சிலர் இசைத் துறையைத் தேர்வு செய்தாலும் அவர்கள் அந்த துறையில் ஒரு மேதையாக உயர்ந்தாலும் முஸ்லிம்களில் பலரும் இசையை அங்கீகரிப்பது இல்லை. இசைத் துறையில் கவர்ச்சியும் மினுமினுப்பும் கொண்ட வாழ்க்கை கிடைக்கும். புகழால் உண்டாகும் சர்ச்சை மற்றும் வதந்தியைப் பற்றி சொல்லத்தேவை இல்லை.

ஒருவர் இசைத் துறையிலும் மற்ற பிற துறைகளிலும் ஒருசேர மேதையாக இருக்க முடியாது. ஆனால், இசைத் துறையில் மேதையாக இருந்து கொண்டு அறிவியல், கணிதம் மற்றும் சூரியன்ம, சந்திரனின் ஆராயும் துறை (சோதிடம்) என மற்ற துறைகளிலும் சிறந்து விளங்கும் சிலர் உதாரணமாக இருக்கிறார்கள். Freddie Mercury, Stevie Wonder, Mozart, அல்லது Beethoven போன்ற இசை மேதைகளைப் பற்றி நாம் பேசப்போவது இல்லை. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இசை மேதையைப் பற்றி பார்க்கப்போகிறோம். 

முகம்மது இப்னு முகம்மது இப்னு தர்க்கான் இப்னு அவ்ஸாலக அல் ஃபராபி (Muḥammad ibn Muḥammad ibn Ṭarkhan ibn Awzalagh al-Farabi) என்பவர் ஒரு இசை மேதை. லத்தின் வழக்கில் இவர் அல்ஃபராபி (Alpharabius) என அழைக்கப்படுகிறார்.

அல்ஃபராபி கி.பி. 872 ல் பிறந்தார். இவரது வரலாறு ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் இன்றும் விவாதமாக இருக்கிறது. அவரது பூர்வீகம் (lineage) துருக்கியா அல்லது பாரசீகமா என்ற விவாதமும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இடையில் இன்றுவரையிலும் நடக்கிறது. மத்திய கால தத்துவவியலில் அல்ஃபராபி இரண்டாம் ஆசிரியர் என்று புகழப்படுகிறார். அரிஸ்டாட்டில்தான் தத்துவவியலின் முதல் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார்.

 அல்ஃபராபி அரிஸ்டாட்டிலின் தத்துவத்தையும் இஸ்லாமிய தத்துவத்தையும் ஒப்பீடு செய்து விளக்கம் அளித்தார். இதன் காரணமாக அல்ஃபராபி இரண்டாம் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். அந்த வழியில் தற்கால இஸ்லாமிய உலகில் அரிஸ்டாட்டில் மேலதிகமான செல்வாக்கு செலுத்தி வருகிறார்.

பன்மொழிப் புலவரான (Polyglot) அல்ஃபராபி அரபி, பாரசீகம், துருக்கி, சிரியா மற்றும் கிரேக்க மொழிகளை சரளமாக பேசும் அளவுக்கு மொழிப்புலமை கொண்டவர். அல்ஃபராபி பல நாடுகளுக்குப் பயணம் செய்யவும் பல புதிய கலாச்சாரங்களை ஏற்கவும் இந்த மொழிப் புலமை அவருக்கு பேருதவியாக அமைந்தது.

பாரசீகத்தில் இருந்து பாக்தாத் வரையில் பயணம் செய்து அங்கு இருபது வருடங்கள் தங்கி வாழ்ந்தார். பாக்தாத்தில் இப்னு கிந்தி மற்றும் அல் ராஸி போன்ற புகழ்பெற்ற தத்துவ அறிஞர்களை சந்தித்தார்.

அல்ஃபராபி கற்பதிலும் கற்றதை சோதனை செய்வதிலும் பொது அறிவு மற்றும் பகுத்தறிவை வளர்த்துக் கொள்வதிலும் மிக ஆர்வத்துடன் செயல்படுவார். தெளிவுபடுத்துவது, புரிந்து கொள்வது மற்றவர்களுக்கு கற்பிப்பதிலும் அல்ஃபராபி கடும் சிரத்தை எடுத்துக் கொள்வார்.

