சேயன் இப்ராகிம்
இசை முரசு நாகூர் E.M. ஹனீபா – 2

இசை முரசு நாகூர் ஹனீபா ஒரு இஸ்லாமியப் பாடகராக மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேடைப் பாடகராகவும் தமிழக மக்களால் அறியப்பட்டவர்.
அவரது இஸ்லாமியப் பாடல்கள் குறித்து சென்ற இதழில் பார்த்தோம். அவரது அரசியல், இசைப் பயணம் குறித்து இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
ஹனீபா இளமைப் பருவத்திலேயே திராவிட இயக்கங்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். பெரியார் நடத்திய குடியரசு நாளிதழின் தீவிர வாசகராக இருந்தார். 1937ஆம்ஆண்டு அன்றைய சென்னை மாகாண நடு நிலைப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய முதலமைச்சர் இராஜாஜிக்கு எதிராக நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டு கைதானார்.
அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 11முறை சிறை சென்றுள்ளார்.
ஹனீபாவும் கலைஞரும் சமகாலத்தவர்கள். ஹனீபா கலைஞரை விட ஒரு வயது இளயவராவார். ஏழாவது வகுப்புவரை படித்த ஹனீபா வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் திருவாரூரிலிருந்த தனது சிறிய தந்தையாரின் வீட்டில் தங்கி அவர் நடத்தி வந்த பலசரக்குக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது தான் அவருக்கும் கலைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது நட்பாக மாறி ஆயுள் வரை நீடித்தது. ஹனீபா தனிப்பட்ட முறையில் உரையாடுகின்ற போது கலைஞரை மு.க. என்று தான் அழைப்பார்.
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரிசாமி மதுக்கூரில் நடத்திய சுயமரியாதை இயக்கப் பொதுக்கூட்டத்தில் ஹனீபா “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற பாவேந்தரின் பாடலை உணர்ச்சி பொங்கப் பாடினார். அதனைக் கேட்டு மெய்சிலிர்த்த பட்டுக்கோட்டை அழகிரிசாமி அன்று
முதல் எங்கு கூட்டம் நடத்தாலும் ஹனீபாவை வரச்சொல்லி பாட வைப்பார்.
1940ஆம் ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற நீதிக் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பன்னீர் செல்வம் விமான நிலையத்தில் காலமானதற்கு இரங்கல் தெரிவிக்கும் ஒரு பாடலை ஹனீபா பாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பெரியார் அவரை அழைத்து “எதிர்காலத்தில் நீ பெரிய ஆளாக வந்து விடுவாய்” என்று கூறினாராம்.
ஹனீபா பெரியாரைப் பலமுறை நாகூருக்கு அழைத்துக் கூட்டங்கள் நடத்தினார். அப்படி வரும்போதெல்லாம் நாகூர் ஹனீபாவைப் பாடச்சொல்லி பெரியார் வாழ்த்தியுள்ளார். சில சமயங்களில் பெரியார் ஹனீபாவுக்கு ஒரு ரூபாய் பரிசளித்து மகிழ்ந்ததுண்டு.

பெரியார் குறித்து ஹனீபா பல பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடிய
“ பேரறிவாளர் அவர் பெரியார் என்னும் ஈ.வே.ரா.
தூங்கிக் கிடந்த உன்னை தூக்கித் துடைத் தணைத்து
தாங்கித் தரைமேல் இ்ட்டார் – தமிழர்
தாத்தாவாம் ஈ.வே.ரா” என்ற பாடல் இசைத் தட்டாக வெளிவந்து மக்களின் பாராட்டுக்களைப் பெற்றது.
அறிஞர் அண்ணா ஹனீபாவின் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டிருந்தார். ஹனீபாவுக்கு திருமணமான போது அண்ணா ஹனீபா தம்பதியினரை காஞ்சிபுரத்திலிருந்த தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுத்தார். தம்பதியினருக்கு தனது கைப்பட விருந்து பரிமாறினார்.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய அண்ணாவைச் சந்திப்பதற்காக ஹனீபா சென்றிருந்தபோது “ஹனீபா நான் போகிற இடத்திலெல்லாம் நீ தான் இருந்தாய்” என்று சொன்னாராம். ஹனீபாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “வீட்டுக்கு வீடு உன் பாட்டுத்தான் ஒலித்துக் கொண்டிருந்தது” என விளக்கிச் சொல்லிவிட்டு அண்ணா சிரித்தாராம்.
1953ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில்தான் “அழைக்கின்றார். அண்ணா” என்ற பாடலை ஹனீபா பாடினார். தி.மு.கவின் அதிகாரப்பூர்வ ஏடான நம்நாடு இதழில் வெளிவந்த இந்தப் பாடலை ஹனீபா மேடையில் பாடினால் பொருத்தமான இருக்கும் என கலைஞர் கூற ஹனீபா அந்தப் பாடலை பாடினார். இந்தப் பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்தது.
தொடர்ந்து நடைபெற்ற தி.மு.க மாநாடுகளிலும் ஹனீபா இந்தப் பாடலைத் தவறாமல் பாடி வந்தார். பின்னர் இது இசைத்தட்டாக வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் மக்களால் ரசித்துக் கேட்கப்பட்டது. AVM நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த இசைத்தட்டு விற்பனையில் பெரும் சாதனை படைத்தது.

