‘புவனமதில் தமிழகமாம் பொன்மாலை நடுவில்
நவமணிகள் பொலிகின்ற நற்பதக்கம் காயல்
தமிழ் பிறந்த தென்பாண்டி நன் பொருணை யோடும்
தமிழ் கூறும் அறம் வளர்த்துத் தகுதிபெறும் காயல்
மறை நெறியிற் கோடாத மாசில்லா வாழ்வின்
இறைநேயர் பலர் வாழந்த இன்பதியிக் காயல்
பேர் மக்கா புகழ் மதினா பேரரான பேர்க்குச்
சீர் மொழியைப் பயிற்றுவித்த சிறு மக்கா காயல்
பேரா. கா. அப்துல் கபூர்
தமிழக முஸ்லிம்களின் பழம் பதியான காயல்பட்டினம் வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஒரு நகரமாகும். எண்ணற்ற இறை நேசச் செல்வர்களையும். புலவர்களையும், மார்க்கஅறிஞர்களையும், பரவலர்களையும், தொழிலதிபர்களையும், கல்வியாளர்களையும் தந்த இந்த நகரம், இன்றளவும் தனது பாரம்பர்ய பெருமைகளையும், மரபுகளையும் பேணிப் பாதுகாத்து வருகிறது.
இவ்வூரைச் சார்ந்தவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றனர். இத்தகைய சீர்மிகு பதியில் பிறந்து பொதுச் சேவையில் தன்னை முற்றாக ஈடுபடுத்திக் கொண்ட பெரியாரின் தொண்டர் என அழைக்கப்பட்ட மர்ஹும் எஸ்.எம். ஜக்கரிய்யா சாகிப் அவர்களைப் பற்றி இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
இளமைக் காலம்:
எஸ்.எம். ஜக்கரிய்யா, 8.11.1912 அன்று காயல்பட்டினத்தில் சாகுல் ஹமீது சாகிப் – ஆயிஷா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். சாகுல் ஹமீது சாகிப் ஒரு ஆலிம். அன்றைய காலகட்டத்தில் சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவராக விளங்கியவர். ஜக்கரிய்யா தனது தொடக்கக் கல்வியை காயல்பட்டினத்திலேயே கற்றுக் தேறினார். இளமைப் பருவத்திலேயே தாயும், தந்தையும் அடுத்தடுத்து மரணமுற்றதால், தனது 13வது வயதில் 1925ம் ஆண்டு சென்னை சென்று தனது தாய்வழி மாமனார் அகமது சாலிஹ் சாகிபின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
பள்ளிப் படிப்பை தொடராது மாமனார் நடத்தி வந்த மாணிக்க வியாபாரத்தில் அவருக்குத் துணையாக இருந்தார். சில காலம் இரும்பு வியாபராமும் செய்து வந்தார். இளம் வயதிலேயே பொதுச் சேவைகளில் ஆர்வம் ஏற்பட்டு அவற்றில் ஈடுபட்டு வந்தார். சென்னையில் வசித்து வந்த காயல்பட்டினத்தைச் சார்ந்த நண்பர்களுடன் இணைந்து ‘தமிழ் முஸ்லிம் சங்கத்தை’ நிறுவினார்.
அப்போது நாட்டில் சுதந்திரப் போராட்டம் உச்சக் கட்டத்தில் இருந்தது. இப்போராட்டங்கள் அவரை ஈர்த்தன. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அக்கட்சி நடத்திய இயக்கங்களில் பங்கு கொண்டார். 1927ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் டாக்டர் அன்ஸாரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய மாநாட்டில் கலந்து கொண்டார். எனினும், அவரால் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பணியாற்ற இயலவில்லை.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் உயர்சாதி ஆதரவுப் போக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும். அரசு வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற பெரியார் ஈவேராவின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்ததும் அவருக்கு அக்கட்சியின் பால் வெறுப்பை ஏற்படுத்தியது. பெரியார் ஈவேராவின் கொள்கைளிலும் கோட்பாடுகளிலும் அவருக்குப் படிப்படியாக ஈடுபாடு ஏற்படலாயிற்று. முஸ்லிம்களின் குறைந்தபட்சக் கோரிக்கைகளைக் காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்ததால், அலி சகோதரர்கள், ஜின்னா உள்ளிட்ட அக்கட்சியிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் அதிருப்தியடைந்தனர். 1929 ஆண்டு மௌலான முகம்மது அலி சௌகர் காங்கிரஸிலிருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து பல முஸ்லிம் தலைவர்கள் அக் கட்சியிலிருந்த விலகி அகில இந்திய முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
இந்நிலையில், 1931ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் வீர உரையாற்றிய மௌலான முகம்மது அலி சௌஹர் அம்மாநாடு முடிந்து சில நாட்களுக்குப் பின்னர் உடல் நலம் குன்றி மரணமுற்றார். இந்தியாவிலிருந்த பல்வேறு அரசியல் இயக்கங்களும், பொது நல அமைப்புகளும் அவரது மறைவிற்கு அனுதாபம் தெரிவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றின.
