கொரோனா: புதிய உலக ஒழுங்கின் தோற்றத்தை காண்கிறோமா?

2020, 17 மார்ச் மாதம் வழா கன்பர் (வழ்ழாஹ் ஹன்பர் ‘ஷர்க் போரம்’ இன் தலைவராக இயங்குபவர். அல்ஜஸீராவின் முன்னாள் இயக்குநர்) ஆற்றிய உரையின் சுருக்கம்.

வரலாறு இப்போது புதியதொரு கட்டத்தை அடைந்திருக்கிறது.  சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்ற மாற்றங்கள் அதை நமக்கு உணர்த்துகின்றன. 

வரலாற்றில் என்றுமில்லாத அளவு உலகலாவிய பொருளாதார பிணைப்பையும், சர்வதேச தொழில்நுட்ப வலையமைப்பையும் இன்றைய உலகம் கொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. 

இரு வருடங்களுக்கு முன் ஸ்டீவன் பின்கர் (Steven Pinker) எழுதிய “Enlightenment Now” எனும் புத்தகத்தில் ‘மனித வரலாறு மிக உயர் இடத்தை அடைந்திருக்கிறது’ என்று சொல்வார். 

இன்றைய மனிதன் தன்னை கடவுளின் அந்தஸ்த்தில் வைத்துப் பார்க்கிறான். தன்னால் அனைத்தையும் சாதிக்க முடியும் என வாதாடிக் கொண்டிருந்த நேரத்தில்தான் “கொரோனா” வந்திருக்கிறது. அவனது வாதத்திற்கு எதிராக மிகப்பெரும் கேள்விக்குறியை வைத்திருக்கிறது.
தொற்றுநோய் ஒரு நோய் என்பதைத் தாண்டி மனிதனது சமூக, பொருளாதார, அரசியல் தளத்திலும் தாக்கம் செலுத்தக் கூடிய ஒன்றாக பரிணமித்திருக்கிறது. 

நாடுகளின் படையெடுப்புகளில் வீழாது, நெஞ்சுரத்தோடு போரிட்ட பேரரசுகள், கண்ணுக்குத் தெரியாத ஒரு நோயிடம் சரணடைந்து வீழ்ச்சியடைந்தது என்பது வரலாறு. வரலாற்றில் தோன்றிய மிகப்பெரும் தொற்று நோய்கள் இதையே நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. “போரால் உயிரிழந்தவர்களைவிட நோயால் உயிரிழந்தவர்கள்தான் அதிகம்” என்பார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
இனம் மொழி, மதம், நிறம், நாடு, கண்டம் என எந்தப் பேதங்களுமின்றி சரித்திரப் பேரழிவுகளை நிகழ்த்திய நூற்றாண்டு நோய்கள், பேரிழப்புகளின் துயர அனுபவம் மனித சமூகத்திற்கு உண்டு. ஆம், பிளேக், காலரா, ஃப்ளு, கொரோனா போன்ற தொற்று நோய்கள்தான் அவை.

01. Antonine Plague

கி.பி 165 இல் ரோமைச் சார்ந்த நாடுகளில் ஏற்பட்ட இந்த “பிளேக் தொற்று நோய், ரோம சாம்ராஜ்ய வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்” என  வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். நோய்த் தாக்குதலுக்கு ரோமானியப் பேரரசர்கள் மார்கஸ் அராலியஸ் ஆன்டனன்ஸ் மற்றும் இரண்டாம் லூசியஸ் வீரஸ் ஆகிய இருவரும் பலியாகினர். நோயால் மாண்டுபோன பேரரசரின் ஆன்டனன்ஸ் பெயராலேயே ’ஆன்டனைன் பிளேக்’ என்று அழைக்கப்பட்டது.

