மனாசிர் ஜரூம்
இறைத்தூதர்களின் வரலாற்றைக் கற்கும் போது இறைத்தூதர்கள் தமது சொந்த சமூகங்களினாலேயே தொடர்ந்து ஏன் புறக்கணிக்கப்பட்டு வந்தார்கள் என்ற கேள்வி எனக்கு எப்பொழுதும் எழுவதுண்டு.
நூஹ் மற்றும் லூத்(அலை) போன்ற நபிமார்கள் தமது மனைவிமார்கள், பிள்ளைகளால் கூட புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளார்கள். ஒவ்வொரு இறைத்தூதரும் தமது சமூகத்தின் சிறந்த மனிதர்களாகவே வாழ்ந்துள்ளனர்.
உதாரணமாக, முஹம்மத்(ஸல்) அவர்களை மக்கத்துக் குறைசிகள் நம்பிக்கையாளர், உண்மையாளர் என்றே அழைத்தனர்.
தனது இரத்த பந்துக்கள், மனைவி – பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவுகளால் நல்ல மனிதராக கணிக்கப்பட்ட நபியவர்களை சொந்த சமூகம் புறக்கணிப்பு செய்தது. இந்த புறக்கணிப்பு தொடர்ந்ததற்கான காரணம் என்னவாக இருக்க முடியும் என்று பலமுறை சிந்தித்ததுண்டு.

இக்கேள்வி இறைத்தூதர்களின் பணி மற்றும் அதன் விளைவாக அவர்களின் சொந்த வாழ்வியல் குறித்து கூர்ந்த வாசிப்பை வேண்டியது. இறைத்தூதர்கள் எவ்வாறு வாழ்ந்திருப்பார்கள்?!
நிச்சயமாக, அவர்கள் வாழ்ந்த சமூகங்களின் ஹீரோக்களாக அவர்கள் வாழ்ந்திருக்கமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் போதித்த வாழ்வியலுக்கு அது பலவகையில் முரண்படக் கூடியது.
வாழந்தெரிந்தவர், வெற்றிபெற்றவர் யார் என்பதை சமூகத்தின் மையநீரோட்டப் போக்கு பொதுவாக கணிக்கும் கணிப்புகளுக்கு உட்படக் கூடியவர்களாக இறைத்தூதர்கள் இருந்திருக்கமாட்டார்கள். அதாவது, அச்சமூகங்களின் வாழத்தெரியாதவர், பிழைக்கத்தெரியாதவர் என்ற வகைப்பாட்டுக்குள்ளேயே இறைத்தூதர்கள் வந்திருப்பார்கள்.

காரணம், சமூகத்தின் வாழ்வியலில், மையநீரோட்டத்தில் மாற்றத்தைக் கோரும் ஒரு இறைத்தூதர் அதன் மதிப்பீடுகளுக்கு உட்பட்ட வாழ்வியலைத் தழுவியவராக இருக்க முடியாதல்லவா?!
இன்னொரு வகையில் சொல்வதென்றால், மையநீரோட்டப் போக்கு வாழத்தெரிந்தவராக, ஹீரோக்களாக ஒருவரை எப்படி மதிப்பிடும்? இதற்கான பதில் மக்களிடம் எவை செல்வாக்குச் செலுத்தும் என்பதில் தங்கியுள்ளது.
பொருளாதார ரீதியாக யார் பலம் பெற்றவராக இருக்கிறாரோ அவர் வெற்றி பெற்றவர். (அதாவது, வசதி படைத்தவர், பண பலம் பெற்றவர்). எவர்களிடம் அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள்.

ஆன்மீக ரீதியில் யாரெல்லாம் மக்களை மந்தைகளாக வைத்திருக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றனரோ அவர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்துதான் ஒரு சமூகத்தில் அதிகார வர்க்கத்தை தோற்றுவிக்கின்றனர்.
பொருளாதார வலிமை – அதிகார பலம் – போலியான ஆன்மீகம் போன்றவற்றின் சேர்க்கைதான் மையநீரோட்டத்தில் ஹீரோக்களுக்கான வரையறையை உருவாக்குகின்றன.
இறைத்தூதர்களின் பணி இம்மதிப்பீடுகளில், பார்வைக் கோணத்தில் மாற்றத்தை வேண்டுவதாகவே இருக்கும். அற ரீதியான பார்வையை, சமூகத்தின் ஒடுக்கப்பட்டவர்களின் பாலான கரிசனத்தை வேண்டுவதாக இருக்கும். எனவே, இறைத்தூதர்கள் இயல்பாகவே சமூகத்தின் மதிப்பீடுகளுக்கு மாற்றமான வாழ்வியலை தழுவியவர்களாகவே வாழ்ந்திருப்பார்கள்.
இங்கு தான் அவர்கள் மீதான புறக்கணிப்புக்கான காரணம் வெளிப்படுகின்றது.

