முதல் தலைமுறை மனிதர்கள் – 29 – சேயன் இப்ராகிம்

வடகரை எம்.எம்.பக்கர் சாகிப்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டம் சமுதாயத்திற்குப் பல நன்முத்துக்களைத் தந்துள்ளது. அத்தகைய நன் முத்துக்களில் ஒருவர் தான் “அரசியல் ஞானி” என அழைக்கப்பட்ட வடகரை எம்.எம்.பக்கர் அவர்கள்.

அரசியல்ளவாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர் எனப் பன்முகத்தன்மைகள் அவர் தன்னகத்தே கொண்டிருந்தார்.

பிறப்பு கல்வி :-  மயிலாடுதுறைக்கு அருகிலிருக்கும் வடகரை என்ற சிற்றூரில் முகம்மது யூசுப் – ஆமினா பீவி தம்பதியினரின் மகனாக பக்கர் சாகிப் 2.4.1920 அன்று பிறந்தார். தந்தையார் முகம்மது யூசுப் பெரும் நிலச் சுவான்தாரராக விளங்கினார்.

மலேசியாவின் பினாங்க் நகரிலும், சிங்கப்பூரிலும் அவருக்கு வணிக நிறுவனங்கள் இருந்தன. எனவே, அவர் பெரும்பாலும் அந்த நாட்டிலேயே தங்கியிருந்து வணிக நிறுவனங்களைக் கவனித்து வந்தார். பக்கர் சாகிப் குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர்களால் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனவே அவர் தனது தொடக்க மற்றும் உயர் நிலைக் கல்வியை அங்கேயே கற்றுத்தேறினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்கு புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். படிப்பு முடிந்ததும் வணிக நிறுவனங்கள் நடத்தி வந்த தனது தந்தையாருக்கு உதவிகரமாக இருந்தார்.

இதழியல் பணி :-  பக்கர் சாகிப் இளமையிலேயே எழுத்தாற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார். இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அல்லாமா கரீம் கனி அவர்களை ஆசிரியராகக் கொண்டு, சிங்கப்பூரிலிருந்து “மலேயா நண்பன்” என்ற நாளிதழ் வெளிவந்து கொண்டிருந்தது. அந்த இதழில் பக்கர் சாகிப் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த ஏராளமான கட்டுரைகள் எழுதினார். இதனால் கரீம் கனியுடன் அவருக்கு மிகுந்த நெருக்கம் ஏற்பட்டது.

இளம் எழுத்தாளரான பக்கர் எழுதுவதற்கு அவர் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்தும், பிற அரசியல் நிலவரங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். இவை பக்கர் சாகிபின் அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவியது எனலாம்.

மேலும், 1948 ஆம் ஆண்டு பினாங்கிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த “தேவ நேசன்” என்ற நாளிதழின் உதவி ஆசிரியராகவும், 1949 ஆம் ஆண்டு அந்த நகரிலிருந்து வெளி வந்த “களஞ்சியம்” நாளிதழின் துணை ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார். இவை அவரது எழுத்தாற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள உதவின.

அரசியலில் :- மலேசியாவிற்கும், தமிழகத்திற்கும் வந்து போய்க் கொண்டிருந்த பக்கர் சாகிப், 1950 ஆம் ஆண்டு தாயகம் திரும்பி தனது சொந்த ஊரான வடகரையிலேயே நிரந்தரமாக வாழலானார். அப்போது முஸ்லிம் லீக் முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதித்துவ அமைப்பாக விளங்கியது. மலேயாவில் வசிக்கும் போதே, முஸ்லிம்லீகின் செயல்பாடுகளால் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார். தாயகம் வரும் போதேல்லாம். அக்கட்சியின் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்நிலையில் நாடு திரும்பிய அவர், முஸ்லிம்லீகில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். தஞ்சை மாவட்ட முஸ்லிம்லீக்கின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆக்கூர் அப்துல் அஜீஸ் அவர்களுடன் இணைந்து மாவட்டமெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார். 21.09.1958 அன்று திருச்சியில் நடைபெற்ற முஸ்லிம்லீகின் ஊழியர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பக்கரின் உரைகேட்டு மகிழ்ச்சியடைந்த காயிதே மில்லத் அவர்கள், அவரை தஞ்சை மாவட்ட முஸ்லிம்லீக்கின் அமைப்பாளராக நியமித்தார். தமிழகமெங்கும் கட்சி அமைப்பு ரீதியில் முறையாகச் செயல்படத் தொடங்கிய போது, அவர் மாவட்ட முஸ்லிம்லீக் தலைவராக நியமிக்கப்பட்டார்.

