அ.மார்க்ஸ் நேர்காணல்

1. இந்திய முஸ்லிம்களின் குறிப்பாக தமிழக முஸ்லிம்களின் இன்றைய எதார்த்த நிலை குறித்த உங்கள் பார்வை என்ன? 

இந்திய முஸ்லிம்கள் எல்லாத் திசைகளிலும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக உணரும் நிலையில் உள்ளனர். பெரும்பான்மை மதவாதம் இங்கே விசிறி வளர்க்கப்படுகிறது. மத்திய பா.ஜ.க. அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் வெளிப்படையாகப் பெரும்பான்மைவாதத்திற்குப் பலியாகியுள்ளன.

ஒரு புதிய திட்டத்திற்கு தமிழக அரசு கால்கோள் இடுகிறது. ஒரு பார்ப்பனப் பூசாரி யாகம் வளர்த்து வேதம் ஓதுகிறார். எடப்பாடி பழனிச்சாமியிலிருந்து இன்னும் நான்கைந்து அமைச்சர்கள் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு யாகத் தீயை வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இது ஒன்றும் பழனிச்சாமியின் சொந்த வீட்டு நிகழ்ச்சி அல்ல. ஒரு பொது அரசு நிகழ்ச்சி இப்படி ஒரு பெரும்பான்மை மத அடையாளங்களுடன் நிறைவேற்றப்படுவது சிறுபான்மை மக்களுக்கு எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தும்? 

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வாஜ்பேய் ஆட்சியின்போது ஒரு இராணுவ நிகழ்ச்சி இவ்வாறு இந்து மத அடையாளங்களுடன் நடந்தபோது பலரும் அதைக் கண்டித்தனர். ‘ஆட்சியில் இந்துத்துவம்’ என்ற எனது நூலில் அதைக் காணலாம். இன்று ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியையுமே பா.ஜ.க அரசு அப்படித்தான் நடத்துகிறது.

நேற்று ஒரு கிறிஸ்தவ உறவினர், “என்ன மாமா சாந்தோம் சர்ச்சை உடைக்கப் போகிறார்களாமே?” என்கிறார். ஒரு காலத்தில் ஜவஹர்லால் நேரு தன் திருமணப் பத்திரிகையை உருது மொழியில் மட்டும் அச்சிட்டார். அப்போதே அவர் உலகப் புகழ் பெற்றவர். ஒரு பெரிய காஷ்மீரப் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த செல்வந்தர்.

மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டங்கள் சர்வ மத கூட்டுப் பிரார்த்தனைகளாகவே அமைந்தன. இன்று, பள்ளிப் பாட நூல்கள் முதல் அனைத்திலும் இது இந்து நாடு, நீ இந்த நாட்டில் ஒரு இரண்டாந்தரக் குடிமகன் என முஸ்லிம்களுக்குச் சொல்லப்படுகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படும் வழமையான ஒரு இப்தார் விருந்தைக் கூட நிறுத்தி வைத்த அரசின் கீழ் இம்மக்கள் வாழ்கின்றனர். காலையில் விடிந்தவுடன் செய்தித் தாள்களை விரிப்பதற்கே அச்சப்படும் நிலை சிறுபான்மை மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ளது.

இன்றைய தாக்குதல் எப்படியாக இருக்கும் என்கிற அச்சத்துடன்தான் பொழுது விடிகிறது. முஸ்லிம் இளைஞர்கள் ஏதாவது வளைகுடா நாட்டிற்குச் சென்று வேலை செய்யலாம் எனும் மனநிலையில்தான் இருக்கின்றனர். 

இவை அனைத்தும் முஸ்லிம் சமூகத்தை ஒரு பதுங்குக் குழி மனப்பான்மைக்கு  இட்டுச் செல்வதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர், மேலும் இறுக்கமாகத் தம் அடையாளங்களுக்குள் சுருங்குவதாக அவர்கள் ஆகி விடுகின்றனர் என அவர்கள் கூறுகின்றனர். 