கி.பி. 165 முதல் 180 வரை தொடர்ந்த இந்த நோயால் சுமார் 50 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். வரலாற்று ஆய்வாளர்களின் கணக்குப்படி, இந்த நோய்த்தாக்கத்தால் ரோம் நகரில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 2,000 மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நோயிலிருந்து தப்பிக்க ரோம் நகர மக்கள் பெரும்பாலானோர் கிராமங்களை நோக்கி ஓடினர். இருப்பினும் நோய் அங்கேயும் பரவி பல்லாயிரக் கணக்கானோரின் மரணத்துக்கு காரணமானது. இருபது ஆண்டுகள் வரை தொடர்ந்து தாக்கிய நோயின் வீரியத்தால், ரோம் நகரில் மட்டும் அனுதினமும் சுமார் 5,000 பேர் மடிந்தனர். ரோமின் அப்போதைய கோரநிகழ்வுகளைக் கண்டு, அந்நாட்டின் கார்த்ரேஜ் நகரப் பாதிரியார் புனித சைபீரியன், “உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போல் எண்ணினேன்” என்கிறார். 


அரசியல் தளத்தில் மட்டுமல்ல மதத் தளத்திலும் தாக்கம் செலுத்தியது. பல தெய்வக் கொள்கையில் மூழ்கியிருந்த ரோம சாம்ராஜ்யம் தொற்று நோய்க்கு மத ரீதியாக சரியான விளக்கம் கொடுக்காததன் காரணமாக மக்கள் மதம் ‘மாற்று ஒன்றை’த் தேடினர்.
அப்போது அவர்களுக்கு விடையாக கிடைத்தது கிறிஸ்தவ மதம். அதை மக்கள் ஏற்றுக்கொண்டனர். ரோம் கிறிஸ்தவத்தின் மையப் பகுதியாக மாறிப்போனது.

02. Plague of Justinian

ஒன்றுபட்ட ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டாகப் பிரிந்தது ரோமப் பேரரசு. இந்தக் கிழக்கு ரோமப் பேரரசை `பைசான்டைன்’ பேரரசாக மறுமலர்ச்சி பெற வைத்தார் மன்னர் ஜஸ்டினியன். இவர் பல சாதனைகளின் சொந்தக்காரராக கருதப்படுகிறார். அவர் உருவாக்கிய சில சட்டங்கள் இன்னும் மேற்கத்திய சட்டங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன என்பது அவரது ஆளுமையை எடுத்துக் காட்டுகிறது.

கி.பி 541 – 543 இல் பைசாந்தியப் பேரரசுக்குள் அழையா விருந்தாளியாக வந்திறங்கிய பிளேக் தொற்று நோய் எகிப்து, கான்ஸ்டான்டினோபிள், அனடோலியா, (இன்றைய துருக்கியில் உள்ள நகரங்கள்) ஷாம் நாடுகளில் பரவத் தொடங்கியது.
கடைசியில், பைசான்டியப் பேரரசர் ஜஸ்டினியனும் இக்கொடும் நோயிடம் சரணடைந்தார். ஆகவேதான், இந்த நோய் `ஜஸ்டினியன் பிளேக்’ என்று அந்நாட்டுப் பேரரசனின் பெயராலேயே அழைக்கப்பட்டது. இறுதியில் கான்ஸ்டான்டினோபிளின் அரைவாசி குடிமக்கள் இத்தொற்று நோய் காரணமாக மரணித்தனர். 

பைஸாந்திய மற்றும் பாரசீக சாம்ராஜ்யங்களை பலவீனப்படுத்தியதில் இத்தொற்று நோய்க்கு பெரும் பங்கிருக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுவர்.

03. Black Death (1348)

இத்தொற்று நோய் வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. சீனாவில் இத்தொற்று நோய் 40% மக்களைப் பாதித்தது. தொற்று பீடித்தவர்களில் 90% த்தினர் மரணித்தனர். நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் ஒரு நாள் அல்லது இரு நாட்களே உயிர் வாழ்வர் எனும் நிலை இருந்தது.
எகிப்தில் ஒரே நாளில் 20,000 பேர் மரணித்தனர் என்பது இத்தொற்று நோயின் ஆபத்தை விளக்கப் போதுமானது. 

அன்றிருந்த 475 மில்லியன் சனத்தொகையில் 100 மில்லியன் மரணங்கள் ஏற்பட்டதாக வரலாறு பதிகிறது. 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவி வந்த நிலபிரபுத்துவ கட்டமைப்பில் இந்நோய் பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்தது. அதிகமானவர்கள் மரணித்ததன் கராணமாக, பணியாளர்கள் மேல் கவனம் செலுத்துவது கடினமானதாக மாறியது. நிலத்தின் சொந்தக்காரர்களது பொருளாதாரம் பெருத்த வீழ்ச்சியைக் கண்டது. 