கண்ணால் காணக் கூடியவற்றை கண்ணுக்கு முன்னால் வைத்து கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார். அல்ஃபராபி  அறிவியலையும் (rationality) அகமியத்தையும் (spirituality) இரண்டறக் கலந்து கற்பிப்பார். மனிதன் வாழ்க்கையில் இன்புறுவதற்கு இது அவசியம் என்கிறார். அல்ஃபராபி அறிவியல் மற்றும் அரிஸ்டாட்டிலின் தத்துவம் இரண்டிலும் சிறந்து விளங்கியதால் ஒருசேர மேற்குலகிலும் கிழக்குலகிலும் புகழ்பெற்று விளங்கினார். 

உலகம் பண்டைய கால கிரேக்கர்களிடம் இருந்து தான் இசையின் அறிவியலை கண்டு கொண்டது. மோசிக்கி (mousiki) என்ற கிரேக்க சொல்லில் இருந்து தான் மியூசிக் ( music) என்ற சொல் பிறந்தது. மியூசிக் என்றால் இசையை தொகுக்கும் அறிவியல் என்று பொருள். இசை சம்பந்தமாக அல்ஃபராபி கிதாப் அல் மியூசிகா (Kitab al- Musiqa) என்றொரு நூல் எழுதினார்.

அந்தப் புத்தகம் இசையின் அழகுணர்வை கண்டறிந்ததன் மூலம் பண்டைய கிரேக்க இசைக் கோட்பாடுகளை குறிப்பிடும் வகையில் மேம்படுத்தியது. மேலும் இசைக் கருவிகள் குறித்து முழுமையான தகவல்களையும் வழங்கியது. மத்திய காலக்கட்டத்தில் புதிய நாடுகளுக்குப் பயணம் செய்த ஐரோப்பியர்கள் இசை குறித்த அல்ஃபராபியின் நூல்களையும் அரபு இசைக் கருவிகளையும் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

அல்ஃபராபியின் தாக்கம்:

தற்காலத்தின் மீதும் அவருக்குப் பின் வந்த தத்துவ அறிஞர்களான இப்னு ருஸ்தும், இப்னு கல்துன் மற்றும் புகழ்பெற்ற யூத தத்துவ அறிஞர் மைமோனிடஸ் (Maimonides) ஆகியோர் மீதும் அல்ஃபராபியின் தாக்கத்தை அளவிட  அவரது மற்றொரு படைப்பை படிக்க வேண்டும்.

மைமோனிடஸ் தனது Treaties on Logic (Maqala Fi-Sinat Al-Mantiq) என்ற நூலில் அல்ஃபராபியை Second Teacher என்றே அழைக்கிறார். அல்ஃபராபியின் போதனைகளில் அரிஸ்டாட்டிலின் தர்க்கவியலின் முக்கியத்துவம் காணப்படுகிறது என்று மைமோனிடஸ் விளக்கம் அளிக்கிறார். 

அல்ஃபராபியின் வேறுசில படைப்புகள் லத்தின் மற்றும் ஹீப்ரூ மொழியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அல்ஃபராபியின் தத்துவங்களின் அடிப்படைகள் இன்றளவும் மதிப்பு மிக்கதாக இருக்கிறது. கணிதம் மற்றும் அறிவியலின் பல்துறைகளின் முக்கியம், பரிசோதனைக்கான முறை, அறிவின் ஒருங்கிணைப்பு, மதிப்பீடுகளின் முக்கியம் மற்றும் அழகின் சுவை ஆகியவற்றில் அல்ஃபராபியின் தத்துவார்த்தங்கள் மதிப்பு மிக்கதாக இருக்கிறது.