முஸ்லிம்கள் ஓரிருவர் அல்லர். 20 கோடி மக்கள். இந்த நாட்டு மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர். அவர்கள் இப்படி அந்நியப்படுவது இந்த நாட்டின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும் என்பதை உணராத ஒரு மூர்க்க அரசின் முன் அவர்கள் ஒரு கையறு நிலையிலேயே உள்ளனர்.

2. என்.ஆர்.சி., சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் நிலை என்னவாகும்?

சரியான திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். தொய்வில்லாமல் போராட்டங்கள் தொடர்கின்றன. நரேந்திரமோடி அரசு இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. உலக நாடுகளும் கடுமையாக இதைக் கண்டிக்கும் நிலையில் மோடி அரசு உலக அளவில் மதிப்பிழந்து போயுள்ளது. ஆளும் மூர்க்கமான மோடி – அமித்ஷா அரசும் இதை எதிர்பார்க்கவில்லை. எனவே அவர்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்குவதற்கான நாள் நெருங்கியும் இன்னும் புதிதாக அவர்கள் உருவாக்கியுள்ள CAA சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விதிகளைக் கூட இன்னும் இயற்றாமல் உள்ளனர்.

இப்படியான ஒரு போராட்டத்தை இந்தியா முழுவதும் நடத்துவது என்பதில் முஸ்லிம்கள் பெரிய அளவில் பல சங்கடங்களை எதிர்கொள்கின்றனர் என்பது உண்மைதான். போதிய அளவு எதிர்க் கட்சிகள் அவர்களுக்கு இந்த அமர்வுப் போராட்டத்தில் ஒத்துழைக்கவில்லை என்பதே உண்மை. ஏதோ மாலை வேளையில் நாலு கட்சிக்காரர்களை அழைத்துக் கொண்டு வந்து போராடும் மக்கள் முன் முழங்கிவிட்டுப் போவதாகவே அவர்களின் பங்களிப்புகள் உள்ளன. அரசு தடை நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாவிட்டாலும் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

உள்ளூர் அளவில் யார் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்களோ அவர்களை அழைத்து காவல்துறை பல்வேறு  வகைகளில் எச்சரிக்கை செய்கிறது. சீக்கிரமாக பேச்சுக்களை முடிக்குமாறும், இரவில் அங்கு தங்கக் கூடாது எனவும் அழுத்தம் கொடுக்கின்றனர். இது முஸ்லிம்கள் மட்டுமே நடத்தும் போராட்டமாக உள்ளது என்கிற பிம்பத்தை இவ்வறு ஏற்படுத்தியுள்ளதை பிற எதிர்க் கட்சிகள் இம்மியும் சிந்திப்பதில்லை. 

இந்த அமர்வுப் போராட்டங்களில் முஸ்லிம்கள் பெரும் பொருட் செலவுக்கும் ஆளாகின்றனர். எனினும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமர்வுப் போராட்டத்தால் பலனேதும் இல்லை என நாம் கருத வேண்டியதில்லை. மோடி அரசும் இதைக் கண்டு திகைத்துத்தான் போயுள்ளது. 

3. போராட்டம் ஆர்ப்பாட்டம் இவற்றைத் தாண்டி முஸ்லிம்கள், சமூக மேம்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும்?

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக நான் முஸ்லிம்களின் பிரச்சினைகளிக் கூர்ந்து கவனித்துக் கொண்டும், பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தாலும் எந்நாளும் அவர்களுக்கு எந்த அறிவுரையும் சொன்னதில்லை. சொல்லத் தகுதியுடையவனாக என்னைக் கருதிக் கொண்டதும் இல்லை. என்னுடைய பணி சில நுணுக்கமான விடயங்களை அவர்களுக்குக் கவனப்படுத்துவதாகவும், அவர்களின் பிரச்சினைகளையும் நியாயங்களையும் பொது வெளியில் பேசுவதாகவுமே இருந்து வந்துள்ளது. அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். விட்டுவிடுங்கள்.

4. இந்திய முஸ்லிம் சமூகம், குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் பின்தங்கிய இடம் எது என்று நினைக்கிறீர்கள்?

