இஸ்லாமிய ஆட்சிமுறை
இன்றைய உலகில் இரண்டு வகையான ஆட்சிமுறைகளே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன.
- முடியாட்சி (Monarchy). அரசர் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சி. பிளவுபடாத இறையாண்மை, அல்லது ஒரு நாட்டின் நிரந்தரமான தலைமைப் பொறுப்பை ஏற்ற தனிமனிதரின் ஆட்சி. இது இப்போது பரம்பரை வழியில் ஆட்சியுரிமை கொண்ட அரசுகளைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. அரசர்களின் தெய்வீக உரிமையாக ஆட்சி கருதப்பட்டது.
2. மக்களாட்சி, அல்லது ஜனநாயகம் (Democracy). வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்று நடத்தும் ஆட்சிமுறை; உயர்ந்த அதிகாரம் மக்களிடம் குவிந்திருக்கும் அரசாங்க வடிவம். பொது வாக்களிப்பு, பதவிக்கான போட்டி, பேச்சு மற்றும் எழுத்துச் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை இது வலியுறுத்துகிறது.
அ. இஸ்லாத்தில், நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஆட்சித் தலைவருக்கு (கலீஃபா) மக்களிடமிருந்தே (உம்மா) அதிகாரம் வழங்கப்படும்; அவர் தம் பணிகளை மக்களின் திருப்தியுடனேயே மேற்கொள்ள வேண்டும். இதுவே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள்; உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள்; அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்; உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள்; அவர்கள் உங்களைச் சபிப்பார்கள். (முஸ்லிம்)
தனிமனிதன் தனிமனிதனையோ, மக்கள் மக்களையோ, ஆட்சியாளர்கள் குடிமக்களையோ எந்த வகையிலும் சுரண்டுவதற்கும் தவறாகப் பயன்படுத்துவற்கும் இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.
ஆ. ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் வேறுபடலாம் என்பதால், இஸ்லாம் தேர்வு முறையைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில், ஆட்சியின் (கிலாஃபத்) தலைநகரில் உள்ள அறிவுஜீவிகள் (அஹ்லுஷ் ஷூரா) அளிக்கும் யோசனையின் பேரில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தலைநகர் மக்கள் வந்து அவருக்கு வாக்கு (பைஅத்) அளித்தனர். அதையடுத்து இதர நகரவாசிகள் தங்கள் வாக்குகளை அளித்தனர். எப்படியானாலும் ஆலோசனையாளர்களின் கருத்தைக் கேட்டே ஆட்சித் தலைமைக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இ. அடுத்து இஸ்லாமிய ஆட்சியின் சாசனம் திருக்குர்ஆனாகவே இருக்கும். அதுதான இறைமொழி; மாற்றம், திருத்தம், கூடுதல், குறைவு ஆகிய எந்த மாறுதலுக்கும் உட்படாத நிலையான சாசனம்.
ஈ. இஸ்லாமிய ஆட்சி, ஆலோசனை (ஷூரா) அடிப்படையில் அமைய வேண்டும்.
உ. அது கிலாஃபத்தாகவும் (அரசியல்) இமாமத்தாகவும் (ஆன்மிகம்) இருக்க வேண்டும். சர்வாதிகார ஆட்சியாகவோ குடும்ப மன்னராட்சியாகவோ கட்டுப்பாடற்ற குடியாட்சியாகவோ அது இருக்காது.
ஆட்சித் தலைவருக்கான இலக்கணம்
1. ஆட்சித் தலைவர் பருவமடைந்த இறைநம்பிக்கையாளராக இருக்க வேண்டும். கல்வி அறிவு, ஆட்சித் தகுதி, நிர்வாகத் திறமை, நேர்மை, உடல் ஆரோக்கியம் முதலான அம்சங்கள் உள்ளவராகவும் அவர் இருக்க வேண்டும்.
2. நீதியும் நேர்மையும் ஆட்சியாளரின் முதல்தரமான குணங்களில் அடங்கும். திருக்குர்ஆனில் இறைவன் ஆணையிடுகின்றான்: உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களை, அவற்றுக்கு உரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் மக்களிடையே நீங்கள் தீர்ப்பு வழங்கும்போது நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். உங்களுக்கு அல்லாஹ் கூறும் இந்த அறிவுரை மிகவும் நல்லதாகும். (4:58)
பதவியும் நம்பி ஒப்படைக்கப்படும் ஒன்றுதான்; தீர்ப்புக்கு வேண்டிய நீதி ஆட்சிக்கும் பொருந்தும். ஒருவரோ ஒரு கூட்டமோ பிடிக்கவில்லை என்பதற்காக நீதி தவறிவிடக் கூடாது. இதனாலேயே மற்றொரு வசனத்தில், ‘‘ஒரு சமுதாயத்தார்மீது (உங்களுக்கு)ள்ள பகை (அவர்களுக்கு) நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம். (எல்லாரிடமும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகவும் உகந்ததாகும்” (5:8) என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
3. சாமானியரும் நெருங்கும் தூரத்தில் ஆட்சியாளர் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவையும் வறுமையும் இல்லாமையும் உள்ளவர்கள் அணுக முடியாதவாறு தமது வாயிற்கதவை ஓர் ஆட்சியாளர் அடைத்துக்கொள்வாராயின், அவருடைய தேவையின்போதும் இல்லாமையின்போதும் வறுமையின்போதும் (தன்னை) அணுக முடியாதவாறு அல்லாஹ் வானத்தின் வாயில்களை அடைக்காமல் இருக்கமாட்டான். (ஜாமிஉத் திர்மிதீ)
4. பகட்டும் படோடாபமும் ஆட்சிக்கு ஆபத்து. பதவி வரும்போதுதான் பணிவு வர வேண்டும்; எளிமை மிளிர வேண்டும். ஆட்சிக்கு மட்டும் அவர் தலைவர் அல்லர்; பண்பாட்டிற்கும் மனித நாகரிகத்திற்கும் தலைவராக, முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
5. தவறு சுட்டிக்காட்டப்படும்போது, குறைகள் விமர்சிக்கப்படும்போது, அது உண்மைதானா என்பதை ஆட்சியாளர் பரிசீலிக்க வேண்டும்; உண்மை என்றால், மனப்பூர்வமாக அதை ஏற்றுத் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்; குற்றம் சொல்வோரிடம் பகைமை பாராட்டக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதியிழைக்கும் அரசனிடம் உண்மை உரைப்பதுதான் சிறந்த அறப்போராகும். (நஸயீ, முஸ்னது அஹ்மத்)
அநீதியிழைக்கப்பட்ட ஒருவன், அதை உரக்கச் சொல்ல உரிமையுண்டு. அந்த அப்பாவி தன் உரிமையைப் பயன்படுத்தும்போது, குரல்வளையை நெறிப்பது சர்வாதிகாரமாகும்.
