
(பின்னாட்களில் வரும்) ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் உண்மையும் நீதியும் மிக்க அறிஞர் கூட்டம் இந்தக் கல்வியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதன் மூலம், எல்லை மீறுவோரின் புரட்டல்களையும், பொய்யர்களின் புனைவுகளையும், மூடர்களின் தவறான விளக்கங்களையும் புறந்தள்ளச் செய்வார்கள். (நூல் : பைஹகீ- 51)
மேற்கண்ட ஹதீஸில் “கல்வி” எனக் குறிப்பிடப்பட்டிருப்பது குர் ஆன், ஹதீஸ் சார்ந்த மார்க்கக் கல்வி தான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில், கல்வி என்பதன் மறு பெயர் ஹதீஸ் கலை சார்ந்த கல்வி தான் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் அனைவரும் ஹதீஸ் கலையைக் கற்பதிலும், கற்பிப்பதிலும் முழுமூச்சாய் ஈடுபட்டிருந்த காலம் அது. பெரும்பாலான ஹதீஸ் நூல்கள் இக்காலத்திலேயே தொகுக்கப்பட்டன.
பொதுவாக, ஹதீஸ் நூல்கள் அவற்றின் பாடத் தலைப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்படும். இத்தகைய தொகுப்புகள் ஸஹீஹ், ஜாமிஉ, ஸுனன் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தன. ஆனால், சில ஹதீஸ் கலை வல்லுனர்கள் கொஞ்சம் வித்தியாசமான தொகுப்பு முறைகளைக் கையாண்டு ஹதீஸ்களைத் தொகுத்தனர்.
அவற்றில் ஒன்று தான் “முஸ்னத்” என்னும் தொகுப்பு முறை. பாடத் தலைப்புகளின் வரிசையில் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட அறிவிப்பாளரின் அனைத்து அறிவிப்புகளையும் ஒரே இடத்தில் தொகுத்துத் தருவது இதன் சிறப்பம்சம் ஆகும். இதன் மூலம், ஹதீஸ் அறிவிப்புகள் விடுபடுவது தவிர்க்கப்படும்.
ஹதீஸ்கலை வரலாற்றில் தொகுக்கப்பட்ட நபிமொழிக் கிரந்தங்களில் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களின் “முஸ்னத் அஹ்மத்” என்னும் நபிமொழித் தொகுப்பு சுமார் 27000 க்கும் மேற்பட்ட நபிமொழிகளை உள்ளடக்கிய மாபெரும் நூலாகும்.
மிகுந்த இறையச்சமும், இறைத் தூதர் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் அளவிலா அன்பும் கொண்ட இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் மிகச் சிறந்த ஹதீஸ் கலை மேதை.
“குர்ஆன் ஒரு படைப்பல்ல; அது படைத்தவனின் சொல்” என்ற கருத்தில் பல்வேறு சோதனைகளையும் தாங்கிக் கொண்டு இறுதி வரை உறுதியாக நின்று மொத்த முஸ்லிம் உம்மத்தையும் ஒரு பெரும் பித்அத் – வழிகேட்டில் இருந்து பாதுகாத்த தியாகச் செம்மல் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள்.
குதைபா பின் சயீத் அவர்கள் கூறுகிறார்கள்: “இமாம் தவ்ரி இறந்த போது இறையச்சம் இறந்தது; இமாம் ஷாஃபிஈ இறந்த போது, முறையான பின்பற்றுதல் இறந்தது; இமாம் அஹ்மத் பின் ஹம்பல் இறந்த போது, பித்அத் என்னும் புகுத்தப்பட்ட புதுமை மார்க்கத்தில் பெருகி விட்டது.” பொதுவாக, நூல்கள் இயற்றும் ஆர்வம் அதிகம் இல்லாத இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள், தாமே நேரடியாக இந்த நூலைத் தொகுக்காமல், தமது மகன் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் ஹதீஸ்களை ஒவ்வொன்றாக அறிவித்து, அதை எந்த நபித் தோழரின் தொகுப்பில் சேர்க்க வேண்டும் என்று வழிகாட்டித் தொகுக்கப்பட்ட நூல் இது. ஆனால், அதுவும் முழுமையடையும் முன்பே இமாம் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். மேற்கொண்டு, அவரது மகன் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் சுமார் 642 ஹதீஸ்களை அதில் இணைத்து நிறைவு செய்தார்கள்.
இம்மாபெரும் நூலைத் தமிழில் மொழிபெயர்ப்பது என்பது அவ்வளவு எளிதான வேலையல்ல. மேலும், இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர்களே குறிப்பிடுவதைப் போல், மற்ற நபிமொழி நூல்களைப் போல் இந்த நூலுக்கு விரிவுரை நூல்கள் அதிகமாக இல்லை. உதாரணமாக, ஸஹீஹுல் புகாரிக்கு 100-க்கும் மேற்பட்ட விரிவுரைகள் உள்ளன. ஸஹீஹ் முஸ்லிமுக்கும் பல்வேறு விரிவுரைகள் உள்ளன. எனவே, அவற்றை மொழிபெயர்க்கும் போது ஏற்படும் சில சந்தேகங்களுக்கு இலகுவாகத் தீர்வு பெற முடியும். ஆனால், இதற்கு விரிவான விரிவுரைகள் பெரும்பாலும் இல்லாத நிலையிலும், ஒரு சிறப்பான மொழிபெயர்ப்பைத் தந்துள்ளனர் மொழிபெயர்ப்பாளர்கள். அந்த அடிப்படையில், இந்த மொழிபெயர்ப்பின் முதல் பாகமான இந்நூலில், சுவர்க்க நற்செய்தி கூறப்பட்ட பத்து நபித்தோழர்களின் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்நூலில், “ரம்ல்-நடையோட்டம், அர்ஷ்-இறை இருக்கை, மதீ-இச்சைக் கசிவு, பித்அத்-புகுத்தப்பட்ட புதுமை” போன்ற பல புதிய கலைச்சொற்களையும் அறிமுகப்படுத்தியிருப்பதுடன், ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் சம்பந்தப்பட்ட நபித் தோழரின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பும் இடம் பெற்றிருப்பது மிகவும் சிறப்பு.
இதுவரை, பல்வேறு திருமறை விளக்கவுரைகளையும், நபிமொழித் தொகுப்புகளையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மொழிபெயர்த்துத் தந்த மொழிபெயர்ப்பு வல்லுனர்கள் தற்போது ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன் நிறுவனம் மூலம் இம்மாபெரும் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள்.
இஸ்லாமிய மார்க்க அறிவை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமின் நூலகத்தையும் அலங்கரிக்கும் மிகச் சிறந்த நூல் இது. மேலும், தன் இறப்புக்குப் பின்பும் நன்மை தன்னைத் தொடர விரும்பும் எவரும், இந்நூலை வாங்கிப் பொது நூலகங்களுக்கும், பள்ளிவாசல் நூலகங்களுக்கும் அன்பளிப்பாக வழங்கலாம்.
ஏக இறைவன் அல்லாஹ், இந்த இறைப் பணியாளர்களுக்கு உரிய நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் முழுமையாக வழங்கி அருள்வானாக! இதன் மூலம் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு அளவிலாப் பலனையும் வழங்கி அருள்வானாக! ஆமீன்…



































