- Dr. எம். நூருல் அமீன்.
பிரபஞ்சத்தில் உள்ள இலை கிளை மரம் வேர் அனைத்துமே மருந்துகளே. நிறைவான வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டும் என்பதற்காகவே இறைவன் பிரபஞ்சத்தில் அற்புதங்கள் பலதை படைத்து அவைகளை பெற்றுக் கொள்ளும் அறிவையும் தந்துள்ளான்.
வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்காக இறைவன் அளித்த அறிவின் துணைகொண்டு இறைநம்பிக்கையுடன் திருக்குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி சிந்தித்து ஆய்வு செய்தவர்கள் வாழ்வில் வெற்றிகளைக் கண்டார்கள்
திருக்குர்ஆனில் 13வது அத்தியாயம் 3வது வசனம் : “நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன” என்பதை அறிவிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்திற்கு எல்லா துறைகளுக்கும் வழி காட்டியதைப் போல சில நோய்களுக்கான நிவாரணங்களையும் கூறியுள்ளார்கள்.
அத்தி, ஆலிவ், மாதுளை, திராட்சை, கருஞ்சீரகம், தேன், பேரீட்சை, சுரைக்காய், வெள்ளரிக்காய், ஜவ்வரிசி, இஞ்சி, கடல் உயிர்கள், கால் நடைகளின் பால் மற்றும் இறைச்சிகள் போன்ற பலவற்றின் மருத்துவப் பயன்கள் பற்றியும், நமது உடலில் இருந்து ரத்தம் உறுஞ்சி எடுக்கும் முறையான ஹிஜாமாவை பற்றியும் நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும், நோன்பின் பயன்கள், உளத் தூய்மை, தொழுகையின் நடைமுறை, கடமையான குளிக்கும் வழிமுறைகள், தொழுகைக்காக உளு செய்யும் முறைகள், உடலை சுத்தம் செய்துகொள்ள நீர் கிடைக்காத சூழ்நிலைகளில் மண்ணைக் கொண்டு தயம்மம் செய்யும் முறைகள், காய்ச்சல் காலங்களில் உண்ணும் உணவு முறைகள் என வாழ்வியல் முறைகளை, ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளாக சொல்லியுள்ளார்கள் நபி (ஸல்).
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய மருத்துவ போதனைகளை இஸ்லாமிய அறிஞர்கள் ‘திப் அந்நபவி’ (நபிகளாரின் மருத்துவம்) என தொகுத்துத் தந்துள்ளதை நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் மக்கள் பயன் பெற்றும் வருகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் அடியார்களே, நீங்கள் மருந்துகளைக் கொண்டு நோய்களுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள், மரணத்தைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்துகளைப் படைத்துள்ளான்’ என்றும் கூறியுள்ளார்கள்.

மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர்களை நபியவர்கள் பயன்படுத்தியும் உள்ளார்கள். உதாரணமாக தனது இறுதி ஹஜ்ஜின் போது, ஸஅத் பின் அபி வக்காஸ் (ரலி) என்னும் தோழர் நோய் வாய்ப்பட்டு இருந்த பொழுது மருத்துவத்துறையில் புகழ் பெற்ற ‘ஹாரிஸ் பின் கல்தா’ என்பவரிடம் சென்று ஸஅதுக்கு சிகிச்சை செய்யும் படி ஹாரிஸ் என்பவரை பணித்துள்ளதை உதாரணத்துக்கு குறிப்பிடலாம்.
நபி (ஸல்) அவர்களை பின்பற்றி முஸ்லிம்களும் பல முயற்சிகள் செய்து அதன் மூலம் கிடைத்த மருத்துவ அற்புதங்களை உலகத்திற்கு கொடையாகவும் அளித்துள்ளனர்.