தம்மை ஒரு வணிகச் சமூகமாகவே அவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டதன் விளைவாக கல்விக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம், குறிப்பாகப் பெண் கல்விக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் இந்நிலை பெரிய அளவில் மாறி வந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த இருபதாண்டுகளில் இங்கு ஏற்பட்டுள்ள மதவாத அரசியல் இந்த நாட்டில் தங்களுக்கு எதிர்காலம் இல்லையோ என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இத்தனைக்கும் மத்தியில் இன்று முஸ்லிம் பெண்கள் பெரிய அளவில் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் இளைஞர்கள் கூர்மையாகச் சிந்திக்கிறார்கள். பிரச்சினைகளைக் கூர்மையாகப் பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர். எனினும் இந்திய அளவில் ஒரு வலுவான அரசியல் கட்சியாக அவர்கள் உருவாக இயலாமற் போனதை மிகப் பெரிய பலவீனமாகக் கருதுகிறேன். 

எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகள் இன்று இப்படியான நிலையைக் கடக்க பெரு முயற்சி  செய்து வருகின்றன. பாராட்டத்தக்க வகையில் அவர்கள் இன்று இவ்வகையில்  செயல்பட்டு வந்தாலும் இன்னும் கூட அதுவும் ஒரு தென்னிந்தியக் கட்சியாகத்தான் உள்ளது. எனினும் இன்றைய நிலையில் நம்பிக்கையை ஊட்டக்குடிய அமைப்பாக அவர்கள் வளர்ந்து வருகின்றனர். அதனாலேயே மோடி அரசு அவர்களைக் கூர்மையாகக் கவனிக்கிறது. முதல் கட்டமாக பாபுலர் ஃப்ரண்ட் அமைப்பைத் தடை செய்யவும் முனைகிறது. 

ஒரு வலுவான அரசியல் கட்சியாக முஸ்லிம்கள் உருப்பெறாததற்கான பின்புலம் நாட்டுப் பிரிவினை, அதை ஒட்டிய கலவரம் முதலியவற்றில் தொடங்குகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட வட இந்தியப் பகுதிகளில் இன்றளவும் முஸ்லிம்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற இயலவில்லை. அப்படி உருப்பெற முயல்வதை அரசு மிகப் பெரிய எரிச்சலாகப் பார்க்கிறது. ஜார்கண்டில் இன்று பாபுலர் ஃப்ரண்ட் அமைப்பு தடை செய்யப் பட்டுள்ளது. மிக அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கும் மே.வங்கத்தில் முஸ்லிம்கள் அரசியல் சக்தியாகத் திரள இயலவில்லை. 

தென்னிந்தியாவில் முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளாகத் திரண்டுள்ள போதும் அவர்கள் பல்வேறு கட்சிகளாகச் சிதறுண்டுள்ள நிலை அவர்களைப் பலவீனப் படுத்துகிறது. தோழமைக் கட்சிகளாகக் காட்டிக் கொள்வோர் இன்றைய அவர்களின் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை வஞ்சிக்கும் நிலையே இன்றுள்ளது.

ஒரு வலுவான அரசியல் கட்சியாகத் திரளாத நிலை அவர்களை நம்பத் தகாதவர்களை எல்லாம் நம்பும் நிலைக்குப் பல நேரங்களில் தள்ளி விடுகிறது. இதை எங்கும் காணலாம். 

மகாத்மா காந்தி, நேரு ஆகிய மதச்சார்பற்ற அரசியலின் மகத்தான முன்னோடிகளை இந்திய முஸ்லிம்கள் அவர்களுக்கு உரிய மதிப்பு கொடுத்துக் காணவில்லை என்பதே என் கருத்து. இதை அவர்கள் மறு ஆய்வு செய்யவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

5. இளைஞர்களை, பெண்களை அரசியல் மயப்படுத்துவதற்கு என்ன செய்யலாம்?

முன்னைவிட அவர்கள் இன்று அரசியல்மயப் பட்டுள்ளனர். CAA வை எதிர்த்து போது பெரிய அளவில் அவர்கள் அரசியல் பிரக்ஞையை வெளிப்படுத்துகின்றனர். முகநூல் போன்ற தளங்களில், குறிப்பாகக் கேரளத்தைச் சேர்ந்த பெண்கள் கூர்மையான அரசியலை வெளிப்படுத்தினர். பெண் கல்வி முஸ்லிம்கள் மத்தியில் அதிகப்படுத்தப்பட வேண்டும். திருமண உறவுகளை ஒவ்வொரு ஊர் அல்லது மொகல்லாவுக்குள் கட்டுப்படுத்தாமல் விரிந்த அளவில் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது பெண்கள் விழிப்புணர்வு பெறப் பெரிதும் உதவும். 