திருக்குர்ஆன் கூறுகிறது: அநீதியிழைக்கப்பட்டவர் தவிர வேறு யாரும் தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான். (4:148)
6. சட்டத்திற்குமுன் அனைவரையும் சமமாக நடத்துவது ஆட்சியாளரின் முக்கியப் பொறுப்பாகும். தெரிந்தவனுக்கு ஒரு நீதி; தெரியாதவனுக்கு ஒரு நீதி இருக்கலாகாது. எளியவனுக்கு முன்னால் விரைப்பாக நிற்கும் சட்டம், வலியவனின் கண்சாடைக்கே வளைந்து சாஷ்டாங்கமாக விழக் கூடாது. ‘‘நீங்கள் பேசினால் நியாயமே பேசுங்கள்; உறவினராக இருந்தாலும் சரி” (6:152) என்று அல்லாஹ் அறிவுறுத்துகின்றான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்கள்தம் தோழர்களும் ஆட்சிப் பொறுப்பு வகித்தபோது இந்த இறையாணையைச் சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். இதற்கு வரலாற்றில் நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
‘‘என் அருமை மகள் ஃபாத்திமாவே திருடினாலும் அவரது கரத்தையும் நான் துண்டிப்பேன்” என்ற நபிமொழி பிரபலமானது. (புகாரீ)
கடமையில் கண்ணும் கருத்தும்
7. ஆட்சியாளர் தம் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். அதற்கு இயலாதவர், அல்லது மனமில்லாதவர் ஆட்சிக் கட்டிலில் அமரவே கூடாது. மக்கள் நலனைப் புறக்கணிக்கும் ஆட்சியாளன் மாபெரும் பாவி ஆவான். ‘‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்” என்பது நபிமொழியாகும். (புகாரீ)
பொறுப்பை நிறைவேற்றத் தவறிய ஆட்சியாளனுக்கே இந்தக் கதி என்றால், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சொந்த வளத்தைப் பெருக்கிக்கொள்ளும் ஊழல்வாதிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? நபி (ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையைப் பாருங்கள்: முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகின்றான். (புகாரீ)
8. எல்லாவற்றையும்விட, ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் பதவி ஆசை பிடித்தவராக இருக்கலாகாது. நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அப்துர் ரஹ்மான்! ஆட்சிப் பொறுப்பை கேட்டுப்பெறாதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால், அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் அது உங்களுக்கு அளிக்கப்பட்டால், அது தொடர்பாக உங்களுக்கு (இறை) உதவி கிடைக்கும்” என்று சொன்னார்கள். (முஸ்லிம்)
9. இந்த இலக்கணங்களும் உயர் பண்புகளும் ஆட்சியாளர்களிடம் அமைய வேண்டுமென்றால், அவர்களிடம் ‘இறையச்சம்’ (தக்வா), மறுமை நம்பிக்கை, நபிவழி (சுன்னத்) வாழ்க்கை ஆகியவை இருக்க வேண்டும். அத்தகைய ஆட்சியாளர்களுக்கு இறைவனிடம் உயர் தகுதியும் பெரிய பதவியும் நிச்சயமாகக் கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையான ஆட்சியாளர்கள், அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளி மேடைகளில் இருப்பார்கள். அவர்கள் தமது நிர்வாகத்திலும் குடும்பத்திலும் தாம் பொறுப்பேற்றுக்கொண்டவற்றிலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). (முஸ்லிம்)
மற்றொரு ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்: இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமப்படுத்தினால், அவரை நீயும் சிரமப்படுத்துவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்துகொள்வாயாக! (முஸ்லிம்)
குடிமக்களின் பொறுப்பு
இஸ்லாம் வகுத்த அரசியல் இலக்கணத்தில், நல்ல குடிமக்களுக்கான இலக்கணமும் அடங்கும். 1. ஆரம்பமாக, அவர்கள் நல்ல ஆட்சியாளர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். 2. அடுத்து நன்மைகளில் மட்டுமே ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட வேண்டும்; பாவத்தில் கட்டுப்படக் கூடாது. 3. சட்டத்தை -இஸ்லாமிய அரசியல் சாசனத்தை- முஸ்லிம் குடிமக்கள் மதித்து நடக்க வேண்டும். 4. பொது அமைதி, சட்ட ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது. 5. நாட்டின் வளர்ச்சிக்கும் பொது நன்மைக்கும் உறுதுணையாகச் செயல்பட வேண்டும்.
(சந்திப்போம்)