– சேயன் இப்ராகிம்
கூடல் மாநகர் என அழைக்கப்படும் மதுரை இந்தியாவிலுள்ள பழம் பெரும் நகரங்களில் ஒன்றாகும். பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இந்நகரில் நான்கு தமிழ்ச் சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் தோன்றிச் செயல்பட்டு தமிழ்ப்பணி ஆற்றியுள்ளன. பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்நகரை சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் சுல்தான்கள் ஆட்சி புரிந்துள்ளனர்.
ஆங்கிலேய கம்பெனி ஆட்சியை எதிர்த்துப் போராடிய வீரர் கான்சாகிப் இந்த நகரில் தான் வீர மரணம் எய்தினார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்த முகம்மது மௌலானா சாகிப், நாட்டு விடுதலைக்குப் பின்னர் முஸ்லிம் லீகின் முதல் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புடன் பணியாற்றிய எஸ்.எம். ஷெரீப் சாகிப் ஆகிய பெருமக்களைத் தந்த பெருமை மதுரை நகருக்குண்டு. அந்த நன்மக்களின் வரிசையில் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருந்த ‘எட்டெழுத்து முஸ்தபா ஹாஜியார்’ என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட முஸ்தபா அவர்களைப் பற்றித்தான் இந்த இதழில் பார்க்க விருக்கிறோம்.
பிறப்பு – சிறப்பு:
முஸ்தபா ஹாஜியாரின் பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடற்கரை நகரமான தொண்டியாகும். இவ்வூர் முஸ்லிம்கள் கப்பல் வணிகத்தில் சிறப்புற்று விளங்கினர். பல மார்க்க அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் தமிழ் கூறும் உலகிற்குத் தந்த பெருமை இந்த ஊருக்குண்டு. முஸ்தபா ஹாஜியாரின் மூதாதையர்கள் இந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்து வந்து மதுரை கீழ வெளிப் பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அந்த மரபில் வந்த மதார் முகைதீன் – முகம்மது பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாக 15.03.1928 அன்று முஸ்தபா பிறந்தார். இவரது விலாசம் (இனிசியல்) T.S.N.M.S.A.P.M. என எட்டு எழுத்துகளைக் கொண்டிருந்ததால், இவர் ‘எட்டெழுத்து முஸ்தபா’ என அழைக்கப்பட்டார். இந்த விலாசத்தின் விளக்கம் பின்வருமாறு.
T – என்பது தொண்டி இராவுத்தர்
S – என்பது சிக்கந்தர் இராவுத்தர்
N – என்பது நைனாமுகம்மது இராவுத்தர்
M – என்பது மதார் முகம்மது இராவுத்தர்
S – என்பது ஷேக் இராவுத்தர்
A – என்பது அஹமது இராவுத்தர்
P – என்பது பீர் இராவுத்தர்
M – என்பது முகம்மது இராவுத்தர்
இவரது முழுப்பெயர் ஷேக் அகமது பீர் முகம்மது முஸ்தபா ஆகும். இக் குடும்பத்தினர் மிகப்பெரிய நிலச்சுவான்தார்களாக விளங்கினர். இவர்களுக்கு மதுரை நகரை ஒட்டிய கிராமங்களிலும் தேனி, உத்தமபாளையம் ஆகிய வைகை ஆற்றுப் பாசனப் பகுதிகளிலும் பன்னூற்றுக்கணக்கான நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் இருந்தன. இன்றைக்கும் இருக்கின்றன.
எனவே முஸ்தபா ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் தான் பிறந்தார். அவர் தனது தொடக்க மற்றும் இடை நிலைக் கல்வியை மதுரையிலுள்ள செயின்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் கற்றுத் தேறினார். மார்க்கக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். விவசாயப் பணிகளைக் கவனிக்க வேண்டியதிருந்ததால் இவர் உயர்கல்வி கற்கச் செல்லவில்லை.
