ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட வாழ்வு வித்தியாசமானது. வாழப்படும் விதமும் அதன் சுவைகளும் ஏற்றத் தாழ்வுகள் உடையது. ஒருவரது வாழ்வை நமது இடத்திலிருந்து மதிப்பிடுவது இலகுவானது, ஆனால் அவரது இடத்தில் நம்மால் சில கணமேனும் வாழ்ந்து பார்ப்பது சாத்தியமற்றது.
எறிந்த கல் எத்தனை ஆழத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்காமல் பேசுவது தான் உச்ச கட்ட மனித உரிமை மீறலாகும். மனங்களை வதைக்கும் வார்த்தைகளுக்கு தரக் கட்டுப்பாடு இல்லை. தெரியாமலோ வேண்டுமென்றோ நிறையவே உள்ளங்களை உடைத்து விடுவதில் நாம் வல்லவர்கள்.
——–
சுமதி – என் மாமியாரோடு நான் படும் அவஸ்தைகளை பேச முடியாது. என் வீட்டுக்காரரை என்னோடு பேச கூட விடுவதில்லை. மகனை சேலைத் தலைப்பில் முடிஞ்சி வைக்கவே தடுமாறுகிறார்.
விமலா – அப்படியில்லை. அவர் தாயாக மகனை எதிர்ப்பார்க்கிறார் போலும். என் கணவரும் மாமியோடுதான் பெரும்பாலும் இருப்பார். அங்கு மைத்துனியும் குழந்தைகளும் இருப்பதால் எனக்கு தனிமை தெரிவதில்லை.
மேற்கூறிய சம்பவத்தில் சுமதிக்கும் விமலாவிற்கும் வழங்கப்பட்ட வாழ்வு ஒத்தவை அல்ல. விமலாவின் மாமியாரோடு மகன் பேசுவதும், சுமதியின் கணவருடன் சுமதி பேசுவதை அந்த தாய் தடுக்க முனைவதும் வேறு வேறு. அதே போல தன்னுடன் நேரம் செலவிட மைத்துனியும் குழந்தைகளும் விமலாவிற்கு இருப்பதால் சுமதியின் தனிமையின் வலியை அவள் உணர வாய்ப்பில்லை.
மாமியார் குறித்த கவலையை பகிர வந்த சுமதியின் நிலை மரத்தால் விழுந்தவனை மாடு முட்டியது போன்ற நிலையே…
நமக்கு நல்ல உறவுகள் கிடைத்திருக்கிறது என்பதால் மற்றவரின் நிலையும் அத்தகையதே என்ற நிலையிலான கலந்துரையாடல்கள் சரியானவை அல்ல.
எனது வீடு எப்போதும் நேர்த்தியாக இருக்கலாம். அதற்கென என்னிடம் பணியாளர்களும் இருக்கலாம். ஆயின் தொழிலுக்கும் போய் நாலைந்து குழந்தைகளின் பணிகளுடன் போராடும் நண்பியின் இல்லம் குறித்து விமர்சனம் செய்ய எனக்கு தகுதியிருக்கிறதா?
“என் கணவர் எனக்கு நிறையவே சுதந்திரம் தருவார். பார் நீ எவ்வளவோ படித்தும் உன் கணவர் தொழிலுக்குப் போக அனுமதிப்பதில்லை. ஆணாதிக்கப் போக்கு” என கணவனின் உழைப்பு போதாமையால் தொழில் செய்யும் பெண் தன்னிறைவாய் வாழ்பவளின் வாழ்வை எடை போடுவது சரியில்லை தானே.!!!
“உங்கள் மகன் பெரிய கெட்டிக்காரனில்லை போலிருக்கிறது. ஆர்வமும் இல்லை என தோன்றுகிறது. கொஞ்சம் கவனியுங்கள். பாருங்கள் எனது மகள் பரீட்சைக்காக நிறைய மாதிரி வினாத்தாள்களை செய்வாள். எப்போதும் படிப்பதில் ஆர்வம் அதிகம்” என இன்னொரு தாயிடம் சொல்லும் முன், அந்த தாயின் இளைய குழந்தைக்கு புற்றுநோய் இருந்ததால் க்ளினிக், க்ளினிக் என்று அலைந்த போது மூத்தவனைப் பற்றி கவனிக்க நேரம் கிடைக்காத அவளது பாதணிகளில் நுழைந்தாவது பார்த்திருக்கலாம்.
