முதல் தலைமுறை மனிதர்கள்-6

சமுதாயப் புரவலர் ஏ.வி.எம்.ஜாபர்தீன் சாகிப்

“எனது நட்சத்திரங்களின் எண்ணிக்கை மிக சொற்பமானது. அதில் சகோதரர் ஜாபர்தீனும் ஒருவராக இருக்கிறார். நீங்கள் சந்தித்த கண்ணியமான ஒரு மனிதரைக் குறிப்பிடுங்கள் என்று யாராகிலும் எப்போதாகிலும் என்னைக் கேட்டால் எவ்விதத் தயக்கமுமின்றி ஏ.வி.எம் ஜாபர்தீன் என்று பதில் சொல்வேன்” இப்படிக் கூறுகிறார் இலங்கையைச் சார்ந்த கவிஞர், எழுத்தாளர் அஷ்ரப் சிகாபுதீன்.
தஞ்சை மாவட்டம் தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பல தலைவர்களையும், இலக்கியவாதிகளையும், இதழியல் முன்னோடிகளையும் கவிஞர்களையும், புரவலர்களையும் தந்துள்ளது. இம்மாவட்டம் தந்த அத்தகைய பெருமக்களில் ஒருவரே மறைந்த ஜனாப் ஏ.வி.எம். ஜாபர்தீன் ஆவார்.


இளமைக்காலம்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் கூத்தாநல்லூரில் 7.5.1938 அன்று பிறந்தார். இவரது தந்தையார் முகம்மது இப்ராகிம் மலேசியாவில் புகழ்பெற்ற வர்த்தகராக விளங்கினார். எனவே ஜாபர்தீன் தனது பிள்ளைப்பருவத்தில் கூத்தாநல்லூரிலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மாறிமாறி வாழ்ந்து வந்தார். தொடக்கக் கல்வியைக் கூத்தாநல்லூரில் கற்ற அவர், பின்னர் சிங்கப்பூர் சென்று அங்கிருந்த டங்லிங் ஆங்கிலப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். இடைநிலைக் கல்வியை அங்கு கற்றுத்தேறிய பிறகு, சென்னைப் புதுக்கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இளம் வயது முதலே படிப்பதிலும், எழுதுவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளியில் படிக்கும் போதே வகுப்பு மாணவர்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். அப்போது தமிழகத்தில் வெளி வந்து கொண்டிருந்த தின, வார, மாத இதழ்கள் அனைத்தையும் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்லூரிப் பருவத்தில் அவர் தி.மு.க.வின் ஆதரவாளராக இருந்தார். கூத்தாநல்லூரில் நாவலர் நெடுஞ்செழியனை அழைத்து தி.மு.க. கூட்டம் போட்டார். தி.மு.க. ஒரு நாத்திகக்கட்சி; எனவே அக்கட்சிக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று அப்போது ஊரில் பெரிய கட்சியாக இருந்த முஸ்லிம் லீக்கின் எதிர்ப்பையும் மீறி அக்கூட்டத்தை நடத்தினார்.


கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அவர் தனது வாழ்வின் பெரும்பான்மையான நாட்களை மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் தான் கழித்தார். தனது தந்தையார் நடத்தி வந்த வர்த்தக நிறுவனங்களைக் கவனித்து வந்தார். 1970 ஆம் ஆண்டு ஹிவிறிஜிசி என்ற உலக வர்த்தக நிறுவனத்தின் பங்குதாரராகச் சேர்ந்தார். இந்த நிறுவனம் காகிதம் மற்றும் மரம் சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்தது. தனது இளைய சகோதரர் ஏ.வி.எம். காஜா முகையதீனுடன் இணைந்து “பரீத் இண்டர்நேசனல்” என்ற நிறுவனத்தைக் கோலாலம்பூரில் தொடங்கினார். சொந்த கப்பல்களைக் கொண்டிருந்த இந்த நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மரங்களை ஏற்றுமதி செய்தது. இவர் தனது அலுவலகத்தை கோலாலம்பூரின் மிகப்பெரிய வர்த்தக மையமான “மினரா புரமோ” என்ற உயர் கட்டிடத்தில் வைத்திருந்தார். சிலாங்கூர் வர்த்தக சபையில் முக்கியப் பொறுப்பு வகித்தார்.