ஆனால் எந்தக் கட்சியில் இணைந்து அவர் சுதந்திரப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டாரோ அந்தக் காங்கிரஸ் கட்சி அவரது மரணத்திற்கு சம்பிரதாயமான அனுதாபம் கூடத் தெரிவிக்கவில்லை. இது பல முஸ்லிம் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இளைஞரான ஜக்கரிய்யாவின் உள்ளத்திலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் விலகினார். பெரியார் ஈவேராவின் இயக்கத்தில் சேர்ந்தார். சில ஆண்டுகளிலேயே அவரது நம்பிக்கைக்குரிய சீடர்களில் ஒருவரானார். பெரியாரால் ‘நவாபுசாகிப்’என அழைக்கப்பட்டார்.
பெரியார் ஈவேராவுடன்… :
ஜக்கரிய்யா, பெரியார் ஈவேராவுடன் இணைந்து செயல்பட்டார். பெரியார் அறிவித்த அனைத்து இயக்கங்களிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டு பலமுறை சிறைவாசம் அனுபவித்தார். சில பொதுக் காரியங்களை நிறைவேற்ற பெரியாரை அணுக முடியாதவர்கள் அல்லது அவருக்கு அறிமுகமில்லாதவர்கள் ஜக்கரிய்யாவை அணுகி அவர் மூலம் பெரியாருக்கு அந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அவற்றை நிறைவேற்றிக் கொண்டனர்.
1952ஆம் ஆண்டு இராஜகோபாலாச்சாரியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த போது, கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. நெல்லை, ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று அரசு தடை உத்தரவு போட்டிருந்தது. இதனால் வியாபாரிகள் நெல்லை பதுக்கி வைத்து செயற்கையான பஞ்சத்தை உருவாக்கினர். இதனால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாயினர்.
இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்கள் தமிழ் நாடெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நிலைமையை நேரில் ஆய்வு செய்து மாவட்டங்களுக்கிடையில் நெல்லைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு முதலமைச்சர் இராஜாஜி இணங்கவில்லை. எனவே அவர் தனது ஆய்வுக் குறிப்புகளை ஜக்கரிய்யா மூலம் பெரியாரிடம் கொடுத்தார். பெரியார், இராஜாஜியை நேரில் சந்தித்து இக் கோரிக்கையை வலியுறுத்தினார். கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து கொண்ட இராஜாஜி, நெல்லுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார். இதன் பின்னர் நிலைமை ஓரளவு சீரடைந்தது.
டாக்டர் யூ.கிருஷ்ணாராவ் என்பவர் இராஜாஜி அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சராகப் பதவி வகித்தார். 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர் சென்னை ஹார்பர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எனினும் இவரை தனது அமைச்சரவையில் பெருந்தலைவர் காமராஜ் சேர்த்துக் கொள்ளவில்லை. இவர் இராஜாஜியின் ஆதரவாளராக இருப்பார் என காமாராஜ் அவர்கள் சந்தேகித்ததே அதற்குக் காரணமாகும். பெரியார் பரிந்துரை செய்தார் தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எண்ணிய டாக்டர் கிருஷ்ணாராவ், ஜக்கரிய்யாவையும், அவரது நண்பரான காயல்பட்டினம் பி.ஏ. காக்காவையும் அழைத்துக் கொண்டு அப்போது பெரியார் தங்கியிருந்த ஏற்காட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க காமராஜரிடம் பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
1955ஆம் ஆண்டு (2.1.1955) பெரியார் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சென்னை மாவட்டத் திராவிடர் கழக நிர்வாகத்தைக் கலைத்து விட்டு ஜக்கரிய்யாவைத் தலைவராக நியமித்தார். இதனையறிந்து அதிர்ச்சியுற்ற அவர் பெரியாரிடம் ‘என்ன அய்யா இப்படிச் செய்து விட்டீர்கள்? நான் என்ன பெரிய படிப்பாளியா? எனக்கு என்ன தகுதியிருக்கிறது தலைவராக நியமிக்க? என்று கேட்டார். அதற்குப் பெரியார், ‘நீங்கள் இந்த நியமனம் குறித்து என்னிடம் சண்டைபோட வருவீர்கள் என்று தெரியும். உங்களிடத்தில் என்ன தகுதியில்லை என்று நீங்கள் குறைவாகக் கருதுகிறீர்களோ அவை தான் எனக்குத் தகுதிகளாகப்படுகின்றன.
