வாழ்க்கைப் பாதையின் இயல்பை திருமணம் என்ற திருப்பமே மனிதனுக்குச் சொல்லிக் கொடுக்கிறது. வாழ்க்கைத் துணையைத் தேடுவதும் தேர்வு செய்வதும் ஆதி மனிதனது பிறப்பு முதல் இருக்கிறது.
மனித வாழ்க்கைக்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது. அது ஆணுக்கு பெண்ணிடமும் பெண்ணுக்கு ஆணிடமும் கிடைக்கிறது. அதை பரஸ்பரம் பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கைதான் திருமண ஒப்பந்தம்.
திருமண உறவு இனக்கவர்ச்சி சார்ந்தது மட்டுமல்ல. விருப்பத்தேர்வின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான துணையைத் தேடி திருமண உறவில் சேர்வது மனித வாழ்வின் விதி. வாழ்வின் வெற்றிடங்களை திருமணம்தான் முழுமைப்படுத்துகிறது. மனிதர்கள் பூரணமடைவதும் திருமணம் என்ற பிணைப்பின் மூலமே.
வேறுபட்ட சிந்தனைகள், விருப்ப வெறுப்புக்களை ஆதாரமாகக் கொண்ட ஆணும் பெண்ணும் ஒன்றிணைவதன் மூலமே திருமண வாழ்க்கை ஆரம்பமாகிறது.
தாய், தந்தை – மனிதர்களுக்கு இயல்பாக கிடைக்கும் முதல் உறவு. இதில் தேர்வுச் சுதந்திரம் என்பதற்கு வழியே இல்லை. பெற்றோர்களின் வழியாகக் கிடைக்கும் சுற்றம் சார்ந்த உறவுகள். இந்த உறவுகள் உருக் கொள்வதற்கும் அவற்றுக்கிடையில் பந்தம் ஒன்று ஏற்படுவதற்கும் பல நியாயங்கள் இருக்கின்றன.
திருணத்தின் மூலம் கிடைக்கும் உறவு வித்தியாசமானது. விதிவிலக்கானது. உறவுத் தொடர்பே இல்லாத இருவருக்கிடையில் மெல்ல மெல்ல வளரும் உறவுவேர்கள் விருட்சமாகி குடும்பமாக தோற்றம் தருகிறது.
திருமண உறவில் இணையும் ஆண் பெண் இருவரது வாழ்வும் இடைவெளிகள் அற்றுப்போய், ஒருவரது வாழ்க்கை மற்றவரது வாழ்வில் ஒன்றாகிவிடுகிறது. “அபரிமிதமான அன்பு” எனும் ஒற்றை நூல் கொண்டு இருவர் வாழ்க்கையும் பின்னப்படுகிறது. இது தனது அத்தாட்சிகளில் ஒன்று, இந்த “அந்நியோன்ய பந்தத்தை” நானே உருவாக்குகிறேன் என்கிறான் இறைவன்.
மகனாகவும் மகளாகவும் இருந்த ஆணும் பெண்ணும் தாயாகவும் தந்தையாகவும் குழந்தைகளை பொறுப்புடன் பாதுகாப்பதற்கு ‘அபரிமிதமான அன்பு’தான் அடிப்படைப் பண்பாக இருக்கிறது. மனித இனத்தின் தொடர்ச்சிக்கு வித்தாக இருக்கும் இத்தகைய திருமண உறவை முறித்துப் போடுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.
கணவனும் மனைவியும் எதிர்கொள்ளும் வாழ்க்கை, கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான உண்மையை நடைமுறையில் உணர்த்துகிறது. வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதை இருவருக்கும் கற்றுக் தருகிறது.
ஏமாற்றம் அகம்பாவம் பொருளாதாரம் பொருந்தா உறவு போன்ற பல்வேறு அம்சங்கள் மணமுறிவுக்கு காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இவைகளில் நியாயமான காரணங்களும் உண்டு. அவைகளை சிக்கல் இல்லாமல் தீர்த்துக்கொள்வது சரியானது தீர்வு.
நீயா நானா என்ற போட்டியில் ஏற்படும் சிக்கல்தான் சமூகத்தில் பெரும்பாலான மணமுறிவுகளுக்கு காரணமாக இருக்கிறது. ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்பது இயற்கையில் இல்லை. ஆனால் இருவரும் இருவேறு இலக்கணங்களைக் கொண்டிருக்கின்றனர்.
குடும்பத்தைச் சுமப்பதில் இருவரும் சமமான அதேநேரம் வெவ்வேறான பாரங்களைத் தாங்குகின்றனர். இருவரில் ஒருவர் தனது ஆதிக்கத்தைத் நிலைநாட்ட விரும்பும் வீடுகளில் அன்பும் பிணைப்பும் கானல் நீராகத்தான் காட்சி தரும்.
அன்பும் அரவணைப்பும் நிரம்பி வழியவேண்டிய வாழ்வில். சின்னச்சின்ன பிரச்சினைகளால் வெறுமை ஏற்பட்டு விடுகிறது. பலவீனங்கள் கொண்ட மனித வாழ்க்கையில் திருமணமும் ஒரு அனுபவம். வாழ்வதற்கான பக்குவமும் அனுபவமும் சிலருக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது. சிலர் திருமணத்தின் பின்பே அதைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றனர்.
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதும், மற்றவரை அங்கீகரித்து தங்களது விருப்பத்தையும் அன்பையும் பகிர்ந்துகொள்வதும்தான் திருமண வாழ்வின் அடிப்படை. அதை மறந்து விட்டு அவ்வப்போது வரும் கோபங்கள், முரண்பாடுகள் மற்றும் சண்டைகளுக்காக திருமண உறவை முறித்து வெளியேறுவது சரியான தீர்வாகாது.
ஒருவர் மற்றவரை ஊக்குவிக்கவும் தவறுசெய்யும் போதும் தவறுகளை பக்குவமாகச் சுட்டிக் காட்டவும் விழும் போது தாங்கிக் கொள்ளவும் இந்த வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரின் நல்லவைகளையே, நற்பண்புகளையே கவனத்தில் கொள்ள வேண்டும். குறைகளை பொருட்படுத்தாது புறக்கணித்து விட வேண்டும்.
ஒருவரின் மீதான அன்பு அவரின் குறைகளை பெரிதுபடுத்தாது. யார் யாரையோ மன்னிப்பவர்கள் உற்ற துணைவரை மன்னிப்பதில் இன்பம் காணலாம். எல்லா மனிதர்களுக்கும் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம் மனிதனாக இல்லாமல் பிரச்சினையாகவே இருந்து விடக்கூடாது.