
அண்மையில் நான் வாசித்த நூல்களுள் என்னை மிகவும் பாதித்தது சமூகப் போராளி தீஸ்தா செதல்வாட் எழுதியுள்ள “தீஸ்தா செதல்வாட் நினைவோடை” எனும் நூல் தான். இந் நூலை அவரது தன் வரலாறு என்று சொல்வதை விட ஒரு பத்திரிகையாளராக அவர் குஜராத் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆற்றிய பணிகளை விவரிக்கும் ஒரு தொகுப்பே எனலாம்.
தீஸ்தா செதல்வாட் குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பிறந்தது, படித்தது, வளர்ந்தது ஒரு பத்திரிகையாசிரியையாக உருவாகியது எல்லாமே பம்பாயில் தான். இவரது தாத்தா செதல்வாட் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞராக 1950ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை பணியாற்றியவர். இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் முதல் தலைவரும் இவரே. இவர் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியப் பிரதிநிதியாகவும் செயல்பட்டுள்ளார். தீஸ்தாவின் தந்தையார் பெயர் அடுல்.
தீஸ்தாவின் கணவர் ஜாவீத் ஆனந்த் ஒரு முஸ்லிம். இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். ஜாவீதும் ஒரு பத்திரிகையாளரே. இருவரும் சேர்ந்து 1993ஆம் ஆண்டு கம்யூனலிசம் காம்பாட் (Commualism Combat) என்ற இதழைத் தொடங்கி நடத்தி வந்தனர். வகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான பல கட்டுரைகளை இந்த இதழில் தீஸ்தா எழுதி வந்தார். குஜராத் மாநிலத்தில் இந்துத்துவவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்திய வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டித்து “கம்யூனலிசம் காம்பேட்” இதழில் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழில் “பாசிசத்துடன் நேருக்கு நேர்” என்ற தலைப்பில் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருந்தார். இக்கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்தது.
குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து 28.2.2002, 1.3.2002, 2.3.2002 ஆகிய நாட்களில் முஸ்லிம்களின் மீது ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், விஸ்வஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகளைச் சார்ந்தோர் பெரும் தாக்குதல் நடத்தினர். இக்கலவரங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புடைய முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும், தொழில் நிறுவனங்களும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பள்ளி வாசல்களும், தர்காக்களும் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன. அப்போதைய குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முஸ்லிம்களைப் பாதுகாத்திட எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா, பெஸ்ட் பேக்கரி ஆகிய இடங்களில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இந்தக் கலவரங்கள் நடந்த பகுதிகளுக்கெல்லாம் தீஸ்தா செதல்வாட் நேரடியாகச் சென்று பாதிக்கப்படட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்களுக்குச் சட்ட உதவி கிடைக்கவும் வழிவகை செய்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த நிவாரண முகாம்களுக்குச் சென்று அவரது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை மாவட்ட மற்றும் தல அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குஜராத் அரசாங்கம் எந்த ஒரு நிவாரண முகாமையும் அமைக்கவில்லை என்பதும், முஸ்லிம் அமைப்புகள் தான் அவற்றை அமைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலவர வழக்குகளை குஜராத் நீதி மன்றங்கள் நியாயமான முறையில் நடத்தவில்லை. பல வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளில் குற்றவாளிகளின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் “அடையாளம் தெரியாத 100 நபர்கள், 200 நபர்கள்” என்று குறிப்பிட்டிருந்தனர். வழக்குகளை நடத்த வேண்டிய அரசு வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களாக இருந்தனர். சாட்சிகள் மிரட்டப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் இவ்வழக்குகள் நடைபெற்றால் நீதி கிடைக்காது என்று நிலை இருந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் தீஸ்தா செதல்வாட் தனது கணவர் ஜாவீத் மற்றும் சில நண்பர்கள் துணையுடன் நீதி சமாதானத்திற்கான குடிமக்கள் அமைப்பு (சி.ஜே.பி) என்ற அமைப்பை நிறுவி கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்தார். குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா, பெஸ்ட் பேக்கரி ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்குகளை குஜராத் மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்று சட்ட ரீதியாகப் பேராடினார். அவரது சட்டப் பேராட்டம் காரணமாக இவ்வழக்குகள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டன. அரசு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறுவதைத் தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான சாட்சிகளை தனது பாதுகாப்பில் வைத்திருந்து அவர்களை பம்பாய் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆஜர் படுத்தினார். இந்த மூன்று முக்கிய வழக்குகளிலும் நூற்றுக்கணக்கானோருக்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. இவர்களுள் நரேந்திர மோடி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகயிருந்த டாக்டர் கோட்னானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர இந்தியாவில் இதுவரை நூற்றுக்கணக்கான இந்து-முஸ்லிம் வகுப்புக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. இக்கலவரங்களில் குற்றவாளிகள் மிக அரிதாகவே தண்டிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால் குஜராத் மாநிலக் கலவரங்களில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. இதற்கு முழு முதற் காரணம் திருமதி. தீஸ்தா செதல்வாட்தான் என்பதையறிகின்ற போது நமக்கு மிகுந்த நன்றியுணர்வே ஏற்படுகிறது.
குஜாராத் கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி அவருக்கு “விழிப்புணர்வு இந்தியாவிருது” வழங்கப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி வர்மா பேசியதாவது:
“என்ன செய்திருக்கிறார் இந்த தீஸ்தா செதல்வாட்? நாட்டின் பிரஜை என்ற முறையில் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திட முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நாம் ஒவ்வொருவரும் அவர் மேற்கொண்டுள்ள பாதையில் செல்வோமானால் குஜராத்தில் நடந்தது போன்ற கலவரங்கள் எங்கும் நடக்காது. நாம் மேலும் பல தீஸ்தா செதல்வாட்களைப் பெறுவோம். இந்த லட்சியத்திற்காக அர்ப்பணித்துக் கொள்ளக்கூடிய மேலும் பலரைப் பெற்றிடுவோம். அப்போது தான் மதச் சார்பின்மையின் மாண்பும், இதுவரை நமக்குத் தெரிந்த உலகம் முழுதும் வியப்புடன் பார்க்கின்ற வகையில் நாம் கட்டி காத்து வந்துள்ள வேற்றுமையில் ஒற்றுமையும் நிலைத்திருக்கும்.
மனித உரிமைகளுக்காகப் போராடுகின்ற தீஸ்தா செதல்வாட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. அவர் மீது பல பொய்வழக்குகளை மோடி தலைதைமயிலான மத்திய அரசு போட்டிருக்கிறது. இவ்வழக்குகளில் அவரைக் கைது செய்யவும் முயற்சித்தது. ஆனால் உச்ச நீதி மனறத்தின் தலையீடு காரணமாக அவர் கைது செய்யப்படவில்லை. எனினும் அவர் வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு எனப் பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்து முஸ்லிம்களை அச்சுறுத்துகின்ற இன்றையக் காலகட்டத்தில் தீஸ்தா செதல்வாட் போன்ற நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களும், சமய சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ள பல்லாயிரக் கணக்கான மக்களும் அவர்களுக்குத் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கை இந்த நூலைப் படிக்கும் போது ஏற்படுகிறது.
இந்நூலை ச.வீரமணி – தஞ்சை ரமேஷ் ஆகியோர் தமிழல் மிக நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளனர். இதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. விலை ரூ.200/-
முகவரி: பாரதி பு்த்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600018.
தொலை பேசி 044 2433 2424 மற்றும் 2435 6935



































