முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்த பூமிக்கு அனுப்பிய அன்று தொடங்கி இன்று வரை கோடானு கோடி மனிதர்கள் பூமிக்கு வந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வரலாற்று ஏடுகள் பதிவு செய்யவில்லை. வெகு சிலரையே வரலாறு பதிவு செய்திருக்கிறது. யார் அவர்கள்?
அனுதினமும் நம்மைச் சுற்றி மரணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த மரணங்கள் நம்மிடையே எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஒரு சிலரின் மரணமே உலகம் இருண்டது போன்ற பிரம்மையை நம்மிடம் ஏற்படுத்துகிறது. யார் அந்த சிலர்?
தனது குடும்பத்திற்காக வாழ்வதையே பெரும் சவாலாக, போராட்டமாக, வாழ்வின் லட்சியமாக கருதிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களின் துயரங்களைப் பார்த்து சிலர் மனம் வெதும்புகிறார்கள். பின்பு அந்த துயரங்களுக்கான பிண்ணனியைக் கண்டறிந்து அதற்கான தீர்வைத் தேடி அடைந்து செயல்படுத்தி அதில் ஏற்படும் இன்னல்களை தாங்கி இலக்கை அடையும் முயற்சியில் உயிர், பொருள், அறிவு, ஆற்றல் அனைத்தையும் தியாகம் செய்கிறார்களே அவர்களே வரலாற்று மனிதர்கள்.
அதில் ஒருவர்தான் மேடம் அவர்கள்.
விபரம் தெரியாத வயதில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து சிங்கப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்து ஒரு பெண்ணிய சிந்தனை கொண்டவராக ஊர் திரும்பி கல்லூரி படிப்பை முடித்தார். தனது மாமன் மகன் அஹ்மது கபீரை மணமுடித்து மணவாழ்வில் நுழைந்தார். தனது கணவரின் வழிகாட்டலில் மார்க்க அறிவை பெற்றவர் தான் பேசிய பெண்ணிய வாதமெல்லாம் கானல் நீர் என்பதை உணர்ந்தார்.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் சிறப்பை விட வேறு உயர்ந்த இடம் என்ன இருக்கிறது என வியந்தார். இன்னும் ஆழமாக இஸ்லாமிய விழுமியங்கள் குறித்த அறிவை தேடித் தேடிப் படித்தார்.
அல்லாஹ் அவர்களுக்கு இல்லற வாழ்வின் மூலம் வழங்கிய இரண்டு பெண் குழந்தைகளைக் கொண்டு மகிழ்ச்சியை வழங்கினான்.
இயல்பிலேயே சமூகத்தின் மீது கவலைகொண்டவரான அவருக்கு தனது ஊரில் ஒரு இஸ்லாமிய பள்ளிக்கூடத்தை வழிநடத்த வாய்ப்பு கிடைத்தது. எடுத்த காரியத்தை முழு ஈடுபாட்டுடன் செய்யும் அவரது குணம் அந்தப் பள்ளியை சிறப்பாக வழிநடத்த உதவியது.
கல்விப் பணியை விரிவாகவும் வேகமாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியமும் அதில் உள்ள சிக்கல்களும் காலப்போக்கில் மேடம் அவர்களுக்கு புரிந்தது.
எந்த ஒரு செயலையும் உளத்தூய்மையோடு செய்யும் போது அந்த செயல்களுக்கான நன்மையான தீர்வை இறைவன் கண்முன் கொண்டுவருவான். அதேதான் மேடம் வாழ்விலும் நடந்தது. இஸ்லாமிய கல்வி குறித்த தேடலில் இருந்தவர் சமூகநீதி அறக்கட்டளையோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
சமூகநீதிமுரசு ஆசிரியர் CMN சலீம் அவர்களை அழைத்து பள்ளியிலும் அவரது ஊர் கரைக்காலிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்.
முஸ்லிம்களுக்கான கல்வி இஸ்லாமிய அறிவோடு வழங்கப்பட வேண்டும் என்ற நெருக்கடியை உணர்ந்த சமூகநீதி அறக்கட்டளை “தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கமாக” பரிணாமம் பெற்ற நேரம் அது.
