முகம்மது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி 1940 களின் மத்தியில் இந்திய துணை கண்டத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு தனி நாடொன்றை உருவாக்குவது தான் தீர்வென்று கருதிய போது, பிரிவினைக்கு காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் தடையாக நிற்கவில்லை. ஜம்யத்தே உலமாயே ஹிந்த் அமைப்பும் தடையாக இருந்தது. ஜம்யத்தே உலமாயே ஹிந்த் 1919 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சி. ஜமாத் உலமாயே ஹிந்த்தின் தலைவர் மௌலானா ஹூசைன் அகமது மதானி முஸ்லிம் லீக்குக்கும் இரு நாடு கொள்கைக்கும் எதிர்ப்பு காட்டியது ஏன் என்ற காரணத்தை விவரிக்கிறார்.
ஆசாத் முஸ்லிம் பார்லிமெண்டரி போர்ட் (Azah Muslim Parliamentary Board) என்ற கட்சியை தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் ஜமாத் உலமாயே ஹிந்த் உருவாக்கியது. இந்த கட்சி காங்கிரசின் கைப்பாவை என்று முஸ்லிம் லீக் முஸ்லிம்கள் விமர்சனம் செய்தார்கள். உ.பி. தியோபந்தில் இருக்கும் தாருல் உலும் அரபி கல்லூரியின் முதல்வராக இருந்த மௌலானா ஹூசைன் அகமது மதானி இந்த கட்சியின் முக்கிய விளம்பரதாரராக இருந்தார். அன்றைய இந்தியாவின் மிக முக்கியமான இஸ்லாமிய அறிஞராக விளங்கினார் அகமது மதானி. புனித மதினா நகரில் 15 வருடங்கள் நபிவழி கற்பித்தல் கலையின் ஆசிரியராக பணியாற்றி இருந்தார். பிரிவினைக்கு எதிராக மிக உறுதியாக நின்றார் மதானி. முஸ்லிம் லீக்குக்கும் அதன் பாகிஸ்தான் கொள்கைக்கும் எதிரான பலமிக்க மார்க்க அறிஞராகவும் இருந்து வந்தார். மௌலானா ஹூசைன் அகமது மதானி இந்துக்களுடன் இணைந்து விட்டார் என்றும் ராவல்பிண்டி நிருபர் விமர்சனம் செய்து இருந்தார்.
ராவல்பிண்டி நிருபருக்கு பதில் எழுதிய மதானி, “நான் இந்துக்களோடு ஐக்கியமாகி விட்டதாக எழுதினீர்கள். இதனால் நீங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளீர்கள். இதனால் நீங்கள் என்ன பாதிப்பு அடைந்தீர்கள்?. முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்த நாள் முதலாக இந்துக்களோடு ஐக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள். நானும் பிறந்த நாள் முதல் அவர்களோடு தான் வாழ்ந்து வருகிறேன். இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்தேன். இரண்டு விதமான மக்கள் ஒரே நாட்டில், ஒரே ஊரில் வாழ்ந்தால் அவர்களுக்கு இடையில் பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்ள இயலும். இன்று வரையில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்துக்களோடு இணங்கி வாழ்கிறார்கள். வீடுகள், கடை வீதிகள், ரயில் நிலையங்கள், டிராம்கள், பேருந்துகள், சரக்குந்துகள, அவற்றின் நிறுத்தங்கள், கல்லூரிகள், தபால் நிலையங்கள், சிறைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், ஆலோசனை மன்றங்கள், ஆட்சி மன்றங்கள், உணவகங்கள் மற்ற எல்லா இடங்களிலும் முஸ்லிம்கள் இந்துக்களுடன் இணக்கமாக இருக்கிறார்கள்.
எந்த இடத்தில் எந்த சமயத்தில் நாம் இந்துக்களை சந்திப்பதில்லை?. அல்லது அவர்களுடன் இணைவது இல்லை என்று நீங்கள் கூறுங்கள். நீங்கள் ஜமீன்தாராக இருந்தால் நீங்கள் இந்துக்களுக்கு வீடுகளை வாடகைக்கு கொடுப்பது இல்லையா? நீங்கள் வியாபாரியாக இருந்தால் இந்துக்களிடம் பொருள் கொடுப்பது வாங்குவது இல்லையா? நீங்கள் ஒரு வழக்கறிஞர், உங்களிடம் ஒரு இந்து கட்சிக்காரராக இல்லையா? நீங்கள் மாவட்டம் அல்லது முனிசிப் வாரியத்தின் உறுப்பினராக இருக்கிறீர்கள், இந்துக்களுடன் தொடர்பு வைக்க மாட்டார்களா? எந்த முஸ்லிம், இந்துகளுடன் உறவாக இல்லை? இந்தியாவின் 10 கோடி முஸ்லிம்களும் இந்துக்களுடன் உறவாக இருந்தது ஒரு குற்றமா? என்ற கேள்விகளை எல்லாம் மதானி அந்த கடிதத்தில் கேட்டிருந்தார். தற்கால அரசியல் வாழ்வின் அடிப்படை அமைப்பு என்பதே ஒரு எல்லைக்குட்பட்ட தேசிய தன்மையுடைய நாடு என்பது தான் உண்மையில் ஒரு நாடு என்று மதானி நம்பினார்.