6. 60 ஆண்டுகள் இல்லாத அச்சத்தையும் நெருக்கடிகளையும் முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

பதுங்குகுழி மனப்பான்மை – அதாவது தம் தனித்துவமான அடையாளங்களைத் தீவிரமாகக் கடைபிடிப்பது மட்டுமே போதுமானது என்றில்லாமல் முஸ்லிம்கள் வெளியில் வந்தாக வேண்டும் எனச் சொல்லப்படுவதை நான் புரிந்து கொள்கிறேன். அவற்றோடு உடன்படுகிறேன். ஆனால் இன்று பெரிய அளவில் கட்டமைக்கப்பட்டுள்ள முஸ்லிம் வெறுப்பை இது மட்டுமே போக்கிவிடாது என்பதும் புரிகிறது. ஒரு நெருக்கடியான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டுள்ளோம் என்பதைப் புரிந்து கொண்டு முஸ்லிம் சமூகம் தனக்குள் ஒற்றுமைகாட்டுவது அவசியம். 

முஸ்லிம்களில் ஒரு சிலர் முஸ்லிம் அடையாளங்களை வலியுறுத்தாமை, ஆர்.எஸ்.எஸ் கருத்தியல் உட்படப் பெரும்பான்மை வாதங்களுடன் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிப் போவது முதலியவற்றைத் தீர்வாகச் சொல்லுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வெறுமனே முஸ்லிம்களின் பாரம்பரியம், கலை, இலக்கியம் ஆகியவற்றைப் பேசி சமகால முஸ்லிம் அரசியலைப் பேசாது இருப்பதைச் சில ‘எலைட்” முஸ்லிம்கள் முன் மொழிகின்றனர். 

அந்த வகையில் அவர்கள் முஸ்லிம் வெறுப்பாளர்களாலும், அமைப்புகளாலும், பத்திரிகைகளாலும் தூக்கிப் பிடிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் அந்தத் தனி நபர்களுக்குத்தான் பலனே ஒழிய முஸ்லிம் சமூகத்திற்கு இழப்புதான். வரலாறு காணாத ஒரு இக்கட்டான சூழலில் நிற்கும் முஸ்லிம்களின் உறுதியாக்கத்தையே இவர்கள் குற்றமாக வரையறுக்கிறார்கள். 

7. நீண்ட காலத் திட்டமாக சமூக முன்னேற்றத்துக்கு மனரீதியாக முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? 

இருக்கும் உரிமைகளே பறிபோகும் நிலை இன்றுள்ளது. ஆக அடிப்படையான உரிமை ஆகிய குடியுரிமையையே அவர்கள் இழக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக முஸ்லிம்கள் தமக்குள் உள்ள கட்சி வேறுபாடுகளை எல்லாம் மீறி ஒன்றிணைந்துள்ளனர். முஸ்லிம்கள் ஓரிருவர் அல்லர். பதினைந்து கோடி மக்கள். உட் பிரிவினைகள், கட்சிகள் ஆகியவற்றைத் தாண்டி இந்தச் சமுதாய ஒற்றுமை காக்கப்பட வேண்டும். மார்க்கப் பற்று என்பது மார்க்கத்திற்குள் ஒடுங்குவதாக இல்லாமல் பல்துறைச் சிந்தனைகள், நவீன அறிவுத்துறைகள் ஆகியவற்றில் ஈடுபாடும், பங்கேற்பும் அவசியம் என்பதை மனரீதியாக ஏற்க வேண்டும். 

இஸ்லாமிய அறிவுச் செல்வங்களோடு உலகளாவிய நவீன சிந்தனைகள், இஸ்லாத்திற்கு முந்திய அறிவுத்துறைகள் எல்லாவற்றிலும் புலமை தேவை என்பதை ஏற்றலும் அவசியம். பிற அறிவுத்துறைகளில் புலமை பெறுதல் என்பதன் பொருள் அவற்றைக் கொண்டாடுவது என்பதல்ல. 