++அல்ஃபராபியின் தத்துவார்த்த கல்வியால் அரபு கலாச்சாரம் வீழ்ச்சி அடைந்ததாகக் கூட ஒருவர் கூற முடியும்.++

அல்ஃபராபியின் தத்துவங்கள் தூலம், புத்தி, ஒழுக்க விதிகள், அழகியல் மற்றும் தொழில் நுட்பம் இணைந்த ஒருங்கான ஆளுமையை உருவாக்கும் வகையில் அவரது தத்துவம் வடிவம் பெற்றுள்ளது. 

நாம் அல்ஃபராபியை அல்ஃபராபியின் வாயிலாகத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அறிவியலும் கலையும் தங்களது மெய்யான இயல்பில் இயங்கி வருகின்றன. இது தான் மனித இனத்தை குலம், மத நம்பிக்கை மற்றும் தேசம் கடந்து ஒன்றிணைக்கிறது. இன்றைய சிரியாவின் வடக்கில் ஹர்ரண் ( Harran) என்றொரு நகரம் இருந்தது.

அங்கு பண்டைய கிரேக்க கலாச்சாரம் செழித்து இருந்தது. அந்த நகரத்தில் தான்  தனது குருவான யூஹானா பின் ஜிலாத் என்ற (Yuhana bin Jilad) பிரபலமான கிறித்தவ தத்துவ அறிஞரை அல்ஃபராபி சந்தித்தார். இந்த யூகானாவின் எழுத்துகள் படிக்கப்பட்டன. மேலே சொன்ன மைமோனிடஸ் எழுத்துகளிலும் யூகானாவின் தத்துவம் தாக்கம் பெற்றிருந்தது.

சிரியாவின் அலப்போவில் அன்றிருந்த புகழ்மிக்க ஷியா சமூகப் பிரமுகர் ஸயிப் அல் தவ்லா ஹம்தனிந்த் (Sayf al-Dawla Hamdanind) உடன்  அல்ஃபராபிக்கு இருந்த நெருக்கமான நல்லுறவால் பண்டைய சிரியாவில் சன்னி மற்றும் ஷியாக்கள் இடையில் சகவாழ்வு உறுதி மிக்கதாக இருந்தது. 

அறிவியல் மற்றும் கணிதத்துறையில் சிறந்து விளங்குவதற்கு அல்ஃபராபியின் இசை ஆர்வம் தடையாக இருக்கவில்லை. மாறாக அல்ஃபராபி இசை சேர்க்கையின் போது கணித முறைகளை இணைத்துக் கொண்டார். அல்ஃபராபி சாதனை செய்யாத துறைகள் இல்லை என்றே கூறலாம்.

………..

நாம் தினமும் பயன்படுத்தும் பத்து பொருட்களை முஸ்லிம்கள் கண்டுபிடித்தார்கள்: 

உலகின் முதல் பல்கலைக் கழகம், பல் துலக்கும் தூரிகை ( toothbrush) என்று நாம் வாழும் இன்றைய உலகை முஸ்லிம்கள் கண்டுபிடிப்புகள் மாற்றியமைத்தன. இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படைச் சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பற்றி “1001 Inventions“ (1001 கண்டுபிடிப்புகள்) என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களின் மறந்துபோன 1000 ஆண்டு வரலாற்றை இந்த புத்தகம் பேசுகிறது. இன்று நாம் பயன்படுத்தி வரும் முஸ்லிம்களின் சிறப்பான 10 கண்டுபிடிப்புகளை இந்த புத்தகத்தில் இருந்து அறிமுகப்படுத்துகிறோம். 

1) காஃபி :

1200 ஆண்டுகளுக்கு முன்னர் காலித் என்ற அரபியர் தான் காஃபியை கண்டுணர்ந்தார். காலிதும் அவரது ஆட்டு மந்தையும் மனித வாழ்க்கையை மாற்றியமைத்த அந்த பொருளை கண்டுபிடிக்கும் வரையில் கடினமாக உழைக்கும் மக்களுக்கும் உற்சாகமூட்டும் ஒரு பொருள் இல்லை. காலித்தின் ஆடுகள் எத்தியோப்பிய மலைச் சரிவுகளில் நின்றிருந்த குறிப்பிட்ட செடிகளை தின்று உற்சாகமாக துள்ளிக் குதிப்பதை காலித் கண்டார். அந்த செடியில் இருந்து தான் அல்- காவா என்ற காபி உதயமானது. 

