முஸ்லிம்களின் சமூக பாதுகாப்பிற்கும் துறை சார்ந்த வளர்ச்சிக்கும் சமூகவியல் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மேற்கொள்ளும் ஒரு நவீன அமைப்பை தொலைநோக்கோடு உருவாக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.
மக்கள் தொகை, கல்வி, வேலைவாய்ப்பு, வரலாறு, பொருளாதார நிலை, சமூக நலன், புலம்பெயர்வு, உடல்நலம், அரசியல், வக்ஃப் சொத்துக்கள், ஊடகம், உள்ளிட்ட தமிழக முஸ்லிம் சமூகத்தின் அனைத்துத் துறைகள் குறித்தும் நுட்பமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மிகச்சரியான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு வலிமையான காரணிகளுடன் ஆவனப்படுத்தப்பட வேண்டும்.
இந்திய அரசியல் கட்சிகள் ஜனநாயக அமைப்புகள் கல்வியாளர்கள் உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆகியோருக்கு குடியரசு இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்சூழல் கல்வி சமூக பொருளாதார நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு 2006 இல் வெளிவந்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களின் ஆய்வறிக்கை ஒன்றுதான் இன்றும் ஆதாரமாக இருக்கிறது.
காலம் முழுவதும் நம்பி வாக்களித்த முஸ்லிம் சமூகத்திற்கு காங்கிரஸ் கட்சி செய்த ஒருசில நல்ல காரியங்களில் சச்சார் கமிட்டியை அமைத்து சரியான தரவுகளை திரட்டி ஆவனப்படுத்தியது மிகவும் பாராட்டுக்குரிய செயல். அதிலும் பகுதி அளவிற்கு தான் சச்சார் அவர்களால் தகவல்களை திரட்ட முடிந்தது. பல மாநில அரசுகள் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.
சச்சார் கமிட்டி அறிக்கையில் வெளியிடப்பட்ட வக்ஃப் சொத்துக்களின் நிலை குறித்த விவரங்கள் அன்றைய நாடாளுமன்றத்தையே உலுக்கியது. அதைத் தழுவி அவுட்லுக் இதழில் வெளிவந்த வக்ஃப் சொத்துக்கள் குறித்த முகப்புக் கட்டுரை அதுவரையிலும் வக்ஃப் சொத்துக்களை கமுக்கமாக அமுக்கி அனுபவித்து வந்த பல பெருச்சாளிகளை வெளிஉலகிற்கு அடையாளம் காட்டியது.
ஆகப்பெரும் பெருச்சாளிகளாக மாறியிருந்த மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் அனைவரும் அவமானத்தால் கையை பிசைந்து கொண்டு சச்சார் அவர்களை வெறிக்க வெறிக்கப் பார்த்தனர்.
முஸ்லிம் சமூகம் தன்னையும் தனது இனத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்ள சமூகம் குறித்த ஆதாரமான தரவுகள் முறைப்படி சேகரிக்கப்பட்டு அதில் பகுப்பாய்வு (Analytics) மேற்கொள்ளப்பட வேண்டும். நெருக்கடிகள் ஏற்படுகின்ற போதும் ஜனநாயக உரிமைகளுக்காக அரசிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ ஆதாரத்துடன் வாதிடுவதற்கு ஏற்கவில்லை என்றால் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் சென்று வழக்காடுவதற்கு அங்கேயும் நீதி கிடைக்கவில்லை என்றால் சர்வதேச உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு முஸ்லிம்கள் குறித்த மறுக்க இயலாத ஆதாரங்களுடன் கூடிய வலிமையான தகவல்கள் நம்மிடம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த வேலையை யார் முன்னெடுத்தாலும் அவர்கள் சமூகத்தால் போற்றப்பட வேண்டியவர்கள். இது நமது சந்ததிகளுக்கு நாம் செய்யும் மகத்தான சேவை. மஹல்லாவிலிருந்து துவங்கப்பட வேண்டிய இந்தப் பணிகளுக்கு மிக வலிமையான நிதி ஆதாரம் தேவை.
தோழர்களே… இனியாவது இதுபோன்ற ஆக்கப்பூர்வமான அறிவுசார் பணிகளை முன்னெடுக்கும் அமைப்புகளுடன் கருத்தால் முரண்படாமல் கைகோர்த்து நில்லுங்கள்.