தன் தொழில் மூலம் எதையோ சாதிக்கத் துணிந்த பெண் குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்கிறாள் என்பதற்காக அவளது தாய்மை குறித்து தொழில் தகைமையற்ற பெண் கல்லெறிவது நகைச்சுவையாக இல்லையா?
பிறந்த நாள் விழாக்கள், திருமண விழாக்கள் என செலவழிக்க உங்களிடம் நிறையவே பணம் இருப்பதனால் மற்றவரை “உலோபி” என சொல்லும் தகுதி இருப்பதாக அர்த்தம் இல்லை.
எனக்கு கிடைத்திருப்பதால் மற்றவருக்கும் கிடைக்கத் தான் வேண்டும் என்ற எண்ணம் ஒருவகை அறிவீனம். வியர்வையில் குளித்து என்னால் இயங்கலாம் என்பதற்காக மற்றவரை சோம்பேறி என எடை போட்டு குத்திப் பேசுவது மிருகத்தனம்.
என்னவர் எனக்கு மோதிரம் வாங்கி தந்தார் என்பதற்காக மனைவி பெயரில் வீட்டை கட்டியவனிடம் காதல் இல்லை என எடை போடுவது புத்திசாலித்தனமில்லை. புத்தகம் வாசித்து அறிவு தேடுபவளைப் பற்றி அடுப்படியுள் சிறைப்பட்டவள் ஏளனமாய் பேசுவது மேதாவித்தனம் ஆகாது.
இப்படி இன்னும் இன்னும்… எப்போதும் மனிதர்களது பார்வையும் அதை வெளிப்படுத்தும் வார்த்தைகளும் தன் நிலையிலிருந்து மற்றவரை எடை போடவே விளைகின்றன. அவசரமாக தீர்ப்பெழுத முயல்கின்றன. இல்லை அதில் எந்த நியாயமும் இல்லை. மற்றவர் பிரச்சினையை அவரது கோணத்தில் நின்று கருத்து சொல்வதே ஏற்புடையது. தீர்வுகள் சொல்லத் தேவையில்லை. காயங்களில் வார்த்தைகளால் அசிட் வீசுவதையாவது தவிர்க்கலாம்.
நமது வாழ்வு நிறைவானது என்பதற்காக அதை வெளிக்காட்டி இன்னொருவர் மனதை கீறிக் கிழிப்பது மிகப் பெரும் மிலேச்சத்தனமாய் தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் வாழ்வும் வளங்களும் வெவ்வேறானவை. அது போல பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்காய் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் திறன்களும் வேறு வேறானவை. நான் எதிர் கொண்ட பிரச்சினையிலிருந்து மீள நான் கண்டடைந்த வழி எல்லோருக்கும் தீர்வைத் தர வேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை. அதை போதிப்பதோ திணிப்பதோ அனாவசியமே.
கஷ்டமோ சிக்கலோ எதுவென்றாலும் தீர்வுகள் தேவையில்லை. அவர்கள் குரலுக்கு செவி சாய்ப்பதே மனிதம். எங்கள் மேதாவித்தனத்தை கேட்பதற்கு யாரும் வருவதில்லை. ஆறுதலும் தேவையில்லை. செவிசாய்த்து ஆமோதிப்பதே இன்றைய தேவை.
வேர்களை தேடுகிறோம், நிழல்களை தேடுகிறோம் என்று சகமனிதனை கைசேதப்பட வைக்கத் தேவையில்லை. அது அவர்களை உளவியல் ரீதியாக காயப்படுத்தும் என்பதே உண்மை. முடிந்தால் சுமைகளை இறக்கி வைக்க உதவுவோம்.
