2)கடிகாரம்:

தென் கிழக்கு துருக்கிப் பகுதியில் உள்ள தியார்பக்கிர் (Diyarbakir) என்ற இடத்தில் பிறந்தவர்   அல் ஜஸாரி (al-Jazari). சிறந்த இறைபக்தி கொண்டவர். இந்த அல் ஜஸாரி தான் தானியங்கி எந்திரம் என்ற கருத்தை உருவாக்கினார். 1206 க்குள்ளாகவே அவர் அனைத்து வகையான வடிவங்களிலும் உருவங்களிலும் கடிகாரங்களை உருவாக்கினார். நம்முடைய வாழ்க்கையை திட்டமிட நேரத்தை கணக்கிடுவது போன்று முஸ்லிம்கள் 700 ஆண்டுகளுக்கு முன்பே நேரத்தை திட்டமிட்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

கடிகாரம் தயாரிப்பதில் நீண்ட கால முஸ்லிம் பாரம்பரியத்தின் தொடக்கப் புள்ளியாக இருக்கிறார் அல் ஜஸாரி. முஸ்லிம்கள் பள்ளிவாசலில் குறிப்பிட்ட நேரத்தில் இறைவணக்கம் செய்ய வேண்டும். அதற்காக குறிப்பிட்ட நேரத்தில் இறைவணக்கத்துக்கு அழைப்பு கொடுக்க வேண்டும்.

அதேபோல் நோன்பு காலத்துக்கும் குறித்த நேரம் உண்டு. நேரத்தை ஆகத்துள்ளியமாக கணிக்கும் அவசியமும் இருக்கிறது. இதுவே, நேரத்தை துள்ளியமாக காட்டும் எந்திரங்களை கண்டுபிடிக்கும் தேவையை நோக்கி அல் ஜஸாரியை உற்சாகப்படுத்தியது. இவர்தான் மத்திய காலத்தில் யானை கடிகாரத்தை கண்டுபிடித்தார். ஆசிய யானை வடிவத்தில் நீர்க்கடிகாரத்தையும் இவர் கண்டு பிடித்தார். இவர் 1136 முதல் 1206 வரையில் வாழ்ந்தார்.

3) கேமரா:

இப்னு அல் ஹைத்தம் கண்ணாடித் துறையில் புரட்சியை செய்தார் என்று கூறலாம். தத்துவ விவாதமாக இருந்த விசயத்தை செயல்முறை அறிவியலாக மாற்றிக் காட்டினார். கண்ணில இருந்து புலப்படாத ஒளி தான் பார்வையை உண்டாக்குகிறது என்ற பழைய கிரேக்க கோட்பாட்டை நிராகரித்தார்.

 ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் ஒளி தான் விழியை வந்து அடைகிறது என்றார். camera obscura எனும் புகைப்படப் பெட்டி தான் நவீன கேமராவின் முன்னோடியாக இருக்கிறது. ஒரு இருள் நிறைந்த அறையின் ஒரு பக்கம் ஒரு குண்டூசி அளவுக்கு துளை போட்டு மறுபக்கம் வெள்ளை தாளை ஒட்டி தனது ஒளிப்பட கோட்பாட்டை விளக்கினார் அல் ஹைத்தம். ஒளி குண்டூசி துளை வழியாக வந்து எதிர் பக்கம் உள்ள வெள்ளை சுவரில் தலைகீழ் பிம்பமாக விழுந்தது. அல் ஹைத்தம் இதனை கமரா ( qamara) என்று அழைத்தார். இது தான் உலகின் முதல் ஒளிப்படப் பெட்டி. 

4)சுத்தம்:

ஒரு முஸ்லிமின் இறை நம்பிக்கை சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் மீது தான் அமைந்து இருக்கிறது. அது புறம் (உடல்) சார்ந்த சுத்தமாக இருக்கலாம் அல்லது அகம் (மனம்) சார்ந்த சுத்தமாக  இருக்கலாம். 10 ஆம் நூற்றாண்டு முஸ்லிம் உலகத்தில் குளியல் அறையில் காணப்பட்ட பொருட்கள் மற்றும் சுகாதாரம் இன்று நாம் பயன்படுத்துவதை காட்டிலும் சிறந்ததாகவே இருந்திருக்கிறது.