கல்விப் பணியில் ஆர்வமுள்ள தமிழ்நாட்டில் இருந்த கல்வி ஆர்வலர்கள் அனைவருக்கும் “முஸ்லிம் கல்வி இயக்கத்தின்” துவக்கவிழாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் ஒருவர் சயிதா பானு மேடம்.
விழாவுக்கு வருகை தந்து உரையாற்றவும் செய்தார். அதில் கல்வித் துறையில் தனக்கு இருந்த பேரார்வத்தை பகிர்ந்து அரங்கத்தில் இருந்த அனைவருக்குள்ளும் ஒரு கேள்வியை விதைத்தார். அந்தக் கேள்வி யார் இந்த பெண்?
கல்வி இயக்கத்தின் இலக்குதான் தான் தேடிய பாதை என்பதை உணர்ந்த அவர் கல்வி இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகம் முழுவது இஸ்லாமிய பாடங்கள் இணைக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் துவங்க வேண்டும் என்ற கல்வி இயக்கத்தின் பிரதான இலக்கை செயல்படுத்தும் தளபதியாக களத்தின் முதல் வரிசையில் முதல் நபராக நின்றார்.
இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள் துவங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. அதில் பிரதானமானது அந்தப் பள்ளியை வழிநடத்தும் சரியான ஆசிரியர்கள் இல்லாதது. அந்த சிக்கலை சரி செய்ய ‘இஸ்லாமிய அறிவையும் பள்ளிப் பாடங்களின் அறிவையும் ஒரு சேரப் பெற்ற பெண் ஆசிரியைகளை உருவாக்குவதே சரியான வழி’ என்று முடிவெடுக்கப்பட்டது.
அந்த முதல் முயற்சிக்கும் மேடமே தலைமையேற்றார்.
“அந்நிஸா அகாடமி” என்ற பெயரில் காரைக்காலில் சுமார் முப்பது மாணவிகளைக் கொண்டு ஒரு பெண்கள் கல்லூரி உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் கல்லூரி. இப்படி ஒரு ஒரு கல்லூரிக்கு தங்கள் பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் துணிந்து அனுப்புவார்களா? பாடத்திட்டங்களை எப்படி உருவாக்குவது ? என்ற பல கேள்விகளைத் தாண்டி துணிந்து அந்தக் கல்லூரியை சிறப்பாக வழிநடத்தினார் மேடம்.
இந்த சிறுமுயற்சி போதாது இன்னும் பெரிதாக வேண்டும் என்ற தேவை கருதி அம்மாபட்டினத்தில் “அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி” துவங்கப்பட்டது.
அன்னை கதீஜா கல்லூரியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று கல்லூரியின் தாளாளர் ஆனார். அதன் பிறகு நடந்த அனைத்துமே வரலாறுதான். இன்று 500 மாணவிகளோடு வளர்ந்து நிற்கும் அன்னை கதீஜா கல்லூரியின் ஒவ்வொரு அணுவிலும் மேடம் சயிதா பானு அவர்களின் தியாகம் இருக்கிறது.
சமூகத்தின் பொருளாதார பங்களிப்பினாலும், கல்வி இயக்கத்தின் வழிகாட்டலினாலும் மட்டும் அந்தக் கல்லூரி உருவாகி விடவில்லை. மேடம் எனும் இரும்பு பெண்மனியின் அற்பணிப்பால் சாத்தியமானது. கடந்த எட்டு ஆண்டுகளில் அவரது பணி ஒரு மின்னலைப் போல ஒரு புயலைப் போலத்தான் இருந்தது.
அவரின் வாழ்நாள் குறுகியது என்பதால்தான் அவரது வேலைகளை இறைவன் விரைவாக வாங்கிக் கொண்டான் போலும். சொல்வதற்கு பல செய்திகளை அவர் விட்டுச் சென்றிருக்கிறார்.
கல்லூரியின் ஆரம்ப காலத்தில் படித்த மாணவிகளின் தாயாகவே அவர் வாழ்ந்தார்.
ஆள் அரவமற்ற பகுதியில் இருந்த கல்லூரியின் பிள்ளைகளுக்கு பாதுகவலரும் அவர்தான். பாதுகாப்பு கேடயம் அவர்தான்.
