தேர்தல் அரசியலுக்கான குணம்

ஆழமான ஆன்மிகப் பிடிமானத்துடன் தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பின் அடித்தளத்திலிருந்து தான் சேவை அடிப்படையிலான ஒரு சமுதாய அமைப்பை கட்டமைக்க முடியும்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்வதால் தான் சமுதாய அமைப்புகளில் செயல்படுவோர் பெரும்பாலும் உள்ளத்திலிருந்து பேசக்கூடியவர்களாக உணர்ச்சிப்பூர்வமாக அணுகக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

அதேநேரம் அரசியல் என்பது முற்றிலும் மாறுபட்டது. சூழ்ச்சிகள் நிறைந்த அறிவும் மனிதர்களை இலாவகமாக கையாளும் திறனும் சில நேரங்களில் சகுனித்தனமும் தான் அரசியலின் அடிப்படைத் தகுதியாக இருக்கிறது.

நாட்டிலுள்ள பிற அரசியல் கட்சிகளின் அணுகுமுறையை ஓரளவுக்கேனும் பின்பற்றினால் மட்டுமே அரசியல் களத்தில் நிற்க முடியும்.

“கொள்கை வேறு. தேர்தல் கூட்டணி வேறு” என்ற முழக்கம் இன்றைய தேர்தல் அரசியலில் தவிர்க்க முடியாத எதார்த்தமாக மாறிவருகிறது.

தேர்தல் ஜனநாயகத்தில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை என்ற நிதானத்துடன் காய்களை நகர்த்தும் அரசியல் வியூகமும் அதற்கேற்ற அணுகுமுறையும் தான் அரசியல் அமைப்புக்கான அடிப்படைத் தகுதி.

அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும். ஆனால் சேவை அமைப்பு பின்புலத்தில் உள்ளவர்களுக்கு இது அலர்ஜியாக இருக்கும்.

அறம், அரசியல் இஸ்லாம், கொள்கை, சமூக முன்னேற்றம் இவை குறித்து அதிகமாக சிந்திப்பவர்கள் மேடைகளில் உணர்ச்சிப்பூர்வமாக பேசுபவர்கள் தயவு கூர்ந்து தேர்தல் அரசியலை விட்டு விலகியிருப்பது அவர்களின் மனநலன் இதயநலன் குடும்பநலன் சமூகநலன் உள்ளிட்ட அனைத்து நலன்களுக்கும் நல்லது.

குலஃபாயே ராஷிதீன்கள் காலம் தவிர்த்து மீதமுள்ள காலத்தில் உலகத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரம் அரசியல் முடிவுகள் உள்ளிட்டவற்றை இஸ்லாத்தின் கருத்தியலுக்குள் கொண்டு வருவதும் அரசர்களின் நடவடிக்கைகளை இஸ்லாத்தைக் கொண்டு அளவிடுவதும் எப்படி அறியாமையின் வெளிப்பாடாக இருக்குமோ அதுபோலத் தான்….,

…..மதவாதமும் தேசியவாதமும் பெரும்பான்மை இனவாதமும் தலைதூக்கியுள்ள இன்றைய இந்தியாவின் தேர்தல் அரசியலில் ஈடுபடும் முஸ்லிம்களையும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளையும் இஸ்லாத்தைக் கொண்டு அளவிட்டு விமர்சனம் செய்வதும் மிகப்பெரிய அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கும்.