

காந்தியை இந்தியா புரிந்துகொள்ளவில்லை.
1. தமிழ் இலக்கியத்தில் விவசாயிகளின் பாடுகளை உங்கள் அளவுக்கு வேறு யாரும் நுட்பமாக பேசி இருக்கிறார்களா தெரியவில்லை. விவசாயம், விவசாயிகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?
எங்கள் (கோவில்பட்டி) பகுதியில் விவசாயத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்கு காரணம் நீரும் கிடையாது, மழை நீரும் கிடையாது. ஆறுகள் போன்றவைகளின் வரத்துத் தண்ணீரும் கிடையாது. இவைகள் இல்லையென்றால் விவசாயமும் கிடையாது. இது போன்ற காரணங்களால் விவசாயிகள் காலத்திற்கு காலம் பின்னடைவையே சந்தித்து வருகிறார்கள்.
2. விவசாயத்தின் வீழ்ச்சி சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
சமூகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எப்படின்னா, நெல் அறுவடை அதிகரித்து இருப்பது போல செய்திகளை கேட்கிறோம். நியாயப்படி பார்த்தால் அரிசி பற்றாக்குறை இல்லாமல் இருக்கனும். ஆனால் அப்படியில்லை. நம்மிடம் நெறைய பணம் இருக்கிறது. அரிசி தேவை அதிகரித்தால் நாம் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று அரசாங்கம் கணக்குப் போடுகிறது. விவசாயத்தின் வீழ்ச்சியை முழுமையாக இப்போது நம்மால் உணர முடியவில்லை. அந்த சூழல் வந்தால் தான் நெருக்கடி தெளிவாகத் தெரியும்.
3. பழங்களையும் தானியங்களையும் உண்ணும் பறவைகளின் மாமிசமே ருசியாக இருக்கும் என்று பதிவு செய்துள்ளீர்கள். சைவம் – அசைவம் என்பதை மேலோர் – கீழோராகப் பார்க்கும் மனநிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது பைத்தியக்காரத் தனமான பார்வை. சாப்பாட்டை வைத்து எதுவும் சொல்ல முடியாது. பறவைகளையே சாப்பிடும் ஒரு பிரிவு. மிருகங்களையே சாப்பிடும் இன்னொரு பிரிவு. அரிசியையே சாப்பிடும் மற்றொரு பிரிவு. இது நாவு மற்றும் ருசி சம்பந்தட்ட விஷயங்கள்.
இதில் குறிப்பிட வேண்டிய விசயம் மிருகங்களுடன் பழகிப் பழகி அவைகளை சாப்பிடுவதற்கு மனமில்லாமல் விட்டு விடும் மனநிலை மக்களிடம் உருவானது. சிலர் ஆட்டை சாப்பிடுவார்கள். மாட்டை சாப்பிடவேமாட்டார்கள். அதற்கு காரணம் அதை தெய்வாம்சமாகப் பார்க்கும் அவர்களின் மனநிலை.
பிராமனர்கள் மாமிசம் சாப்பிடுபர்களாக இருந்துள்ளார்கள். யாகத்தில் பசுமாடுகளை பலியிட்டு அதை உண்ணும் பழக்கம் அவர்களிடம் இருந்துள்ளது. அது இப்போது இல்லை. சமயத்திற்கு ஏற்றார் போல் அவர்கள் பேசுவார்கள். அவர்களிடம் நாம் எதுவும் பேச முடியாது. யாகம் பன்னாமா சாப்பிட மாட்டோம் என்பார்கள். பின்பு யாகம் செய்து விட்டோம் பிரசாதமாக சாப்பிடுகிறோம் என்பார்கள்.