தமிழ் இலக்கியப் பணிகள்:
ஜாபர்தீன் மலேசிய இதழ்களிலும், தமிழக இதழ்களிலும் சிறுகதைகள், செய்திக் கட்டுரைகள், அரசியல் விமர்சனங்கள், துணுக்குகள் எழுதியுள்ளார். ஷாபானு, ஜாபர், ஜா.தி., ஜாநூ ஒளியமுதன், கோயிலூரான் ஆகிய புனைப்பெயர்கள் இவருக்குண்டு. மலேசியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த “தமிழ்நேசன்” இதழின் துணை ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். எழுத்தாளர்களைப் பெரிதும் ஊக்குவிப்பார். “முஸ்லிம் முரசு” மாத இதழின் ஆசிரியராகயிருந்த ஆளூர் ஜலாலின் திடீர் மரணம் காரணமாக அந்த இதழ் நின்று போகும் நிலை ஏற்பட்டது. அப்போது தலையிட்டு நிதி உதவி செய்து அந்த இதழ் தொடர்ந்து வெளிவரத்துணை நின்றார். அந்த இதழில் “கண்டதும் கேட்டதும்” என்ற தலைப்பில் மாதந்தோறும் செய்தி விமர்சனக் கட்டுரைகளை எழுதி வந்தார். இவை வாசகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது. 16.07.1999 அன்று நடைபெற்ற “முஸ்லிம் முரசு” இதழின் பொன்விழாக் கொண்டாட்டங்களுக்குத் தலைமை வகித்தார். பொன் விழா மலர் சிறப்புற அமைய உறுதுணையாக விளங்கினார்.
முஸ்லிம் முரசு தவிர குமுதம், சமரசம், ஜூனியர் விகடன் ஆகிய இதழ்களிலும் கட்டுரைகளும் கதைகளும் எழுதினார். 12 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெளி வந்து வாசகர்களின் உள்ளத்தில் நீங்காததொரு இடத்தைப் பெற்றிருந்த “சமநிலைச்சமுதாயம்” மாத இதழின் புரவலராகப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். அந்த இதழின் கௌரவ ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். பன்னாட்டு அரசியல் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்தும், உள்நாட்டு அரசியல் நிலைமைகள் குறித்தும் அந்த இதழில் அவ்வப்போது ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வந்தார். இந்த இதழின் புரவலராக இருந்த போதிலும், அதன் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த மௌலவி எஸ்.என். ஜாபர் சாதிக் பாகவிக்கு மிகுந்த சுதந்திரம் கொடுத்திருந்தார். அதன் காரணமாக பலதரமான கட்டுரைகள் அதில் வெளிவந்தன. இது குறித்து சமுதாயச் சிந்தனையாளர் ஆளூர் ஷாநவாஸ் குறிப்பிடுவதாவது
“சமநிலையின் வெற்றிக்கு முதன்மைக் காரணம் அதன் கருத்தியலுக்குள் நிர்வாகத்தலையீடு இல்லாததேயாகும். பொருளாதாரத்தைப் பெருமளவு முடக்கி பத்திரிகை தொடங்கும் பலரும் அதில் தமது சிந்தனைகளும், செயல்பாடுகளும் முதன்மைப்படுத்தப்பட வேண்டுமென்றே விரும்புவர். அட்டையில் தங்களது படத்தைப்போட்டு மகிழ்ச்சியடைவர். ஆனால் சமநிலையின் நிறுவனர் ஜாபர்தீன் அவ்வாறான மலிவான விளம்பரங்களுக்கான களமாக ஒரு போதும் அந்த இதழைப் பயன்படுத்தியதில்லை. எதை வெளியிட வேண்டும், வெளியிடக்கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை ஆசிரியருக்கே வழங்கியிருந்தார். அந்த சுதந்திரமே சம நிலையின் எல்லைகளை விரித்தது”.
சமநிலைச் சமுதாயம் இதழில் ஜே.எம். சாலி எழுதிய “இலக்கிய இதழியல் முன்னோடிகள்” என்ற தொடரும், சேயன் இப்ராகிம் எழுதிய “முதல் தலைமுறை மனிதர்கள்” மற்றும் “வாழும் தலைமுறை மனிதர்கள்” என்ற தொடரும் வாசகர்களின் ஒருமனதான பாராட்டுதல்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தின் பல முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளும் இந்த இதழில் இடம் பெற்றிருந்தன.