இது தொழிலாளர்களுக்கு அதிக கேள்வியை உருவாக்கியது. காலப்போக்கில் அடிமைகளும், தொழிலாளர்களும் சுதந்திரத்தையும் போதுமான சம்பளத்தையும் வேண்டினர்.

மறுபக்கம் கிறிஸ்தவ ஆலயங்களால் தொற்று நோய்க்கான சரியான பதிலை முன்வைக்க முடியவில்லை. தொற்றுநோய் அடியார்களின் குற்றங்களுக்கான இறைவனின் தண்டனை என விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தன. 

அறிவுப்பூர்வமாகவோ திருப்தியளிக்கக் கூடியதாகவோ அவர்களது பதில் அமையாததன் காரணமாக மக்கள் அறிஞர்கள் பக்கம் திசை திரும்பினர். இங்கிருந்துதான் ஐரோப்பிய சிந்தனை எழுச்சி ஆரம்பிக்கிறது. பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என மூன்று கண்டங்களையும் ஒருசேர தாக்கியது. இந்த நோயால், இழந்த மக்கள்தொகையை ஐரோப்பா மீண்டும் எட்டுவதற்கு சுமார் 200 ஆண்டுகள் ஆயின என்பது வரலாறு.

04. Influenza (1918 – 1920)

H1N1 வைரசினால் உருவாகிய இத்தொற்று நோய் 500 மில்லியன் மக்களை பீடித்தது. இதில் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்கள் மரணமடைந்தனர். முதல் உலகப் போரின்போது மரணித்தவர்களது சடலங்களும் அன்று நிலவிய வறுமையும் இத்தொற்று நோயை மேலும் பரப்பின. 2009ம் ஆண்டு உருவாகிய Swine Influenza உம் இத்தொற்று நோயின் ஒரு வகையாகும்.

05 – கொரோனா பெருந் தொற்று

தொற்று நோய்களின் தொடராக இன்று தோன்றியிருக்கிறது கொரோனா. வரலாற்றில் தோன்றிய ஏனைய தொற்று நோய்களோடு ஒப்பிடும் போது மரணவீதம் குறைவானதாக இருப்பினும் கொரோனா வைரஸ் விட்டுச் செல்ல இருக்கும் வடுக்கள் மிகப் பயங்கரமாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
உலகம் இன்று மூடப்பட்டுள்ளது. இன்றைய மனிதன் சுதந்திரம் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்து எங்கும் செல்லலாம், எதையும் செய்யலாம் என வாதாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில்  வீட்டில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
வழிபாட்டுத் தளங்களும் மூடப்பட்டிருக்கின்றன. இறைத் தூதரது காலத்தில் கூறப்பட்ட “உங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்” என்ற வாசகம் மீண்டும் எல்லா இடங்களிலும் உச்சரிக்கப்படுகிறது. உலகம் எல்லா வகையிலும் முடங்கிப்போயிருக்கிறது.

உலகின் புதியதொரு தோற்றம்

உலகமயமாக்கலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையே இருக்கும் இறுக்கமான தொடர்பை அறிந்தவர்கள், உலகலாவிய பொருளாதார நெருக்கடி ஒன்று தோற்றம் பெறப்போகிறது என்பதை சில ஆண்டுகளாகக் கூறி வருகிறார்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி நகரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கொரோனா வைரஸ் இந்த வீழ்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது.

அண்மைய வரலாற்றில் பெரிய அளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட கட்டங்களாக 1929, 2008 மற்றும் தற்போதைய காலகட்டத்தை ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். ஒரு பெரும் நெருக்கடியை நோக்கி மேற்கத்திய நாடுகள் நகர்கின்றன.