அதுபோல “ஓடி வருகிறான் உதயசூரியன்” என்ற பாடலையும் அவர் தி.மு.க மாநாடுகளில் தவறாது பாடி வந்தார். தி.மு.க மாநாடுகள் அவருடைய பாடல்களுடன் தான் தொடங்கும் என்பது ஒரு எழுதப்படாத விதியாக இருந்தது.
1953ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்திலுள்ள “கல்லக்குடி” என்ற ஊரை “டால்மியாபுரம்” என்று பெயர் மாற்ற அரசு முயற்சித்தபோது அதனை எதிர்து கல்லக்குடி ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்துப் போராட்டம் நடத்தினார் கலைஞர். அதனை நினைவுகூரும் வகையில் “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடலை ஹனீபா பாடினார்.
தி.மு.க தொண்டர்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்தப் பாடல் இசைத்தட்டு விற்பனையிலும் சாதனை படைத்தது.
பேரறிஞர் அண்ணா மறைந்த போது அவர் பாடிய
“தமிழ் மணக்கும் திசையெல்லாம்
தேடினேன் உன்னை சான்றோர் தம் அவையெல்லாம்
அலைய விட்டேன் கண்ணை எங்கே சென்றாய்? எங்களை
ஏங்க விட்டு எங்கே சென்றாய்?
என்ற பாடல் கேட்பவர்களின் கண்களைக் குளமாக்கின.
நடிகரும் இசையமைப்பாளருமான டி.ராஜேந்தரின் இசையமைப்பில் உருவான, ஹனீபா பாடிய “உடன்பிறப்பே கழக உன்பிறப்பே” என்ற பாடலும் தி.மு.க வின் மேடைகளில் ஒலித்த இயக்கப் பாடலாகும்.

அண்ணாவையும், கலைஞரையும் பாடிய ஹனீபா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையும் பாடத் தவறவில்லை.
காய்த்துச் சிவந்தது சூரிய காந்தி
கடலில் தோய்ந்துச் சிவந்தது பார்த்திப சங்கமம்
ஆய்ந்து சிவந்தது அறிஞர் தம் நெஞ்சம்
தினமும் ஈந்து சிவந்தன எம்.ஜி.ஆர் இரு கரமே!
என்ற அவரது பாடல் எம்.ஜி.ஆரின் ஈகைப் பண்பைச் சிறப்பித்துப் பாடியதாகும்.