13 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர் அல் ஜஸாரி எந்திர பொறிகள் குறித்து ஒரு புத்தகம் எழுதினார். அதில் உது (wudhu) என்ற எந்திரம் பற்றியும் எழுதி இருக்கிறார். இந்த எந்திரம் நகரும் தன்மை கொண்டது. விருந்தினர் முன்பு இந்த எந்திரம் கொண்டு வரப்படும். விருந்தினர் அந்த எந்திரத்தின் தலையை திருகினால் 8 தவணையாக தண்ணீர் சிந்தும். தொழுகைக்கு அங்க சுத்தம் செய்ய தேவையான தண்ணீர் இந்த 8 தவணையாக சிந்துவதில் கிடைத்து விடும். இந்த முறையில் தண்ணீர் வீணாவதும் தடுக்கப்படும்.

முஸ்லிம்கள் உண்மையாகவே சுத்தமாக இருப்பார்கள். வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்தாமல் எண்ணெய்யும் ( வழக்கமாக ஆலிவ் எண்ணெய்) அல்- காலி (al-qali) என்கிற உப்பு போன்ற பொருளையும் கலந்து சோப்பை தயாரித்து குளியலுக்குப் பயன்படுத்தினார்கள். 

அல் ஹிந்தி என்பவர் வாசனை திரவியங்கள் பற்றி “Book of the Chemistry of Perfume and Distillations” என்றொரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதாவது வாசனை திரவியங்களின் வேதியல் பற்றியது. அல் ஹிந்தி ஒரு தத்துவ அறிஞராக அறியப்பட்டவர், இருப்பினும் அவர் மருத்துவம் (pharmacist), கண்ணியல் ( opthalmologist), இயற்பியல் ( physicist), கணிதவியல் (mathematician), புவியியல் ( geographer), வானியல் ( astronomer), வேதியல் (  chemist) ஆகிய துறைகளில் வல்லுனராக விளங்கினார்.

இவர் வாசனை எண்ணெய்கள் (fragnant oils),  காயங்களுக்கான எண்ணெய்கள் (salves), வாசனை நீர்மங்கள் ( aromatic waters)  பற்றி ஒரு புத்தகம் எழுதினார். அதில், நூற்றுக்கும் மேலான கலவை முறைகளை பற்றி எழுதி இருக்கிறார். பல நூறாண்டுகள் பாரம்பரியம் கொண்ட வாசனை திரவிய தயாரிப்புகள் எல்லாம் முஸ்லிம் வேதியல் அறிஞர்களாலும் அவர்களின் காய்ச்சி வடித்தல் முறையாலும் தான் சாத்தியப்பட்டது. முஸ்லிம் வேதியல் அறிஞர்கள் தாவரங்கள் மற்றும் பூக்களை காய்ச்சி வடித்து வாசனை பொருட்களையும் மருத்துப் பொருட்களையும் தயாரித்தார்கள். 

5) பல்கலை கழகங்கள்:

முஸ்லிம்களின் அறிவியல் தாகம் நெஞ்சுக்கு நெருக்கமானது. அறிவை தேடச் சொல்லி திருக்குர்ஆன் அவர்களை துரத்துகிறது. கற்றுக்கொண்டு கடைபிடிக்க வற்புறுத்துகிறது. ஃபாத்திமா அல் ஃபிஹ்ரி என்ற பயபக்தி கொண்ட முஸ்லிம் பெண் முஸ்லிம்கள் கற்கும் கல்வி மையம் ஒன்றை உருவாக்க விரும்பினார்.

