பல பத்தாண்டுகளாக பட்டதாரிகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளதற்குச் சமமாக வாழ்வின் எல்லா நிலைகளிலும் சிக்கல்களின் எண்ணிக்கையும் பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிந்திய கல்விமுறை, உள்ளத்தை ஓரங்கட்டிவிட்டு அறிவை ஆக்கிரமிப்புச் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்தத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள்தான் இன்று தேசம் முழுக்க எல்லாத் துறைகளிலும் நிறைந்திருக்கிறது. வாழ்வின் அனைத்து அம்சங்களுக்குமான விழுமியங்களை, எல்லா காலத்திற்கும் ஏற்றவாறு முழுமையாகக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்திற்கான கல்விமுறை தனித்துவமானது.
இதை மிகச்சரியாக இனங்கண்டு, இதற்கான தீர்வை முன்மொழிந்தவர், “மெளலானா
சையது அபுல் அஃலா மெளதூதி (ரஹ்) (1903 – 1979)”. இவர் இஸ்லாமிய அறிஞர்,
முறைமையான சிந்தனையாளர் (Systematic Thinker), அரசியல் – ஆன்மீக தத்துவ அறிஞர்,
எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். முன்னோடி அமைப்பான “ஜமா அத்தே இஸ்லாமி”யை நிறுவியவர்.
1930களில் முஸ்லிம் இளைஞர்கள் இறைமறுப்பிலும், ஏகத்துவத்திற்கு எதிராகவும்
திசைமாறிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், இவர் வரையறுத்துக்கூறிய இஸ்லாமிய கல்விமுறை, இன்றளவும் உயிர்ப்போடும் இன்றியமையாத தேவையாகவும் இருக்கிறது.
கல்வித் தத்துவம்:
மெளதூதி (ரஹ்) அவர்கள் இஸ்லாத்தின் மிகமுக்கியமான நான்கு அடிப்படைத் தத்துவங்கள் மீதே தனது கல்வி முறை உள்ளிட்ட அனைத்துச் செயல்களையும் வடிவமைத்தார். அதன் மூலம் “இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது” என்பதை உறுதிப்படுத்தினார்.
அவைகள்,
இறைவன் மட்டுமே இறுதியில் மெய்.
அறிவின் இறுதி ஆதாரம் இறைவனின் வார்த்தைகள்.
ஒவ்வொரு மனிதனும் இறைவனின் பிரதிநிதி.
ஒவ்வொரு பிரதிநிதியும் தனது பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவர்.
கல்வியின் நோக்கம்:
இஸ்லாமிய பண்பாட்டின் முன்மாதிரிகளாக இளம்தலைமுறையினரை பயிற்றுவிப்பதே இஸ்லாமியக் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டுமென மெளதூதி (ரஹ்) வலியுறுத்துகிறார். அதற்கு அவர் சில பண்புகளை வரையறுக்கிறார்.
இறை உணர்வு.
இஸ்லாமியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் செயல்கள்.
ஆளுமைத்திறனிலும் கற்பனைத்திறனிலும் முழுமையான வளர்ச்சி.
கலீஃபாவுக்கான தலைமைப்பண்பு.
நீதிநெறியும் நற்குணமும் நிறைந்த மனிதநேயம்.
இஸ்லாமிய நாகரிகத்தை கற்றுணர்தல்.
நுண்ணறிவும், சிந்தனையாற்றலும், ஆய்ந்தறிதலும், பகுத்தறிதலும் கொண்ட
நடுநிலையான சமூகமாக இருத்தல்.
அறிவின் படிநிலைகள்:
மெளதூதி (ரஹ்)அறிவை மூன்று தரமாக வகைப்படுத்துகின்றார்.
1. கேட்டுணர்தல் – செவி வழிக்கல்வி – அறிவின் முதல் நிலை.
2. கண்டுணர்தல் – விழி வழிக்கல்வி – அறிவின் இடை நிலை.
3. புரிந்துணர்தல் – ஆய்ந்தறியும் கல்வி – அறிவின் உச்ச நிலை. குர்ஆன் அதிகமதிகம் கேட்கும் கேள்வி, ”ஆய்வு செய்யமாட்டீர்களா?” என்பதுதான். எனவே மெளதூதி (ரஹ்) அவர்களும் ஆய்ந்தறியும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்.
பாடத்திட்டம்:
”ஒருவர் திருக்கலிமாவை சொல்லி முஸ்லிமானால் அவரது கடமைகள் ஈமான், தொழுகை, ஜக்காத், நோன்பு, ஹஜ் ஆகியவற்றை நிறைவேற்றுவதோடு நின்றுவிடுவதில்லை. இவை அனைத்திற்கும் மேலான மற்றுமொரு கடமையை அவர் நிறைவேற்றாதவரை அவர்
முழுமையாக முஸ்லிமாவதில்லை. அது அவர் ஒட்டுமொத்த இஸ்லாமிய விழுமியங்களுக்கும்
வாழும் அத்தாட்சியாக விளங்கிட வேண்டும்.” இது தான் ஒரு முஸ்லிமின் அடிப்படைக்
கடமையாக மெளதூதி (ரஹ்) வரையறுக்கின்றார். இதை கல்வியின் மூலம் செயல்படுத்த, முஸ்லிம்களுக்கான பாடத்திட்டத்தை பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்.