8ஆம் நூற்றாண்டில் இருந்து 15ஆம் நூற்றாண்டு வரை ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் மூலமும், கிரேக்க, ரோமானிய, இந்திய, எகிப்திய, சாஸானிய மற்றும் பைசண்டைன் (Byzantine) கலாச்சாரங்களில் இருந்து பெற்ற அறிவையும் கொண்டு உலகளாவிய முன்னேற்றத்திற்கு இஸ்லாமியர்கள் பெரும் பங்களிப்பை வழங்கினர். (சாஸானியப் பேரரசு என்பது 7 – 8 ஆம் நூற்றாண்டுகளில் ஈரானில் கடைசியாக நிலைத்திருந்த பேரரசு, கிழக்கு ரோமப் பேரரசு என்பது பைசண்டைன் பேரரசு என்றும் அழைக்கப்பட்டது.)
இந்த பங்களிப்புகள் மருத்துவ அறிவியல், மருத்துவ நடைமுறைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் சிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ கல்வி என பல துறைகளில் பரவியிருந்தன. இதற்காக பல அறிஞர்கள் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள்.
அந்த மருத்துவ அறிஞர்களில் அஸ் ஸஹ்ராவி, அர் ராஸி, இப்னு ஸீனா என்ற அபூ அலி ஸீனா, இப்னு நபீஸ், ஹுனைன் இப்னு இஸ்ஹாக், அபூ ஸகரிய்யா யுஹன்னா பின் மஸாவிஹ் போன்ற பலர் முக்கியமானவர்கள்.
கிரேக்க அறிஞர்களான மேற்கத்திய மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் ஹிப்போகிரட்ஸ், கேலன் ஆகியவர்கள் அடங்கிய மருத்துவப் பட்டியலில் முஸ்லிம் மருத்துவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அவர்களின் புகைப்படங்களும் இங்கிலாந்தின் மருந்தியல் நூலில் இடம் பெற்றுள்ளது.
அவர்கள் நோய்கள், நோயின் தன்மைகள், அதற்கான சிகிச்சை முறைகளுடன் மருத்துவ நூல்களையும் எழுதி உள்ளனர். அவர்களின் மருத்துவ கண்டு பிடிப்புக்களும், நூல்களும் உலகின் பல மருத்துவப் பல்கலைக் கழகங்களில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பாடநூலாகவும், மருத்துவ ஆய்வுக்காகவும் இன்றும் பயன்பட்டு வருகின்றன.
நோய் போக்கும் மருத்துவ முறைகளில் மட்டுமில்லாமல், நோயாளிகளை தங்கவைத்து சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளிலும் உலகிற்கு முன்மாதிரியாக அவர்கள் இருந்துள்ளார்கள்.

முதன் முதலாக உலகில் சகல வசதிகளையும் கொண்ட பொது மருத்துவமனையை நிறுவிய பெருமை கலீபா ஹாரூன் ரஷீதையே சாரும். இன்றைய ஈராக்கின் பாக்தாத் நகரத்தில் நிறுவப்பட்ட மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிக்சையும், மருத்துவப் பரிசோதனைகளும், மருந்துகள், உணவுகள் தங்குமிடம் போன்றவைகளும் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளன.
நோயாளிகளில் ஆண், பெண் என்ற தனித் தனிப் பிரிவுகளும், ஆண் நோயாளிகளுக்கு ஆண் பணியாளர்களும், பெண் நோயாளிகளுக்கு பெண் பணியாளர்களும், தொற்று நோய்களுக்கு தனிப் பிரிவும், தீவிர நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதிகளுடனும் மருத்துவமனைகள் இருந்துள்ளன.
மருத்துவமனையில் உள் நோயாளிகளாக தங்கும் நோயாளிகளுக்கு தனி வகையான ஆடைகள் வழங்கப்பட்டது. அவர்களின் பொருட்களை பாதுகாக்க ஏற்பாடும் செய்யப்பட்டது. மருந்துகள் தயாரிக்கவும், சமயலறைக்கும், நிர்வாகத் தேவைகளுக்கும் என தனித்தனி இடங்களும் இருந்துள்ளன. நோயாளிகளைப் பார்க்க வருவோருக்கும் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியும், மருத்துவப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்தது.