பெரிய பள்ளிவாசல்கள் போன்று அல் காரவைன் (Qarawiyin) என்ற கல்வி நிலையத்தை மொராக்கோ நாட்டின் ஃபெஸ் (Fez) நகரில் கட்டினார். இது இஸ்லாமிய கல்விச் சாலையாகவும் அரசியல் பயிலரங்காகவும் (political discussion) வளர்ச்சி கண்டது. படிப்படியாக இயற்கை அறிவியல் (natural sciences) உள்பட அனைத்து துறைசார்ந்த பாடங்களையும் கற்பித்தலில் சேர்த்து கொண்டது. இது தான் உலகத்தின் முதல் பல்கலைக் கழகம் என்று பெயர் பெற்றது. 

முதல் பல்கலை கழகத்தை அமைத்தது முஸ்லிம் பெண் :

வானியல் மட்டுமின்றி குர்ஆன், இறையியல் (theology), சட்டம் ( Law), சொல்லாட்சி (rhetoric), உரைநடை மற்றும் வசனம் ( prose and verse ) எழுதும் கலை, தர்க்கவாதம் ( logic), கணிதம் ( arithmetic), புவியியல் ( geography) மற்றும் மருத்துவம் ( medicine) ஆகியனவும் கற்பிக்கப்பட்டன. இலக்கணம் (grammar), முஸ்லிம் வரலாறு (Muslim history), வேதியல் கூறுகள் (elements of chemistry) மற்றும் கணித வகைகள் (mathematics) பற்றியும் போதிக்கப்பட்டன.

அல் காரவைன் பல்கலைக் கழகத்தின் பலதரப்பட்ட பாட வகைகளாலும் உயர்தர கற்பித்தல் முறையாலும் உலகம் முழுவதும் அறிஞர்களும் ஆளுமைகளும் உருவானார்கள். 1,200 ஆண்டுகளைக் கடந்து இன்றும் இந்த பல்கலைக் கழகம் எழுச்சியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க பல்கலை கழகத்தை உருவாக்கியவர்கள் அல் ஃபிர்ஹி என்ற சகோதரிகள் தான். படித்து முடிப்பவர்களுக்கு பட்டம் – சான்றிதழ் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான். இந்த முஸ்லிம் சகோதரிகள் பற்றிய நினைவுகள் இன்றுள்ள பெண்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது. 

6)பறக்கும் எந்திரம்: 

பறக்கும் எந்திரத்தை உருவாக்கும் முதன் முயற்சியில் இறங்கியவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ். 9 ஆம் நூற்றாண்டில், அவர் இறக்கைகள் கொண்ட எந்திரம் ஒன்றை வடிவமைத்தார். தோராயமாக பறவையின் வடிவத்தில் அது இருந்தது. இதனை ஸ்பெயின் நாட்டில் முயற்சி செய்தார்.

ஃபிர்னாஸ், ஸ்பெயின் நாட்டின் கார்தோபா நகரத்தில் ஒரு முயற்சியாக அவர் தயார் செய்த எந்திரத்தை கொண்டு பறக்க முயன்றார். ஃபிர்னாஸ் சில நிமிடங்கள் பறந்தார். எந்திரம் கீழே இறங்கிய நேரத்தில் அவரது பின் பக்கத்தின் ஒரு பகுதியில் எழும்பு முறிவும் ஏற்பட்டது. ஃபிர்னாஸுக்கு 600 ஆண்டுகளுக்கு பின் வந்த இத்தாலி ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் கண்டுபிடிப்புகளுக்கு ஃபிர்னாஸின் எந்திர வடிவம் ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

7) அறுவை உபகரணங்கள்: 

நாம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் பின்னோக்கிப் போனால் முஸ்லிம்கள் மருத்துவ அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் உற்பத்தி செய்திருப்பதை அறிய முடிகிறது. அபுல் காசிம் கலஃப் இப்னு அல் – அப்பாத் அல் – ஜராவி அறுவைக்குத் தேவையான வெட்டுக் கருவிகளை தயாரித்தார். மேற்கத்திய உலகம் இவரை அபுல்காசிஸ் ( Abulcasis) என்று அழைக்கிறது.

