– பிரகாஷ் ராஜ்
— இந்தியாவின் பிரகாசமான இளம் சிந்தனையாளர் ஒருவரின் வழக்கு, குடிமகன் கண்ணியத்துடன் வாழவும், அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை உறுதிப்படுத்தவும் போராட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. —
ஒரு சினிமா படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்தேன். இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றதால், பகல் நேரம் எனக்கு இருந்தது. டெல்லியின் கோடை வெயில் சுட்டெரித்தது… புதிய மாநில அரசு அதிகாரத்துக்கு வந்திருந்தது… நாடு முழுவதும் உள்ள சட்டமியற்றுபவர்கள் தலைநகரில் குவிந்துள்ளனர்… இப்போது சட்டமாகியுள்ள வக்ஃப் திருத்த மசோதா காரணமாக பாராளுமன்றம் கொதித்துக் கொண்டிருந்தது.
உமர் காலிதை நினைத்துக் கொண்டேன். சிறையில் அவரது வாழ்க்கையில் ஐந்தாண்டுகளைக் கடக்கிறார்.
இரக்கமற்ற இந்த வெப்பத்தை அவர் திகார் சிறக்குள் எப்படி சமாளித்துக் கொண்டிருப்பார் என நினைத்தேன்.
அவருடைய பெற்றோர்கள் நினைவுக்கு வந்தார்கள். அவர்களைச் சந்திக்க உடனே அவர்களது இல்லத்திற்கு புறப்பட்டேன்.
தேச விரோதி என பரப்பப்படும் உமர் காலிதை நீங்கள் அறிவீர்களா?
அதற்கு முன் தேச விரோதி யாரென்பதை நாம் புரிந்துகொள்வோமா? அதைப் புரிந்து கொள்ளாமல், தேச விரோதியையும், தேச பக்தரையும் எப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியும்?
இதற்காக நாம், கடந்த காலத்தில் வெகுதூரம் பின் நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. சமீபகால வரலாற்றில் ஒரு உதாரணத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டால் போதுமானது.
அகிம்சை வழியில் இந்த நாட்டை ஒருங்கிணைத்த மகாத்மா காந்தி, மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தேசம் என்பது எல்லைக் கோடுகளால் ஆன வரைபடம் அல்ல, (தேசம் என்பது) அதில் வாழும் மக்களே என்று அவர் நம்பினார்.
இந்த நாட்டின் மக்கள் அவரவர் விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
இந்த நாட்டு மக்கள், அவர்கள் எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும், எந்த ஜாதியில் பிறந்தாலும் இந்த நாடு அவர்களை சகோதரத்துவ உணர்வில் பிணைத்துள்ளது என்று அவர் நம்பினார்.
முரண் என்னவென்றால், பிரிட்டிஷ் இந்தியாவில் உயிருடன் நடமாடி மக்களுக்காக வாழ்ந்த அந்த மனிதர், சுதந்திர இந்தியாவில் தனது பேதமற்ற சகோதரத்துவ கருத்துக்களை மக்களிடையே விதைத்தார் என்பதற்காக நாதுராம் கோட்சே என்ற மத அடிப்படைவாதியால் கொல்லப்பட்டார்.
பாரதீய ஜனதா கட்சி இந்த நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியது முதல், காந்தி தேச விரோதியாகவும், கோட்சே தேச பக்தராகவும் மாறிவிட்டார்கள்.
சமூகத்தைப் பிரித்து பிளவுபடுத்தி, மத அடிப்படையில் வெறுப்பை விதைத்து அதிகாரத்தில் தொடர்வதையே தம் வரலாற்றுத் திட்டமாகக் கொண்டவர்கள் தங்களை தேச பக்தர்களாக காட்டிக்கொள்கிறார்கள்.
தேச பக்தர்களாக தங்களைத் தாங்களே சுய பிரகடனம் செய்துகொள்ளும் இவர்கள் தான் தங்களுடைய வகுப்புவாதத் திட்டத்தை எதிர்த்து நிற்கும் எவரையும் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.
இப்படித்தான் நம் காலத்தின் பிரகாசமான சிந்தனைகொண்ட இளைஞர் உமர் காலித், தேச விரோதியாக மாற்றப்பட்டார்.

தளராத எதிர் நீச்சல்…
உமர் காலித் செய்த குற்றங்கள்தான் என்ன?