சமயப் பணிகள்:
முஸ்தபா ஹாஜியார் இளமையிலேயே சமுதாயப்பற்றும், மார்க்கப்பற்றும் மிக்கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமயப் பணிகளுக்கு வாரி வழங்கினார். புதிய பள்ளிவாசல் கட்டிடவும், ஏற்கனவே இருக்கும் பள்ளிவாசல்களை விரிவுபடுத்திடவும், மத்ரஸாக்களுக்கும் தாராளமாக நிதி உதவி செய்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ‘ஜாமிஆ மஹ்ஸனுத் தாரைனி’ என்ற மத்ரஸாவை நிறுவி சில ஆண்டுகள் நடத்தி வந்தார்.
அந்தப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகில் 1902 ஆம் ஆண்டு தனது தந்தையாரால் கட்டப்பட்டு நடத்தப்பட்டு வந்த தொ.சி. பள்ளிவாசல் என்ற இறையில்லத்தைத் தொடர்ந்து நிர்வகித்து வந்தார். மதுரை தாசில்தார் பள்ளிவாசலின் முத்தவல்லியாக நாற்பது ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். குழந்தைகள் சீர்திருத்தப் பள்ளியின் பொருளாளராகவும் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.
அல் அமீன் கைத் தொழில் கல்விச் சங்கம்:
முஸ்தபா ஹாஜியாரும், மதுரையின் பிரபல கண் மருத்துவர் டாக்டர் சத்தாரும் பிற சமுதாயப் பிரமுகர்களுடன் இணைந்து 1960 ஆம் ஆண்டு ‘அல்அமீன் கைத்தொழில் கல்விச் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினர்.
மதுரை நகரிலுள்ள முஸ்லிம்கள் கல்வி பயில பள்ளிக் கூடமும் ஆதரவற்ற முஸ்லிம் ஏழைச் சிறுவர்களின் பராமரிப்பிற்காக ஒரு அனாதை நிலையமும் தொடங்க வேண்டுமென்பது தான் இந்தச் சங்கத்தின் செயல்திட்டமாக இருந்தது. 1957ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த முஸ்லிம் அனாதை நிலையத்தைப் பார்வையிட்டு வந்த முஸ்தபா ஹாஜியாருக்கு மதுரையிலும் அது போன்ற ஒரு அனாதை நிலையத்தைத் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.
அந்த எண்ணத்தை இந்த அல் அமீன் கைத் தொழில் கல்விச் சங்கம் மூலமாக செயல்படுத்த விழைந்தார். புறநகர் பகுதியிலுள்ள கொடிக்குளம் என்ற கிராமத்தில் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை இதற்கென வழங்கினார். 1962ஆம் ஆண்டு அல் அமீன் அனாதை நிலையம் தொடங்கப்பட்டது. அதன் அருகிலேயே அல் அமீன் தொடக்கப் பள்ளியும் தொடங்கப்பட்டது.
அல் அமீன் அனாதை நிலையம் :
1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘அல் அமீன் அனாதை நிலையம்’ இன்றைக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இங்கு தற்போது 250க்கும் மேற்பட்ட ஏழை எளிய, பெற்றோர்களால் கைவிடப்பட்ட முஸ்லிம் சிறுவர்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கான உணவு, உடை, தங்குமிடம், கல்வி, மருத்துவச் செலவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. நன்கொடையாளர்கள் வழங்கும் நிதியினைக் கொண்டே இந்தச் செலவுகள் செய்யப்படுகின்றன.
இங்கு அரபி மத்ரஸா ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அலுவலகக் கட்டிடம். மாணவர்கள் தங்குவதற்கான விடுதி, விருந்தினர் அறை. உணவுக் கூடம், பள்ளிவாசல் என பல கட்டிடங்கள் பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டுள்ளன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிலையத்தில் தங்கிப் படித்து உயர் கல்வி கற்றுப் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். மாணவர்களின் உயர்கல்விக்கான செலவையும் இந்த நிலையமே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையத்திற்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது ஒரு மிகச் சிறந்த அனாதை நிலையமென இதனைப் பார்வையிட்டுச் சென்ற பல பொது நல அமைப்புகளின் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். இந்த நிலையத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக முஸ்தபா சாகிப் பல்லாண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது அவரது மகன் முகம்மது இத்ரீஸ் இதன் நிர்வாகியாகப் பொறுப்பு வகிக்கிறார்.