இவர் அல் – தாத்ரிஃப் என்றொரு மருத்துவ கலைக் கழஞ்சியத்தை எழுதினார். அறுவை சிகிச்சை என்றொரு பகுதியும் அதில் இருக்கிறது. இந்த பகுதியை ஆங்கிலத்தில் On Surgery என்று குறிப்பிடுகின்றனர். அறுவை சிகிச்சைக்கு உரிய 200 உபகரணங்கள் பற்றி இதில் குறிப்பிட்டு இருக்கிறார். கருவிகளை கொண்டு அறுவை சிகிச்சைக்கு செய்வது அந்த காலத்தில் மிகப்பெரிய மருத்துவ புரட்சி.

இது அறுவை சிகிச்சை பற்றிய ஊகத்தை உண்மையாக்கி விட்டது. மருத்துவ வரலாற்றில் அறுவை சிகிச்சைக்கு கருவிகளின் பயன் பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகம் இது தான். உண்மையில், அவர்களது தயாரிப்பு மிக துல்லியமானது. ஆயிரம் ஆண்டுகளில் இந்த கருவிகளில் ஒரு சல மாற்றங்கள் தான் செய்யப்பட்டு இருக்கின்றன. ஐரோப்பாவில் அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது இவரது விளக்க குறிப்புகள் தான். 

8) உலக வரைபடம்:

உலக நாடுகள் பற்றிய முதல் வரைபடத்தை சிசிலியை சேர்ந்த முகம்மது அல் இத்ரிஸ் 1154 ஆம் ஆண்டு வரைந்தார். உலகின் மிகப் பழமையான உலக வரைபடங்களில் இதுவும் ஒன்று. மக்கள் 3500 ஆண்டுகளை கண்டறிய உலக வரைபடம் உதவுகிறது. ஆதியான உலக வரைபடம் களிமண்ணால் உருவாக்கப்பட்டது. உலக வரைபடம் உருவாக்கும் கலைக்கு தாள்களின் கண்டு பிடிப்பு மிகப்பெரிய உதவியானது.

பூமியில் நாடுகள் அமைந்துள்ள இடங்களை துல்லியமாக அளவிட தற்காலத்து நவீன தொழிற்நுட்பங்கள் செயற்கை கோள் மற்றும் பிற கருவிகளை பயன்படுத்துகிறது. வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தோமானால் வர்த்தக பயணிகள் மற்றும் புனித பயணிகளிடம் தகவல்களை கேட்டு வரையப்பட்டன.  வர்த்தகம் மற்றும் ஆன்மிகம் காரணமாக வெளியில் பயணங்கள் சென்று வந்த 7 ஆம் நூற்றாண்டு முஸ்லிம்கள் உலகின் பல பகுதிகளை கண்டடைந்து தங்கி வாழ்ந்தனர்.

பல்வேறு வழித்தடங்களில் பயணம் செய்திருந்தனர். புதிய இடங்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்து வைத்தனர். அவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி வந்தபோது தாங்கள் பயணம் சென்ற பாதைகள், எதிர்கொண்ட மக்கள் இடங்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். முதலில் வாய் வார்த்தையாகத் தான் இருந்தது. 8 ஆம் நூற்றாண்டில் பாக்தாத்தில் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்ட உடன் முதல் உலக வரைபடங்கள் மற்றும் பயண வழிகாட்டி நூல்கள் தயார் செய்யப்பட்டிருக்க முடியும். 

9) இசை:

தாங்கள் பயன்படுத்தும் இசை மற்றும் பாடல் நுணுக்கங்கள் அனைத்தும் 9 ஆம் நூற்றாண்டு முஸ்லிம் இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் கரங்களில் பொதிந்திருக்கிறது என்பது 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டு கலைஞர்கள் எத்தனை பேருக்கு தெரியும்? 9 ஆம் நூற்றாண்டு கலைஞர்களில் அல் கிந்தி இசை குறிப்புகளை பயன்படுத்தி இருக்கிறார். அதாவது இசையை குறிப்பாக எழுதும் முறை. இசைக் குறிப்புகளை எழுத்துகளுக்கு பதிலாக அசைகளாக எழுதினார்கள். 