நாட்டின் பன்முகத்தன்மை தான் அரசியலமைப்பின் இதயமும் ஆன்மாவும் என்று நம்புவது; அரசியலமைப்பை அழிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக நீதியை நிலை நிறுத்த குரல் கொடுப்பது; சிறுபான்மை சமூகங்களை அடக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக முழக்கமிடுவது; வகுப்புவாத வெறுப்பைப் பரப்பி அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவிகளை உயிர் பலிகொடுப்பவர்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடுவது…
இறந்த மீன்கள் கூட ஆற்றின் போக்கில் செல்ல முடியும். நீரோட்டத்திற்கு எதிராக முன்னேற மீன்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும், உமர் காலித் போல! வெள்ளம் போல பாய்ந்து கொண்டிருக்கும் பொய்களையும், வெறுப்பையும் அச்சம் இல்லாமல் எதிர்கொள்கிறார்.
காந்தியத்தின் உண்மையான வாரிசுகளிடம் இதைத் தவிர குறைவாக எதிர்பார்க்க முடியுமா?
“சர்வாதிகாரத்தை எதிர்க்கும் போராட்டம் எங்களால் தொடங்கப்பட்டதில்லை, எங்களைக் கொல்வதால் இந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது” என்று மாவீரன் பகத் சிங் கூறினார். அந்த மரபை உமர் காலித் தொடர்கிறார். மாணவர் தலைவர் என்ற முறையில், உமர் காலித் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019க்கு எதிராகக் கடுமையாகப் போராடினார். இந்த சட்டம் தேசத்தை பிளவுபடுத்தி அதன் சகோதரத்துவத்தை அழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
முஸ்லிம்களுக்குக் குடியுரிமை மறுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டம், தலைநகர் தில்லியில் 2020 பிப்ரவரியில் தீவிரமாக நடைபெற்றது.
சிஏஏ சட்டத்திற்கு ஆதரவான சக்திகள் இந்த போராட்டக் களத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து, அமைதியாக நடந்த சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள் சீர்குலைக்கப்பட்டன. கும்பல்கள் வன்முறையில் ஈடுபட்டதால் போராட்டக்களம் வன்முறைக் களமாக மாறியது. இந்த வன்முறைகளில் கொல்லப்பட்ட 53 பேரில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.
கும்பல் வன்முறையைத் தூண்டிய ஆளும் கட்சி தலைவர்கள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால் வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில், Unlawful Activities (Prevention) Act (UAPA) கீழ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார் உமர் காலித்.

வெறும் 20 நிமிடங்கள் தான்…
அவருடைய ஜாமீன் மனுக்களை அமர்வு நீதி மன்றமும், தில்லி உயர் நீதிமன்றமும் நிராகரித்துள்ளன. 2023 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜாமீன் மனு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை, விசாரணை கூட இன்னும் நடக்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஐந்து ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. மனித உரிமைகளுக்கு எதிரானது.
“உமர் காலித் நிரபராதி என்பதை நிரூபிக்க உச்ச நீதிமன்றத்தில் இருபது நிமிட விசாரணை மட்டுமே எங்களுக்கு தேவை” என்று அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், 2023 முதல் இப்போது வரை, அவரின் ஜாமீன் மனுவை விசாரிக்க அந்த 20 நிமிடங்களை ஒதுக்க உச்ச நீதிமன்றத்தால் முடியவில்லை.
அற்புதமான நண்பர்கள்
உமர் காலித்தின் வீட்டிற்குச் செல்லும் வழியில் அவரது நண்பர்கள் சிலர் என்னுடன் சேர்ந்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும், அவர்கள் உமரை சிறையில் தவறாமல் சந்திப்பதாக என்னிடம் கூறினார்கள். “நெருக்கடியான உங்களது வேலைகளுக்கு இடையே இதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.
உமரின் நண்பர்களில் ஒருவர், சிறையில் இருந்த அமீர் என்பவரின் கதையை என்னிடம் கூறினார். அமீர் சிறையில் அடைக்கப்பட்ட முதல் மூன்று மாதங்களில், அவரது பெற்றோர்களும் நண்பர்களும் அடிக்கடி சென்று பார்த்து வந்தனர். அவர்களுடைய வறுமை, வாழ்க்கைப் போராட்டங்களின் காரணமாக அதுபோல தொடர்ந்து செல்ல இயலாமல் அவர்கள் சிறைக்குச் செல்வது குறைந்து போனது. அது, உறுதியாக இருந்த அமீரின் வலிமையை சிதைத்தது, மெல்ல மெல்ல உடையத் தொடங்கினார். அவரது வழக்கு எளிதாக ஜாமீன் வழங்க முடியுமானது தான் என்றாலும், அவர் 10 ஆண்டுகள் சிறையில் வாடினார்.
அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் பிரிவும் அது தரும் வலியும் ஒருபுறம் இருக்க, சிறைச்சாலை ஒரு நபரின் தன்னம்பிக்கையை நசுக்கி, மனித உணர்வை சிதைக்கிறது. அமீரின் துயர அனுபவமே உமரின் நண்பர்கள் ஒவ்வொரு வாரமும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற உறுதியை வலுப்படுத்தியது.
ஒவ்வொரு சந்திப்பின் போதும் “நாங்கள் உங்களுடன் இருக்கி றோம்” என்று சொல்ல அவர்கள் மாறி மாறி உமரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் தோழனுடைய உள வலிமையை, இரக்கமற்ற சூழ்நிலையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் இந்த இளைஞர்களைக் கண்டு நான் பெருமிதமும் நெகிழ்ச்சியும் அடைந்தேன்.
மிச்சமிருக்கும் நம்பிக்கை
உமரின் தாயார் என்னை அன்புடன் வரவேற்றார். அவரது தந்தை வக்பு (திருத்த) மசோதா மீதான விவாதத்திற்கு சென்றிருந்தார். விரைவில் திரும்புவார் என்றனர்.
ஈகைப் பண்டிகை முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தது. காலித்தின் தாயார் எங்களுக்கு இனிப்புகளைக் கொண்டு வந்து புன்னகையுடன் பரிமாறினார், மகன் தன்னுடன் இல்லாத வலி அவரது கண்களில் ஆழமாக வெளிப்பட்டது. “என் மகன் விரைவில் விடுதலையாவான். நீதித் துறை மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது” என்றபடி எங்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவர் சொன்ன வார்த்தைகள் எனக்குக் கண்ணீரை வரவழைத்தன.
இதற்கிடையில், திரும்பி வந்துவிட்ட உமரின் தந்தை, தேநீர் தயாரித்து, எங்களுக்குப் பரிமாறியபடி எங்களோடு அமர்ந்து பேசினார்.
நான் அவரிடம், “உங்கள் மகன் தனியாக இல்லை. நாங்கள் அவருடன் இருக்கிறோம்” என்று சொன்னேன். “அவர் எந்தக் காரணத்திற்காகப் போராடி சிறைக்குச் சென்றார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்களும் அவனுடன் இருக்கிறோம்” என்று எங்களிடம் சொன்னார். நான் நெகிழ்ந்து போனேன்.
உமரின் நண்பர் ஒருவர் அவரது தந்தையிடம், “பாபா, உமர் ஜாமீனில் வெளியே வந்ததும், அவரை பிரகாஷ் சாருடன் தென்னிந்தியாவுக்கு அனுப்புவோம். அங்கு அவர் பாதுகாப்பாக இருப்பார்” என்றார். உமரின் தந்தை இறுக்கமான பார்வையுடன், “அவர் முன்னெடுத்த போராட்டத்திற்கான காரணிகள் இங்கே தில்லியில் உள்ளது. வேறு எங்காவது போய் ஏன் அவர் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும்?” என்று கேட்டார்.
போராட்டம்தான் நாம் உயிருடன் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். கண்ணியத்துடன் வாழ நாம் போராட வேண்டும். நடைப் பிணமாக வாழ்வதில் என்ன பயன்?
உண்மையான தேசபக்தர்கள்
உமர் காலித்தும், அவரது பெற்றோர்களும்தான் உண்மையான தேசபக்தர்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும். உமர் காலித் என்ற ஒரு நபர் மட்டும் ஐந்து ஆண்டுகளாக சிறையில் வாடவில்லை; ஒவ்வொரு குடிமகனின் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையும் வாடுகிறது; நம் மதிப்புமிக்க வாழ்க்கைக் கான உரிமையும், அதை உறுதி செய்திடும் அரசியலமைப்பும் சிறையில் வாடுகிறது.





































