



மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்
1920-21ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஒத்துழையாமை இயக்கமும், கிலாபத் இயக்கமும் உச்சக் கட்டத்தில் இருந்த போது அன்றைய சென்னை ராஜ்யத்திற்கு உட்பட்டிருந்த மலபாரின் தென் பகுதியிலிருந்த முஸ்லிம் விவசாயக் கூலிகள் தங்களது எஜமானர்களான இந்து ஜென்மிகளை (நிலச் சுவான்தார்களை) எதிர்த்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவே வரலாற்றில் பெரிதும் பேசப்படும் மாப்பிள்ளை முஸ்லிம்களின் கிளர்ச்சியாகும்.
ஜென்மிகள் (நிலச்சுவான் தார்கள்) இந்துக்களாகவும், அவர்களை எதிர்த்துப் போராடிய விவசாயக் கூலிகள் முஸ்லிம்களாகவும் இருந்த காரணத்தால் இந்தக் கிளர்ச்சிக்கு மதச்சாயம் பூசப்பட்டது.
மாப்பிள்ளை முஸ்லிம்கள் நடத்திய இந்த வீரமிகு போராட்டத்தின் போது அன்றைக்கு சென்னை மாகாணத்திலிருந்த ஆங்கிலேய அரசு, நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக நின்று போராடிய முஸ்லிம்கள் மீது கடும் அடக்குமுறைகளை மேற்கொண்டது. இதனால் சிளர்ச்சியின் இறுதியில் முஸ்லிம் விவசாயக் கூலிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்தக் கிளர்ச்சியின் போது கிட்டத்தட்ட நான்காயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மலபார் முழுவதும் முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்தால் சிவந்தது.
மாப்பிள்ளை முஸ்லிம்களின் இந்த வீரமிகு போராட்டங்கள் குறித்து தமிழில் விரிவான நூல்கள் எதுவும் வெளிவரவில்லை. சில இதழ்களில் சில கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்துள்ளன. இவை கிளர்ச்சியின் முழுப் பரிமாணத்தையும் விளக்கப் போதுமானவைகளாக இல்லை. இந்தக் குறையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் தமிழில் வெளிவந்துள்ள ஒரு நூல் தான் ”மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்” இது ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்ட நூலாகும். இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கான்ராட் உட் என்பார் எழுதியுள்ள The moplah rebellion and its genesis என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே. இதனை தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் மு. இக்பால் அகமது என்பார்.
இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மாணவரான கான்ராட் உட் தனது முனைவர் (Phd) பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருள் மாப்பிள்ளை முஸ்லிம்களின் கிளர்ச்சியாகும். இதற்காக அவர் கேரளாவின் மலபார் பகுதிக்கு வருகை தந்து இந்தக் கிளர்ச்சி சம்பந்தப்பட்ட சான்றாதாரங்களைத் திரட்டியும், பல வரலாற்று அரசியல் அறிஞர்கள், பிரமுகர்களைச் சந்தித்தும் இந்த ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்வின் அடிப்படையில் உருவான நூல்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. நூலாசிரியர் இந்து-முஸ்லிம் அல்லாத இங்கிலாந்து நாட்டு கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த ஒரு ஆய்வாளர் என்பதால் நூலின் நடுநிலைத் தன்மையை சந்தேகிப்பதற்கு இடமில்லை.
1920-21 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தக் கிளர்ச்சி பற்றியும், அதற்கு முன்னர் 1836ஆம் ஆண்டு தொடங்கி மலபார் முஸ்லிம் விவசாயக் கூலிகளுக்கும் இந்து ஜென்மிகளுக்கும் நடைபெற்ற தொடர் மோதல்கள் குறித்தும் இந்நூலில் விரிவாக எழுதியுள்ள ஆசிரியர், இந்து ஜென்மிகளிடமிருந்து குத்தகை நிலங்களைப் பெற்று விவசாயம் செய்து வந்த முஸ்லிம்களின் அவல நிலை குறித்தும், இந்து ஜென்மிகள் அவர்களை நடத்திய மோசமான நிலை குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார். ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூலை முழுமையாகப் படித்தால் இந்தக் கிளர்ச்சியின் ஒட்டு மொத்தப் பரிமாணத்தையும் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் இந்தக் கிளர்ச்சி நடந்து நூறாண்டுகள் முடிவுற்ற நிலையில் அதனை 100வது ஆண்டு நினைவு அடுத்த ஆண்டு அனுஷ்டிக்கப்படவிருக்கும் சூழ்நிலையில் அதன் வரலாற்றை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
கிளர்ச்சிக்கான காரணங்கள் என்ன? நூலாசிரியரின் கருத்துக்களைப் பார்ப்போம்.
