அல்லாஹுத்தஆலா நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மகத்தான ஒரு தூதை வழங்கி உலகத்தாருக்கு நேர்வழி காட்டும்படி அனுப்பி வைத்தான்.
நபியவர்கள் பெண்களுக்கு எதிரான அநீதிகளை தடுத்து நிறுத்தினார்கள். அவளுக்குரிய அந்தஸ்தை வரையறுத்துக் கொடுத்தார்கள். இஸ்லாத்தில் ஆணும், பெண்ணும் சமமானவர்களே என்று பிரகடனம் செய்தார்கள். அல்லாஹ் திருமுறையில் பின்வருமாறு கூறுகிறான் :
“மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.” (அந் நிஸா : 1)
இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் பெண்கள் எந்தவொரு சொத்திற்கும் வாரிசாக முடியாது என்று அரேபியர் மத்தியில் ஒரு வழக்கம் இருந்தது. வாளேந்திப் போராடுபவர்களுக்கே வாரிசுரிமை உண்டு என்றும் கூறினர்.
அதாவது ஒருவர் மரணித்தால் அவரது மகன் அவருக்கு வாரிசாக வருவார். மகன் ஒருவர் இல்லையெனில் அவருக்கு நெருக்கமான ஆண்மகன் ஒருவரே வாரிசாக வரும் வழக்கம் இருந்தது. அவர் சகோதரன் அல்லது தந்தையின் சகோதரன் என்று யாராக இருந்தாலும் சரி. பெண்களுக்கு எந்தப் பங்கும், எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.
இஸ்லாத்தின் வருகையுடன் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட இந்த அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அல்லாஹ் ஸூரதுன் நிஸாவின் ஏழாம் வசனத்தில் பின்வருமாறு சொல்கிறான் :
“பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.”
மேலும், ஸூரதுல் பகராவின் 228ம் வசனத்தில் இப்படியும் இடம்பெறுகிறது.
“கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு.”
இந்த ஒரு படி மேலான உயர்வு பெண்ணை பராமரித்து, பாதுகாப்பதற்கானது.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அன்ஸாரி ஸஹாபி பெண்மணியான அஸ்மா பின்த் யஸீத் (ரழி) அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற ஓர் உரையாடல் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் இருந்த வேளை அஸ்மா (ரழி) அவர்கள் வருகை தந்து நபிகளாரிடம் பின்வருமாறு கூறினார்கள் :
“அல்லாஹ்வின் தூதரே, நான் பெண்கள் அனைவரதும் பிரதிநிதியாக வந்துள்ளேன். நாம் உங்களையும், உங்கள் இரட்சகனையும் ஈமான் கொண்டுள்ளோம். பெண்களாகிய எமக்கு நிறைய விடயங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நாமோ உங்களது (ஆண்) வீடுகளை பாதுகாத்து, நிர்வகிக்கிறோம். உங்களது குழந்தைகளை கருவில் சுமக்கிறோம். ஆனால் ஆண்களாகிய நீங்களோ சபைகளில் ஒன்றுகூடி, நோயாளிகளை தரிசித்து, ஜனாஸாக்களில் கலந்து கொண்டு, ஹஜ்ஜுக்கு மேல் ஹஜ் செய்து கொண்டு, எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்து கொண்டு எங்களை விட சிறப்புப் பெற்றவர்களாக இருக்கிறீர்களே!. உங்களில் எவரேனும் ஹஜ், உம்றாவிற்காக அல்லது ஜிஹாதிற்காக வெளியே சென்றால் நாமோ உங்கள் சொத்து, செல்வங்களை பாதுகாத்துத் தருகின்றோம். உங்கள் ஆடைகளைத் துவைத்துத் தருகிறோம். உங்கள் குழந்தைகளை வளர்த்து, பயிற்றுவிக்கிறோம். எனவே, உங்களுடன் இத்தகைய நல்ல விடயங்களில் நாமும் இணைந்து கொள்ளட்டுமா…?” என்று வினவினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை நோக்கி திரும்பி, “ஒரு பெண் தன் மார்க்கத்தை பற்றி இதைவிட சிறந்த கேள்வியைக் கேட்பதை நீங்கள் செவிமடுத்திருக்கிறீர்களா?” என்று விசாரித்தார்கள்.
நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே, ஒரு பெண் இது போன்ற விடயங்கள் பற்றி சிந்திப்பாள் என்று நாம் நினைக்கவில்லை” என்று பதிலளித்தனர்.
பின் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைப் பார்த்து, “பெண்ணே! புரிந்து கொள். ஒரு பெண் தனது கணவனுக்காக ஆசைகளை விடுவது, அவனது திருப்தியை நாடி செயற்படுவது, அவனது ஒப்புதலை பின்பற்றி நடப்பது மிகமிக நல்லதாகவே இருக்கும் என்பதை உன் சக தோழிகளுக்கும் சொல்லிக் கொடு…” என்று கூறினார்கள்.
அஸ்மா (ரழி) அவர்களும் அல்லாஹ்வை திக்ர் செய்தவாறு தன் கூட்டத்தாரிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் கூறியவற்றை எத்திவைத்தார்கள். அதனைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.