4. நீர்நிலைகள், பயிர்த்தொழில், விவசாயக் கருவிகள், பாலை உறைய வைப்பது, எண்ணெய் தயாரிப்பது, மூலிகை மருத்துவம், நாடி வைத்தியம், பருத்தி நூல் எடுப்பது போன்ற தற்சார்பை இழந்திருக்கும் நவீன இந்தியாவை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நாடுகள், நிறுவனங்கள் உட்பட எல்லோரும் எதைச் செய்தாலும் அதை தான்தான் செய்ய வேண்டும் என்று பேராசைப்படுகிறார்கள். பெருகிவிட்ட இந்த பேராசையின் விளைவாக நம்மிடமிருந்த தற்சார்பை இழந்திருக்கிறோம். இது இப்படியே போகுமா என்று தெரியவில்லை.
(((((என்னுடைய “கருவேப்பிலை” சிறுகதையில் பருந்துப் பருத்தி பழக்கம் குறித்து சொல்லியிருப்பேன். அதாவது பருத்தி பயிர் செய்து, அது அறுவடை முடியும் காலத்தில் கடைசியாக இருக்கும் பருத்தியை கூலிக்காரர்கள் பறித்து அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். வயல் உடமையாளர்களும் விட்டு விடுவார்கள். அந்த))) பெருந்தன்மை குறைந்து விட்டது.
மனிதர்களிடம் இறக்கம் கருணை அன்பு ஆகிய பண்புகள் முழுமையாக அற்றுப் போய்விடாது தானே!
5. கடிதங்கள் மூலம் உலகம் பல இலக்கியங்களைக் கண்டுள்ளது. காலச் சுழற்சியில் நவீனம் தந்துள்ள மின்தகவல்கள் அந்த இடத்தை எவ்வாறு தக்க வைத்துள்ளது?
(((நேரு எழுதியது கடிதம் அல்ல. அண்ணாதுரை எழுதியதும் கடிதம் அல்ல. அது கட்டுரை. அரசியல்வாதிகள் எழுதியது எப்படி கடிதமாகும்?))) கடிதம் என்பது மனதை தொடும் விஷயம். ஒருவர் மற்றவரிடம் மனம் விட்டு பேசும் வழிதான் கடிதம். இன்றைய மின் தகவல்கள் கடிதத்தின் இடத்தை முழுமைப்படுத்தவில்லை. கடிதத்தில் இருந்த உயிரோட்டம் இதில் இல்லை. ஆனாலும் இதுவும் கடிதத்தின் ஒரு வடிவம்தான்.
6. கோபல்லபுரம் மக்கள் கதைகளில் மரக்கலப்பை, மின்சாரம், இரயில் ஆகிய புதிய கண்டுபிடிப்புகளின் வருகையையும் அதை மக்கள் ஒவ்வாமை மற்றும் பயத்துடன் எதிர்கொண்டதையும் பதிவு செய்திருப்பீர்கள். ஒவ்வொரு காலத்திலும் மக்களின் மனநிலை இவ்வாறே இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அது மக்களின் இயல்புதான். சிமெண்ட் புதிதாக புழக்கத்திற்கு வந்த போது மக்கள் யாரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கேஸ் வந்த போதும் அப்படித்தான். ஆனால் பிராமனர்கள்தான் இவற்றை முதலில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இப்படி புதியவைகளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதுதான் அவர்கள் எதிலும் முன்னால் இருப்பத்தற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.
7. மனித நுண்ணுனர்வுகளை, உடல் அசைவின் மூலம் மனிதர்களின் உளவியலை எப்படி கண்டடைகிரீர்கள்?
இதை நீங்களும் செய்ய முடியும். எப்படியென்றால் ஒரு மனிதனை கவனித்துக் கொள்வதில் உங்கள் சுராஷ்யம் இருந்தால் அவனை கவனித்துக் கொண்டே இருப்பீர்கள் தானே! நீங்கள் மனிதர்களை நுணுக்கமாக கவனிக்க கவனிக்க உங்களுக்கும் எல்லாம் தெரிய வரும். மாட்டை நீங்கள் கவனித்துக் கொண்டே இருந்தால் அதுவும் உங்களை சிநேகிக்கத் தொடங்கும். மாடு மாத்திரம் அல்ல! மற்ற மிருகங்களும் அதுபோல்தான்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். ஆண்டன் ஷெகாவ் ஒரு கதை எழுதியிருக்கான். சமீபத்தில் தான் நான் அதை படித்தேன்.