நபிகளாரைப் பற்றி குறைசிகள் இவ்வாறு கூறினர்: “மிகவும் மகத்துவம் வாய்ந்த தூதுத்துவத்தைக் கொடுக்க இந்த அனாதையைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வுக்கு கிடைக்கவில்லையா? மக்கா, தாயிஃப் நகரத்திலுள்ள செல்வமும் செல்வாக்கும் மிக்க பல தலைவர்கள் இருக்க அவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஆதரவற்றவரான இவரை அல்லாஹ் ஒருபோதும் தூதராக்க மாட்டான்”.
இதே ஆதங்கத்தை அபூஜஹ்லும் வெளிப்படுத்தினான், மக்காவில் நானும், தாயிஃபில் இன்ன தலைவரும் இருக்கும் நிலையில் முஹம்மத்துக்கு எப்படி தூது வர முடியும் என்பதாக அந்த வாதம் அமைந்தது. இதனை அல்குர்ஆனும் குறிப்பிடுகின்றது: “(தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள யாதொரு பெரியமனிதன் மீது இந்தக் குர்ஆன் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதனை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர்.”(43:31).
அதாவது, குறைசிகளின் மதிப்பீட்டை பொருத்த வரையில் நபிகளார் பொருட்படுத்தத்தக்க மனிதர் அல்ல. காரணம், அவரை சுற்றி செல்வாக்கோ, பண பலமோ இல்லை. இவை இன்றி அவர் எங்களை எப்படி வழிநடத்த முடியும், என்பதாக அமைகிறது அவர்களின் வாதம்.
.“நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை”(14:10) என்றே ஒவ்வொரு இறைத்தூதரும் புறக்கணிக்கப்படும் போது அவர்களிடம் அச்சமூகத்தினர் கூறியதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

அதற்கான இறைத்தூதர்களின் பதில், அவர்களின் வாழ்வியலை வெளிப்படுத்துவதாக அமைகின்றன: “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான்.”(14:11).
இறைத்தூதர்கள் சூப்பர் ஹீரோக்களாக, சாகச வீரர்களாக இருக்க வேண்டும் என்றே பல சமூகத்தினர் எதிர்பார்த்து வந்துள்ளனர். உதாரணமாக, பனூ இஸ்ராயிலர் ஈஸா(அலை) பற்றியும் இவ்வாறான எதிர்பார்ப்பையே வைத்திருந்தனர். ஆனால், அவர் சூப்பர் ஹீரோவாக செயல்படாமல், அவர்களிடம் மாற்றத்தை வேண்டிய பொழுது, அவர்களே அவரை புறக்கணிக்கவும் செய்தனர். ஏனெனில், இறைத்தூதர்கள் வேண்டிய சமூக மாற்றம் என்பது சாகசத்திலிருத்தும், ஹீரோயிஸத்திலிருந்தும் வேறுபட்டது, அதற்கு பல இடங்களில் முரண்படுவது.
நூஹ் மற்றும் லூத்(அலை) அவர்களிடமும் இதனையே அவர்களின் மனைவி – பிள்ளைகள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களின் வாழ்வியலோ இதற்கு மாற்றமாக அமைந்தது.
எனவே, சாகசக்காரர்களாக இல்லாத, ஹீரோக்களாக இல்லாத தமது கணவரை, தமது தந்தையை அவர்கள் புறக்கணித்தனர். அதாவது, அவர்களை பொருத்தளவில் நூஹ் மற்றும் லூத் (அலை) போன்றவர்கள் வாழத்தெரியாதவர்கள், தோல்வியடைந்தவர்கள்.
நூஹ் (அலை) அவர்களை அச்சமூகத்தினர் இவ்வாறு மதிப்பிட்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது : “அவரை நிராகரித்த அவருடைய சமூகத்தின் தலைவர்கள் (அவரை நோக்கி), “நாம் உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாகவும் நாம் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்த விதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை – மாறாக உங்களை (யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்” என்று கூறினார்கள்.”(11:27).
அவர்கள் வாழ்ந்த சமூகத்தின் மதிப்பீடுகளின் பிரதிபலிப்பாகவே நூஹ் மற்றும் லூத் (அலை) ஆகியோரின் நெருங்கிய உறவுகள் இருந்தனர்.
இதனால் தான், அல்குர்ஆன் இவ்வாறான மதிப்பீடு பற்றி தனது நிலைப்பாட்டினைக் குறிப்பிடுகின்றது: “நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்.” (66:10).

