கோயமுத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்திய மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு

இபாதத்துகளில் பேணுதலுடைய பிள்ளைகள்…

இஸ்லாமிய வரலாற்றின் அடிச்சுவடுகளை அறிந்தவர்கள்…

அல்லாஹ்வின் படைப்புகளில் மனிதம் இனம் அறிந்திராத இரகசியங்களை அறிய முயற்சிக்கும் ஆகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள்…

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை வடிவமைத்து இயக்கிடும் வல்லமைமிக்கவர்கள்…

இந்திய நீதித்துறை மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகளில் ஆளுமைமிக்க சட்ட வல்லுனர்கள், அரசியல் வியூகவியலாளர்கள் …

….உள்ளிட்ட பேராற்றல்மிக்கப் பிள்ளைகள் உம்மத்தில் உருவாக வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தில் தொலைநோக்கு இலக்கில் அயராத உழைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்து நடத்திய கோவை உயர்கல்வி மாநாட்டில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், சமூக அக்கறையுடையோர் பெருந்திரளாக கலந்துகொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்…’

மண்உயிரியல் விஞ்ஞானி பேராசிரியர் சுல்தான் அஹமது இஸ்மாயில்

இந்த நாட்டுக்கு தமிழக முஸ்லிம் சமூகம் அளித்த மகத்தான அறிவுக்கொடை. சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான அறிஞர் அண்ணா விருது பெற்ற பேராசிரியர், தமிழக அரசின் மாநில திட்டக்குழு மற்றும் பாடதிட்டக்குழு உறுப்பினர், தங்களது மண்வளத்தை இயற்கை முறையில் வளப்படுத்துவதற்கு உலக நாடுகள் பல ஆலோசனைகளை கேட்டுப் பெறும்

மண்உயிரியல் விஞ்ஞானி பேராசிரியர் சுல்தான் அஹமது இஸ்மாயில் அவர்கள் “மாணவர்களின் தனிமனித குணங்களை அணுகுமுறைகளை சீர்படுத்தி அவர்களுக்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களுடன் உரையாடினார். Biology & Bio-Maths பிரிவு மாணவர்களுக்கு பேராசிரியர் சுல்தான் அஹமது இஸ்மாயில் அவர்களின் உயர்கல்வியும் ஆராய்ச்சிப் படிப்பும் உயிர்களுக்கான சேவையும் ஒரு அழகிய முன்மாதிரி.

மேனாள் நீதிபதி ஜியாவுதீன்

விருப்ப ஓய்வு பெற்று தமிழ்ச் சமூகத்தின் மீதான மிகுந்த அக்கறை காரணமாக இடைவிடாமல் பயணம் செய்து மக்களையும் மாணவர்களையும் சந்தித்து வழிகாட்டி வரும் மக்களின் நீதிபதி. தமிழக அரசின் அலுவல் மொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினர், கோவை மண்ணின் மைந்தர் மேனாள் நீதிபதி ஜியாவுதீன் அவர்கள் “ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு தனது அனுபவங்களையும் எதிர்பார்ப்புகளையும் எடுத்துச்சொல்லி ஊக்கமளித்தார்கள். அவரது உரை உம்மத்தின் மீது தூய்மையான அக்கறையுள்ள ஒரு அறிஞரின் நேர்த்தியான உரையாக இருந்தது.

அன்னை கதீஜா அகாடமியின் தாளாளர் ஆலிமா நஜ்மா M.A.,M.Sc.,B.Ed அவர்கள் பெண்கள் கல்வியாளர்களாக உருவாக வேண்டிய அவசியம் குறித்தும், அதன் மூலம் சமூகத்துக்கு கிடைக்கும் கண்ணியம் குறித்தும், அதில் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் பங்களிப்பு குறித்தும் விரிவாகப் பேசினார்கள்.

மார்க்கக் கல்வியையும் பல்கலைக்கழக பாடத்தையும் ஒருசேர கற்ற ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்கள் இன்றைய கட்டாயத் தேவையாக இருக்கிறது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் (Botany) துறையில் ஆராய்ச்சிக் கல்வியை (Ph.D) முன்னெடுத்து வரும் அப்துல் பாசித் அவர்கள் தாவர உயிரியல் துறையின் மகத்துவத்தையும் அதில் குவிந்து கிடக்கும் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு கவனப்படுத்தினார்.