பிச்சை எடுப்பதையே முழுநேரமாக செய்யும் பிச்சைக்காரன். ரொம்ப சாமர்த்தியமா பிச்சை எடுப்பான். யாரிடமும் பிச்சை வாங்காமல் விட மாட்டான். ஒரு வழக்கறிஞர் பிச்சைக்காரனை சந்திக்கிறார். இவனை பிச்சை வாங்குவதில் இருந்து நிறுத்தி எப்படி திருத்துவது என்று சிந்தித்தார்.
ஒருநாள் பிச்சைக்காரனை சந்தித்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்றான் அவன். வா நானும் சாப்பிடத்தான் வீட்டிற்கு செல்கிறேன் என்று அழைத்துக் கொண்டு போனார். இருவரும் சாப்பிடனர். பிச்சைக்காரன் சாப்பிட்டது போக சிகரெட் கேட்டு வாங்கி பயனபடுத்திக் கொண்டான். இவனுக்கு யாருமே சரியாக வேலை கொடுக்கவில்லை, அப்படி கிடைத்தால் நான் பிச்சை எடுக்க மாட்டேன் என்று சொல்கிறான் என மனைவியிடம் சொல்கிறார்.
மனைவி சொன்னார் இவன் மேல் உங்களுக்கு ஏன் இந்த அக்கரை கூப்பிட்டு வந்தீர்கள் சாப்பாடு கொடுத்தாச்சு அதோட விட வேண்டியதுதானே! அவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான் என்றார்.
அப்படியில்லை ஒரு மனிதனை இப்படியே விடுவது எனக்கு அநியாயமாகத் தெரிகிறது. இவனுக்கு மூன்று மாத உணவு கொடு. என் கணக்கிலானாலும் சரி. உங்கள் கணக்கிலானாலும் சரி என்றார் கணவர்.
கடைசியில் பிச்சைக்காரன் அவர்கள் வீட்டிலேயே தங்கினான். சாப்பிடுவான், சிகரெட் வாங்கிக் கொள்வான். மாடியில் போய் படுத்துக் கொள்வான். இப்படியே நாட்கள் போனது. அங்கு வீட்டு வேலை செய்யும் ஒரு பெண் இருந்தாள். அவள் தன் வேலைப் பளு, குடும்பக் கஷ்டம் ஆகியவற்றை புலம்பிக் கொண்டே இருப்பாள். இவனும் அதை கேட்டுக் கொண்டே இருப்பான்.
நாளாக நாளாக அந்த பெண்ணின் புலம்பல் இவனிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கஷ்டத்தை கேட்பதின் மூலமாகவே அவன் மாறி விடுகிறான். நாம் செய்வது ரொம்ப அக்கிரமம் என்பதை உணரத் தொடங்கினான்.
இது ஒரு நுட்பமான கதை.
கதைகள் சொல்லி மனதை மாற்றி விடலாம் என்று சொல்கிறோம் என்பது உண்மைதான். நபிகள் நாயகம் கூட தங்கள் வாழ்வில் பல கதைகளை சொல்லி மக்களிடம் புரியவைத்துள்ளார்கள். ஆச்சரியமான பல நல்ல விஷயங்களை அவர் சொல்லியுள்ளார்.
8. நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ள நீங்கள் சிறார் கதைகளும் எழுதியுள்ளீர்ர்கள். குழந்தைகளுக்கு எப்படி கதை எழுத வேண்டும்?
நம்முடைய ஆடு மாடு ஆகியவைகளுடன் கதையின் கதாபாத்திரங்களை பேசச் செய்யுங்கள். குழந்தைகளுக்கான கதை கிடைக்கும்.
9. இசையின் மீது தேட்டம் உள்ளவர் நீங்கள், இசை ஒலிகள் மனித உணர்வுகளில் என்ன ஆதிக்கம் செலுத்தும்?
கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசை ஆகியவைகள் தான் உண்டு வேறு இசை வடிவங்கள் இல்லை என்று எண்ணியிருந்தேன். ஆனால் இசை எல்லா மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதலில் இஸ்லாமியர்களிடம் இசை குறித்து ஒன்றுமில்லை என்று நினைத்திருந்தேன். அல்லாஹ்வை நினைத்து உருகி உருகிப் பாடும் ஹனீஃபாவின் பாடல்கள், வட இந்தியாவில் உள்ள இஸ்லாமிய இசை மேதைகள் பலபேர் இருந்திருக்கிறார்கள்.
பொதுவாக சராசரி இசை எப்போது கனிகிறது என்றால் வயோதிகத்தில்தான். இறைவனை சேர வேண்டும். என்னை அங்கீகரித்துக்கொள் என்ற முறைப்பாடாக வயோதிகம் கழிகிறது. இசையின் வழியாக பலர் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்.
10. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அளவுக்கு இடதுசாரிகள் வெற்றி பெற இயலாமல் போனது ஏன்?
இடதுசாரிகளின் தவறுகள் தான் அதற்கு காரணம். தோழர் ஜீவாநந்தம் “நாம் மொழியை கையில் எடுக்க வேண்டும் என்று சொன்ன போது?! பாட்டாளி மக்கள் சிரமத்தில் இருக்கும் போது நமக்கு மொழி முக்கியமில்லை!” என்றார்கள் மற்ற இடதுசாரி தலைவர்கள். ஜீவாநந்தம்தான் பற்றோடு இருந்தார். மற்றவர்கள் தண்டத்துக்குப் பேசினார்கள். ஜீவா தான் மக்களின் உணர்வுகளை மதித்து நடந்தார். ஜீவாநந்தம் சொல்லியதை கேட்டிருக்க வேண்டும். அதை செய்யாதது பெரும் பிழை. மொழிங்கிறது மக்களின் உணர்வோடு கலந்தது. இடதுசாரிகள் இந்த மண்ணின் தன்மையை புரிந்து நடந்திருக்க வேண்டும்.
11. மக்களிடம் மொழி சார்ந்த உணர்வுகள் இன்று மேலோங்கி இருக்கிறதா?
மக்களின் மொழியுணர்வு முழுமையாக மறைந்து விடாது. பக்தி என்ற பெயரில் மக்கள் திசை திருப்பப்படுவார்கள். மொழி – பக்தி எது மக்களிடம் ஊட்டப்படுகிறதோ அதன் பக்கம் மக்கள் சாய்வார்கள்.
ஆனால் இரண்டும் எப்போதும் மக்களின் உணர்வாக இருக்கும்.
12. காந்தி குறித்த உங்களது பார்வை என்ன?
இந்தியா காந்தியை புரிந்துகொள்ளவில்லை. ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் “காந்தி சுயநலவாதி கிடையாது.” சுதந்திரத்திற்கு முன்பு இடைக்கால அரசு அமைத்துக் கொள்ளும்படி பிரிட்டிஷ் அரசாங்கம் சொன்னது நேரத்தில் யாரை பிரதம மந்திரியாக்குவது என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். காந்தி “ஜின்னாவை பிரதமராக்குங்கள்” என்றார். ஏன் ஜின்னா என்று கேட்கப்பட்ட போது ”பகைமை ஒழிய வேண்டும்” என்றார் காந்தி. மக்களை எப்படி பகைமையாக்கி வைத்திருக்கிறோம். பிரிவினையின் போது ஒரு போரின் பெரும் இழப்புகள் போல பல்லாயிரம் மனித உயிர்கள் பறிபோனதை அறிவோம். அந்த பகைமை தீர வேண்டும் என்று நினைத்தவர் காந்தி.
நேருவை விட காந்தியிடம் மனிதத் தன்மை, கருணை, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மீது அவர் காட்டிய பரிவு ஆகியவை மேலோங்கி இருந்தது.