எனக்கு வேண்டியதெல்லாம் நம்பிக்கையும், நாணயமும் தான். அது உங்களிடத்தில் நான் எதிர்பார்ப்பது போலவே இருக்கிறது. நான் எது சொன்னாலும் நம்பிக்கையோடு செய்து முடித்திருக்கிறீர்கள். படித்தவனை வைத்தால் பதவி, விளம்பரம் என்று போய்விடுவான்’ என்று பதிலளித்தார். பெரியார், ஜக்கரிய்யா மீது கொண்டிருந்த அளப்பரிய நம்பிக்கையை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
அதே நேரத்தில் ஏதாவது ஒரு விஷயத்தில் பெரியார் சரிவர நடந்து கொள்வில்லை என்றால் அவரிடம் நேரில் சென்று அதனைச் சுட்டிக் காட்டவும் ஜக்கரிய்யா தயங்கியதில்லை. 1963ஆம் ஆண்டு, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் அவர்கள் மரணமுற்ற போது பெரியார் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. இது ஜக்கரிய்யாவுக்கு பெருத்த மனவருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. சில நாட்கள் கழித்து பெரியாரைச் சந்தித்த அவர் ‘ஜீவாவிற்கு அஞ்சலி செலுத்த நீங்கள் ஏன் நேரில் வரவில்லை, என்று வினவி தனது மன வருத்தத்தைத் தெரிவித்தார். பெரியாரும் தனது தவறை உணர்ந்து அவரிடம் வருத்தம் தெரிவித்தார்.
மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கையை ஆராய்வதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தார்கமிஷன், சென்னை, பம்பாய், கல்கத்தா, டெல்லி போன்ற பெரு நகரங்கள் பல இன, சமய, மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற நகரங்கள், எனவே அவற்றை எந்த மாநிலங்களுடனும் சேர்க்காமல் தனி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டுமென்று பரிந்துரை செய்திருந்தது. இந்தப் பரிந்துரையின்படி, சென்னை நகரம் தமிழ்நாட்டிற்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டது. தவிரவும், சென்னை நகரைத் தெலுங்கர்களிடமிருந்து தான் ஆங்கிலேயர்கள் பெற்றனர். எனவே அந்நகர் தங்களுக்கே உரியது என ஆந்திரமாநிலம் கேட்டுப் போராடியவர்கள் உரிமை கொண்டாடினர்.
இதனை எதிர்த்து சென்னை நகரம் தமிழகத்துடன்தான் இணைக்கப்பட வேண்டும் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தின. ஜக்கரிய்யா சாகிபும் பெரியாரின் ஆலோசனையின் படி தமிழ் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் சென்னையில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி சென்னை நகர் தமிழ் நாட்டுடனேயே இணைக்கப்பட வேண்டுமேன்று தீர்மானம் நிறைவேற்றினார். இம்மாநாட்டில் SIET யின் தலைவர் ஆடிட்டர் உபையதுல்லாசாகிப் தலைமையேற்க வரதராஜுலு நாயுடு, திருவி கல்யாண சுந்தரனார். ப.ஜீவானந்தம் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
1949 ஆண்டு ஜனவரி 15, 16 தேதிகளில் சென்னை பிராட்வேயிலுள்ள செயின்ட் கப்ரியேல் பள்ளிக் கூடத்திற்கு எதிரேயிருந்த மைதானத்தில் திருக்குறள் மாநாட்டை மிகப்பெரிய அளவில் அவர் நடத்தினார். பல தமிழறிஞர்கள் இம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். இம் மாநாட்டிற்காகப் பெரியார் ரூ1000/- நன்கொடை வழங்கினார். மாநாடு நடத்தியதில் செலவு போக மீந்த தொகையான ரூ.4300/-ஐ பெரியாரிடமே ஜக்கரிய்யா வழங்கினார்.