• இந்து ஜென்மிகளிடமிருந்து நிலங்களை குத்தகைக்குப் பெற்று விவசாயம் செய்த முஸ்லிம் விவசாயக் கூலிகளுக்கு வாழ்வதற்குச் சொந்த வீடுகள் இல்லை. விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் நிலச்சுவான்தார்களுக்கும் இடைத்தரகர்களுக்கும் குத்தகையைப் பணமாகவோ பொருளாகவோ கொடுத்தது போக மீதியைக் கொண்டே அவர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்ட வேண்டிதிருந்தது. இதனால் அவர்கள் வறுமையிலேயே உழன்றனர்.
• பொதுவாகக் குத்தகை காலம் பனிரெண்டு ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போதிலும் இந்தக் கால அவகாசம் முடியுமுன்னரே நிலச்சுவான்தாரர்கள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி குத்தகையை ரத்துச் செய்து விட்டு மற்றவர்களிடமிருந்து அதிக தொகையைப் பெற்றுக் கொண்டு குத்தகையை அவர்களுக்கு வழங்கினர். இதனை எதிர்த்து நீதி மன்றம் சென்றாலும் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
• நிலங்களை குத்தகைக்கு எடுப்பதில் பெரும் போட்டி நிலவியதால் நிலச்சுவான்தார்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குத்தகைத் தொகையை உயர்த்தி விவசாயக் கூலிகளை பெரும் பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தினர்.
• மலபார் பகுதியை ஆண்ட ஆங்கிலேய அதிகாரிகள் அந்தப் பகுதியிலிருந்த பாழ்நிலங்கள் அனைத்தும் அரசிற்குச் சொந்தமில்லை என அறிவித்தனர். இந்த அறிவிப்பினைப் பயன்படுத்திக் கொண்டு பாழ் நிலங்கள் அனைத்தையும் நிலச் சுவான்தார்களே கைப்பற்றிக் கொண்டனர். இது அவர்களின் ஆதிக்க மனப்பான்மையை மேலும் அதிகரித்தது. பள்ளிவாசல் கட்ட சிறு நிலம் தேவைப்பட்டாலும் முஸ்லிம் விவசாயக் கூலிகள் அவர்களைச் கெஞ்ச வேண்டியதிருந்தது.
இந்தப்பகுதியில் முஸ்லிம்கள் குடியேறுவதற்கும் நிலச்சுவான்தார்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிலாம்பூரின் அபிரிதமான வனப்பகுதிகள் அப்படியே கிடந்தாலும் பரவாயில்லை ஆனால் முஸ்லிம் விவசாயக் கூலிகளுக்கு வீடுகட்டிக் கொள்ள இடம் கொடுக்க மாட்டோம் என்று கூறி விட்டனர். இது முஸ்லிம்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
• முஸ்லிம்கள் தங்களது அவலநிலையை எடுத்துக் கூறி அதிகாரிகளுக்குப் பலமுறை விண்ணப்பங்கள் அனுப்பியும் நிலைமையில் மாற்றமில்லை. ஒன்றிரண்டு நியாயமான அதிகாரிகள் பிரச்னைகளின் தீர்விற்காக சில உத்தரவுகளைப் பிறப்பித்தாலும் நிலச்சுவான்தார்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. நீதிமன்றங்களும் நிலச்சுவான்தார்களுக்குச் சாதகமாகவே இருந்தன. இந்நிலையில் முஸ்லிம்கள் வேறு வழியின்றி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
• இந்தக் கிளர்ச்சி 1.8.1920 அன்று தொடங்கி 25.2.1922 வரை நீடித்தது. கிளர்ச்சியின் போது முஸ்லிம்கள் நிலச்சுவான்தார்களின் வீடுகளையே முற்றுகையிட்டுத் தாக்கினர். அங்கிருந்த குத்தகை நிலப்பத்திரங்களைக் கைப்பற்றி அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினர். இந்தப் பத்திரங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தித்தான் நீதிமன்றங்களிலும், பிற இடங்களிலும் நிலச்சுவான்தார்கள் முஸ்லிம்களை வஞ்சித்தனர். எனவே இவற்றை அழிப்பதில் முஸ்லிம்கள் முனைப்புக் காட்டினர். நீதிமன்றங்களில் நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களையும் தாக்கினர்.