8. இந்திய கல்வி அமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம், என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

அது குறித்து நான் நிறைய எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் உள்ளேன். இன்றைய ஆட்சியாளர்கள் சமூகத்தில் எல்லா மக்களும் படிக்க வேண்டும், ஒரே அளவிலான கல்வி வளர்ச்சி சமூகம் முழுமைக்கும் வேண்டும் எனும் கருத்துகளுக்கு எதிரானவர்கள்.

தொழிற் கல்வி,  பொதுக் கல்வி என அவர்கள் கல்வியைப் பிரித்து பெரும்பான்மை மக்கள் தொழிற் கல்வி அளவு பயின்றால் போதுமானது என நினைக்கிறார்கள்’ அதைச் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். இது மிக மிக ஆபத்தானது. 

கடந்த காலங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் இந்த நாட்டில் பெரிய அளவில் கல்வி வளர்ச்சிக்குக் கால்கோள் இட்டுள்ளன.. இந்த நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் நோக்கில்தான் இன்றைய கல்விக் கொள்கையை மோடி அரசு உருவாக்கியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான கருத்து நிலையையும், இந்தியப் பாரம்பரியத்தின் சாபக் கேடுகளான சாதி, வருணம் ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பதாகவுமே இன்று அவர்கள் வகுத்துள்ள கல்விக் கொள்கை அமைகிறது. இந்தக் கல்வியைப் பெற்று வெளிவரும் மாணவர்கள் கடுமையான பிற மத வெறுப்பைச் சுமந்தவர்களாகவே இருப்பார். 

அப்படியான ஒரு நிலை பா.ஜக அரசியலுக்கு வேண்டுமானால் பலன் தரலாம். ஆனால் அது எந்த வகையிலும் சமுதாய முன்னேற்றத்திற்கோ, மக்களின் மன ஆரோக்கியத்திற்கோ வழிவகுக்காது. இவற்றின் அடியாக உருப்பெற்று வெளிவரும் அடுத்த தலைமுறைகள் மன அளவில் ஊனமுற்றவையாகவே அமையும். பாசிசம் அறிவு வளர்ச்சிக்கு வழிகோலியதாக வரலாறு கிடையாது.

9. கல்வியில் முஸ்லிம்களின் நிலை, அதில் அவர்களின் இலக்கு என்னவாக இருக்க வேண்டும்?

முஸ்லிம் இளைஞர்கள் கூர்மையான அறிவுடையவர்களாகவே வெளிப்படுகின்றனர். “கண்டது கற்பவன் பண்டிதன் ஆவான்” என்றொரு மொழி தமிழில் உண்டு. எதற்குள்ளும் முடங்கிவிடாமல் பலவற்றையும் கற்க வேண்டும். வெறும் தொழிற் கல்விகள் போதவே போதாது. ஒரு வேளை அவை வேலை வாய்ப்புக்கு உதவலாம். ஆனால் கல்வியின் நோக்கம் வெறும் வேலை வாய்ப்பு அல்ல. 

அவர்கள் நாலும் தெரிந்தவர்களாக உருப்பெற வேண்டும். அவசியம் நவீன தத்துவங்களையும் பயில வேண்டும். கலைத்துறை, இலக்கிய நாட்டம், நவீன பொது இலக்கியங்கள் ஆகியவற்றிலும் நமக்குப்  பயிற்சி வேண்டும். கல்வி ஒருவரை முழு மனிதராக்க வேண்டும். வெறும் துறை சார்ந்த வல்லுனராக வெளிப்படுவது போதவே போதாது.

10. பொருளாதார மந்தநிலை, தொழில்கள் முடங்கிய சூழல், முஸ்லிம் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு ஏதேனும் வழிகாட்டுதல் உள்ளதா?

பொருளாதாரம் மேம்பட வேண்டுமானால் மக்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர நம்பிக்கையும் உருவாக வேண்டும். அரசு மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற வேண்டும். மக்களைத் திட்டமிட்டுப் பிளவுறுத்தி நிற்கும் ஒரு கொடூர அரசால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுத்த முடியவே முடியாது. 