1952ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள் சென்னையில் (உயர் நீதி மனற்றத்திற்கு பின்புறம் உள்ள கடற்கரையில்), தனது நண்பர் B.A. காக்காவுடன் இணைந்து மாபெரும் மீலாதுப் பொதுக்கூட்டம் ஒன்றை அவர் நடத்தினார். அரசியலில் எதிரும் புதிருமான கொள்கைகளைக் கொண்டிருந்த பெரியாரையும், இராஜாஜியையும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற வைத்தார்.
சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரு தலைவர்களும் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியாக இரு அமைந்திருந்தது. பெருந்திரளான பொது மக்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் பொதுக்கூட்டம் குறித்து ‘கல்கி’ வார இதழ் விரிவான செய்தியை வெளியிட்டது. முஸ்லிம் முரசு மாத இதழும் அதன் ஜனவரி 1957 இதழில் இவ்விரு தலைவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் படத்தை தனது அட்டையில் இடம்பெறச் செய்திருந்தது.
காயல்பட்டினத்திற்கு :
தனது வாழ்நாளின் பெரும் பகுதியை சென்னையிலேயே கழித்த போதும், ஜக்கரிய்யா சாகிபு, தனது சொந்த ஊரான காயல்பட்டினத்தை மறக்கவில்லை. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அந் நகருக்குப் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். கால்நடை மருத்துவமனை, பத்திரப் பதிவு அலுவலகம் ஆகியன அவரது முயற்சியின் காரணமாகவே அந்நகரில் தொடங்கப்பட்டன.
அங்கு செயல்பட்டு வரும் எல்.கே உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட அப்போதைய கல்வித் துறைச் செயலாளர் திரு. வேங்கட சுப்பிரமணியத்தைச் சந்தித்து கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு அப்பள்ளி மேல் நிலைப் பள்ளியாகியது. காயல்பட்டினம் பள்ளிகளில் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது இறுதித் தேர்வை திருச்செந்தூர் சென்று தான் எழுத வேண்டும் என்ற நிலையை மாற்றி காயல்பட்டினத்திற்கே தேர்வு மையம் செண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார்.
1945ஆம் ஆண்டு காயல்பட்டினத்தில் வள்ளல் சீதக்காதி விழாவினை நடத்தினார். அவ்விழாவில் அறிஞர் அண்ணா, சென்னைப் பல்கலைக் கழக அரபு, உருது மொழித் துறைகளின் தலைவர் போராசிரியர் ஹுஸைன் நெய்னாமுகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த அண்ணா தமிழ் முஸ்லிம் சங்கத்தில் தங்கியிருந்தபோது, தண்ணீர்ப் பீப்பாய்கள் பொருத்தப்பட்ட மாட்டு வண்டிகள் சாலையில் போய்க் கொண்டிருப்பதைக் கண்ணுற்று அது குறித்து ஜக்கரிய்யாவிடம் விசாரிக்க அதற்கு அவர் ‘அந்தப் பீப்பாய்களில் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள அலவாய்க்கரையிலிருந்து தான் தண்ணீர்
கொண்டு வரப்படுகிறது. அதனை நாங்கள் காசு கொடுத்து வாங்குகிறோம்.’ என்று பதிலளித்தார்.