அல் அமீன் உயர்நிலைப் பள்ளி:
தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடம் 1966 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு நகரிலுள்ள கோசகுளம் புதூருக்கு மாற்றப்பட்டது. இந்தப் பள்ளிக்கூடம் செயல்படத் தேவையான அளவுக்குரிய நிலைத்தையும் முஸ்தபா ஹாஜியாரே வழங்கினார். (டாக்டர் சத்தார் சாகிபும் வழங்கினார்) சில ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் விளையாட்டுத் திடல் அமைத்திட மேலும் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கினார். 1978ஆம் ஆண்டு இந்தப் பள்ளிக் கூடம் மேல் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்தப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் பிற சமயங்களைச் சார்ந்த மாணவர்களும் அடங்குவர். மதுரை நகரில் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரே மேல் நிலைப் பள்ளி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப் பள்ளியின் தாளாளராக முஸ்தபா ஹாஜியார் பல்லாண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது அவரது மகன் முகம்மது இத்ரீஸ் பொறுப்பு வகிக்கிறார்.
ஜமா அத்துல் உலமா சபை :
நகரில் தனக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்களை அவர் பல்வேறு பொது நல அமைப்புகளுக்கு வழங்கியுள்ளார். அனாதை நிலையத்திற்கு அருகில் தனக்குச் சொந்தமாக இருந்த 11 சென்ட் நிலத்தை 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைக்கு வழங்கினார். இந்த வக்ப்பை காலம் சென்ற தனது மருமகன் (சகோதரியின் மகன்) வழக்கறிஞர் என்.அப்துல் ரஸாக் அவர்களின் ஈஸால் தவாபிற்காக அமைத்துக் கொண்டார். அவரது மனைவிக்குப் பின்னர் அவரது புதல்வர்கள் 2013 ஆம் ஆண்டு மேலும் இரண்டு சென்ட் நிலத்தை மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு வழங்கினர். இந்த வக்ப்பை தங்களது தாய், தந்தையருக்காக அமைத்துக் கொடுத்தனர். இந்த இடத்தில் தான் ஜமாஅத்துல் உலமா சபை தனது மாநில அலுவலகத்தை அண்மையில் கட்டி முடித்துள்ளது. மூன்று மாடிகள் கொண்ட இந்த எழிலார் கட்டிடத்தின் திறப்பு விழா சென்ற 12, 13.05.2018 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தக் கட்டிடம் முஸ்தபா ஹாஜியாரின் பெயரை காலமெல்லாம் தாங்கி நிற்கும் என்பது திண்ணம்.
திருமணம் – சுன்னத்:
முஸ்தபா ஹாஜியார் பல ஏழைக் குமருகளின் திருமணம் நடந்தேறிட நிதி உதவி செய்துள்ளார். எந்த விதமான ஆடம்பரமுமின்றி இஸ்லாமிய வழியில் இந்தத் திருமணங்களை நடத்தி வைத்தார். அது போல் ஆயிரக்கணக்கான ஏழைச் சிறுவர்களின் ‘சுன்னத்’தையும் தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார். அன்றைய நாட்களில் (60, 70 களில்) ‘சுன்னத்’ ஒரு ஆடம்பர வைபவமாகவே சமுதாய மக்களால் நடத்தப்பட்டது. அழைப்பிதழ் அடித்து உறவினர்களையும் நண்பர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்தல், விருந்து வைத்தல் என ஆடம்பரம் அனைத்து நிலைகளிலும் தலை தூக்கியிருந்தது. இதனால் போதிய பண வசதியில்லாத ஏழைக் குடும்பத்தினர் தங்கள் வீட்டுச் சிறுவர்களின் ‘சுன்னத்’தை தள்ளிப் போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலையம் முஸ்தபா ஹாஜியார் தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள் நிறைந்து வாழுகின்ற பல்வேறு ஊர்களுக்கும் சென்று ஏழை எளிய சிறுவர்களைக் கண்டறிந்து ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று கூடச் செய்து ஒரு ‘பெருந்திரள் சுன்னத்’ வைபவங்களை நடத்தினார். இதற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டார் (மருத்துவச் செலவு உட்பட) நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த வைபவங்களில் ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்குச் சுன்னத் செய்யப்பட்டது.
