நீட் – தமிழக அரசின் புதிய மசோதா

           – சேயன் இப்ராகிம்

சென்ற 13.9.2021 அன்று நீட் தேர்வை ரத்துச் செய்ய வகை செய்யும் மசோதா ஒன்றினை தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்த இந்த மசோதாவுக்கு பி.ஜே.பி தவிர்த்த பிற அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தன.

இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினால்தான் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்துச் செய்ய முடியும். ஏற்கனவே, சென்ற 2017 ஆம் ஆண்டு அன்றைய அ.தி.மு.க அரசு நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. ஆனால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவுக்கும் அதே கதி தான் ஏற்படும் என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமான வாதப் பிரதிவாதங்கள் ஊடகங்களிலும், வலைத் தளங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கும், இப்போது நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கும் வேறுபாடு ஏதேனும் உண்டா?

வேறுபாடு உண்டு. இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா நீதியரசர் இராஜன் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதியரசர் தனது அறிக்கையில் நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை சான்றுகளுடன் நிறுவியுள்ளார். ஆனால் 2017ஆம் ஆண்டு மசோதாவில் அத்தகைய தரவுகள் ஏதுமில்லை.

இந்தச் சட்டப் போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெறுவாரா?

வெற்றி பெற வேண்டும் என்பதே நமது அவா. ஏற்கனவே 2007ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு அப்போது நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வினை சட்டம் மூலம் ரத்துச் செய்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது நீட் தேர்வை ஒழிக்கும் சட்டப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாகவும் அதில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையிருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

அவரது நோக்கமும் அதனை அடைவதற்காக அவர் எடுத்துள்ள முயற்சிகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. எனவே தமிழக அரசுக்கு இது போன்ற மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்ற அதிகாரம் இருக்கிறது என சில சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டிருக்கும்போது, தமிழ் நாடு மட்டும் எதிர்ப்பது ஏன்?

இந்த விஷயத்தில் தமிழகம் விதிவிலக்காக இருப்பதில் அல்லது விதி விலக்குக் கோருவதில் தவறு இல்லை. அனைத்துப் பாளையக்காரர்களும் ஆங்கிலேய ஆட்சியினருக்குக் கப்பம் கட்டிய போது, பாஞ்சாலக்குறிச்சி வீரபாண்டியக் கட்டபொம்மன் மட்டுமே கப்பம் கட்ட மறுத்தார். அப்போது ஜாக்சன் துரை கட்டபொம்மனைப் பார்த்துக் கேட்ட கேள்வியையே தற்போது நீட் விஷயத்தில் தமிழகத்தைப் பார்த்துக் கேட்கிறார்கள்.

 இந்தியாவிலேயே தமிழ் நாடு மருத்துவத் துறையில் முன்னணியில் இருக்கிறது. இங்கு 24 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இப்போதும் ஆறு மருத்துவக் கல்லூரிகள் வரவிருக்கின்றன.

தமிழ் நாட்டில் மட்டுமே கிராமப்புற மாணவர்களுக்கும், அடித்தட்டு பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கும் மருத்துவராக வேண்டுமென்ற கனவு இருக்கிறது. பிற மாநிலங்களில் மருத்துவப் படிப்பு மேல் தட்டு மக்கள் மட்டுமே படிக்கின்ற படிப்பு என்று நினைத்து கிராமப்புற மாணவர்களும், அடித்தட்டு மக்களும் ஒதுங்கி விடுகின்றனர். அவர்கள் போட்டிக்கே வருவதில்லை. தமிழ் நாட்டிலுள்ள கிராமப்புற மற்றும் அடித்தட்டு மாணவர்களின் கனவை நீட் தேர்வு சிதறடித்து விடுகிறது. எனவே நீட் தேர்வு வேண்டாம் என்ற முழக்கம் இங்கே உரக்கக் கேட்கின்றது.