இந்த நிலை முஸ்லிம் சமூகத்தை மட்டுமல்ல சகலரையும் பாதிப்பதாகவே உள்ளது. இதிலிருந்து இந்த நாடு மீட்சி அடையும் சாத்தியம் ஏதும் சமீபத்தில் இருப்பதாகத் தோன்றவில்லை. முஸ்லிம்கள் பிற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து இந்நிலையைத் தகர்ப்பதற்காகப் போராடுவதே இன்றைய தேவை.

11. இந்திய நிலப்பரப்பில் குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களின் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் எதை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்?

முதலில் இன்றைய பாசிசத் தாக்குதலிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதே இன்றைய நிலையில் இந்திய மற்றும் தமிழக முஸ்லிம்களின் தலையாய கடமையாகவும் அவசியமாகவும் உள்ளது. எல்லாவற்றிலும் முஸ்லிம்களைத் தரம் பிரித்து இரண்டாம் தரக் குடிமக்களாக்க முனையும் ஒரு பாசிச அரசை எதிர்கொள்வதே இன்றைய முதற்பணி. அதை அப்படியே வைத்துகொண்டு என்ன சமுதாய மேம்பாட்டை நாம் ஏற்படுத்திவிட இயலும்? சமுதாய மேம்பாடு, கல்வி வளர்ச்சி என எல்லாவற்றிற்கும் அடிப்படை சமுதாய அமைதி. ஐயமற்ற பரஸ்பர நம்பிக்கை சமூகத்தில் நிலவுதல் ஆகியவைதான்.

12. பாசிசம் அதிகாரத்தோடு நின்றுவிடாமல் வாழ்க்கை முறையாக மாற்றப்பட்டிருப்பதை எப்படி எதிர்கொள்வது?

இதை நாம் மட்டும் சிந்தித்துப் பயன் இல்லை. கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின் பாசிசம் இன்று உலகளாவிய ஒரு போக்காக வளர்ந்துள்ளது. இது எல்லோருக்குமான ஒரு ஆபத்து. இந்தப் பொது ஆபத்தை ஜனநாயக சக்திகள் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும். ஊழல், குடும்ப வாரிசு அரசியல் ஆகியன பாசிச எதிர்ப்பை மழுங்க அடித்துள்ளது. 

சிறுபான்மை மக்கள் யாரையும் நம்ப இயலாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஒரு ஒட்டுமொத்தமான அற வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹிட்லர், முசோலினி காலப் பாசிசம் இல்லை இது. 

இன்றைய பாசிசத்தின் நோக்கம் அரசியல் அதிகாரம் அல்ல. இவர்கள் பாசிசத்தைப் பாசிசத்திற்காகவே நேசிக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு முக்கியமில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் பெரும்பான்மை வாதத்தை ஏற்பவர்களாகவே இருப்பது என்னும் நிலையை அவர்கள் வெற்றிகரமாக சாதித்து விட்டார்கள், ஆர்.எஸ்.எஸ்சைப் பொருத்த மட்டில் பா.ஜ.கதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில்லை. 

யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் அடிப்படைக் கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் என்கிற நிலையை அவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள். யாரைத்தான் நம்புவது  என்கிற அவலமாக சூழல்தான் இன்று நிலவுகிறது. விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சிகளில் திருமாவளவனை நம்பினால் அவர்களின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமாரை எப்படி நம்புவது? 

இன்று பாஜக அரசின் குடியுரிமைக் கொள்கையை எதிர்த்து முஸ்லிம் மக்கள் தம் உயிரைக் கொடுத்துப் போராடிக் கொண்டுள்ளனர். ரவிக்குமார் எங்காவது இந்தப் பொராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்றாரா? நாடாளுமன்றத்தில் வாய் திறந்தாரா? சரி அவர்தான் பேசவில்லை. திருமாவளவன் ஏன் அதைக் கண்டு கொள்ளவில்லை? 