பாகிஸ்தான் பிரிந்து சென்ற முதல் மாதத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு நாம் உதவ வேண்டும் என்றார் காந்தி. நமக்கே பெரும் பொருளாதார சுமை இருக்கிறது என்று மற்றவர்கள் சொன்ன போது. நாம் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு கொடுங்கள் என்று சொன்னவர் காந்தி.
மதுரைக்குப் போனார். அங்கு மக்கள் கீழாடையாக வேட்டியும் மேலே ஒரு துண்டுடன் இருப்பதைப் பார்க்கிறார். தன் தலை மீது இருந்த தலைப்பாகையை கழட்டி வீசினார். ஆடை விஷயத்தில் கூட தனக்கு அவர் நேர்மையாக இருந்தார். இப்படியான மனிதர்களைப் பார்ப்பது அரிது.
இது சரி, இது சரியல்ல என்று அவரிடம் சொல்லப்பட்டால் அது குறித்து யோசிப்பார். எந்த நிமிடத்திலும் தன்னை மாற்றிக் கொள்ள தயாராகவே இருந்தார்.
13. காந்தியத்தை கை விட்டு விட்டு காங்கிரஸ் வேறு பாதையில் செல்லக் காரணம் என்ன?
காந்தி பிடிவாதக்காரராக இல்லாதது இதற்கு முக்கியமான காரணம். சுயராஜ்ஜியத்திற்காக போராடினோம். இப்போது சுதந்திரம் அடைந்து விட்டோம். நமது கொடியை தேசியத்துக்கு கொடுத்து விடுவோம். காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுவோம் என்ற கருத்தை சொல்லி இருக்க வேண்டும். எந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை.
சத்தியத்திற்காக வாழ்பவர்களால் மட்டும்தான் இது போன்ற கருத்தை சொல்ல முடியும்.
14. இன்றைக்கு நடைபெறும் அரசியல் அடக்குமுறை, வன்முறை ஆகியவற்றை எப்படி பார்க்கிறீர்கள்?
மனிதர்களுக்குள் இருக்கும் உயர்ந்த குணங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் தாழ்ந்த குணங்களைப் பார்க்க ஆரம்பித்தால் இவர்களைப் போல் ஒரு நீசன்கள் உலகத்தில் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.
15. தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன?
முஸ்லிம்கள் மலைபோல் எழுதிக் குவித்துள்ளார்கள். அவைகளை நாம் படிக்கவில்லை. காரணம் நம்ம விஷயத்த படிப்பதற்கே நமக்கு நேரம் இல்லை. கொடிக்கால் சேக் அப்துல்லாஹ்வை அறிந்து போது ஆச்சிரியப்பட்டுப் போனேன். எவ்வளவு பெரிய மனிதர் என்று.
நமக்கு சிறு பிராயத்திலிருந்தே முஸ்லிம்கள் மேல் ஒரு துவேஷத்த உண்டு பன்னிட்டாங்க. தவிர முஸ்லிம்கள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியவைகள் நிறைய இருக்கிறது.
16. முஸ்லிம் சமூகம் குறித்த உங்களுடைய பார்வை?
அவர்கள் தங்கள் போக்கில் இருக்கிறார்கள். வேறு எதிலும் அவர்கள் தலையிடுவதில்லை. என்ன கேலி செய்தாலும் அவர்கள் நம்மை சட்டை செய்யமாட்டார்கள். ஒரே ஒரு விஷயம் அவர்களுக்கு பிடிக்காது. அவர்களது மத ரீதியான கேலிகள் அவர்களுக்கு பிடிக்காது. அவர்களது அல்லாஹ்வையோ தூதரையோ எதுவும் சொல்லக்கூடாது. அதை அவர்கள் சகிக்க மாட்டார்கள். அது கெட்ட பழக்கம் என்று சொல்ல முடியாது. அது அவர்களின் இயல்பு.
