பெருகி வரும் வேலைகள் இழப்பு

கடந்த நான்கரை ஆண்டுகளில் சிறு வர்த்தகத் துறையிலும், சிறு, குறு, நடுத்தர தொழில்களிலும் 35 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டிருப்பதாக அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு ( All India Manufacturers Organisation) நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல இன்னல்களை தொழில்துறையினர் சந்தித்துள்ளது வெளிப்பட்டுள்ளது. வர்த்தகப் பிரிவில் 43% வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறுந்தொழில் பிரிவில் 32%, சிறு தொழில் பிரிவில் 35%, நடுத்தர தொழில் பிரிவில் 24% வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு சொல்கிறது.இதற்கு முக்கியக் காரணமாக உற்பத்தியாளர் சங்கம் கூறுவது என்ன?“2015-16 ஆண்டுகளில் புதிய அரசாங்கம் பதவியேற்றதால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக எல்லாத் தொழில்களும் வளர்ந்தன. அதற்கு அடுத்த ஆண்டில் வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையினாலும், பின்னர் ஜி.எஸ்.டி. அமுலாக்கச் சிக்கல்களினாலும் வீழ்ச்சி ஏற்பட்டது. அதற்குப் பின் நிதி இல்லாமையாலும், அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய தொகை நிலுவையின் காரணமாகவும் வீழ்ச்சி தொடர்கிறது”(ஆதாரம்: தி இந்து, டிசம்பர் 17, பக்கம் 13)இணைய வர்த்தகமும் மிகப்பெறும் சவாலாக மாறி சில்லறை வர்த்தகர்களைச் சூறையாடி வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை சூரிய சக்தி தகடுகளால், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மூடப்பட்டு, சுமார் 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக நாடாளுமன்றக் கமிட்டி, அறிக்கை அளித்துள்ளது. வேலை செய்ய அனைத்துத் தகுதிகளும் இருந்தும் 27 சதவீத பேருக்கு வேலை இல்லை என்கின்றது குளோபல் ஹூயுமன் கேபிடல் ஆய்வு.ஒரு நாட்டில் வேலைவாய்ப்பு பெருக வேண்டும் என்றால் ஏற்றுமதி அதிகமாகவும், இறக்குமதி குறைவாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பல புதிய தொழில்நிறுவனங்கள் நிறுவப்பட்டு புதிய வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். ஆனால் மோடி அரசு பதவியேற்றதில் இருந்து ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கின்றது. 17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை அடிமைப்படுத்தி இங்குள்ள வளங்களை கொள்ளையிட்டு அதன் மூலம் ஏற்பட்ட தொழில் புரட்சியின் விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட காட்டன் துணிகள் இந்தியாவில் இறக்குமதியாகி இந்தியாவின் காட்டன் சந்தையை நசுக்கியது. அந்த தொழிலில் ஈடுபட்ட மக்கள் விவசாயத்துக்கும் மாறினார்கள். அந்த நேரத்தில் பருவ மழை பொய்த்துப் போக விவசாயமும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை என்பது வரலாறு. மீண்டும் அதே நிலையை நோக்கி இந்தியா திரும்புகிறதோ என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.சமீபத்திய காலங்களில் பணநெருக்கடி, உற்பத்திக் குறைவு அதன் காரணமாக ஏற்படும் வேலை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலை இழப்பு மட்டுமல்ல அதிகப்படியான இந்திய மக்கள், பெரும்பான்மையான முஸ்லிம் வணிகர்கள் நிறுவனமயப்படாத முறைசாராத் தொழில்களில்கள் மற்றும் விவசாயத்தில்தான் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் எதிரொலி இன்று சமூகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குக் காரணம். இந்தியா எப்போதும் தற்சார்பு வாழ்வியலையும், பொருளாதார அமைப்பையும் கொண்டது. அந்த அடிப்படை தகரும்போது ஏற்படும் பிரச்சனைகள் தான் இவை.