மேலும், ஒரு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுப்பணி பற்றி மனைவி ஆயிஷா (ரழி) அவர்களிடம் வினவப்பட்ட போது, “தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்லும் வரை வீட்டுப்பணிகளில் எமக்கு உதவியாக இருப்பார்” என்று பதிலளித்தார்கள். சில மனைவியர் நபி (ஸல்) அவர்களுடன் போராட்டங்களுக்கும் செல்பவர்களாக இருந்தனர். அங்கு நோயாளிகளுக்கும், காயப்படுவோருக்கும் சிகிச்சையளித்து, கவனிப்பவர்களாக இருந்துள்ளனர்.
இஸ்லாம் பெண்ணுக்கு இரு விடயங்களில் சுதந்திரமளித்தது.
ஒன்று : திருமணம்.
இரண்டு : சொத்து, செல்வம்.
ஒரு பெண்ணுக்கு தான் விரும்பாத ஒருவரை திருமணம் முடிக்குமாறு வற்புறுத்த ஒருவருக்கும் உரிமை கிடையாது. தான் விரும்பாதவரை நிராகரிப்பதற்கு பெண்ணுக்கு உரிமை உண்டு. இதுவே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு தந்தை கன்னிப் பெண்ணான தனது மகளை தன் சகோதரரின் மகனுக்கு பலவந்தமாக திருமணம் செய்து வைக்க முயன்ற போது, அந்த திருமணத்தை நிறுத்தி, பெண்ணின் சம்மதமின்றி திருமணம் செய்வதற்கு தடை விதித்தார்கள்.
அதே போன்று ஒரு பெண்ணுக்கு தனது சொத்து, செல்வங்கள் போன்ற விடயங்களிலும் பூரண உரிமை உண்டு.
இஸ்லாம் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களிலும் கரிசனை செலுத்துகிறது. பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் ஜாஹிலிய்ய மரபை முற்றாக ஒழித்துக்கட்டியது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது புதல்வியரோடும், அவர்களது குழந்தைகளோடும் மட்டுமல்லாது தனது தோழர்களின் பெண் குழந்தைகளையும் அரவணைத்து, அவர்களுடன் கொஞ்சி விளையாடக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹுத்தஆலா கணவன், மனைவியருக்கிடையிலான உறவை ஒழுங்குபடுத்தியிருப்பதை பின்வருமாறு முன்வைக்கிறான்.
“இன்னும், அவர்களுடன் அழகான முறையில் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் அவர்களை வெறுத்துவிடுவீர்களானால், நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும்; (அவ்வாறு வெறுக்கக்கூடிய) அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.” (அந் நிஸா : 19)
ஒரு தடவை உமர் (ரழி) அவர்கள் தனது மனைவியை விவாகரத்துச் செய்த ஒரு மனிதனிடம் காரணத்தை வினவினார்கள். அந்த மனிதரோ, அவளை தான் விரும்புவதில்லை என்று பதிலளித்தார். அதற்கு உமர் (ரழி) அவர்கள், “எல்லா வீடுகளும் அன்பினால் தானா எழுப்பப்பட்டிருக்கிறது? அனைத்து வீடுகளுக்குள்ளும் பிரச்சனைகள் இருக்கின்றது. அப்படி இருந்தாலும் மனைவியை ஒரு கணவன் பராமரிக்கக் கூடாதா?” என்று கூறினார்கள்.
மேலும், இஸ்லாம் தாய் என்ற ரீதியில் ஒரு பெண்ணின் விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதை பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மனிதர்களில் நட்புறவு கொள்வதற்கு மிகவும் தகுதியானவர் யார் என்று திரும்பத் திரும்ப வினவியதற்கு மூன்று முறையும் தாய் என்றே கூறினார்கள். நான்காவது முறையாகவே தந்தை என்று கூறினார்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமத்துவம் வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கையாகும், இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இருபாலரின் இயற்கைத் தன்மைகளை கருத்தில் கொள்ளாமல், அனைத்து விடயங்களிலும் சமத்துவம் வேண்டும் என்று கூறுவதை ஒரு மடத்தனமான கோரிக்கையாகவே கருத வேண்டும்.
பெண்ணின் பணியாவது குடும்பத்தை கட்டியெழுப்புவதும், வீட்டை சரியாக நெறிப்படுத்தி நிர்வகிப்பதுமாகும். ஆனால், ஒரு பெண்ணுக்கு தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தால், அல்லது தனக்குப் பொருத்தமான எந்த தொழிலின் மீதும் விருப்பம் இருந்தால், அதில் ஈடுபடுவதற்கு எந்த விதத்திலும் தடைகள் இல்லை.
எனவே, பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் மிகவும் தெளிவானது. பெண்ணுக்கான உரிமைகளை வழங்கி அவளின் அந்தஸ்தை உயர்த்திய மார்க்கம் இஸ்லாம் ஆகும். இஸ்லாம் பெண்களை ஆண்களுக்கு சமமானவர்களாகவே கருதுகிறது. ஆனால், அவர்களின் இயல்புகளுக்கு ஏற்ப தனித்தன்மையை வழங்குகிறது.
✍️ அரபியில் – அஷ் ஷெய்க் ஹஸன் அப்துல்லாஹ் ஆலு ஷெய்க்
✍️ தமிழில் – அஸீம் நிஸ்தார்