“ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. மோடி அரசாங்கத்தின் ஜிஎஸ்டி, வரி சீர்திருத்தம் அல்ல. இது, பொருளாதார அநீதிக்கும், பெருநிறுவனங்களுடனான கூட்டணிக்குமான ஒரு மிருகத்தனமான கருவி. ஏழைகளைத் தண்டிக்கவும், எம்எஸ்எம்இக்களை நசுக்கவும், மாநிலங்களை குறைமதிப்புக்கு உட்படுத்தவும், பிரதமருக்கு வேண்டிய சில தொழிலதிபர் நண்பர்களுக்கு உதவவும் ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டது.
“நல்ல மற்றும் எளிமையான வரி” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவுக்கு கிடைத்ததோ, ஐந்து அடுக்கு வரி. அதுவும்கூட, 900 முறைக்கும் மேல் திருத்தப்பட்டுள்ளது. கேரமல் பாப்கார்ன் மற்றும் கிரீம் பன்கள் கூட அதன் குழப்ப வலையில் சிக்கியுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய வேலை வழங்குநர்களான எம்எஸ்எம்இக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 18 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
குடிமக்கள் இப்போது தேநீர் முதல் சுகாதார காப்பீடு வரை அனைத்துக்கும் ஜிஎஸ்டி செலுத்துகிறார்கள், அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகள் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரிச் சலுகைகளை அனுபவிக்கின்றன. அனைவருக்கும் பயனுள்ள வரி முறையை இந்தியா பெற வேண்டும். சலுகை பெற்ற சிலருக்கானதாக அது இருக்கக்கூடாது. அப்போதுதான், சிறு கடைக்காரர் முதல் விவசாயி வரை ஒவ்வொரு இந்தியரும் நமது நாட்டின் முன்னேற்றத்தின் பங்குதாரராக இருக்க முடியும்.” என தெரிவித்துள்ளார்.

