கொரோனா காரணமாக மூடப்பட்ட சீனாவின் தொழிற்சாலைகள் தற்போது பழைய நிலை நோக்கி நகர்ந்து வருகிறது. சீனாவின் ஆட்சி தனியரசாங்கமாக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கலாம். இந்நிலை அமெரிக்காவிலோ ஐரோப்பிய நாடுகளிலோ இல்லை. அந்நாடுகள் வைரஸ் மீது முழுக் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்நிலைமையில் ஏனைய நாடுகள் தங்களின் தேவைகளுக்காக ஐரோப்பிய நாடுகளிடம் செல்வதை விட சீனாவிடம் செல்ல வாய்ப்புகள் அதிகம்.

குறிப்பாக மருத்துவ சாதனங்களை வரவழைப்பதிலும் மருத்துவ அனுபவத்தை பறிமாறிக் கொள்வதிலும் சீனா மீது சாயக் கூடிய நிலை தோன்றியுள்ளது.

ஐரோப்பா பொருளாதார நெருக்கடியும் குழுவாதமும்


2008 காலப் பிரிவிலிருந்து ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற நாடுகளை குறிப்பாக சொல்லலாம்.

வீழ்ச்சி நோக்கி நகரும் காலப் பகுதியில் அங்கு குழுவாதம் வேரூன்ற ஆரம்பித்தது. ஒவ்வொரு குழுவும் தன் நலன் மீது அதீத கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. கொரோனா இப்போக்கை இன்னும் வலுப்படுத்துவதாக அமையலாம்.

ஐரோப்பிய கூட்டுறவு என்பதற்குப் பதிலாக சுயநல குழுவாதம் என்பது இன்னும் வலுப்பெறும். இப்போக்கு ஐரோப்பாவின் சிக்கலை மேலும் மோசமாக்கும் வாய்ப்புள்ளது. 

இருப்பு சார்ந்த புதிய அர்த்தங்கள்

மனித சமூகம் எதிர்கொண்ட மிகப் பெரிய நெருக்கடிகளை நிர்வகிப்பதில் இரு வகை போக்குகள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன.
முதல் வகை : மானுடம் சார்ந்த போக்கு.
இரண்டாவது வகை : சடவாத போக்கு.

முதல் வகை, மனிதர்கள் அனைவரும் சமம் எனும் கோட்பாட்டை முன்வைக்கிறது. இரண்டாவது வகை பலம் கொண்ட மனிதன் வாழ்வதற்கும், பலவீனமானவன் மரணத்துக்கும் தகுதி பெறுகிறான்  எனும் டார்வினின் வாதத்தை முன்நிறுத்துகிறது. ஹிட்லருடைய அணுகுமுறையை சரிகாண்கிறது.

உதாரணமாக 100 நோயாளிகள் இருக்கிறார்கள். 20 உபகரணங்கள்தான் இருக்கின்றன. இக்கட்டத்தில் சடவாத போக்கு கொண்டோர் அதை நோயாளிகளில் இளைஞர்களுக்கு கொடுக்கும்படியும் வயதானவர்கள் உயிர் வாழ்வதால் எவ்வித பயனும் இல்லை எனும் முடிவுக்கு வருகிறார்கள்.

சரிமாற்றமாக, மானுடம் சார்ந்த போக்கு கொண்டோர் மூத்தவர்களை முற்படுத்துகிறார்கள். பெற்றோருக்கு முதன்மை அந்தஸ்த்து கொடுக்கிறது. இதுவே மானுடம் சார்ந்த நிலைப்பாடு. சரியான நிலைப்பாடு.

“மார்க்க உரையாடல்” புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது

நாம் வாழ்வது புதியதொரு சூழல். நமது பிரச்சினை புதியது. இன்று தோன்றும் பிரச்சினைகளுக்கு பாரம்பரிய தீர்வுகளை தேடுவது எந்தளவு பொருத்தமானது? பாரம்பரிய மார்க்க உரையாடல் முறை இன்றைய தேவைகளை எந்தளவு நிவர்த்தி செய்து கொடுக்கிறது? தீர்வுகள் நோக்கிய உரையாடல் அவசியமானது. நடைமுறை, சூழல் சார்ந்த உரையாடல் தேவையானது. கண்மூடி பின்பற்றும் பாரம்பரிய சிந்தனையிலிருந்து பண்பாட்டு விழுமியங்களுடன் காலத்துக்கு ஏற்ற மானுடம் சார்ந்த உலகலாவிய சிந்தனை நோக்கி நகர வேண்டியுள்ளது. இதுவே புதியதொரு நாகரீக முன்மாதிரியை கொடுப்பதாக அமையும்.