ஆனால் அதே வேளையில் எம்.ஜி.ஆர் தி.மு.கவுக்கு எதிராகக் குரல் எழுப்பி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுப் பின்னர் அ.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கியபோது “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடல் துவண்டு போயிருந்த தி.மு.க தொண்டர்களை உற்சாகம்பெறச் செய்தது.
வை.கோ, ஹனீபாவின் மிகச் சிறந்த ரசிகராகத் திகழ்ந்தார். அவர் தி,மு.கவிலிருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கிய பின்னரும் ஹனீபா அவருடன் தொடர்ந்து நட்புறவைப் பேணி வந்தார்.
2004ஆம் ஆண்டு நதிகளின் இணைப்பை வலியுறுத்தி வைகோ நடைப்பயணம் மேற்கொண்டிருந்த போது நாகூருக்கு வந்த அவரை வரவேற்று அரபு நாட்டில் தனக்கு வழங்கப்பட்ட வெண்பட்டு ஆடையை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
கலைஞரின் மனச்சாட்சியாகத் திகழ்ந்த முரசொலி மாறன் உடல் நலிவுற்று அமெரிக்க மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது ஹனீபாவின் பாடல்களைக் கேட்க விரும்புவதாகக் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் ஹனீபாவின் பாடல்கள் அடங்கிய குறுந்தட்டை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்திலும் ஹனீபாவின் பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தார் முரசொலி மாறன்.
பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட அனைத்து திராவிட இயக்கத் தலைவர்களிடமும் ஹனீபா நட்புறவு கொண்டிருந்தார். நாகூரில் உள்ள தனது ஒரு வீட்டிற்கு அண்ணா இல்லம் என்றும், இன்னொரு வீட்டிற்கு கலைஞர் இல்லம் என்றும் பெயர் கூட்டி தனது நட்பினைப் பறை சாற்றியுள்ளார்.
ஹனீபா தேர்தல் அரசியலில் பெருமளவு ஆர்வம் காட்டவில்லை. எனினும் 1957ஆம் ஆண்டு நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியிலும், 2002ஆம் ஆண்டு வாணியம்பாடி சட்டமன்ற இடைத் தேர்தலிலும் வேட்பாளராகப் போட்டியிடக் கட்சி அவருக்கு வாய்ப்பளித்தது. ஆனால் இந்தத் தேர்தல்களில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனினும் அவரது பணிகளை நினைவு கூரும் வகையில் கலைஞர் 1972ஆம் ஆண்டு அவரை சட்டமன்ற மேலவை உறுப்பிராக நியமித்தார்.
மேலவையில் உரையாற்றுகின்ற போதும் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் இருக்கும் போதும் இயக்கப் பாடல்களை பாடியுள்ளார்.
1999ஆம் ஆண்டு ஹனீபாவை தமிழக வக்ஃப் வாரியத்தின் தலைவராக கலைஞர் நியமித்தார். தனக்கு முற்றிலும் புதிதான அந்த ஏற்று பொறுப்பையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் திறம்படப் பணிபுரிந்தார். வக்ஃப் வாரியத் தலைவராகப் பணியாற்றிய காலத்திலும் அவர் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

தனது வாழ்நாளின் இறுதிக் காலம் வரை அவர் தி.மு.கவின் ஊழியராகவே திகழ்ந்தார்.
சம்பத், எம்.ஜி.ஆர், வைகோ ஆகியோர் தி.மு.க வை விட்டுப் பிரிந்து சென்று தனிக்கட்சித் தொடங்கிய போதெல்லாம் அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்த ஹனீபா அவர்கள் பக்கம் சென்றுவிடவில்லை. தி்.மு.கவிலேயே தனது பணத்தைத் தொடர்ந்தார்.
“அளவு கடந்த பாசத்தை என் மீது கொட்டி, பற்றினைக் கழகத்தின் மீது காட்டி, கழகத்தினரின் பேரன்பைப் பரிசாகப் பெற்றுள்ள இசை முரசு ஹனீபா அவர்கள் இஸ்லாமியப் பெரியோரும், இளைஞரும் மகிழ்ந்து போற்றத்தக்க அளவுக்கு நபிகள் நாயகம் அவர்களைப் பற்றிப் பாடியுள்ள பாடல்களை இன்னமும் வானொலி நிலையம் ஒலிபரப்புவதையும் தொலைக்காட்சி நிலையம் நிகழ்ச்சியாகச் சித்தரிப்பதையும் கண்டும் கேட்டுக் களிப்புறாதவர் எவர்? என்றுகலைஞர் கருணாநிதி அவரைப் புகழ்ந்தேத்துகின்றார்.
ஹனீபாவின் எழுச்சியூட்டும் அரிமா முழக்கம் ஆர்த்திடாத கழக மாநாடு தலைமைக் கழகத்தின் விழா இல்லை என்று எவரும் பாராட்டிக் கூறுமாறு தமது இசைத் தொண்டினை ஆற்றியவர் அவர்.
அவரது மங்காத குரல் வளமும், சிதையாத தமிழ்ச் உச்சரிப்பும், பொன்றாத பண் அமைப்பும் அவரது பாடல்களைக் கேட்பவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டிடும் ஆர்வத்தைத் தூண்டுவன.
அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா என்னும் பாடலை அவர் பாடிக் கேட்டுப் பரவசமுறாதார் இல்லை. அவரைப்போல் அந்தப் பாடலைப் பாட இன்னொருவர் இல்லை” என்று புகழுரைக்கின்றார் பேராசிரியர் அன்பழகனார் அவர்கள்.
ஹனீபா திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்த போதிலும், முஸ்லிம் தலைவர்களுடனும் நல்ல முறையில் உறவைப் பேணி வந்தார். பிற சமயங்களைச் சார்ந்த பிரமுகர்களும் அவரது பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தனர். இவை குறித்த செய்திகளை அடுத்த இதழில் பார்ப்போம்.
கட்டுரையாளரின் தொடர்புக்கு : 99767 35561


