வரலாற்றிலும் இப்போது எத்தனையோ கோவில்களுக்கும் முஸ்லிம்கள் நிலம் வழங்கி இருக்கிறார்கள். தர்ம காரியங்கள் செய்திருக்கிறார்கள்.
17. முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ஒரு சின்ன உதாரணம் நாடார் சமூகம் இருக்குல்ல அந்த சமூகம் வந்து எப்படி கிளர்ந்து எழுந்தது சங்கங்கள் வைத்து மகிமைகள் வைத்து அவர்களுக்குள்ளேயே பணம் வசூல் செய்து ஒரு பேங்க் ஒன்னு ஆரம்பிச்சாங்க.
அவர்களது கல்வி சமாச்சாரம் அப்புறம் அவர்களது அரசியல் ஈடுபாடுக மிகவும் கவனிக்கத்தக்கது. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு துறைகளிலும் பங்கெடுத்திருப்பார்கள்.
தமிழகம் அறிந்த, லண்டனில் படித்த இரண்டு பாரிஸ்டர்கள். ஒருவர் தமிழ் நாட்டின் இதழியல் முன்னோடி, தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தன், இரண்டாமவர் இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவரான கே.டி.கே. தங்கமணி ஆகியோர் நாடார் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அந்த சமூகத்தின் முன்னோடிகள். அவர்கள் படித்து என்னவாக ஆனார்கள் என்பதை இன்று நாம் பார்க்கிறோம்.
அந்த சமூகம் வேகமாகவும் மிகவும் கவனமாகவும் மேலே வந்தார்கள். அவர்களது முன்னேற்றத்தைக் கண்டு பிராமணர்களே மூக்கால் அழுதுகொண்டிருக்கிறார்கள்.
பிராமணர்கள் ஏன் பின் தங்கினார்கள் என்றால் நாங்க ரொம்ப உசத்தியாக்கும் அப்படின்னு நெனச்சிக்கிட்டே அவர்கள் கீழே சென்று விட்டார்கள். ஆனால் முஸ்லிம்கள் நாங்கள் உசத்தி அப்படிங்கிற மாதிரி போகல! நாடார்களைப் போல திட்டமிட்டு செயல்பட்டால் சமூகம் எங்கேயோ போய் விடும்.
((((((முஸ்லிம்களின் கல்வி சமூக மேம்பாட்டுக்கு உங்களுடைய கருத்துக்கள் என்ன?
எனக்கு சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்கு என்ன குறைச்சல் அப்படி எதுவும் இல்லையே! கல்வியில் மேம்படுவதற்கு அரசாங்க ரீதியான ஒத்துழைப்புகள் இல்லையோ! (என்று நம்மிடம் கேட்டார்)))))
…..
18. தமிழகத்தில் எல்லா முஸ்லிம்களுக்கும் மற்ற மக்களுக்கும் இருக்கும் உறவு குறித்து பார்வை என்ன?
இங்குள்ள நாயக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாமன் – மாப்பிள்ளை உறவுமுறை இருக்கிறது. ஆசாரிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு உறவு இருக்கிறது.
ஒவ்வொரு வைனவக் கோவிலுக்குள்ளும் ஒரு சின்ன கோவில் இருக்கும். அந்த கோவிலில் ஒன்று துலுக்க நாச்சியார் கோவில். (((((இவர் எப்படி வருகிறார். ஒரு துலுக்க ராஜாவின் மகள் கிருஷ்ணனின் பொம்மைக்கு ஆசைப்படுகிறார். தந்தை ராஜா மறுக்கிறார். மகள் பிடிவாதமாக இருக்கிறார். என்ன செய்வதென்று புரியாத சூழலில் மகளிடம் சொல்கிறார். அந்த பொம்மையை நீ கூப்பிடு அது உன்னிடம் வந்தால் நீ எடுத்துக்கொள் என்கிறார் தந்தை. மகள் நாச்சியார் அழைக்கிறார் அந்த பொம்மை இவளோடு ஒட்டிக் கொள்கிறது. அதன்பிறகு நாச்சியாரை விட்டு விட்டு பெற்றோர் சென்று விடுகிறார்கள். நாச்சியார் தங்கி நீண்ட காலத்திற்குப் பிறகு மரணமடைகிறார். அவளை கோவில் வைத்து வணங்கினார்கள். அதுதான் துலுக்க நாச்சியார் கோவில்.))))