முஸ்லிம்கள் தங்களது இல்லத் திருமண நிகழ்ச்சிகளைப் பள்ளி வாசலில் வைத்துத்தான் நடத்திட வேண்டுமென்பது அவரது எண்ணமாகும். வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ நடைபெறும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும், பள்ளிவாசல்களில் நடைபெறும் திருமணங்களில் மட்டுமே கலந்து கொள்வேன் என்றும் அவர் வெளிப்படையாக அறிவித்தார். இதன் காரணமாக தங்களது வீட்டுத் திருமணங்களில் முஸ்தபா ஹாஜியார் கலந்து கொள்ள வேண்டுமென விரும்பியவர்கள் பள்ளிவாசல்களிலேயே அதனை நடத்தினர்.
அரசியல் ஈடுபாடு:
முஸ்தபா ஹாஜியார் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருந்தார். எனினும் நேரடி கட்சி அரசியலில் அவர் ஈடுபடவில்லை. தேர்தல்கள் எதிலும் போட்டியிடவில்லை. அன்றையத் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜ், உள்துறை அமைச்சர் கக்கன். உள்ளாட்சித்துறை அமைச்சர் கடையநல்லூர் அப்துல் மஜீத் சாகிப், மதுரை சுப்பாராமன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். காங்கிரஸ் தலைவர்கள் மதுரைக்கு வரும் போதெல்லாம் இவரது இல்லத்திற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். மதுரை நகரில் கக்கன் கும்பத்தினருக்கு வீடு ஒன்று கட்டிக் கொடுத்தார்.
குடும்பம்:
முஸ்தபா ஹாஜியாருக்கு 1958 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் சிக்கந்தர் பீவி. இத் தம்பதியினருக்கு அப்துல் லத்தீப், முகம்மது இல்யாஸ். முகம்மது இத்ரீஸ், முகம்மது அப்துல்லாஹ் என்ற நான்கு புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு. வழக்கறிஞரான மூத்த மகன் அப்துல் லத்தீப் சாகிப் மரணமடைந்து விட்டார். இவர் அல் அமீன் கைத் தொழில் கல்விச் சங்கம் மற்றும் அல் அமீன் மேல் நிலைப் பள்ளியின் தலைவராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தார். மற்றப் புதல்வர்களும் தந்தையின் வழியைப் பின்பற்றி மதுரை நகரில் பல்வேறு பொதுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முடிவுரை:
தனது வாழ்நாள் முழுவதையும் பொதுப் பணிகளுக்கே அர்ப்பணித்துக் கொண்ட முஸ்தபா ஹாஜியார் தனது 63வது வயதில் 12.02.1991அன்று (ரஜப் மாதம் 27ம் நாள் மிஹ்ராஜ் இரவில்) மரணமடைந்தார். ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயதாகிய 63 வயது வரை நான் வாழ்ந்தால் போதும், அதற்கு மேல் வாழ வேண்டியதில்லை’ என்று தனது நண்பர்களிடம் அவர் கூறுவது வழக்கமாம். அதன்படியே அவர் தனது 63வது வயதில் மரணமுற்றார். அவரது ஜனாஸா மதுரை சுங்கம் பள்ளிவாசல் கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இஸ்லாமியக் கடமைகளை வழுவாது கடைப்பிடித்து ஒழுகிய முஸ்தபா ஹாஜியார், கண் மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால் மிகுந்த நேசம் கொண்டிருந்தார். ஆலிம் பெருமக்கள் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார். அதனால் ‘முஹிப்புல் உலமா’ என ஆலிம்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.
தனது தன்னலமற்ற பொதுச் சேவைகளின் காரணமாக மதுரை எட்டெழுத்து முஸ்தபா ஹாஜியார் மதுரை முஸ்லிம் மக்களால் மட்டுமின்றி பிற ஊர்களிலுள்ள முஸ்லிம்களாலும் என்றும் நினைவு கூறப்படுவார். அவரது சேவையினை இறைவன் அங்கீகரிப்பானாக.
ஆதார நூல்கள்:
1. மலரும் நினைவுகள் – மாநில ஜமாஅத்துல் உலமா சபை வெளியீடு
2. அல் அமீன் மேல் நிலைப் பள்ளி 50 வது ஆண்டு மலர்.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ….
99767 35561