இஸ்லாமிய இலக்கியத்தின் வளர்ச்சிக்காக ஜாபர்தீன் பெருமளவு பாடுபட்டார். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொருளாளராகப் பொறுப்பு வகித்து சிறப்பாகப் பணியாற்றினார். இக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பல இலக்கிய மாநாடுகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். எனினும் 2007 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின்போது பிற நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த அமைப்பை விட்டு விலகினார். பின்னர் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் என்ற இன்னொரு அமைப்பில் இணைந்து பணியாற்றினார். இந்த இலக்கியக் கழகத்தின் சார்பில் 20.02.2010 அன்று சென்னையில் “நபிகள் நாயகக் காப்பியங்கள்” என்ற தலைப்பில் ஆய்வரங்கமும், கருத்தரங்கமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழறிஞர் ச.வே.சுப்ரமணியம் திருநெல்வேலிக்கு அருகே “தமிழூர்” என்ற ஒரு ஊரை உருவாக்கி அங்கு உலகத்தமிழ்க்கல்வி இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியபோது அவருக்கு நிதி உதவி செய்தார்.
பல இஸ்லாமிய இலக்கிய நூல்களை நிதி உதவி செய்து பதிப்பித்தார். அதன் பட்டியல் வருமாறு:

  1. சீறாப்புராணம் மூலமும், உரையும், விளக்கமும் – டாக்டர் மு. அப்துல்கரீம் மற்றும் ஹனீபா அப்துல்கரீம் (நான்கு பாகங்கள்)
  2. மகாகவி அல்லாமா இக்பால் – ஜே.எம்.ஹூஸைன்
  3. கூனன் தோப்பு (நாவல்) – தோப்பில் முகம்மது மீரான்
  4. தமிழகத்துத் தர்காக்கள் – ஜே.எம். காலி
  5. இனிக்கும் இராஜநாயகம் – நீதிபதி மு.மு. இஸ்மாயில்
  6. இந்து – முஸ்லிம் சமரச வாழ்வியல் – பேரா. மதார் முகையதீன்
  7. வண்ணக்களஞ்சியப் புலவர் எனும் குத்புநாயகம் – டாக்டர் மு. அப்துல்கரீம்
  8. சீறாப்புராணம் – மூலமும் உரையும் – காவி. கா.மு. ஷெரீப்
  9. நாகூர் ஆண்டவர் திருக்காரணப்புராணம்.
  10. நைல் நதிக்கரையில் – பாத்திமுத்து சித்தீக்
  11. அண்ணாவின் மீலாது விழா சொற்பொழிவுகள் – ஜே.எம். சாலி
  12. இலக்கிய இதழியல் முன்னோடிகள் – ஜே.எம். சாலி
  13. கனகாபிஷேக மாலை – முனைவர் நஜ்முதீன்
  14. இஸ்லாமிய சிந்தனைகள்
  15. குத்புநாயகம் – ஆய்வுரை – டாக்டர் மு. அப்துல்கரீம், ஹனீபா அப்துல்கரீம்
  16. திருமணிமாலை – செய்யது முகம்மது ஹஸன்
    மேலும் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்வதற்காக ஏ.வி.எம். ஜாபர்தீன் அறக்கட்டளை வழியாக ஒரு ஆய்வு இருக்கையை உருவாக்கி அங்கு தமிழ் இலக்கிய ஆய்வுகள் நடந்திட வழி வகுத்தார்.
    சமயப்பணிகள் ஃ பொதுப்பணிகள்:
    தனது பிறந்த ஊரான கூத்தாநல்லூரை மறவாது அங்கு வாழ்கின்ற ஏழை எளிய மக்களுக்கு நிதி உதவி செய்து வந்தார். ஏழைக் குடும்பத்து மாணவர்கள் உயர் கல்வி கற்கவும், ஏழைக் குமருகளின் திருமணம் நடைபெறவும் நிதி உதவி செய்தார். அந்த ஊரைச் சார்ந்த பலருக்கு மலேசியாவில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார்.
