





இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் பெற்றோரின் கதாபாத்திரத்தை விளையாட்டுப் பொருட்களை வைத்தே முடித்துவிடுகிறோம். வாழ்க்கையின் போக்கும் தேவைகளும் ஒரு நாளில் பெரும்பகுதி தாய்-தந்தையரை வீட்டில் இருக்க விடுவதில்லை. வெளியுலகம் பாதுகாப்பை இழந்து போனதால் வீடுகள் பிள்ளைகளின் உலகமாகவே மாறியும் போனது. யாரையும் நோவதில் அர்த்தமில்லை.
உலகம் சுழலும் போக்கில் சுழல்வதை தவிற வேறு வழியும் இல்லை. தோட்டத்திற்கும் களத்து மேட்டிற்கும் போன தாய் தந்தை வீடு வரும்வரை பிள்ளை, கில்லி என்றும் கிட்டிப்புள் என்றும் நொண்டியென்றும் அந்த நாளை கடத்திக் கொண்டிருந்த காலத்தை காணவில்லை. இப்போது தாய்-தந்தை வேலைக்குப் போனால் ஆண் பிள்ளையானாலும் பெண் பிள்ளையானாலும் வீட்டை விட்டு வெளியில் இருப்பது கழுகின் கையில் அகப்பட்ட கோழிக் குஞ்சின் நிலைதான்.
பிள்ளைகளை வீட்டினுள் பிடித்து வைக்க ஒரே வழி விளையாட்டுப் பொருட்கள் மட்டுமே. டிஜிட்டல் திரைகள் அந்த நோக்கத்தை இன்னும் கச்சிதமாக நிறைவேற்றுவதை ஏற்கவே (ஏற்கனவே நாம் அறிவும்) வேண்டும்.
ஒரு கதை சொல்கிறேன்… எல்லோருக்கும் நாஸா நிறுவனத்தை தெரியும்.
மண்ணுலகிலுள்ள விண்ணுலகம். செவ்வாயில் நீர் இருப்பதையும், வெள்ளியில் மண் இருப்பதையும் இங்கிருந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.அதற்கான உபகரணங்களை தயாரித்தல், அங்கு போவதற்கான நுணுக்கங்களை ஆராய்தல் என விஞ்ஞானிகள் பரபரப்பாக இயங்கும் ஒரு தளம். JPL என்பது நாஸா எனும் பல்கலைக் கழகத்தின் எலிமன்ட்ரி ஸ்கூல். அதாவது உலகின் எல்லா பாகங்களிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் அவ்வப்போது கற்று வெளியாகும் பட்டதாரிகளில், கல்வி மான்களில், முதுமானிகளில் (முதுநிலைகளில்) உச்ச புள்ளிகளைப் பெற்ற சிலரை தேர்ந்தெடுத்து நாஸா என்ற பல்கலைக்கு தயார் செய்வதே JPL ன் தலையாய பணி. JPL என்பது பரிசோதனைக் கூடம்.
1980 களின் பின் தேர்வு செய்யப்பட்ட விஞ்ஞானிகள் பலவருடங்களாக ஆராய்ச்சி செய்தும் பலன் பூச்சியமாகவே இருந்தது. அவர்களால் புதிதாக எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. பலதரப்பட்ட முயற்சிகள் விழலுக்கிரைத்த நீராயின. அத்தனை கெட்டிக்காரர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. என்ன நடக்கிறதென்பது பெரும் புதிராகவே இருந்தது.
புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வந்தவர்களிலுள்ள கோளாறுகளை கண்டு பிடிக்க இன்னொரு ஆய்வு தேவைப்பட்டது. பிரபல உளவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தார்கள். காரணம் புலப்பட்டது. முன்னர் JPL நிறுவனத்திலும் நாஸாவிலும் பணியாற்றியவர்கள் 1940 களின் பின் வந்தவர்கள்.
இரண்டாம் உலக மகா யுத்தம் பிரசவித்த பஞ்சத்தில் இளமையை வளர விட்டவர்கள். சாப்பிடுவதற்கே வழியில்லாத போது விளையாடவா பொருளிருக்கும்? சிரட்டையும், உடைந்த தகரப் பேணிகளும் (கேன்களும்), என்றோ நிலத்தில் விழுந்த தோட்டாக்களும் தவிற விளையாட ஏதுமில்லை.
