இஸ்லாம் மனித சமூகத்தின் தூது. மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த மார்க்கம். அதன் அடிப்படை நூல் அல் குர்ஆன் இறை வார்த்தைகளால் ஆனது.
உண்மை இவ்வாறு இருப்பினும் இன்று இந்த மார்க்கம் அறிவுத் தலைமையில் இல்லை. மேற்கத்திய உலக சிந்தனைகளே இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. இஸ்லாமியச் சிந்தனை அதற்குப் பின்னால் செல்வது போன்றே தெரிகிறது.
அரசியலில் ஜனநாயகம்
மனித உரிமைகள் பகுதி
இலக்கியப் பகுதி
பெண்ணின் சமூகப் பங்களிப்பு
உலக அமைதி, சமாதானம், சமூகங்களுக்கு மத்தியிலான சக வாழ்வு… போன்ற பகுதிகளில் இஸ்லாம் முற்போக்கான, நாகரீக சிந்தனைகளை கொண்டதாக இல்லை என்ற குற்றச் சாட்டு சுமத்தப்படுகிறது.
இந்நிலையில் முஸ்லிம்களில் சிலரும் கூட இஸ்லாம் காலாவதியாகி விட்ட மார்க்கம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
வேறு சிலர் இஸ்லாம் தனிப்பட்ட விவகாரங்களோடு சேர்ந்த ஒரு மதமாக இருக்கட்டும். அது சமூக வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு கொள்கையாக இருக்க முடியாது என்ற கருத்தைக் கொள்கின்றனர்.
இப்பிரச்சினையை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதைச் சுருக்கமாக விளக்குவோம். இஸ்லாத்தின் வழிகாட்டலில் சிந்தனை என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது :
1.தூய இறை வழிகாட்டல்
2.இறை வழிகாட்டலும் மனித ஆய்வும் கலந்தது
அல் குர்ஆன் மற்றும் சுன்னாவின் பல வசனங்கள் பல கருத்துக்களுக்கு இடம் தருபவை. நெகிழ்ந்து கொடுக்கக் கூடியவை. சில வசனங்கள் திட்டவட்டமானவை ஒரு கருத்தை மட்டுமே கொடுக்கக் கூடியவை.
அத்தோடு மனித வாழ்க்கையின் மாறிச் செல்லும் பகுதிகளைப் பொறுத்த வரையில் அல் குர்ஆன் அடிப்படை ஒழுக்க விழுமியங்களையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையுமே சொல்லும். அவற்றை நடைமுறையில் பயன்படுத்துவதும், அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக் கொள்வதும் மனித அறிவின் வசம் விடப்பட்டுள்ளது.
இவ்விரு பகுதிகள் சம்மந்தப்பட்ட மனித ஆய்வுச் செயல்பாடே இஜ்திஹாத் என இஸ்லாமிய வழக்கில் அழைக்கப்படுகிறது. இந்த வகையில் இஸ்லாத்தின் காலத்தோடொட்டிய – வரலாற்று இயக்கம் இஜ்திஹாதின் சீரிய இயக்கத்தில் தங்கியுள்ளது.
இந்நிலையில் இஸ்லாத்தின் வரலாற்று ஓட்டத்தில் நிகழ்ந்த மிகப் பெரும் அபாயம் வரலாற்றின் ஆரம்ப காலப்பிரிவிலே இஜ்திஹாதின் இயக்கம் நின்று விட்டதுதான்.
இதன் விளைவாக அல் குர்ஆனும், சுன்னாவும் காட்டிய சமூக வாழ்வோடு சம்மந்தப்பட்ட சட்ட மூலாதாரங்கள் இரண்டாந்தரமானவையாக மதிக்கப்பட்டன. இஸ்லாமியக் கலைகள் என சில குறிப்பிட்ட கலைகள் அதி முக்கியத்துவம் பெற்றன.
இவை அனைத்தின் மிக முக்கிய விளைவாக சமூகவியல் கலைகள் இஸ்லாமிய வாழ்வில் நன்கு வளர்ச்சியடையவில்லை. புதையுண்டு போயின.
இவ்வாறு முஸ்லிம் அறிவு விட்ட வரலாற்றுத் தவறின் விளைவாக இஸ்லாம் நவீன காலத்திற்குப் பொருத்தமற்ற மார்க்கம் போன்று தோற்றம் ஏற்பட்டுள்ளது. பிற்பட்ட? காலப்பிரிவுகளின் சமூக வாழ்வின் ஒழுங்காலும், அந்நிய சமூகங்களின் பாதிப்பாலும் தோன்றிய சில தவறான ஆய்வுத் தீர்வுகள் இஸ்லாத்தின் பெயர் கொண்டு பார்க்கப்பட்டு இஸ்லாம் பின் தங்கிய சமூகங்களின் சிந்தனையைப் பிரதிபலிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகி உள்ளது.
இஸ்லாம் ஆழமாக வளரும் நிலை தடுக்கப்பட்டு வேகமாக படர்ந்து வளர்ந்து சென்றதால் அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் பரவிக் காணப்படும் அரசியல், பொருளாதார சமூக சிந்தனைகளும், விழுமியங்களும் வளராது கருவறையிலேயே நின்று விட்டன என அல்லாமா இக்பால் சொன்னார்.
இந்த சிந்தனைப் பின்தங்களிலிருந்து மீள நவீன காலப்பிரிவின் அறிஞர்கள் ஜமாலுத்தீன் ஆப்கானி முதல் பலர் ஆளுமைகள் அறிவு ரீதியாகப் போராடி வருகிறார்கள்.
இவர்களது தனித்துவம் ஏற்கனவே கூறியது போல் இஸ்லாத்தை ஓர் கோட்பாடாகவும், கொள்கையாகவும் வடித்தெடுத்ததோடு அதனை சமூகமயப்படுத்துவதில் வெற்றி கண்டதிலேயே உள்ளது.
நவீன – சமகால – இஸ்லாமிய சிந்தனை என்பது ஒரு பரந்த – விரிந்த – ஆழ்ந்த அறிவுச் சொத்து. கட்டாயமாக இந்த அறிவுப் பகுதியில் நமது சமூகத்தின் பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டி ஆழமாக ஆய்வு செய்யச் செய்து நமக்கான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதே நமது இப்போதைய வரலாற்றுத் தேவையாகும்.




































