


கேரளாவின் இடதுசாரி அரசியலை அடிப்படைக் கருவாக வைத்து சி. ஆர். பரமேஸ்வரன் என்பவர் எழுதியது. இயற்கை சட்டம் என்னும் புதினம் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் பொதுவுடமை இயக்கத்தில் பங்குபெற்ற ஒருவர் எழுபதுகளில் நக்சலைட் இயக்கத்தில் செயல்படுகிறார்.
அவரது வாழ்க்கை அனுபவங்களில் ஏற்பட்ட மாற்றங்களை இந்தப் புதினம் குறிப்பிடுகிறது.
காலமாற்றத்தில் தனது இலட்சியங்கள் ஒவ்வொன்றும் தகர்க்கப்படுவதைக் கண்ட ஒருவனின் மனப்போராட்டத்தை இந்தப் புதினம் குறியீடாகக் கொண்டுள்ளது நகர நாகரீகம் சீரழிந்த நிகழ்கால நிலைமைகளை ஒத்துக்கொள்ள முடியாமல் மனநோயாளியாக
கதாநாயகன் மாறுகிறான்.
ஒரு துக்க வெள்ளியன்று கதை ஆரம்பமாகிறது. பழைய தோழர்கள் தலைவர்களாக மாறி இலட்சியங்களை மறந்து எந்த எதிர்ப்புமின்றி இன்றைய உயர்மட்ட சமூகத்தின் வசதிகளை
அனுபவிக்கின்றனர். ஊழல் செய்வது அவர்களுக்குச் சர்வசாதாரணமாகிவிட்டது அதைத் தடுப்பதற்கான தார்மீக உணர்வுகூட இல்லாமலாகிவிட்டது.
கதை முடிவடைகிற காட்சி கதாநாயகன் சிகிச்சை பெறுகிற மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள கிருத்துவின் சிலுவையைப் பார்த்து நூற்றாண்டுகளின் துயரத்தின் ஆன்ம தியாகத்தின் வரலாறு என்றும் தண்டிக்கப்பட்ட இயேசுவைத் தியாகிகள் தன்னுடைய அண்ணனாக, நண்பனாகக் கருதுகிறான் என்றும் முடிவடைகிறது. சிலுவையில் மாண்ட இயேசுவை நினைவூட்டுகிறது. சிலுவையில் அறையப்பட்ட கிருத்துவின் படிமம் போன்று புதினம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளா அரசியல் வரலாற்றில் பொதுவுடைமை இயக்கங்களின் வீழ்ச்சியையும் அந்தச் சமூகத்தில் நுகர்வு கலாச்சாரம் உருவாக்கிய மாற்றங்களையும் இந்தப் புதினம் கூறுகிறது. ஒரு உயர்சாதி குடும்பத்திலிருந்து வந்த நாயகன் தனது வாழ்க்கையின் பொருள் என்ன என்பதை சிந்திக்கிறான். வாழ்க்கையின் மதிப்பீடுகளை ஆராய்கிறான்.
கம்யூன் என்னும் பெயருடன் அறியப்படுகிற கம்யூனிஸ்டுகள் வாழ்கின்ற பகுதிகளில் இந்த நாயகன் வருகிறான். வர்க்க பேதமில்லாத சமுதாயத்திற்கான போராட்டங்கள் தொடர்ந்த
இடத்தில் இன்று நடுத்தர மக்களும் அறிவுஜீவிகளும் நிறைந்த இடமாக இந்த கம்யூன் மாறியுள்ளது. புரட்சியானாலும் ஜனநாயகமானாலும் அது நிறுவனமயமாகும்போது எங்ஙனம் அதிகாரமயமாகும் என்பதை இந்தப் புதினம் நினைவூட்டுகிறது.
விடுதலை முயற்சிகள் நகைப்பிடமாக மாறிவிட்டதாக இந்தப் புதினம் சந்தேகத்தை எழுப்புகிறது.
உயிர்த்தியாகம் தேவையற்றது என்ற கருத்தைச் சொல்லும் புதின ஆசிரியர் உயிர்ப்பலியிடுபவர்கள் மனித உரிமைகளைப் பேச உரிமையற்றவர்கள் என்பதை உணர்த்துகிறார்.