அதேபோல… ஆயுஷ் துறையில் இடம்பெற்றுள்ள ஆயுர்வேதம் யோகா யுனானி சித்தா ஹோமியோபதி ஆகிய இந்திய முறை மருத்துவத்தை தேர்வு செய்து படிப்பதற்கான வழிமுறைகளையும் அதன் வளங்களையும் Dr.செய்யது இபுராஹிம் BAMS அவர்கள் வகுப்பெடுத்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் வழக்கறிஞர் M.முஹம்மது இஸ்மாயில் M.E.,LLB., அவர்கள் LAW / UPSC / PUBLIC POLICY / ISLAMIC FINANCE / CA உள்ளிட்ட அதிகாரமிக்க துறைகளுக்கு மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து விரிவானதொரு வகுப்பை நடத்தினார்.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறை பயிற்சியாளர் பேரா.R.முஹம்மது அனஸ் BE.,MSc அவர்கள் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியையும் அதில் கவனம் செலுத்த வேண்டிய அதிகாரமிக்கத் துறைகளையும் அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகளையும் மாணவர்களுக்கு கவனப்படுத்தினார்.

அதிகரித்து வரும் போதைப் பழக்கம் குறித்து கோவை உயர்கல்வி மாநாட்டில் புதுச்சேரி ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர் அப்துல் ஹக்கீம் அவர்கள் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

சிறப்பு நிகழ்ச்சிகள்


மொரோக்கோ நாட்டில் வாழ்ந்த கல்வியாளர் ஃபாத்திமா அல் ஃபிஹ்ரி அவர்கள் குறித்த ஒரு சிறிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகள் நிகழ்த்தி காட்டினர்.

சட்டக்கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் ஏழாம் ஆண்டு மாணவர்கள் மாதிரி நீதிமன்றத்தை (Moot Court) நடத்திக் காட்டினார்கள்.

ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக்கல்லூரி பேராசிரியர் ஆலிம் வழக்கறிஞர் தவுஃபிக் புஹாரி அவர்களும் ஆலிம் வழக்கறிஞர் அப்துல் ரஷீத் அத்தாயி அவர்களும் நடுவர்களாக இருந்து வழிநடத்தினர்.

 நிறைவுரை

12 ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிப்பது, எங்கு படிப்பது, எந்த படிப்பை தேர்வு செய்தால் வளாகத் தேர்வில் வேலை கிடைக்கும்,எந்த படிப்புக்கு அதிகமாக சம்பளம் கிடைக்கும் என்பது போன்ற வார்த்தைகளை கேள்விகளை தவிர்த்து விட்டு…,

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் நிறுவனர், முஸ்லிம்களின் மரபு வழி அறிவாளுமைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வரும் கல்வியாளர் சமூகநீதி முரசு மாத இதழின் ஆசிரியர் CMN சலீம் அவர்கள் “முஸ்லிம்களின் கல்வி மரபு என்ன, அறிவைக் கொண்டும் ஆராய்ச்சியைக் கொண்டும் உலக நாகரிகத்திற்கு முஸ்லிம்கள் அளித்த அறிவியல் கொடைகள் என்ன, இன்றைய உலகம் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு மூஃமின்களாக நாம் எப்படி தீர்வு அளிக்க முடியும்,

குடியரசு இந்தியாவின் நெருக்கடியான காலத்தில் வாழும் முஸ்லிம் சமூகம் அறிவாற்றலிலும் பொருளாற்றலிலும் தங்களை அதிகாரப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகள் எது? …என்ற ஆய்வுக் கண்ணோட்டத்தில் மூஃமினான பிள்ளைகள் இனி தங்களது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இலக்கை தேர்வு செய்ய வேண்டும் என்பதை கோவை உயர்கல்வி மாநாட்டின் இறுதி அமர்வில் நிறைவுரையாக வழங்கினார்.

இறுதியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் கல்வியாளர்கள் குழு விளக்கம் அளித்தனர்.

 வருகை தந்திருந்த மாணவர்களில் ஒருசிலராவது உலகம் போற்றும் ஆராய்ச்சியாளர்களாக, கண்டுபிடிப்பாளர்களாக, நம் நாட்டின் அறிவுச் செல்வங்களாக, உயர் அதிகாரமுடையவர்களாக, உருவாகி வந்துவிட வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் இலக்காகும்.


மேலும்…அடுத்த பத்தாண்டுகளில் கொங்கு மண்டலத்தில் ஏற்படவுள்ள பொருளாதார வளர்ச்சியின் முகவர்களாக முஸ்லிம் இளைஞர்கள் உருவாகிவிட வேண்டும் என்ற சாதாரண மனிதர்களுக்கே உரித்தான எதிர்பார்ப்பும் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது.
 

அல்லாஹ்வின் உதவி மூலம் இது சாத்தியமாகும். நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.