பாக்தாத், டமஸ்கஸ், கெய்ரோ, மக்கா, ஜெரூசலம், அலெப்போ, ஹர்ரான் ஆகிய பகுதிகளிலும் இது போன்ற மருத்துவமனைகளுடன் பல மருத்துவக் கல்லூரிகளும் இருந்துள்ளன.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், வசதி இல்லாத மாணவர்களுக்கு நிதியுதவியும், கல்லூரிகளில் நூலகங்களும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆய்வுக் குறிப்புகள் எடுப்பதற்குத் தேவைப்படும் பொருட்கள் இலவசமாகவே வழங்கப்பட்டு வந்துள்ளன.
கல்லூரிகளில் தேர்வு நடத்தும் அதிகாரிகளை நியமித்து, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முறையும் இருந்துள்ளது.
மருத்துவத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த முஸ்லிம் மருத்துவ மேதைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் நவீன அறுவை சிகிக்சையின் தந்தை என்று போற்றப்படும் அர் ராஸி மிகவும் குறிப்பிடதக்கவர் ஆவார்.
கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முஸ்லிம் மருத்துவ மேதைகளில் அஸ் ஸஹ்ராவியும் ஒருவராவார். அந்தலூசியா என்னும் ஸ்பெயினின் கார்டோபாவிலிருந்து வட மேற்கே 8 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள மதீனா-அல்-ஸஹ்ரா நகரில் குர்துபாவுக்கு அருகில் உள்ள ‘ஸஹ்ரா’ எனும் ஊரில் இவர் பிறந்த காரணத்தினால் ‘ஸஹ்ராவி’ என அழைக்கப்படுகின்றார். இவரது முழுப்பெயர் அபுல் காஸிம் கலஃப் பின் அப்பாஸ் அஸ் ஸஹ்ராவி என்பதாகும். இவர் லத்தீன் மொழியில் அல்புகாசிஸ் அல்லது அபுல்காசிஸ் என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்பெய்னின் முக்கிய மருத்துவராகவும் மருந்துகள் தயாரிப்பதில் முன்னோடியாகவும் அஸ் ஸஹ்ராவி இருந்துள்ளார். இவர் கலீஃபா அப்துல் ரஹ்மான் III அல் நசீரின் நீதிமன்ற மருத்துவராகவும், அப்பாஸிய கலீபாக்களுள் ஒருவரான முக்தபி பில்லாஹ் (902 – 907) என்பவருடைய ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதிலும் நிறுவப்பட்டிருந்த வைத்தியசாலைகளின் தலைவராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
தனது சம காலத்தில் அறுவை சிகிச்சையின் பழமையான அணுகுமுறைகளை கவனித்த அஸ் ஸஹ்ராவி மனிதனின் உடல் உறுப்புக்களை பற்றி ஆழமான ஆய்வுகள் செய்து அறுவைச் சிகிச்சை முறையில் பல நவீன முறைகளையும், அது சார்ந்த நூல்களையும் உடற்கூறியல் பற்றிய அறிவை விரிவுபடுத்தியும் “அல்-மசாலிஹ் அல்-ஜராஹியா” (Al-Masalih al-Jarrahiyya) என்ற நூலையும் எழுதியுள்ளார், இதில் அறுவை சிகிச்சை முறைகள், அதற்கான கருவிகள், மற்றும் நோய்களின் சிகிச்சைகள் பற்றிய மிக விரிவான விளக்கங்கள் அடங்கியுள்ளது.
அஸ் ஸஹ்ராவியின் மருத்துவ கலைக்களஞ்சியம் என்று போற்றப்படும் கிதாப் அல் – தஃப்சிர் 30 தொகுதிகள் கொண்டதாகும். இதில் உள்ள அறுவை சிகிச்சை பற்றிய அத்தியாயம் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, ஐரோப்பாவில் பாட நூலாகவும் மாறியது.
அதில் ஆன் சர்ஜரி அண்ட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் என்ற தலைப்பில் அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்த வேண்டிய கருவிகள், சிகிச்சை செயல்முறைகள் மற்றும் ஒவ்வொரு கருவியின் படங்களையும் அதில் விளக்கியுள்ளார்.