இப்படி பல இணக்கங்கள் வரலாற்றில் இருக்கிறது. குரோதம் இருப்பது போன்ற வரலாறு நமக்கு இல்லை.
உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். வெள்ளைக்காரன் காலத்தில் சர்க்கார் பணம் வந்து சேரும் கருவூலம் முதலில் பாளையங்கோட்டையில் இருந்தது. அதன் பின்பு கோவில்பட்டியில் கிளை திறந்தார்கள். கோவில்பட்டி கருவூலத்தில் சேரும் பணத்தை சுமந்துகொண்டு பாளையங்கோட்டை கொண்டு செல்ல வேண்டும். அந்த பணத்தை சுமந்து செல்லும் நபர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர், அவர் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள மணியாச்சியின் தலையாரி. அவனது சிநேகன் கயத்தாரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரர். இருவரும் பணத்தை சுமந்து செல்வார்கள்.
கொள்ளைக்காரர்கள் இதை நோட்டுமிட்டு இருவரில் ஒருவரை அடித்தால் தான் பணத்தை கைப்பற்ற முடியும் என திட்டமிட்டார்கள்.
குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் இருவரையும் தாக்கத் தொடங்கினார்கள். அந்த தலையாரி முஸ்லிம் சகோதரனிடம் நீ தப்பிச்சு போயிடு என்று சொன்னார். நான் போஅக் மாட்டேன் என்று சொல்லிவிட்டார் முஸ்லிம். கொள்ளைக்காரர்கள் இருவரையும் அடித்துப்போட்டு பணத்தை எடுத்துப் போய் விட்டார்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முஸ்லிம் தனது தோழன் தலையாரியை கைத்தாங்கலாக அழைத்துச் செல்லும் வழியில் தலையாரி இறந்து விட்டார்.
பாதையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளிடம் தலையாரியின் வீட்டில் செய்தியை சொல்லி விடுங்கள். எனக்கு குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் என்று கேட்ட சிறிது நேரத்திலேயே அந்த முஸ்லிம் சகோதரரும் இறந்து விட்டார். பின்னர் அந்த தலையாரியின் சமூகம் இறந்த முஸ்லிம் சகோதரருக்கு மரியாதை செய்தார்கள். ஒரு மனிதர் கொலை செய்யப்பட்டால் அவர் இறந்த அன்று கும்பிடுவார்கள். அல்லது ஒரு விழாவாக கொண்டாடுவார்கள். இறந்தவர்களை மரியாதை செய்யும் விதமாக இறந்த அந்த பாதையில் செல்பவர்கள் கற்களை போட்டுச் செல்வார்கள். அது குவியலாக மாறும். (கட்டபொம்மனுக்கும் அது போன்ற கல் குவியல் இருந்தது. மண்டபம் கட்டும் போது அதை நிறைத்து விட்டார்கள். அது போன்று செய்திருக்கக் கூடாது அது மக்கள் செய்த மரியாதை.) கயத்தாரில் இருந்து குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு கொடியை சுமந்து வந்து நட்டு வைப்பார்கள். எதற்காக இதை செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. இது குறித்து கயத்தாறில் விசாரித்தால் கூடுதல் விவரங்கள் தெரியலாம்.
இடைச்செவல் என்பது எனது கிராமத்தின் பெயர். பத்தமடை என்ற ஊரில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்துக்கு இடைசெவலோன் என்று பெயர். இப்படி இருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கும். இப்படி தமிழகத்தில் வாழும் சமூகங்களுக்கு இடையே இடப்பெயர்வுகள் அனேகம் நடந்திருக்கிறது.


