“நீட் தேர்வு” மருத்துவர்களின் தரத்தை உயர்த்தும் அல்லது அதிகரிக்கும் என்ற கூற்றில் உண்மை உண்டா?

இந்தக் கூற்றில் எள்ளளவும் உண்மை இல்லை. நீட் தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன் மருத்துவக் கல்வி பயின்று தற்போது மருத்துவர்களாக இருப்பவர்களை தரம் குறைந்தவர்கள் என்று கூறுவதற்கு ஒப்பானது இது. இன்றைக்குத் தமிழ் நாட்டிலும், வெளிநாடுகளிலும் புகழ் பெற்று விளங்குகின்ற முன்னணி மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதாதவர்களே! டாக்டர் இராமதாஸும், டாக்டர் அன்புமணியும், டாக்டர் கிருஷ்ணசாமியும், டாக்டர் தமிழிசை சௌந்திரராஜனும் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவக் கல்வி பயின்றவர்களே! தவிரவும் நீட் தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மருத்துவக் கல்வி தரமானதாக இல்லை என்பதற்கு எந்த விதமான புள்ளி விரங்களோ தரவுகளோ இல்லை.

எங்காவது ஒரு மாநிலத்தில் மருத்துவக் கல்வி தரமானதாக இல்லையென்றால் அங்கு தரமான கல்வி வழங்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஒரே கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை ஆகாது.

நீட் தேர்வு மருத்துவக் கல்வியை வணிக மயமாக்கியுள்ளது என்று நீட் எதிர்ப்பாளர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. +2 படித்து  முடித்த ஒரு மாணவன் நேரடியாக நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி  பெற முடியாது. அவன் எவ்வளவு அசாத்தியத் திறமை மிக்க மாணவனாக இருந்தாலும் சரி, கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து பயிற்சி பெற்றுத் தேர்வினை எழுதினால் மட்டுமே அரசுக் கல்லூரிகளில் சேரத்தக்க அளவுக்கு மதிப்பெண்களை (450க்கு மேல்) அந்த மாணவர் பெற முடியும். இந்த கோச்சிங் சென்டர்கள் கோடா, டெல்லி போன்ற வட மாநிலங்களில் உள்ளன.

இங்கு சென்று மாதக்கணக்கில் தங்கியிருந்து பல லட்சம் ரூபாய்களைக் கொட்டிக் கொடுத்து பயிற்சி பெற வேண்டும். இது பணக்காரக் குடும்பங்களிலிருந்து வருகின்ற மாணவர்களுக்கே சாத்தியம். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு சாத்தியமே இல்லை. அவர்கள் மருத்துவராக வேண்டுமென்று கனவு கூடக் காண முடியாது. தவிரவும், இப்படி லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்வி பயின்று மருத்துவர்களாக வருபவர்களுக்குச் செலவழித்த பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமே தவிர சேவை மனப்பான்மை இருக்க வாய்ப்பில்லை.

நீட் தேர்வு வருவதற்கு முன்பு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சக்கணக்கான ரூபாய்கள் நன்கொடையாகக் கொடுத்து மாணவர்கள் சேர்ந்தார்கள். அதனால் மருத்துவர்களின் தரம் குறைந்து போயிருந்தது. தற்போது, அதாவது நீட் தேர்வு வந்த பிறகு, அந்த நிலை இல்லை என்று நீட் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இக் கூற்றில் உண்மை உண்டா?

அவர்களின் இக்கூற்றில் எள்ளளவும் உண்மை இல்லை. இன்றைக்கும் நாட்டில் நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அரசு ஒதுக்கீடு செய்த இடங்களைத் தவிர, பிற இடங்களுக்கு அந்தக் கல்லூரிகளின் நிர்வாகங்களே மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. இவர்கள் நீட் தேர்வில் 120 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் (அதாவது 720மதிப்பெண்களுக்கு) சேர்த்துக் கொள்வார்கள். ஆண்டு தோறும் மாணவர்களிடமிருந்து லட்சக் கணக்கான ரூபாய் நன்கொடையும் பெற்றுக் கொள்வார்கள். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 450 அல்லது 500க்கு மேல் நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்றால் தான் இடம் கிடைக்கும். ஆனால் 120 மதிப்பெண்கள் பெற்ற ஒரு பணக்கார மாணவன் பணத்தைக் கொடுத்துத் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவராக முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவர்களின் தரம் குறைந்து போகாதா?

நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்வி பயின்று வந்த ஒரு மருத்துவரும், 120 மதிப்பெண்கள் பெற்று தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று வந்த ஒரு மருத்துவரும் ஒன்றா? என்ற கேள்விக்கு இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது.

அன்றைய அ.தி.மு.க அரசு,  அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகிதம் ஒதுக்கி ஆணை பிறப்பித்ததே?

அது வரவேற்கத்தக்க ஒரு ஆணை. அதனால் தான். தி.மு.க அதற்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவித்தது. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கிடப்பில் போட்டிருந்த போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவரைச் சந்தித்து அதற்கு ஒப்புதல் வழங்கக் கோரினார். பின்னர் ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இந்த மசோதா கொண்டு வரப்பட்டதிலிருந்தே நீட் தேர்வு கிராமப்புற ஏழை மாணவர்களை குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை வெகுவாக பாதித்தது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு அரை குறையான தீர்வு தான். முழுத் தீர்வு என்பது நீட் தேர்வை முற்றிலும் ஒழிப்பதேயாகும்.

அரசுப் பணிகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்ய, ஆசிரியர்களை நியமிக்கத் தேர்வு வைக்கிறார்களே! அது போல் தான் நீட் தேர்வும். நீட் தேர்வு வேண்டாமென்று சொல்பவர்கள் அரசுப்பணி நியமனங்களுக்கான போட்டித் தேர்வினையும் வேண்டாம் என்று கூறுவார்களா என பி.ஜே.பியின் வானதி சீனிவாசன் கூறுகின்றாரே! அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

இது ஒரு அபத்தமான ஒப்பீடு. அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் தமிழ் நாடு பணியாளர் தேர்வாணையம் 1924ஆம் ஆண்டிலிருந்தே தேர்வினை நடத்தி வருகிறது. ஆசிரியர் தேர்வாணையமும் அப்படித்தான். ஆனால் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு அண்மையில் தான் புகுத்தப்பட்டது. அதைத்தான் எதிர்க்கிறோம். தவிரவும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கிராமப் புற மாணவர்கள் பெருமளவில் தேறி அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு கிராமப்புற ஏழை மாணவர்களைப் பாதிக்கிறது. அதனால் எதிர்க்கிறோம்.

 +2 தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைத் தேர்வு செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. தமிழக அரசு கொண்டு வந்துள்ள மசோதா அதைத்தான் குறிப்பிடுகின்றது.

நீட் தேர்வு ரத்து செய்யப்படத்தான் வேண்டுமா? வேறு வழியில்லையா?

நீட் தேர்வு ஒரு தேவையற்ற ஆணி. அதனைப் பிடுங்கி வீசத்தான் வேண்டும். இத் தேர்வு கோச்சிங் சென்டர்களை நடத்துகின்றவர்களுக்கு மட்டுமே பெருத்த இலாபம் தரும்  ஒரு தொழிலாக இருக்கிறது. மருத்துவத்தை வணிகமயமாக்குகிறது. ஏழை எளிய மாணவர்களைப் பாதிக்கின்றது.

நகர்ப்புற நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்க மாணவர்களுக்கே சாதகமாக இருக்கிறது. இதன் மூலம் “தரம்” என்ற வாதமும் அடிபட்டுப் போகிறது.

1930க்கு முன்னர் மருத்துவப் படிப்பில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. நீதிக் கட்சி ஆட்சியின் போது அந்த விதி நீக்கப்பட்டது. இப்போது “நீட்” திணிக்கப்படுகிறது.
மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பிற்கே விடப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பாகும்.