அந்தக் கல்லூரிக்கு அவர்தான் தாளாளர்.
விடுதிக்கு அவர்தான் பாதுகாவலர். பிள்ளைகளின் உணவுக்கு பல நேரங்களில் அவர் சமையல்காரர். உடல் நிலை சரியில்லாத மாணவிகளுக்கு அவர் ஒரு மருத்துவர்.
இது கல்லூரி ஆரம்ப நாட்களோடு நிற்கவில்லை. கல்லூரி வளர்ந்த பிறகும் அவர் தன் பணிச் சுமையை குறைத்துக் கொள்ளவில்லை. கல்லூரியின் அடிமுதல் நுணி வரை அனைத்திலும் அவரது கவனம் இருந்தது. பங்களிப்பு இருந்தது.
அவரது பாட நேரம் போக, வராத ஆசிரியரின் பாடத்திற்கும் அவர் தான் ஆசிரியர்.
தனது கல்லூரி படிப்புக்கு சம்பந்தம் இல்லாத உளவியல் துறையின் பேராசிரியராக ஆனது அவரின் மிகச் சிறந்த முன்னெடுப்பு.
இந்தியாவில் முதல் முயற்சியாக ‘இஸ்லாமிய உளவியல்’ என்ற பாடத்தை தயார் செய்து நடத்தினார். அவர் எப்போது வகுப்பு நடத்த வருவார் என மாணவிகள் ஏங்கினர்.
வெறும் கரும்பலகை பாடமாக அன்னை கதீஜா கல்லூரியின் வகுப்பறைகள் இருந்து விடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார்.
கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் நடந்த வண்ணம் இருக்கும். பல ஆளுமைகளும், அறிஞர்களும் அங்கு வகுப்பெடுத்திருக்கிறார்கள்.
கல்லூரியின் நிர்வாகம், ஒழுங்கு போன்றவற்றில் மிகுந்த கண்டிப்பு காட்டும் அதே மேடம்தான் மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் அக்கறை காட்டினார். இவர்கள் அத்தனை பேரும் தாயை இழந்த பிள்ளைகள் போல தவிக்கிறார்கள்.
கல்லூரிக்கு கிடைக்கும் நற்பெயர்கள் எதற்கும் தன் முகம் காட்டமாட்டார். அந்த காரியம் வெற்றி பெற உழைத்த எளிய மனிதர்களை சபையில் வைத்து கண்ணியம் செய்வதை கடமையாக செய்வார்.
இஸ்லாமிய பாடத் திட்டங்கள் இணைக்கப்பட்ட கல்வி நிலையங்கள் துவங்குவதுதான் உங்கள் இலக்கு. அதே சமயம் அது உங்கள் திருமண உறவிலல் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலோ, பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் மாண்புகளை குலைக்கும் வகையிலோ அமைந்து விடக்கூடாது என்பதை மாணவிகளுக்கு படிக்கும் காலத்திலும், அவர்களுக்கு திருமணம் ஆன பிறகும் ஒரு தாயைப் போல ஆலோசனை சொல்லி அவர்களை வழி நடத்துவார்.
அவருடைய இவ்வளவு காரியங்களுக்குப் பின்னால் அவரது தனிப்பட்ட வாழ்விலும், உடல் உபாதைகளாலும் அவர் பட்ட துயரங்கள் எழுத்தில் கொண்டு வர முடியாதது.
சமகாலத்தில் வாழ்ந்த ஒரு பெண் ஆளுமை, பன்முகத் திறன் கொண்ட அறிவு பொக்கிஷம், தமிழக இஸ்லாமிய பெண்கல்வியின் விடிவெள்ளி.
29.04.2019 அன்று அவர் மரணித்து விட்டார். அவர் விட்டுச் சென்ற பணிகளை அவரது பிள்ளைகள் (மாணவிகள்) முன்னெடுத்துச் செல்வார்கள். இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்வின் பக்கம் மோண்டு விட்ட சயிதா பானு மேடம் அவர்களையும், அவரது பணிகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. ஈருகிலும் அவருக்கு சிறப்பான வாழ்க்கையை வழங்குவானாக. ஆமீன்