அப்படியா என்று வியப்படைந்த அண்ணா, அன்று நடைபெற்ற சீதக்காதி விழாவில் ‘வள்ளல் சீதக்காதி பிறந்த ஊரில் தண்ணீர்ப் பஞ்சமா?’ என்று பேசினார். பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளுமாறு அவர் ஜக்கரிய்யாவிடம் வேண்டுகோள் விடுத்தார். அவர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அந்நகருக்கு ரூபாய் 5லட்சம் செலவில் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
சீதக்காதி விழாவையும். கௌது நாயகம் விழாவையும் காயல்பட்டினத்தில் ஆண்டு தோறும் அவர் நடத்தி வந்தார். 1944 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த இரு விழாக்களிலும் பெரியார் கலந்து கொண்டார். மேலும் குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்ற மீலாது நிகழ்ச்சிக்குப் பெரியாரின் துணைவி மணியம்மையாரை அழைத்து வந்து உரையாற்றச் செய்தார். இது தான் மணியம்மையார் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கதிரவன் இதழ்:
1947ஆம் அண்டு ‘கதிரவன்’ என்ற மாத இதழைத் தொடங்கி நடத்திவந்தார். புலவர் மு.செல்வராஜ் என்பவர் இதன் ஆசிரியராகவும், ஜக்கரிய்யா உரிமையாளராகவும் இருந்தனர். இந்த இதழில், பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட பல திராவிட இயக்கத் தலைவர்களின் கட்டுரைகள் வெளிவந்தன. பெரும்பாலும் சுயமரியாதைக் கொள்கைகளைப் பேசும் கட்டுரைகளையே தாங்கிவந்த இந்த இதழில் இஸ்லாமிய சமயம் சார்ந்த கட்டுரைகளையும் இடம்பெறச் செய்தார். பண நெருக்கடி காரணமாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இதழ் நின்று போனது. இதழைத் தொடர்ந்து நடத்திட பெரியார் ரூ.5000/- நிதிஉதவி அளிக்க முன்வந்தபோதும், ஜக்கரிய்யா அதனை ஏற்க மறுத்து விட்டார்.
பண்பு நலன்கள்:
அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், தீரர் சத்தியமூர்த்தி, டாக்டர் லட்சுமணசாமி முதலியார், கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு, டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி முதலியார், டாக்டர் தர்மாம்பாள், இராம அமிர்தம்மை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். இராதா, நடிகர் கே.ஆர். இராமசாமி, பேராசிரியர் அன்பழகன், என்.வி.நடராஜன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் நெருங்கிய தோழமை உறவு கொண்டிருந்தார்.
இந்தத் தோழமையைப் பயன்படுத்தி பல ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெற கல்லூரிகளில் இடம் கிடைக்கவும், பல படித்த ஏழை மாணவர்கள் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகள் பெறவும் உதவி செய்தார். இதற்காக அவர் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. தனது சொந்தப் பணத்திலிருந்து பொதுச் சேவைகளுக்குச் செலவு செய்ய ஒரு போதும் தயங்கமாட்டார். எழுத்தாளர்களைப் பெரிதும் ஊக்குவிப்பார். அவர்களின் நல்ல எழுத்துக்களைப் பாராட்டத் தயங்கமாட்டார்.
1983ஆம் ஆண்டு, ‘திப்புவின் அரசியல்’ என்ற வரலாற்று நூலை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப் சுஜாவுதீன் சர்க்கார் என்பவர் எழுதி வெளியிட்டார். இந் நூலின் முன்னுரையில் ஜக்கரிய்யா குறித்து அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். ‘ஆராய்ச்சி தொடங்கிய காலத்திலிருந்து நான் சோர்வடைந்து விடாமல் தொடர்ந்து செயல்படும் அளவிற்கு என்னைத் தூண்டி ஆர்வமூட்டிய பெருமை என் தந்தையை நிகர்த்த பெரியவர் தமிழ் முஸ்லிம் சங்க நிறுவனர். எஸ்.எம். ஜக்கரிய்யா அவர்களையே சாரும். அவர் ஊட்டிய ஆர்வமே இந்த ஆராய்ச்சிக்குத் தேவைப்பட்ட வேகத்தைத் தந்தது என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது.’
குடும்பம்:
ஜக்கரிய்யா சாகிபுக்கு 1935ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் கதிஜா பீவி. இத்தம்பதியினருக்கு சாகுல் கமீது என்ற மகனும் ஒரு மகளும் உண்டு மகன் சாகுல் கமீது தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
முடிவுரை:
ஜக்கரிய்யா சாகிபு தனது 92வது வயதில் 24.1.2004 அன்று மரணமுற்றார். தனது நீண்டகால வாழ்க்கையில் அவர் மக்களுக்காகவே பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார். ஆரவாரமில்லாது, ஆர்ப்பாட்டமில்லாது அவர் செய்திட்ட சேவைகளை காயல்பட்டினம் மக்கள் மட்டுமின்றி பிற பகுதி மக்களும் என்றும் நினைவில் வைத்திருப்பர். இத்தகைய சேவையாளர்களால் தான் இந்த உலகம் நிலைபெற்றிருக்கிறது.
ஆதார நூல்: வரலாற்றாசிரியர் க.திருநாவுக்கரசு எழுதியுள்ள ‘திராவிட இயக்கவேர்கள்’