பேராசை பிடித்த நாகரீகத்தின் விளிம்பில்

இன்றைய உலகைப் பார்க்கும் போது பேராசையின் உச்சத்தில் இருப்பதாகக் கருதலாம். 1% பெரும் செல்வந்தர்கள் 3.8 பில்லியன் மக்களது சொத்துக்கு நிகரான சொத்தை வைத்திருக்கின்றனர். பணக்காரன், ஏழை இடைவெளி என்றுமில்லாதளவு விரிவடைந்திருக்கிறது. மிகவும் வசதிபடைத்த நாடாக கருதப்படும் அமெரிக்காவில் 20 மில்லியன் மாணவர்கள் பாடசாலை செல்வது அங்கு பரிமாறப்படும் காலையுணவைப் பெற்றுக் கொள்வதற்காகவே என்று சொல்கிறது ஒரு ஆய்வு.
உலக ஒழுங்கு மிகப்பெரியதொரு மாற்றம் நோக்கி நகர வேண்டும் என்பதையே இவையனைத்தும் சுட்டிக் காட்டுகின்றன. நீதி, நிலைத்த தன்மை கொண்ட சர்வதேச பொருளாதார மாதிரி ஒன்றை தேடுவதும் கலந்துரையாடுவதும் இன்றைய அவசரத் தேவையாக உள்ளது.

இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிரபஞ்ச ஒழுங்கில் அத்துமீறல்

“அல்லாஹ் ஒரு கிராமத்தை உதாரணம் கூறுகிறான். அது அமைதியானதாகவும் திருப்தியானதாகவும் இருந்தது. அதற்குரிய அருள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நிரப்பமாக வந்துகொண்டிருந்தது. அக் கிராமம் அல்லாஹ்வின் அருள்களில் அத்துமீறியது. எனவே அவர்கள் செய்துகொண்டிருந்ததன் (அநீதி) காரணமாக அல்லாஹ் பசி, பயத்தை சுவைக்கச் செய்தான் (நஹ்ல் 112).

ஆஸ்திரேலியா, அமேஸான் காட்டுத்தீ நமக்கு பல பாடங்களை கற்பித்திருக்கிறது. உலகை நாம் சீரழித்துக் கொண்டிருக்கிறோம். நாம் இன்னும் படிப்பினை பெறவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
புவி வெப்பமைடைதல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இயற்கை மீதான நமது அத்துமீறலின் விளைவை மனிதன் கட்டாயமாக அனுபவித்தே ஆக வேண்டும். இறுதியில் பாதிக்கப்படுவது மனிதனாகவே இருப்பான்.

நாம் அறிந்திருக்கும் உலகின் முடிவு

நமக்கு முன் இரு தேர்வுகள் இருக்கின்றன. ஒன்று மனிதர்கள் பரஸ்பரம் உதவி, ஒத்தாசை செய்து உலகை நல்ல நிலைக்கு நகர்த்துதல். அல்லது ஒவ்வொரு குழுவும் தன் நலன் மீது கவனம் குவித்து ஏனையவை மீது அத்துமீறி அழிவை நோக்கி நகர்தல். 

இன்றைய உலகைப் பார்க்கும் போது இரண்டாம் தேர்வு மிகைக்க வாய்ப்பிருக்கிறது. ஏனைய மனிதன் மீது, குழுக்கள் மீது, நாடுகள் மீது அத்துமீறக்கூடிய மனோநிலையில்தான் உலகம் இயங்குகிறது. அடுத்த நாடுகளது வளங்களை சூரையாடி தன் நாட்டை அபிவிருத்தி செய்யும் நிலை இன்னும் அதிகரிக்கலாம் எனும் நிலை.

பெரும் போராட்டங்கள் கூட உருவாக வாய்ப்புள்ளது. இவ்வகையான சவால்களைத் தாண்டி முதல் தேர்வை நோக்கி உலகை நகர்த்துவதுதான் நமது முதன்மையான பணி.