            1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க.வும் முஸ்லிம்லீக்கும் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டன. இத்தேர்தலில் நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதியில் முஸ்லிம்லீகின் சார்பில் தளபதி திருப்பூர் முகைதீன் சாகிப் போட்டியிட்டார். அத்தொகுதியின் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளராகப் பக்கர் சாகிப் பொறுப்பேற்று சிறப்புடன் பணி புரிந்தார்.

1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பக்கர் சாகிப் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று கட்சி விரும்பியது. ஆனால் அவர் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்து அத்தொகுதியில் போட்டியிட்ட முஸ்லிம்லீகின் வேட்பாளருக்கு ஆதரவாக அயராது பாடுபட்டார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுச் தேர்தலில், பக்கர் சாகிப் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட முஸ்லிம்லீக் வேட்பாளரின் வெற்றிக்காகப் பெரிதும் உழைத்தார்.

பக்கர் சாகிபின் கட்சிப் பணிகளால் பெரிதும் திருப்தியுற்ற காயிதே மில்லத்தும், பிற தலைவர்களும் 1972 ஆம் ஆண்டு தமிழக சட்ட மேலவைக்கு (M.L.C) நடைபெற்ற தேர்தலில் அவரைக் கட்சியின் வேட்பாளராக அறிவித்தனர் (சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிக்கு) தி.மு.க முஸ்லிம்லீக் மற்றும் பிற தோழமைக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் அவர் வெற்றி  பெற்று மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 28.04.1972 அன்று மேலவை உறுப்பிராகப் பொறுப்பேற்ற இவர் ஆறு ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். ஏற்கனவே மேலவை உறுப்பினராக அப்போது இருந்த திருச்சி ஜனாப் K.S.அப்துல் வகாப் ஜானி சாகிபுடன் இணைந்து பணியாற்றினார். மேலவையில் முஸ்லிம் சமூகத்தின் நலன் மற்றும் உரிமை சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பினார்.

            இதற்கிடையில், 1960 ஆம் ஆண்டு சிராஜீல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமது சாகிப், “மணிச்சுடர்” என்ற அரசியல் வார ஏட்டைத் தொடங்கிய போது, அந்த இதழின் இணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அந்த இதழிலும் அரசியல், சமய சார்ந்த ஏராளமான கட்டுரையாத் தொடர்ந்து எழுதி வந்தார். திருச்சியிலிருந்து வெளி வந்த சமரசம் இதழிலும் சில காலம் பணியாற்றினார்.

1971 ஆம் ஆண்டு இவரும், சொல்லின் செல்வர் இரவணசமுத்திரம் எம்.எம்.பீர் முகம்மது சாகிபும் வக்ஃப் வாரிய உறுப்பினர்களாகத் தமிழக அரசால் நியமிக்கப்பட்டனர். அப்போது தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. முஸ்லிம்லீக் தி.மு.க.வுடன் தோழமை கொண்டிருந்த கால கட்டமது.

எனினும் வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்குமுன் தோழமைக் கட்சியான முஸ்லிம்லீக்கை தி.மு.க கலந்தாலோசிக்கவில்லை. இது லீக் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்த பலர் ஊழல் பேர்வழிகளாகவும் பொது வாழ்க்கைக்கோ, சமுதாயத்திற்கோ சம்பந்தமில்லாதவர்களாகவும் இருந்ததாக முஸ்லிம்லீக் குற்றம் சாட்டியது.

எனவே, இத்தகைய உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கட்சித் தலைவர்கள் கருதினர். 21.05.1971 அன்று தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையில் நடைபெற்ற மாநில முஸ்லிம்லீக்கின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தப் பிரச்சனை விரிவாக விவாதிக்கப்பட்டு தமிழக அரசால் வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருந்த முஸ்லிம்லீக்கர்களான பக்கர் சாகிபும், எம்.எம்.பீர்முகம்மதுவும் அப்பதவிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் தீர்மானப்படி இருவரும் தங்களது நியமனங்களை ஏற்க மறுத்துத் தமிழக அரசிற்குக் கடிதங்கள் அனுப்பினர்.

இந்தப் பிரச்சனை அப்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. தி.மு.க. முஸ்லிம்லீக் கூட்டணி முறிந்து விடுமோ என்ற அச்சமும் நிலவியது. எனினும் அப்படி எதுவும் நிகழவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு தான் (1972) பக்கர் சாகிப் தி.மு.க ஆதரவுடன் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னொளிகள் :-  மிகச்சிறந்த எழுத்தாளரான பக்கர் சாகிப் அப்போது முன்னணி முஸ்லிம் எழுத்தாளர்களாக விளங்கிய திருப்பத்தூர் வி.நூர் முகம்மது, முஸ்லிம் முரசு ஹஸன், வலங்கைமான் பி.கே.இ.அப்துல்லா, நாகூர் ஜக்கரிய்யா நானா (கவிஞர் ஜபருல்லாவின் தந்தையார்) ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். இந்த எழுத்தாளர் அணியினர் தான் அப்போது இஸ்லாமிய இதழ்களில் எழுதிக் கொண்டிருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலும் கலீபாக்கள், சகாபாக்கள் மற்றும் இறை நேசர்களின் வாழ்க்கையிலும் நிகழ்ந்த முக்கிய வீரமிகு, சுவை மிகு நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து “மின்னொளிகள்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