இலையையும், காயையும், உதிர்ந்த சிறகையும், சிதைந்த சிப்பியையும் வைத்து எதையோ கண்டுபிடித்து விளையாடுவதே ஒரே வழி. புதிய புதிய வழிகளில் எது எதையோ உருவாக்கினார்கள். விளையாடினார்கள்.
இப்போது புரிந்ததா? வறுமை நீங்கி தன்னிறைவின் ஒளிக்கீற்றுகள் தென்படத் தொடங்கிய 1980 களின் பின்வந்தவர்களால் ஏன் புதிதாக ஒன்றையும் படைத்திட முடியவில்லை என்று? 80 ன் நிலை அதுவென்றால் நாற்பது வருடம் கழித்து இன்றைய ரோபோ சிறுவர்களது நிலை புரிகிறதா? ஏதோ நான்கு கம்புகளை சீவி கிட்டிப் புல் விளையாட வேண்டியவனுக்கு பென்சில் கூட சீவத் தெரியாது. டிஜிட்டல் திரையில் கிரிக்கெட் விளையாடுகிறான்.
காற்றின் திசையறிந்து பட்டத்தை உயர்த்த வேண்டியவனுக்கு காற்றையே தெரியாது. கம்ப்யூட்டரில் கம்போடியாவிலுள்ளவனுடன் செஸ் விளையாடுகிறான். விளையாட்டுப் பொருட்களும், விளையாட துணைகளும் 3D எபெக்டுடன் கையிலிருந்தால் எதை கண்டுபிடிக்கும் தேவையிருக்கிறது?.
புத்தாக்க சிந்தனை ஏற்படுவதோ விருத்தியடைவதோ தேவையற்றதாகிவிடுகிறது. இன்றைய சிறுவர்கள் சூழலின் பல இடையூறுகளுக்கு எதிர்வினையாற்றத் தெரியாதவர்கள். ரிமோட் பற்றரி(பேட்டரி) பொருத்தவும் யூடியூபில் டெமோ பார்க்க வேண்டியிருக்கிறது.
சமயோசிதம், சாணக்கியம் என எதுவுமே தளிர் விடுவது கூட இல்லை. வைன் கொடுத்த பொம்மைகள் போன்ற சிறுவர்கள். சுயமாக இயங்கத் தெரியாத அடுத்த சந்ததி…
இந்த விளையாட்டுப் பொருட்கள் எமக்காய் தந்த அரிய பொக்கிஷம் கனவுலகில் சிறார்களை சிறைப்படுத்தி வைப்பதொன்றே.. விளையாட்டென்பது உடலோடு மனதையும் வலுப்படுத்த வேண்டும்.
ஒரே இடத்தில் அமர்ந்து கைவிரல்களால் கிரிக்கெட்டோ, வலைப்பந்தோ ஆடுவதில் என்னதான் ஆகிவிடப் போகிறது? சிந்தனைகளை பன்முகப்படுத்தாத விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. புத்தாக்கத் திறனை வளர்க்காத விளையாட்டுப் பொருட்கள் உடலை வளர்ப்பதில் வஞ்சனை செய்வதில்லை.
ஒரே அறையிலோ ஒரே வீட்டினுள்ளேயோ ஏதோ ஒரு வண்ணப் பொருளுடன் ஐக்கியமாகி பொழுதை கழிக்கும் குழந்தைகளால் உடலை வருத்த முடிவதில்லை. வியர்வை சிந்த பிடிப்பதுமில்லை. வியர்வை வழியாக வெளியேற வேண்டிய நச்சுக்களையும் மனஅழுத்தத்தையும் தேக்கி தன்னோடு வளர்த்துக் கொள்வது எத்துணை அநியாயமானது?
தானும் இயங்காமல் தன் மூளையும் இயங்காமல் துருப்பிடித்ததொரு தலைமுறை கண்முன்னே உருவாவதை வேடிக்கை பார்ப்பது தவிற வழியில்லை. இதே விளையாட்டுப் பொருட்களின் இன்னொரு முகத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
எஸ்.ஃபெசுனா இஸ்ஸதீன்,
உளவியலாளர், இலங்கை

