இந்த அசைகள் தான் இன்றைய இசையின் அடிப்படை அளவுகளை உருவாக்குகின்றன. நமக்கெல்லாம் இசை குறிப்புகளான தோ (doh), ரே (ray), மீ (me), ஃபா(far), சோ (so), லா ( la),  டீ (tee) ஆகியன தெரியும். இந்த இசை குறிப்புகளுக்கா அரபு இசை குறிப்புகள்- தாள் (Dal), ரா (Ra), மீம் (Mim), ஃபா (Fa), சாத் (Sad), லாம் (Lam), ஷீன் (Sin) ஆகும். இன்றைய இசை குறிப்புகளும் 9 ஆம் நூற்றாண்டின் இசை குறிப்பில் பயன்படுத்தப்பட்ட அரபு எழுத்துகளுக்கும் இடையில் ஓசைப் பொருத்தம் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கெல்லாம் மேலே, முஸ்லிம்கள் இசைக் கருவிகளையும் மேம்படுத்தினார்கள். 

10)அல்ஜிப்ரா:

அல்ஜிப்ரா என்ற சொல்லே 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கணிதமேதை எழுதிய கித்தாப் அல்- ஜபர் வா அல் முகபலா (Kitab al-Jabr Wa l-Mugabala) என்ற நூலின் தலைப்பில் இருந்து வந்தது தான். இந்த நூல் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது இந்த தலைப்பு, “காரணம் மற்றும் சமநிலை” (The Book of Reasoning and Balancing) என்று தோராயமாக மொழிபெயர்க்கப்பட்டது. அல்ஜிப்ராவின் தொடக்கங்களை அல் கவாரிஜிமி (Al-Khwarizmi) என்பவர் அறிமுகப்படுத்தினார். 

அல்ஜிப்ரா என்ற இந்த புதிய கணிதமுறை எவ்வளவு அவசியமானது என்பதை புரிந்துகொள்வது தான் இங்கே முக்கியமான அம்சம். உண்மையில், கிரேக்கத்தின் வடிவ இயலில் இருந்த கணித முறையை அல்ஜிப்ரா கணிதவியல் முற்றிலுமாக புரட்டிப் போட்டது. 

16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் இத்தாலி மற்றும் ஃபிரான்சு கூட்டுப் படையிடம் வீழ்ச்சி அடைந்தது. அன்று முதல் முஸ்லிம்கள் அறிவியல் ஆராய்ச்சியிலும் பின்னடைவு சந்தித்தனர். ஸ்பெயினை வெற்றி கொண்ட ஐரோப்பியர்கள் ஸ்பெயின் முஸ்லிம்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளையும் அறிவியல் வரைவுகளையும் சொந்தமாக்கி கொண்டார்கள்.

ஸ்பெயின் நாட்டின் கார்தோபா நகரத்தில் தான் முதல் வின்வெளி ஆராய்ச்சி நிலையம் இருந்தது. ஸ்பெயின் வீழ்ச்சிக்குப் பின்னர் அது அழிந்து போனது. அதன் பின்னர் தான் ஐரோப்பா வான்வெளி ஆராய்ச்சியில் வளர்ச்சி கண்டது. அதன் பின்னர் ஐரோப்பா வளர்த்து வந்த அறிவியல் புதினங்களை முஸ்லிம அறிஞர்கள் வரவேற்கவில்லை. சாத்தானின் உபகரணங்கள் என்று அச்சுறுத்தி மக்களை விலக்கினார்கள்.

17,18,19,20 ஆகிய நான்கு நூற்றாண்டுகளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வளர்ச்சியடைந்த அறிவியல் குறித்து முஸ்லிம்களுக்கு எந்த அறிவும் இல்லை. தங்களுக்கு அறிவியல் அறிவு இல்லாதது பற்றி எந்த அக்கறையும் கவலையும் இல்லை. அறிவியலுக்கு அப்துல் சலாம் என்ற பாகிஸ்தான் அறிவியல் அறிஞர் ஒருவர் தான் அறிவியலுக்கான நோபல் பரிசு வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளில் முஸ்லிம்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.