கம்யூனிஸ்ட் கட்சிகளில் புதிதாகக் கட்சிக்குள் வரும் இளைஞர்களுக்கு பாசிச ஆபத்து குறித்து எள்ளளவும் கவலை இல்லை. இதுதான் இன்றைய நிலை. யாரையும் நம்ப இயலாத சூழல்தான் இன்று உள்ளது. இது குறித்து எல்லோரும் விரிவாகவும், வெளிப்படையாகவும் விவாதிப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். 

ஆனால் இந்தக் கட்சிகளை ஆதரிக்கும் அறிவுஜீவிகள், சமூக ஊடகங்களில் செயல்படுவோர் எல்லாம் இதை ஏற்றுக் கொள்வதில்லை. இருக்கும் நிலையைப் புகழ்வதன் ஊடாக அவர்கள் இந்தக் கட்சிகளின் போலித் தனங்களுக்கும், பெரும்பான்மைவாதத்தை அனுசரிக்கும் போக்கிற்கும் “ஜிஞ்சா” அடிக்கிறார்கள். “படிப்பவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்” என பாரதி சொன்னாரே அதுதான் நினைவுக்கு வருகிறது.

13. முஸ்லிம் சமூகத்திற்கும் மற்ற சமூகங்களுக்கும் இடையேயான உறவு நிலை, அதில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

பெரும்பான்மைச் சமூகங்களில் உள்ள எல்லோரும் முஸ்லிம் வெறுப்பாளர்கள் இல்லை. ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அப்படித்தான் பெரும்பான்மைச் சமூகத்தை ஆக்குவதற்கு படு தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். 

இது எல்லோருக்கும் ஆபத்தானது எனச் சொல்ல இன்று சக்தி வாய்ந்த ஆளுமைகள் இல்லை. 

இதை நாம் வெளிப்படையாகப் பேச வேண்டும். எழுத்தளர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரிடமும் பேச வேண்டும். மதவாதத்திற்கு எதிராக ஏன் நீங்கள் களம் இறங்கவில்லை எனக் கேட்க வேண்டும். அது உடனடியாகப் பலன் தரக் கூடிய எளிய பணி அல்ல. ஆனால் அதைத்தான் நாம் செய்தாக வேண்டி உள்ளது. நீங்கள் மௌனம் காக்கக் கூடாது என்பதை நாம் சொல்ல வேண்டும். 

விமர்சனம் இல்லாமல் இந்தக் கட்சிகளைப் பின் தொடர்வதனால் பயன் ஏதும் இல்லை. நாங்கள் உங்களோடுதான் நிற்கிறோம். ஆனால் நீங்கள் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும் எனக் கேட்போம். 

14. தமிழக, இந்திய இஸ்லாமிய சமூகத்தை வழி நடத்துபவர்களுக்கு இருக்க வேண்டிய ஆளுமைப் பண்புகள் எவை?

முதலில் அவர்கள் முழுநேரமும் இயக்கத்திற்கு அர்ப்பணித்தவர்களாக இருக்க வேண்டும். ஏதேனும் தொழில் செய்து கொண்டு பகுதி நேரமாக அரசியல் செய்யும் வழக்கத்தை முஸ்லிம் தலைவர்கள் விட்டொழிக்க வேண்டும். நிறைய படிக்க வேண்டும். இன்றைய உலகளாவிய போக்குகளைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். பாசிசத்தைச் சரியாக விளங்கிக் கொண்டு செயல்பட வேண்டும். “எல்லாவற்றையும் சந்தேகி” என்றார் கார்ல் மார்க்ஸ். அதில் உண்மையுள்ளது.

  1. தப்லீக் ஜமாத்தோடு கொரோனாவைத் தொடர்புபடுத்தி செய்யப்பட்ட தொடர் வெறுப்பு பிரச்சாரம் என்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது?
  2. கோரோனாவுக்குப் பின்னான உலகம், பொருளாதார இயக்கம் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?
  3. மத்திய அரசு, எந்த உரையாடலும் திருத்தமும் இல்லாமல் புதிய கல்விக் கொள்கை 2020 க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கும் இ.ஐ.ஏ 2020 (Environment Impact Assessment 2020) கொண்டு வரப்பட்டுள்ளது. இவை இரண்டும் எதிர்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?