறும்
பொருளாதார நோக்கங்களுடன் மட்டுமே இயங்க முடியாது, குழந்தைகள் முதல்
அனைத்து தரப்பினரும் உலவும் இடம் என்பதால் சமூக பொறுப்புடனும், மனித
நேயத்துடன் இருக்க வேண்டியது அவசியமானது.
தனி நபர்களும் கூட இதே பாதுகாப்புடம், எச்சரிக்கையுடனும் இந்த விளையாட்டுகளில்
ஈடுபட வேண்டும். இணைய உலகம் என்பது மிக பிரமாண்டமானது அதன்
வாடிக்கையாளராகிய நம்மை பற்றி இங்கு யாருக்கும் எந்த கவலையும் கிடையாது, நமது
மனநிலையை பற்றியோ, நமது பொருளாதார பாதிப்புகளை பற்றியோ அங்கு யாருக்கும்
கவலை கிடையாது, எனவே நாம் தான் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இணைய வழி
விளையாட்டுக்களும், சூதாட்டங்களும் ஒரு கட்டத்தை தாண்டி நம்மை அதற்குள்
இழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது ஏனென்றால் அவை அப்படித்தான்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
“The social dilemma” என்று நெட்பிளிக்ஸில் ஓர் சீரியல் இருக்கிறது. அதில் இது போன்ற
புகழ்பெற்ற நிறுவனங்களின் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் பேசியிருக்கிறார்கள்
அவர்கள் ஒரு விஷயத்தை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள் அனைத்து
நிறுவனங்களுக்கும் இருக்கும் நோக்கம் “எவ்வளவு நேரம் உபயோகிப்பாளர்களை
தங்களுடைய இணைப்பில் நீடித்திருக்க வைப்பது” என்பது மட்டும் தான். அதற்காக
ஏராளமான உளவியல் நிபுணர்களை கொண்டு பல செயலிகளை
வடிவமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களை பற்றி, குழந்தைகளை பற்றி,
இளைஞர்களை பற்றி எந்த கவலையும் இல்லை, அவர்களின் எதிர்காலம் தொடர்பான
எந்த கரிசனங்களும் இல்லை. அவர்களை பொறுத்த வரை அனைவரும் அவர்களின்
வாடிக்கையாளர்கள் தான்.
இணைய உலகில் நம்மை முழுமையாக புரிந்து கொண்டு, நமது உளவியலை தெரிந்து
கொண்டு, நமது பலவீனங்களை மூலப்பொருளாக்கி அவர்கள் தங்களது சந்தையை
விரிவடையச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நாம் தான் இதில் பாதுகாப்பாக
இருக்க வேண்டும். நமது இணைய பயன்பாட்டை நாம் எப்போதும் திறந்த கண்களுடன்
கண்காணிக்க வேண்டும், இணைய விளையாட்டோ அல்லது சூதாட்டமோ நமது
கட்டுபாட்டில் இருக்கிறதா அல்லது நாம் அதன் கட்டுபாட்டிற்கு சென்று விட்டோமோ
என்பதை உணர வேண்டும். ஒருவேளை நாம் நமது கட்டுப்பாட்டை இழந்து
கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தால் உடனடியாக அந்த செயலியை நமது
செல்போனில் இருந்து நீக்கிவிட வேண்டும்.
இணைய உலகில் நம்மை அனைவரும் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள்,
நமது விருப்பங்கள், தேவைகள், எண்ணங்கள், லட்சியங்கள், கனவுகள், பலங்கள், பலவீனங்கள் என அத்தனையும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறது இந்த மிகப்பெரிய வலைப்பின்னலில் இருந்து நாம் நம்மை பாதுகாக்க வேண்டுமென்றால் நம்மை நாம் கண்காணிக்க வேண்டும், எந்த வித மறுப்பும் இல்லாமல், சமாதானமும் இல்லாமல் நமது அடிமை நிலையை அல்லது அதனை நோக்கிய நிலையை நாம் உணர்ந்தால் மட்டுமே நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் இல்லையென்றால் பெரும் சமுத்திரத்தில் தொலையும் சிறு காகிதம் போல நாமும் இந்த இணையத்தில் காணாமல் போய்விடுவோம்.
மரு.சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், sivabalanela@gmail.com

