இந்நூலை 1965 ஆண்டு மாயூரத்தில் செயல்பட்டு வந்த ஹபீப் நூலகம் வெளியிட்டது. இந்நூல் வெளிவருவதற்குப் வி.நூர்முகம்மது மிகுந்த ஒத்துழைப்பு நல்கியதாக அதன் பதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1966 ஆம் ஆண்டு இந்நூல் சிங்கப்பூரில் தமிழ் முரசு ஆசிரியர் “தமிழ் வேள்” கோ.சாரங்கபாணி அவர்களால் வெளியிடப்பட்டது.

            மூன்று பாகங்கள் கொண்ட இந்த நூலில் 132 வரலாற்று நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக உருவிய வாளுடன் சென்ற ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் அவரது சகோதரி பாத்திமா ஒதிக் கொண்டிருந்த குர்ஆன் வசனங்களைக் கேட்டு மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சம்பவம் தொடங்கி, ஜவகர் மௌலானா முகம்மது அலி 1931 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குமாறு வீர உரையாற்றிய சம்பவம் முடிய 132 நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை “மணி விளக்கு” மாத இதழ் அவ்வப்போது வெளியிட்டு வந்தது. இந்நூலின் இரண்டாம் பதிப்பை அவரது மகன் டாக்டர் ஹாரூன் 2003 ஆண்டு வெளியிட்டார்.

பேச்சாற்றல் :- பக்கர் சாகிப் மிகச் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக விளங்கினார். அப்போது முஸ்லிம்லீக்கில் இரவணசமுத்திரம் எம்.எம்.பீர்முகம்மது சாகிப், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிபு, மறுமலர்ச்சி ஆசிரியர், எ.எம்.யூசுப் சாகிப், தளபதி திருப்பூர் முகைதீன் சாகிபு, மதுரை எஸ்.எம். ஷெரீப் சாகிப், என மிகப் பெரிய பேச்சாளர் பட்டாளமே இருந்தது. அந்த அணி வரிசையில் வைத்துப் போற்றத்தக்க பேச்சாளராக பக்கர் சாகிப் திகழந்தார்.

தமிழக மெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சிக் கூட்டங்களிலும் மீலாது விழாக்களிலும், மத்ரஸா விழாக்களிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது அரசியல் உரைகள் ஆய்வுக் கட்டுரைகள் போல் அமைந்திருந்தன. அதனால் அவரை “அரசியல் ஞானி” என காயிதே மில்லத் அவர்கள் குறிப்பிட்டார்.

குடும்பம் :-      அப்துல்லா, அபுல்காசிம், ஹமீது சுல்தான் ஆகியோர் பக்கர் சாகிபின் உடன் பிறப்புகள். பக்கர் சாகிபிற்கு இரண்டு புதல்வர்கள், இவரின் மூத்த புதல்வர் டாக்டர் ஹாரூன் ஒரு சிறந்த யுனானி மருத்துவர் மயிலாடுதுறையில் மருத்துவராகப் பணிபுரியும் இவர் ஏராளமான மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். “திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம்” என்ற அரிய நூலையும் எழுதியுள்ளார்.

முடிவுரை :-      பக்கர் சாகிப் எப்போதும் இளமைத் தோற்றத்துடனேயே காணப்படுவார். ஆடைகள் அணியும் விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவார். தினந்தோறும் வெளுத்த ஆடைகளையே அணிவார். சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிப், மறுமலர்ச்சி ஏ.எம்.யூசுப் சாகிப், காரை அலி, கலைமாமணி எஸ்.எம்.உமர் ஆகியோர் இவரது இளமைக் கால நண்பர்கள்.

அரசியல் வானிலும், இலக்கிய வானிலும் பிரகாசித்துக் கொண்டிருந்த பக்கர் சாகிப் தனது 58வது வயதில் திடீரென்று மரணமுற்றார். அவரது மரணம் கட்சிக்கு மட்டுமின்றி சமூகத்திற்கே ஒரு பேரிழப்பாக இருந்தது. அவரைப் போன்ற கொள்கை உறுதியும், கட்சிப் பற்றும் கொண்ட தலைவர்கள் வெகு சிலரே இருந்துள்ளனர். அவரது பல அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகள் இன்னும் அச்சிற்கு வரவில்லை. அவரது புதல்வர்களும் நண்பர்களும் அவற்றை நூலுருவில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

கட்டுரையாளரின் கைபேசி எண் : 9976735561