.ஆனால், சிறந்த மதிப்பீட்டை கொண்டவருக்கு உதாரணமாக கொடுங்கோலன் ஒருவனின் மனைவியை அடுத்ததாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது: “மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.”(66:11).
இவ்வசனம் கூறவரும் கருத்து மிக முக்கியமானது, ஆட்சியதிகாரம், செல்வச் செழிப்பு அனைத்தும் தன்னை சூழ்ந்திருக்க அரச மாளிகையில் வசிக்கும் அந்தப் பெண்ணின் மதிப்பீடு எப்படி இருக்கிறது என்பது கவனத்துக்குரியது. அவள் ஃபிர்அவ்ன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களின் அநீதியான செயல்களை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறாள். அவனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பாலான தனது கரிசனத்தை வெளிப்படுத்துகிறாள். அதிகார வர்க்கத்தினரின் மதிப்பீடுகளிலிருந்து தன்னை வெளியே நிறுத்திக் கொள்கிறாள்.
.சுலைமான்(அலை) அவர்களுக்கு இறைவன் பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கி இருந்தும், அவரை பலப்படுத்தும் வகையில் காற்று, பறவைகள் போன்ற இயற்கைக் காரணிகளையும், ஜின்களையும் வசப்படுத்திக் கொடுத்ததாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
இவ்வாறான ஒரு சிறப்பான ஏற்பாட்டை சுலைமான் (அலை) அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்குக் காரணமாக அவரது சமூகத்தினர் அவருக்கு ஆட்சியதிகாரம் சார்ந்த போதிய ஒத்துழைப்பை வழங்காமை தான் காரணம் என்று வாதிடும் தப்ஸீர் ஆசிரியர்களுமுண்டு. ஒரு ஆட்சியாளராக இருந்தும் சமூகத்தில் அவர் விழைந்த மாற்றங்களுக்கு ஒத்துழைக்க அச்சமூகத்தினர் தயாரின்றி இருந்ததை இது காட்டுகின்றது.
மூஸா (அலை) அவர்களை பனூ இஸ்ராயிலர்கள் தமது தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தும், அவரின் மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் மிகுந்த சிரமப்பட்டதை அல்குர்ஆனில் மூஸா (அலை) அவர்களது வரலாற்றை வாசிக்கும் எவரும் உணர முடியும்.
இவ்வகையில், இறைத்தூதர்களின் பணியும், வாழ்வியலும் மையநீரோட்ட மனநிலை சார்ந்த ஹீரோயிஸமாகவோ, சாகசமாகவோ என்றும் இருந்ததில்லை, அவ்வாறு இருக்கவும் முடியாது.

அவர்கள் சமூகத்தின் மதிப்பீடுகளில், பார்வைக் கோணத்தில் மாற்றத்தினை விழைந்தவர்கள். எனவே, சமூக மாற்றம் பற்றி சிந்திப்பவர்கள் மையநீரோட்ட மதிப்பீடுகளை சுமந்து பயணிப்பவராக இருக்க முடியாது.
அவ்வாறு சமூக அங்கீகாரம், சமூக ஏற்புக்காகப் பயணிப்பவர் உண்மையான சமூக மாற்றத்தை விரும்புபவராகவும் இருக்கப் போவதில்லை. இறைத்தூதர்களின் வரலாற்றை இப்படி கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கின்றன.
இப்பின்னனியில் இறைத்தூதர்களுக்கும், அவர்கள் சார்ந்த சமூகத்தினருக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல்களின் மொழி அமைப்புகளை உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள். அதுவே, மதிப்பீடு பற்றிய சரியான மீளாய்வுக்கு நம்மை இட்டுச் செல்லும்.
இறைத்தூதர்கள் எவ்வாறு வாழ்ந்திருப்பார்கள்?! இறைத்தூதர்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்!
அல்லாஹூ அஃலம்!


