1. ஆரம்பக் கல்வி (Elementary education)
ஆறு வயதில் தொடங்கும் ஆரம்பக்கல்வி பதிமூன்று வயது வரை மொத்தம் எட்டு
ஆண்டுகள் தொடர்ந்திட வேண்டும். குர்ஆன் சுன்னாவின் தொடக்கப் பாடங்களோடு
பிரபஞ்சத்தின் படைப்பம்சம், பிரபஞ்சத்தோடு மனிதனுக்குள்ள தொடர்பு, நீதி நெறியான
வாழ்க்கை முறை ஆகிய பாடங்கள் தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். கூடவே ஆங்கிலமும் படிக்க வேண்டும்.
அடுத்ததாக இஸ்லாமியக் கோட்பாடுகள், உலகை வளப்படுத்த உதவும் கல்வியாக கணிதம், புவியியல், வரலாறு, மருத்துவம், வேதியியல், உடல் நலம் சார்ந்த வெவ்வேறு பாடங்கள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.
செயல் வழிக்கல்வியை அதிகம் ஆதரிக்கும் மௌதூதி (ரஹ்) மல்யுத்தம், நீச்சல், நவீன
போர்க்கலை, குதிரையேற்றம், முதலுதவி, வர்த்தகம், எழுத்துப்பயிற்சி ஆகியவற்றையும்
ஆரம்பக்கல்வியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
2. இரண்டாம் நிலை கல்வி (Secondary education)
இரண்டாம் நிலை கல்வியின் கற்றல் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இதில் ஒரு
மாணவர் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது அரபு மொழி. குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய
வரலாறு என அனைத்தும் அரபு மொழியில் இருப்பதால், இஸ்லாத்தின் உண்மையான
சாராம்சத்தை உணர்ந்துக்கொள்ள அரபு மொழியே அவசியமாகிறது.
இதில் குர்ஆன் பயிற்றுவிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் குர்ஆனின் இரண்டு அத்தியாயங்களையாவது சரியான உச்சரிப்போடு பொருள் உணர்ந்து ஓதத்தெரிய வேண்டும். இஸ்லாமிய வரலாற்றின் நிழலில் நீதிநெறிகளும் நற்குணங்களும் சொல்லித்தரப்பட
வேண்டும்.
நபிமார்கள் வரலாற்றையும், இஸ்லாமிய வரலாற்றையும், உள்ளூர் வரலாற்றையும்
கொண்டு இஸ்லாம் எப்படி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்த
வேண்டும். மேலும் தொழாத மாணவர் என்று ஒருவர்கூட இருப்பதற்கு அனுமதியில்லை.
இரண்டாம் நிலை கல்வியில் பொதுஅறிவு, தத்துவம், உரையாடல் இலக்கணம், மருத்துவம்,
மனோதத்துவம், வேதியியல் ஆகியவை கற்றுத்தரப்பட வேண்டும்.
3. உயர் கல்வி (Higher education)
நான்காண்டுகால உயர் கல்விக்கு இரண்டு வகையான பாடத்திட்டத்தை
பரிந்துரைக்கின்றார் மௌதூதி (ரஹ்). ஒன்று பொதுப் பாடத்திட்டம் மற்றொன்று சிறப்பு
பாடத்திட்டம். பொதுப் பாடத்திட்டத்தில், உலகக் கல்வியோடு குர்ஆன், ஹதீஸ் உள்ளிட்ட பாடங்களில் குர் ஆனை உள்ளார்ந்து புரிந்துகொள்ளும் விதமாக மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
சிறப்பு பாடத்திட்டத்தில் உலக கல்வி என்று எதைப் கற்றாலும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கற்பிக்க வேண்டும். தத்துவம், வரலாறு, கருத்தியல், சட்டம், பொருளாதாரம் என கற்கும் எதையும் இஸ்லாத்தோடு பொருத்திக்கொண்டு கற்க வேண்டும்.
4. சிறப்புக்கல்வி (Specialized education)
மௌதூதி (ரஹ்), முஸ்லிம்களை இஸ்லாமிய அறிஞர்களாகவும் துறைசார்ந்த வல்லுநர்களாகவும் உருவாக்குவதுதான் சிறப்புக்கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்கிறார். அதாவது, முஸ்லிம் தத்துவயிளாலர், முஸ்லிம் விஞ்ஞானி, முஸ்லிம் பொருளியலாளர், முஸ்லிம் சட்டமேதை, முஸ்லிம் ஆட்சியாளர், என அறிவுகள் ஒன்றிணைந்த ஆளுமைகளாக முஸ்லிம் இளைஞர்களை உருவாக்கிட வேண்டும்.