கிளர்ச்சியின் தொடக்கத்தில் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களின் கையே ஓங்கியிருந்தது. ஒரு கட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் மலபாரின் சில பகுதிகளை முழுவதுமாகத் தங்களது கட்டுப்பாடடின் கீழ் கொண்டு “மாப்ளா ராஜ்யத்தை” நிறுவினர். மக்களிடமிருந்து நிலவரி வசூல் செய்தனர். கடவுச் சீட்டுகள் வழங்கினர். நீதிமன்றங்களை நிறுவினர். மக்களுக்கு உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் விநியோகம் செய்யப்பட்டன. மதுபானங்கள் அருந்துவது தடைசெய்யப்பட்டது. வெள்ளிக் கிழமைகளில் வேலை செய்வது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. கிரிமினல் குற்றங்களுக்கு ஷரிஅத் அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்பட்டன. நிலாம்பூரில் குஞ்ஞாஹமது கோயா தங்ஙளும், வெள்ளியஞ்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கோயா தங்ஙளும், திருரங்காடியில் சீதி கோயாவும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஆங்கிலேய அரசு, மாகாணத்தின் பிறபகுதிகளிலிருந்து காவல் துறையினரையும், இராணுவ வீரர்களையும் கொண்டு வந்தது. மேலும் 1922ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மலபார் பிரதேசப்படை (Malabar Territorial Force) என்ற சிறப்புக் காவல்படைப் பிரிவை ஆங்கிலேய நிர்வாகம் உருவாக்கியது. இந்தப் படைப்பிரிவில் முஸ்லிம்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்துக்களும், கிறிஸ்தவர்களுமே சேர்க்கப்பட்டனர். இந்தப்படைப் பிரிவும், காவல்துறையும், இராணுவமும் சேர்ந்து கொண்டு கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கின. கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
கிளர்ச்சியின் போது நடைபெற்ற ரயில்பெட்டி கோரச் சாவு குறித்தும் (Wagon Tragedy) நூலாசிரியர் மிக விரிவாக எழுதியுள்ளார். 10.11.1921 அன்று 70 கிளர்ச்சியாளர்களைக் கைது செய்த ஆங்கிலேயக் காவல் துறையினர் அவர்கள் அனைவரையும் கோயமுத்தூர் செல்லும் சரக்கு ரயில் வண்டி ஒன்றின் பெட்டியில் ஏற்றி காற்றுப் புகா வண்ணம் கதவு ஜன்னல்களையெல்லாம் அடைத்து அனுப்பிவைத்தனர்.
மறுநான் காலை இந்த சரக்கு ரயில் வண்டி போத்தனூர் சந்திப்பைச் சென்றடைந்தது. அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் இந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் அடைக்கப்பட்டிருந்த 70 மாப்பிள்ளை முஸ்லிம்களும் பிணமாகக் கிடந்தனர். கொல்லப்பட்டவர்களில் விவசாயத் தொழிலாளர்கள், உலமாக்கள், சிறுவணிகர்கள் என மாப்பிள்ளை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இருந்தனர். இந்தச் சம்பவம் மாப்பிள்ளைமார்களின் மனோதிடத்தைப் பெரிதும் குலைத்தது.
இந்த வீரமிகு கிளர்ச்சி ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்டாலும், அதன் ஒட்டு மொத்தத் தாக்கம் குறித்து நூலாசிரியர் கான்ராட்உட் எழுதிய கருத்துக்கள் பெரிதும் கவனிக்கத்தக்கன. அவர் கூறுகின்றார்
“ஒட்டு மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால், தெற்கு உட்புற மலபாரின் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சியாகத்தான் 1920-22ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாப்ளா கிளர்ச்சியை வரையறுக்க முடியும். மாப்ளாக்களின் வீரம் செறிந்த போராட்டம் தோல்வியைத் தழுவினாலும் அது கேரளாவின் அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தக் கிளர்ச்சிக்குப் பிறகு தான் குத்தகை விவசாயிகளின் துயர்துடைக்க ஆங்கிலேய அரசு பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1930ஆம் ஆண்டு நிலச்சுவான்தார்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் மலபார் குத்தகை விவசாயச் சட்டத்திற்கு ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்தது. 1921-22க்குப் பிறகு வந்த காலத்தில் தெற்கு மலபாரில் புதிதாகத் தோன்றிய விவசாய இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் அரசியல் இயக்கங்களும் ஏறநாடு மாப்ளாக்கள் தமது துயரங்களுக்குத் தீர்வு காண பல்வேறு புதிய வழிவகைகளைக் காண்பித்தன ”
ஆம்! இன்றைக்கு கேரளாவில் விவசாயச் சங்கங்கள் வலுவாக இருப்பதற்கும், நிலச்சீர்திருத்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அந்த மாநிலம் முன்னணியில் இருப்பதற்கும் மலபார் மாப்பிள்ளை முஸ்லிம்கள் அன்று சிந்திய ரத்தமே காரணமாகும் என்பதை இந்த நூலைப் படிக்கின்ற அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்ட மாப்பிள்ளை முஸ்லிம்களை வன்முறையாளர்களாகவும, மத அடிப்படைவாதிகளாகவும் சித்தரித்து அவர்களது தியாகங்களைக் கொச்சைப்படுத்த முயற்சிக்கும் மத்திய பிஜேபி அரசின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க இந்நூல் பெரிதும் உதவும்.
இந்நூலை சென்னையிலுள்ள அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.
முகவரி: அலைகள் வெளியீட்டகம், 25, தெற்குச்சிவன் கோவில் தெரு. கோடம்பாக்கம், சென்னை- 600024.
தொலை பேசி 044 24815474




