புரட்சிக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் சிந்திய ரத்தமும் உயிர்த் தியாகமும் வெற்றித்தனமானவை என்பதை இந்தப் புதினத்தில் வரும் கதாநாயகனின் அனுபவங்கள் மூலம் விளக்குகிறார். விடுதலைப் போராட்டங்கள் தோல்வியடைந்ததால் தோல்வி மனநிலை அவனை
மனநோயாளியாக மாற்றுகிறது.
அந்த கம்யூன் என்ற பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒரு தியாகியின் உடல் நறுமணத்தைலம் பூசி சரிகைத் துணியில் கட்டி வைத்திருக்கிறார்கள். வெளியே எடுக்கக்கூடாது நினைக்கக்கூடாது
மறந்துவிடுங்கள் என்பது கம்யூனின் உத்தரவு. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் தியாகியின் நினைவுகள் வந்து அவனை ஆக்கிரமிக்கின்றன.
மனித குல ஒருமைப்பாடு பொதுவுடமை தத்துவம் சர்வதேசிய சகோதரத்துவம் இவையெல்லாம் கனவில் நினைக்கப்படுகிறது. மனதில் கட்டாயமாக மறதிகளை உற்பத்தி செய்வதுதான் அதிகாரம்.
அதனால் அதிகாரம் என்றாலே மறதிதான். அதிகாரத்துக்கு எதிரான போராட்டம் நினைவுகளின் போராட்டம் என்று இந்தப் புதினம் நிறுவுகிறது. நினைத்தல் என்பது தான் சுதந்திரத்தின் தற்காப்பின் தத்துவம், நினைப்பில் நினைத்துக்கொண்டே இருப்பீர். மறதிதான் மனிதனின்
வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை வலியுறுத்தவே இந்தப் புதினம்
படைக்கப்பட்டது.
ஒரு சமூகம் தனது நினைவாற்றலை இழக்கும்போது அது தன் ஆரோக்கியத்தை அதாவது தற்காப்பு சக்தியை இழக்கிறது என்னும் கருத்தைப் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.
தனிப்பட்ட அனுபவம் நினைவுகள் மட்டுமல்ல வரலாற்றில் வரும் நிகழ்வுகள் குறித்த நினைவுகள் அவனைத் தாக்குகின்றன. பிரம்ம சமாஜ உறுப்பினராக இருந்தது, காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சி,
அதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கமானது பிறகு நக்சலைட் இயக்கத்தில் இணைந்தது வங்காளத்தின் காடுகளில் ஒளிந்திருந்ததை நினைத்துப் பார்க்கிறான்.
வரலாற்றின் எல்லா முன்னேற்றங்களிலும் கடந்து சென்ற அவன் பெரும்பாலும் வரலாற்றுடன் இணைந்து இருந்தோம் என்று உணர்கிறான். இந்த வரலாற்றின் முழு நினைவாக அவனுக்கு
அளிக்கப்பட்ட பரிசு தான் பழங்குடி இனத்தைச் சார்ந்த கம்யூனில் துணியால் சுற்றி நறுமணத் தைலம் பூசி வைக்கப்பட்டிருந்த தியாகியின் உடலாகும். கதாநாயகன் விலை மதிக்க முடியாத அந்தப் பிணத்துடன் தனது கிராமத்துக்கு வருகிறான்.
தியாக நினைவுகள் புதைக்கப்பட்ட தனது கம்யூன் என்ற பகுதியில் மறதியின் மீது ஒரு ஆயுதத்தைப் போல கொண்டுவந்த பிணத்தை வீசுகிறான். வரலாற்றின் மறக்க முடியாத நினைவுகளோடு வாழும் அந்தப் பிணம் மறைக்கவும் புதைக்கவும் முடியாத ஒன்று. இவ்வாறு நினைத்துப் பார்ப்பதைப் போன்று நாயகன் பயன்படுத்துகிற இன்னொரு தற்காப்புக் கருவி கனவுகள் நினைவூற்றுகளாக அவனிலிருந்து வெளிப்படுகின்றன.