5. பெண் கல்வி (Women education)
பெண் கல்வி பற்றிய மௌதூதி (ரஹ்) அவர்களின் கருத்தோட்டங்கள் பின்வருமாறு
அமைந்திருக்கின்றன. “அறியாமையில் மூழ்கியிருக்கும் பெண்களை கொண்ட தேசம் ஒரு அடிகூட
முன்னேறிவிட முடியாது. அதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிசமமாக கல்வி வழங்க
வேண்டும். ஆனால் இவ்விரு இனங்களின் படைப்பியல்புகள் வெவ்வேறாக இருக்கும்போது
கல்வியும் தனித்தனியாக வழங்குவதே சாலச்சிறந்தது. பெண்களுக்கு முதலில் வீட்டையும்,
குடும்பத்தையும், குழந்தைகளையும் பராமரிப்பது பற்றிய கல்வியை வழங்கிட வேண்டும். இதன்
படிநிலைகளை மெல்ல மெல்ல இராணுவப்பயிற்சி வரை உயர்த்திட வேண்டும்.”
சமூகத்திற்கான பெண்களின் பங்களிப்பை கால சூழல் தேவையை பொருத்தே தேர்ந்தெடுக்க வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் பெண் மிகவும் உயர்வான படைப்பினம். ஆகையால் பெண்களின் கண்ணியத்திற்கும், பாதுகாப்பிற்க்கும், உரிமைகளுக்கும் சற்றும் இழுக்கு
வராத வகையில் அவர்களின் சமூக பங்களிப்பு அமைந்திட வேண்டும். அதனால் இருபால்
கல்வியும் (Co-Education), சமூக கூட்டங்களில் ஆண் பெண் ஒன்றாக கலப்பத்தையும் அறவே தவிர்த்திட வேண்டும்.”
ஆசிரியர்கள்:
மௌதூதி (ரஹ்), “ஆளுமைத்திறனும், அர்ப்பணிப்பும், நற்குணமும் கொண்டு, மாணவர்களிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து மிளிரச்செய்து, இறைவழியில் இழுத்துச்செல்லும் காந்தமாக இருப்பவரே ஆசிரியராக இருப்பதற்கு தகுதியுடையவர்” என்கிறார்.
ஆசிரியர்களுக்கு ”இஸ்லாமிய அறிவு, விஞ்ஞானம், நேர்மறையான அணுகுமுறை, அன்பு
நிறைந்த ஆளுமைப்பண்பு” ஆகியவற்றில் பயிற்சியளிப்பது அத்தியாவசியம் என மௌதூதி (ரஹ்)
சுட்டிக்காட்டுகிறார்.
இறைவழியில் போராடும் இளைஞர் கூட்டத்தை வார்த்தெடுத்து, உலகில் நீதியை
நிலைநாட்டும் உன்னதப்பணி நடந்தேறுவதற்கு இஸ்லாமிய ஆளுமைகள் அவசியத்தேவை.
மௌதூதி (ரஹ்) வகுத்துத் தந்த கல்விமுறையை ஆராயும்போது ஒரு முஸ்லிமின் உள்ளத்தை
இறைநினைவினாலும் நபி (ஸல்) வழிமுறையினாலும் பண்படுத்தி, ஒழுக்க நெறிகள் மூலம்
பக்குவப்படுத்தி, அதன் மீது ஆளுமைத்திறனை வளர்த்தெடுத்து, அறிவுத்துறையை உட்புகுத்தி,
உலகை வழிநடத்தும் கலீஃபாவாக உருவாக்குவதையே குறிக்கோளாக கொண்டுள்ளதை
அறிந்திட முடியும்.
மேற்கத்திய கல்விமுறை தோற்றுவித்த நோய்களுக்கெல்லாம் நிவாரணியாக இருக்கும்
ஒரே அருமருந்து இஸ்லாமிய கல்விமுறை. அந்த மருந்தைக் கொண்டே இஸ்லாமிய கலாச்சாரத்தை பாதுகாத்திட முடியும்.
ஆனால் இஸ்லாமிய மதிப்பீடுகளையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை
இஸ்லாமிய இளைஞர்கள் கையிலெடுக்க வேண்டுமென்றால், உலகில் உள்ள அத்துணை
வகையான சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு மக்கள் அனைவரும் அமைதியாக வாழ
வேண்டுமென்றால், அதற்கு, நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது உலகிலுள்ள அத்துணை அறிவுகளையும் இஸ்லாமியப்படுத்திட வேண்டும். இதுவே கல்வியின் உச்சக்கட்ட
இலக்காகும்.
மௌதூதி (ரஹ்) அவர்களின் இந்த இலக்கு, போராட்டங்கள் நிறைந்த நீண்ட நெடும் பயணம்தான். ஆனால் இன்றைய முஸ்லிம் சமூகம் இதை நோக்கி ஒரு அடியாவது எடுத்து வைக்க
வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இன்ஷா அல்லாஹ் அதற்கான பயணத்தை தொடர்வோம்…
V.R.அப்துர்ரஹ்மான்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்