    சமயப் பணிகளுக்கும் நிதி உதவி செய்துள்ளார். கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல். மன்னார்குடி பள்ளிவாசல், ஆழியூர் பள்ளிவாசல், புதுக்கோட்டை, கீவளுர், திருவோணம் பள்ளிவாசல்கள் ஆகியவற்றின் விரிவாக்கப் பணிகளுக்குப் பெருமளவு நிதி உதவி செய்துள்ளார்.
    சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் 15 லட்சம் ரூபாய் செலவில் பள்ளிவாசல் ஒன்று கட்டிக்கொடுத்தார் (திருமதி பாத்திமா பீவி ஆளுநராக இருந்த போது).
    “தென்னகத்தின் அலிகர்” எனப் போற்றப்படும் திருச்சி “ஜமால் முகம்மது கல்லூரியின்” நிர்வாகக்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்த அவர், அக்கல்லூரியின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளார். இந்தக் கல்லூரியில் கணினி அறிவியல் பட்டப்படிப்பு தொடங்கப்பட்ட போது, தேவையான கணினிகளை தனது சொந்த செலவில் வாங்கி வழங்கினார். அத்துறை செயல்படத் தனிக் கட்டிடம் கட்டிக்கொடுத்தார். கணினிக் கல்வியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக கணினி பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பில் முதலிடம் பெற்ற மாணவர்கட்கு தன்னால் நிறுவப்பட்ட ஏ.வி.எம். ஜாபர்தீன்-நூர்ஜஹான் அறக்கட்டளை சார்பாக தங்கப்பதக்கங்கள் வழங்கி வந்தார்.
    பண்பு நலன்கள்:
    தொழிலதிபர், இலக்கியவாதி, எழுத்தாளர், சமுதாயப் புரவலர் எனப்பன்முகத் தன்மை கொண்டவராக ஜாபர்தீன் விளங்கினார். அனைத்து சமய மக்களுடனும் நல்லுறவைப் பேணி வந்தார். பல்வேறு சமய, இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மலேசியா நாட்டிற்கு வருகை தந்த தமிழ் அறிஞர்களை வரவேற்று விருந்தோம்புவார். தமிழ் எழுத்தாளர்கள் சுஜாதா, தமிழ்வாணன் ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்.
    குடும்பம்:
    ஏ.வி.எம். ஜாபர்தீனுக்கு 1964 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் நூர்ஜஹான், இத்தம்பதியினருக்கு ராஸிக் ஃபரீத், காசிம் ஃபரீத் என்ற மகன்களும் டாக்டர் சபீஹா பானு என்ற மகளும் மூன்று பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி நல்லமுறையில் வாழ்ந்து வருகின்றனர். மகன்கள் மலேசியாவில் தந்தை நடத்தி வந்த வணிக நிறுவனங்களைக் கவனித்து வருகின்றனர்.
    மறைவு:
    சிறிது காலம் உடல் நலிவுற்றிருந்த அவர் 12.05.2014 அன்று காலமானார். அவரது ஜனாஸா அவரது சொந்த ஊரான கூத்தாநல்லூரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் வண்ணம் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் “மனத்தால் செழித்த மாண்பாளர்” என்ற தலைப்பில் ஒரு நினைவு மலரை வெளியிட்டுள்ளது.
    முடிவுரை:
    வள்ளல் மரபு தமிழகத்தில்
    மறையவில்லை என்பதையும்
    தெள்ளு தமிழை வளர்ப்பதிலே
    தீனோர் தாழ்ந்தோர் அல்லவென்றும்
    வெள்ளிடை மலையாய் மெய்ப்பித்துள
    வித்தகர் ஜாபர்தீன் நலத்தை
    உள்ளுவேன் நாளும்
    என கவி. கா.மு.ஷெரீப், அவரின் சிறப்புகள் குறித்து புகழாரம் சூட்டுகின்றார். ஏ.வி.எம். ஜாபர்தீன்; இலக்கியத்திற்கும் சமயத்திற்கும் அளப்பரிய சேவை புரிந்துள்ளார். அவரது சேவை தமிழ் முஸ்லிம் மக்களால் என்றும் நினைவு கூறப்பட்டுக்கொண்டே இருக்கும்.
    கட்டுரையாளரின்
    கைபேசி எண்: 9976735561