இந்தியா அவ்வாறான மெய்யான ஒரு தேசம் ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தான் இந்தியா சந்திக்கும் உண்மையான பிரச்சனை. இந்துக்களும் முஸ்லிம்களும் கூட்டிணைந்து தான் இந்த ஏகாதிபத்தியத்தை தூக்கி வீச முடியும். பிரிட்டன் இந்தியாவை முழுமையாக தனக்கு கீழே கொண்டு வந்ததன் விளைவாகத் தான் உலகம் முழுவதையும் தனக்கு கீழே கொண்டுவர முடிந்தது. அதனால், பிரிட்டனிடம் இருந்து இந்தியாவை விடுவித்தால் மட்டும் தான் இஸ்லாமிய உலகின் இதர பகுதிகளையும் விடுவிக்க முடியும். தேசியவாத இயக்கத்தை பலவீனப்படுத்தவே நாட்டை பிரிக்க பிரிட்டிஷ் சதி செய்கிறது. இதன் மூலம் இந்தியத் துணை கண்டத்தின் மீது தனது அதிகாரத்தை நீட்டிக்க விரும்புகிறது என்ற மதானி கருதினர். இதன் காரணமாகவே மதானி பாகிஸ்தானை மறுத்தார்.
பிரிட்டன், உதுமானியப் பேரரசை சிதைத்து அதன் உள்ளடங்கிய பகுதிகளை சிறு சிறு நாடுகளாக பிரித்தது என்பதை தனது கருத்துக்கு வலுவாக சேர்த்தார். மதானி முஸ்லிம் லீக்கையும் பாகிஸ்தானையும் தாக்க இதுதான் காரணம். முகம்மது அலி ஜின்னாவிடம் பாகிஸ்தான் என்பதற்கு என்ன அர்த்தம் என்று கராச்சி பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டபோது, இதற்கு பதில் சொல்ல கூடுதல் நேரம் கேட்டுக்கொண்டார் ஜின்னா என்பதை லக்னோவில் இருந்து வெளியாகும் ஹக்கீகத் செய்தி அறிக்கையில் இருந்து மதானி எடுத்துக்காட்டினார். மேலும் அழுத்தி கேட்டபோது, பாகிஸ்தான் பற்றி தான் எழுதியும் பேசியும் இருப்பதை பார்க்கும் படி ஜின்னா பதிலளித்தார்.
ஒரு முஸ்லிம் எடிட்டர், “பாகிஸ்தான் பற்றி அனைத்தையும் படித்து விட்டேன். பாகிஸ்தான் இந்திய முஸ்லிம்களை தற்கொலையில் கொண்டு தள்ளும் என்று உணர்ந்து கொண்டேன்” என்றார். இந்த பதிலில் அதிர்ச்சி அடைந்தார் ஜின்னா. மேற்கொண்டு அது சம்பந்தமான கேள்விகளை தவிர்த்தார். மதானியை பொறுத்த வரையில், பாகிஸ்தான் என்றொரு நாடு ஜின்னாவின் சிந்தனையில் முழுமையாக இல்லை. அல்லது பாகிஸ்தானை உருவாக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஜின்னா அதுநாள் வரையில் முழுமையாக வரையறுக்கவில்லை.
பாகிஸ்தான் பற்றி ஆழமாக சிந்தித்ததாகவும் பாகிஸ்தானுக்கு நேரும் அழிவுகள் இந்திய முஸ்லிம்களையும் சேர்த்து பாதிக்கும் என்று தான் உணர்ந்ததாகவும் மதானி கூறினார். முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கும் மாகாணங்களில் முஸ்லிம்கள் அவதிப்படக் கூடும் என்று ஜம்மயத்துல் உலமாயே ஹிந்த் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியபோது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாகாணங்களில் கூட பாதிக்கப்படுவார்கள் என்று மதானி கூறினார்.
?லாகூர் தீர்மானத்தில் உள்ளபடி, தற்போதுள்ள மாகாணங்களின் எல்லைகள் மாற்றப்பட வேண்டும். இதன் காரணமாக பாகிஸ்தானில் இருந்து விடுபடும் கிழக்கு பஞ்சாபிலும் மேற்கு வங்கத்திலும் முஸ்லிம்களைக் கொண்டு வந்து சேர்க்கும். எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மை தான் பிரிவினைக்கான முதன்மையான காரணம் என்று ஆன பிறகு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டங்களை பாகிஸ்தானுடன் சேரும் படி அழுத்தம் கொடுக்கவியலாது.?
முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உள்ள அஸ்ஸாமும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கவியலாது. பஞ்சாபின் அம்பாலா மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் காரணத்தால் அதனை பிரிக்க வேண்டும் என்று கவிஞர் முகம்மது இக்பாலும் கூட கூறினார். மாகாணங்களின் எல்லைகளை பிரிப்பதில் காங்கிரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை எடுத்துக் கூறி பாகிஸ்தான் 6 மாகாணங்களை முழுமையாக உள்ளடக்கும் என்று முகம்மது அலி ஜின்னாவும் லியாகத் அலி கானும் கூறி வந்தத்தன் மீது மதானி கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டம் பாகிஸ்தான் மக்களால் தேர்வு செய்யப்படும் அரசியல் சட்ட அவை குழு தான் இயற்றும் என்று ஜின்னா சொன்னதாக கொல்கொத்தாவில் இருந்த வெளிவந்த அசர் இ ஜதித் பத்திரிகை கூறியிருந்ததையும் மதானி மேற்கோள் காட்டினார். ஜின்னா, லண்டனில் வெளிவந்த நியூஸ் கிராணிகல் (News Chronicle) பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில், “பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய முறையிலான டெமாக்கரசியை விரும்புகிறேன்” என்று கூறினார். இதனை லாகூரில் வெளியான ஷாபாஸ் (Shahbaz) பத்திரிகை உருதுவில் மொழி பெயர்த்து வெளியிட்டது. இதனை மதானி மேற்கோள் காட்டி, ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக இருக்கும் கருத்தை மதானி கிண்டல் செய்தார்.
பாகிஸ்தானின் அடிப்படை தொழில்களை அரசுடைமை ஆக்குவதன் மூலம் பாகிஸ்தான் ஒரு சோசலிச நாடாக (socialist State) இருக்கும் என்றும் ஜின்னா தெளிவாக கூறினார். ……பாகிஸ்தான் என்பது இவ்வாறு தான் இருக்கும் என்று பல்வேறு பத்திரிக்கைகளுக்கு ஜின்னா சொன்ன கருத்துகளை எடுத்து விரிவாகவும், தெளிவாகவும் தனது துண்டு பிரசுரங்களில் மதானி வெளியிட்டார். பாகிஸ்தான் என்ற கருத்தை விவாதிக்கும் சிக்கலான களமாக மட்டுமில்லாமல் பாகிஸ்தான் பற்றிய கருத்தையும் தகவலையும் பரந்த அளவில் மக்கள் கவனத்துக்கு கொண்டு போகவும் இதனை பயன்படுத்தினார்.
ஜின்னாவின் பேச்சுகளை குறிப்பாக தெரிவு செய்து மதானி கூறுகிறார். ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் தான் பாகிஸ்தான் அரசு அமையும் என்று ஜின்னா பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதனை மதானி பெரிதாக மேற்கோள் காட்டவில்லை. முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள மாகாணங்களில் இருக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தான் நாட்டை உருவாக்கும் அவசியத்திக்காக தங்களை அற்பணிக்க வேண்டும் என்று ஜின்னா கூறினார் என்பதை மதானி எடுத்து கூறும்போது அது ஒரு சொல் விளையாட்டு என்று கூறுகிறார்.
அனைத்துக்கும் மேல் ஜின்னா நடைமுறை வாழ்க்கையில் முஸ்லிமாக இருக்கவில்ல. இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றியும் அவர் வாழவில்லை. ஜின்னா ஒரு மத நிராகரிப்பாளர். வின்சென்ட் சர்ச்சிலின் கையாள் என்றும் மதானி ஜின்னாவை குற்றம் சாட்டுகின்றார். உலகம் தழுவிய முஸ்லிம் சகோதரத்துவம் பற்றியும் ஜின்னாவுக்கு குறிப்பான கவலை இருக்கவில்லை. பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் பாராளுமன்றங்களில் கிடைக்கும் முஸ்லிம் பெரும்பான்மையை 1916 உடன்படிக்கையில் பலிகொடுத்து விட்டார் ஜின்னா. ஜின்னா நடத்தி வந்த டான் செய்தி நாளிதழில் கூட 3 முஸ்லிம்களுக்கு மட்டுமே வேலை கொடுத்தார். 6 இந்துக்கள், 2 கிறித்தவர்கள், ஒரு யூதர் மற்றும் இஜெட்.ஏ. சுலேரி (Z.A Suleri) என்ற காதியானியும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
தேர்தல் நேரங்களில் முஸ்லிம் வாக்குகள் முஸ்லிம் லீக்குக்கு செல்வதை தடுக்க லீக்கின் இஸ்லாம் விரோத பண்புகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் இருக்கும் நெருக்கம், பாகிஸ்தான் என்ற ஆபத்தான சதி திட்டம், இந்திய முஸ்லிம்களையும் பாதிக்கும் அதன் பின் விளைவுகள், ஆகிய விசயங்களை அழுத்தமாக தொகுத்து ஏராளமான துண்டு பிரசுரங்களாக கொடுப்பார் மதானி.
தொடரும்…..