நெருக்கடிகளுக்கு இடையே தெளிவான இலக்கு

சமூகப் பணிகளில் முதன்மையானதும் முஸ்லிம் உம்மத்தின் உடனடித் தேவையாக இருப்பதும் கல்விப்பணிகள் தான். கல்விப் பணிகள் தான் மார்க்கப்பணியும் சமூக முன்னேற்றப் பணியும் ஆகும்.

கல்விப் பணிகளை முன்னெடுக்கும் அமைப்புகளின் முதன்மைச் செயல்திட்டம் “தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும்” என்பதாக இருப்பது சிறப்பு.

அமைப்புகளின் செயல்திட்டம் இப்படி இருக்க வேண்டும்…,

  1. முஸ்லிம் பிள்ளைகள் அதிகமாக படிக்கும் பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமியப் பாடத்தையும் அரபு மொழிப் பாடத்தையும் அந்தந்த பள்ளி கல்லூரியின் சூழலுக்கேற்ப இணைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
  • தேவையுள்ள ஊர்களில் இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட்ட புதிய நர்சரி பிரைமரி பள்ளிக்கூடம் துவங்கிட முயற்சி எடுக்க வேண்டும். (அதற்கான பயிற்சிகளை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கடந்த 14 ஆண்டுகளாக அளித்து வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் 44 இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் உருவாகியுள்ளன)
  • அரபு மதரஸாக்களில் பள்ளி இறுதித்தேர்வு எழுதுவதற்கும் பட்டப்படிப்பு படிப்பதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். (இதனால் ஆலிம்கள் தகுதிமிக்க ஆசிரியர்களாகவும் உருவாகி வருவார்கள். முஸ்லிம் பிள்ளைகள் மார்க்கத்தையும் பள்ளிப் பாடங்களையும் ஆலிம்களிடம் படிக்கும் இஸ்லாமிய பாரம்பரிய கல்விச் சூழல் உண்டாகும்.)
  • அல்லாஹ்வுடைய படைப்புக்களை ஆராயும் அறிவியல் உயிரியல் ஆராய்ச்சி சிந்தனைகளை முஹல்லா பிள்ளைகளிடம் தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • ஆண் பிள்ளைகளை ஆராய்ச்சிக் கல்வி (PhD) வரை என்று இலக்கு நிர்ணயித்து அதையே அவர்களுக்கு இடைவிடாமல் போதிக்க வேண்டும். (மிகக்குறுகிய காலத்தில் இளம் விஞ்ஞானிகள் உங்கள் முஹல்லாவில் உருவாவதற்கு இது வழிவகுக்கும்)
  • பெண் பிள்ளைகள் அவர்களுக்கு ஆர்வமான பாடத்தில் ஆழமான அறிவுடைய கல்வியாளர்களாக உருவாகி வர வேண்டும் என்பதையும் அப்படி உருவானால் குடும்பத்திலும் சமூகத்திலும் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் (பெண்களுக்கு) விளக்கிச் சொல்ல வேண்டும்.
     

இந்த கல்விப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றால் முஸ்லிம் சமூகத்தில் நீங்கள் விரும்பும் மாற்றங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் உதவியால் வெகுவிரைவில் உண்டாகும் என்பது நிச்சயம்.

கவலைகளும் புலம்பல்களும் பிறர்மீது பழிசுமத்துவதும் சமூக நெருக்கடிகளை மேலும் மேலும் மோசமாக்கும்.

நெருக்கடிகளுக்கு இடையே தெளிவான இலக்குடன் மேற்கொள்ளப்படும் கல்விப் பணிகளுக்கு மட்டுமே நிலையான மாற்றங்களை கொண்டுவரும் ஆற்றல் இருக்கிறது.

  • CMN SALEEM