அவனது ஏமாற்றும், ஆசைகள், அன்பின் ஆழம் அச்சம் இவற்றை எல்லாம் அவனது மனம் வேகமாக கனவுகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
மறதி என்னும் அரசியல் அனுபவத்தின் ஓர் உருவகமாக இந்தப் புதினத்தில் வருகின்ற கம்யூன் என்ற பகுதி அதிகாரமாக, சீரழிவாக, மரணமாகப் பரந்து கிடக்கிறது. புதினத்தின் ஒரு பகுதியில் புத்த மதத்தின் சிதைவுகளின் மிச்சம் மீதி நிறைந்த ஒரு நகரம் சித்திரிக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் உயிருடன் இருந்த நகரத்தைப் பாருங்கள் என்று வழிகாட்டி ஓரிடத்தில் கூறுகிறான். அங்கு இருக்கிற சிலைகள் மரணத்திற்கும் இறுதி யாத்திரைகளுக்கும் மட்டும் சாட்சியம் கூறி நிற்கிறது. இறுதி அத்தியாயத்தில் நாயகன் எல்லா திசையிலும்
மரணத்தின் நிழலைக் காண்கிறான். மனிதனின் பாவம் எது? அது மறதிதான் என்னும் பொருளில் மிலன் குந்தேரா கூறுவார். “Mans struggle against power is the struggle memory against for getting” என்ற மிலன் குந்தேராவின் கருத்தை மையமாக வைத்து இந்தப் புதினம் படைக்கப்பட்டுள்ளது.
மறதியின் வேகம் கூடுகின்ற காலம் இது. ஒவ்வொரு துயரத்தையும் ஒவ்வொரு இழிவையும் ஒவ்வொரு தியாகத்தையும் அடுத்த நிமிடத்தில் மறக்கடித்து விட்டுப் புதிய துயரமோ இன்பமோ நிகழ்கிறது.
பிராகை நோக்கி சோவியத் டாங்குகள் உருண்டதை வங்காள தேசத்து படுகொலை நினைவூட்டுகிறது. வங்காளத்தின் சட்டங்கள் சிலியின் அலண்டேயின் கொலையில் அமுங்கிவிடுகின்றன.
அலண்டேயின் கொலையை மறக்க சினாயில் போர். சினாயின் துயரத்தை மறக்க கம்போடியாவில் கொடுமை. ஒவ்வொரு பயங்கரமும் இன்னொன்றை மறக்க வைக்கிறது கடைசியில் யாரும் எதுவும் நினைப்பதில்லை.
இங்ஙனம் மறதிதான் துயரங்கள் தொடருவதற்குக் காரணம் என்று இந்தப் புதினம் காட்டுகிறது. யாரும் எதையும் நினைத்துப் பார்ப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் தான் நவீன அரசுகள் அவற்றின் அநீதி நிறைந்த ஆட்சிகளை நிலைநாட்டுகின்றன என்பதையும் இந்தப் புதினம்
உணர்த்துகிறது.
எண்பதுகளில் எழுதப்பட்ட முதன்மையான புதினங்கள் பெரும்பாலும் மரபான உருவத்தையும் உள்ளடக்கத்தையும் மீறிய தன்மையுடன் அமைந்துள்ளன. புதினத்துக்குக் கதைதான் முக்கியம்
என்பதைத் தவிர்த்து விவாதங்களையும் எண்ண ஓட்டங்களையும் முன்வைத்து புதினங்கள் எழுதப்பட்டன. குறியீடு, படிமம் போன்றவை புதினத்திலும் பயன்படுத்த இயலும் என்பதைக் காட்டியுள்ளார்.
நெருக்கடி நிலை என்ற மிசா காலகட்டத்தை மறைமுகமாக சில புதினங்களில் மையப் பொருளாக வைக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அரசியலை குறிப்பாக கேரளாவில் இடதுசாரி அரசியலை விமர்சன ரீதியான கலைப் படைப்பாக தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சமகால நிலைப்பாட்டை உணர்த்தும் வகையில் இப்புதினம் அமந்துள்ளதை அறியமுடிகிறது.





