பெண்களுக்கான மருத்துவம், மகப்பேறு கால மருத்துவம், போன்றவற்றிலும் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, இறந்த கருவைப் பிரித்தெடுப்பதற்கான ஃபோர்செப்ஸையும் அவர் கண்டுபிடித்தார். உள் தையல்களுக்கு கேட்கட்டைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகவும் இருந்துள்ளார்.
கண், காது, மூக்கு, வாய், முதலிய உறுப்புக்களில் அறுவைச் சிகிச்சை செய்யும் முறைகளையும், அறுவை சிகிச்சையின் வகைகள் மற்றும் கீறல்களின் தேவைகளைப் பொறுத்து சிறப்பு கத்திகளை பயன்படுத்தினார். ஒவ்வொரு கத்தியையும் அவரது அனுபவத்திற்கு ஏற்ப வடிவத்தைதார்.
அறுவை சிகிக்சையில் முதன் முதலில் மிருகங்களின் குடல் இழைகளைப் பயன்படுத்தி தையல் போடும் முறைகளை பயன்படுத்தினார். மேலும் பல் வைத்தியராகவும், நரம்பியல் நோயறிதலுக்கு முன்னோடியாகவும், இரத்தம் உறையும் திறனை பாதிக்கும் நிலையான ஹீமோபிலியாவின் பரம்பரை தன்மையை அடையாளம் கண்டவராகவும், டான்சிலெக்டோமி (தொண்டையில் உள்ள டான்சில்) மற்றும் ட்ரக்கியோஸ்டமி (மூச்சி குழாய்) பற்றியும் அவர் முழுமையாக விவரித்துள்ளார்.

காதுகளின் உள் பரிசோதனைக்கான கருவிகளை உருவாக்கியும். தொண்டைக்குள் சிக்கிய பொருட்களை அகற்ற பயன்படும் கருவியையும் கண்டுபிடித்துள்ளார்.
மூக்கில் உள்ள பாலிப்பை (மூக்கில் சதை வளர்ச்சியை) அகற்ற கொக்கியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும், சில வகையான தலைவலிகளை அகற்ற தற்காலிக தமனியின் வெளிப்பாடு மற்றும் பிரிவு ஆகியவற்றை விவரித்தும் தோல் கட்டிகள் அல்லது திறந்த புண்களுக்கு சிகிச்சையளிக்க காடரைசேஷன் ஆகியவைகளை பயன்படுத்தும் நடைமுறையையும் அறிவித்துள்ளார்.
இவரின் மருத்துவக் களஞ்சியம் பல தொகுதிகளைக்கொண்டது. முதல் தொகுதி பொது மருத்துவக் கோட்பாடுகளையும், இரண்டாவது தொகுதி நோயியல் பற்றியும் மற்றும் மீதமுள்ள தொகுதிகளில் மருந்தியல் மற்றும் மருந்து தொடர்பான தலைப்புகளைக் கொண்டதாகும்.
ஸஹ்ராவி, இஸ்லாமிய உலகின் சிறந்த மருத்துவ அறிஞர்களிடமிருந்து மருத்துவ அறிவைக் கற்றுக்கொண்டார்.
ஃபிரான்டியர்ஸ் (Frontiers) என்ற இணையம் அல்-சஹ்ராவியின் மருத்துவ சேவையை பாராட்டி அறுவை சிகிச்சையின் தந்தை என்றும் புகழ்ந்துள்ளது. இவரின் உருவப்படம் பாரீஸ் பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளது என்பதும் கூடுதல் செய்தி.
அஸ் ஸஹ்ராவி 1013இல் அவரின் 77 வது வயதில் மரணித்தார்.
அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படும் அஸ் ஸஹ்ராவியைப் போல மருத்துவ வரலாற்றில் பல இஸ்லாமிய மருத்துவர்கள் இருக்கின்றனர்.
இன்னும் சிலரைப் பற்றி நாமும் தெரிந்து கொள்வோம். இன்ஷாஅல்லாஹ்…